ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 470

அகத்திய பெருமானின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையால் இதுபோல் எம் வழி வருகின்ற அனைத்து சேய்களுமே நலமாய் உயர்வாய் நல்வித செயல்களை செய்து செய்து இறையருளை தொடர்ந்து பெற அதுபோல் இறை அருளைக் கொண்டே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் திடமான மனது உறுதியான மனது எந்த விதமான சங்கடத்திற்கும் சலனத்திற்கும் ஆளாகாத மனது இதுபோல் வைரத்தைவிட வைடூரியத்தை விட உறுதியான மனது ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்தால்தான் அறக்காரியங்களை செய்ய இயலும் நன்மையை செய்ய இயலும். யாம் அடிக்கடி கூறுவது போல தவறை செய்கின்ற மனிதன் சுயநலமாய் வாழ்கின்ற மனிதன் பாவத்தின் மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் பலர் விமர்சனம் செய்கிறார்களே? பலர் உற்று உற்று பார்க்கிறார்களே? என்று தன் தவறான செயல்களை நிறுத்தி விடுகிறானா? இல்லையே? ஒரு தவறு செய்கின்ற மனிதன் துணிந்து தவறு செய்கிறான். இல்லையென்றால் அதற்கு பலவிதமான நியாய வாதங்களை கற்பித்து தவறு மேல் தவறு செய்து கொண்டே போகிறான். ஆனால் நல்லதை தர்மத்தை செய்ய வேண்டும் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று முன் வருகின்ற மனிதர்கள் மட்டும் அதில் ஏதாவது இடையூறுகள் ஏளனங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்தால் அதனை விட்டு விடுகிறார்களே ஏன்? தீயதை செய்கின்ற மனிதன் யார் விமர்சனம் செய்தாலும் ஏன்? சட்டம் போட்டு தடுத்தாலும் கூட அதனையும் மீறி தீயதை செய்து கொண்டே இருக்கிறான்.

நல்லதை செய்கின்ற மனிதன் மட்டும் நல்லதை செய்வதால் சில துன்பங்கள் வருகிறதே? இத்தனை எதிர்ப்புகள் ஏளனங்கள் வருகிறதே? என்று மனம் வெதும்பி விரக்தியடைந்து அதனை விட்டுவிடுகிறான். இந்த தன்மையை எம் வழியில் வருகின்ற சேய்கள் அறவே குறைத்துக் கொண்டு நல்லதை செய்கின்ற தன்மைக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனைக்கு வந்து விட வேண்டும். அறவே அச்சம் குழப்பம் இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். பல இடங்களில் பல விதமான தர்ம காரியங்களை பெறுவதற்கு பல மனிதர்கள் இருக்க சுற்றிலும் பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் நான் அள்ளிக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். மற்றவர்களின் பார்வை என்னை சங்கடப்படுத்துகிறது. எனவே குறைவாக கொடுத்து விட்டேன் என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுவது அறியாமையாகும். பலர் பார்க்க தீய பானங்களை ஒரு மனிதன் பருகுகிறான் தீய பொருள்களை விற்கிறான் வாங்குகிறான். தீய செயலை செய்கிறான். அதற்கெல்லாம் அச்சப்படாத வெட்கப்படாத மனிதன் தர்மத்தை செய்ய நல்லதை செய்ய ஏன் அச்சப்பட வேண்டும்? ஏன் வெட்கப்பட வேண்டும்? எனவே இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று ஒரு மனிதன் நம்பிக்கையோடும் உறுதியோடும் இருத்தலே எம் வழியில் வருவதற்கு ஏற்ற மனோபாவமாகும்.

இந்த மனோபாவத்தை மனோநிலையை ஒருவன் வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். துன்பங்களை தாங்குவதற்கு பலம் வேண்டும் மனோபலம் வேண்டும் என மனிதர்கள் வினவுகிறார்கள், கேட்கிறார்கள். கட்டாயம் புண்ணியம் நற்காரியங்கள் அதிகம் சேர சேர நற்செயல்கள் அதிகம் செய்ய செய்ய மனோபலம் உருவாகும். துன்பங்களை தாங்குகின்ற சக்தியை வளர்த்துக் கொள்ள எந்த துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு தர்ம காரியங்களும் தன்னலம் கருதாத தொண்டும் பூஜைகளும் ஸ்தல யாத்திரையும் மந்திர உச்சாடனமும் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அறிவு கொண்டும் எம் பார்வையிலும் அதற்கு தீர்வு காணவேண்டும் என்று முயற்சி செய்வதே சிறப்பிலும் சிறப்பாகும். அப்படி ஒரு மனிதன் வாழ முற்பட்டால் மனோதிடம் அதிகமாகும் மனோபலம் அதிகமாகும். இதுபோல் கர்ணனை நாங்கள் உதாரணம் காட்டுவது எதற்கு? என்றால்

ஒரு மனிதனிடம் எத்தனை விதமான ஏற்க முடியாத குணங்கள் இருந்தாலும் கூட தர்ம குணங்கள் அதிகம் இருந்தால் இறையருள் நிச்சயம் என்பதற்கு கர்ணன் ஒரு சிறந்த உதாரணம். அது மட்டுமல்லாமல் கடுமையான தவமோ பிரார்த்தனையோ இல்லாமல் செய்கின்ற தர்மத்தாலும் நற்காரியங்களாலும் இறைவன் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் இறைவனை தரிசிக்கவும் செய்யலாம் என்பதற்கு கர்ணன் சிறந்த உதாரணம். எனவே எம் வழியில் வர எண்ணுகின்ற சேய்கள் இதுபோல் கருத்தை உறுதியாக மனதிலே வைத்துக் கொண்டு தொடர்ந்து விடாது தர்மம் என்று தர்ம வழியில் வருவதோடு சத்தியம் என்று சத்திய வழியிலும் வந்து பரிபூரண சரணாகதி பக்தியிலே தன்னை ஆட்படுத்திக் கொண்டு சாத்வீக எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எவர் மனதையும் புண்படுத்தாமல் ஆணவமில்லாமல் தன்னை உயர்த்திக் கொள்ளக் கூடிய முயற்சியில் இறை வழியில் வர இறையருளால் அவர்கள் துன்பங்களெல்லாம் ஓடி அவர்கள் நித்ய இன்பமாக, நிம்மதியாக வாழ வழி பிறக்கும் என்று யாங்கள் கூறுகிறோம். இந்தக் கருத்தை நன்றாக மனதிலே பதியவைத்து சதாசர்வகாலம் இறைவனின் திருவடியை சிந்தித்து சிந்தித்து நல்வழியில் வர எம் சேய்களுக்கு இறைவன் அருளாலே நல்லாசிகளை இத்தருணம் இயம்புகிறோம்.

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நாற்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன் சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக் குருவியாக பிறந்தான். அக்கரிக் குருவியை காகம் உள்ளிட்ட பெரிய பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக் குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக் குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக் குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக் குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்து சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி இறைவனைப் பற்றி பேச ஆரம்பித்தார். தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார். என்று மதுரையின் சிறப்பையும் சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிக் குருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அக்கரிக் குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறை வழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் மீனாட்சி அம்மன் இறைவனாரிடம் ஐயனே இக்கரிக் குருவி வழிபடும் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு இறைவனார் கரிக் குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் குருவியாக பிறந்தது. முற்பிறவியில் செய்த நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியையும் பொற்றாமறைக் குளத்தையும் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டது. இத்தலத்தில் தனக்கு பிறவித் துன்பம் நீங்கும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் தனது வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறது. அதன் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய பலன் அதற்கு கிடைக்கும் என்று சொல்லி கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும் பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது. பின்னர் இறைவனாரிடம் ஐயனே எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன என்றது. அதனைக் கேட்ட இறைவனார் அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலிமையுள்ளவன் ஆவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்த வலிமையானது எமது மரபில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் கிடைக்கப் பெற்று விளங்க வேண்டும் எமக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி அனைத்து பறவைகளும் உய்ய அருள வேண்டும் என்று வேண்டியது. சொக்கநாதர் அவ்வாறே ஆகுக என்று கூறியருளினார். உடனே அக்குருவியும் அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. அதனால் அந்தப் பறவைகள் அனைத்தும் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை உணர்ந்த சான்றோர்கள் இறைவனை அடையச் சொல்லும் வழிகளை நம்பிக்கையுடன் கடைபிடித்து இறைவனை வழிபட்டு வந்தால் உறுதியாக வீடு பேறு பெறலாம் என்பதையும் தீமைகள் செய்தால் தீமைகள் வந்து சேரும் எனபதையும் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 469

தொண்டு தர்மம் மூலம் எவ்வாறு விதியின் தன்மை தளர்த்தப்படுகிறது என்பது பற்றி அகத்திய பெருமானின் வாக்கு:

நாங்கள் சில சமயம் சில காலம் ஆகட்டும் என்பதை மனதில் வைத்து வேண்டாம் என்று கூறினாலும் அங்கே விதி முன் நின்று நடத்தி விடும். நாமத்தோன் சேயவனுக்கும் சில காலம் ஆகட்டும் என்று தான் கூறினோம். வேண்டாம் இப்பொழுது என்று கூறினோம். ஆனால் விதி அங்கே முன்னின்று நடத்தி விட்டது. இப்பொழுது இங்கே என்ன பார்க்க வேண்டும். சித்தர்கள் வேண்டாம் என்று கூறினார்கள். வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். சில காலம் ஆகட்டும் என்றார்கள் ஏன் நடந்தது? அப்படியானால் சித்தர்கள் வாக்கு பலிதமாகவில்லையா? ஏன் என்று ஒரு வினா வரும்? வரவேண்டும் மனிதர்கள் இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும். இதே இவன் வாழ்க்கை வெறும் சராசரி உலக வாழ்க்கையாக அப்படியில்லாமல் கடுகளவும் முன் ஜென்ம புண்ணியத்தால் தொண்டு வாழ்க்கையாக மாறியிருப்பதால் அப்படி ஒரு விதி வசத்தால் இப்படி ஒரு திருமணம் நடந்து அதனால் அதிக பாதிப்பு உடனடியாக வராமலிருக்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறார். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்குத்தான் தொண்டு தொண்டு தொண்டு தர்மம் தர்மம் தர்மம் ஆலயம் செல் என்று கூறிக்கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் விதவிதமான தர்மங்கள் விதவிதமான பூஜைகள் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஆலயம் செல். இந்த உலகிலே உழைப்பதா? தொழில் செய்வதா? பணிக்கு செல்வதா? இல்லை சித்தர்கள் கூறுகின்ற வேலையை செய்வதா? என்றெல்லாம் எத்தனை விமர்சனங்கள் யாருக்காக கூறுகிறோம்? அவன் கர்ம வினை பாவ வினை குறைய வேண்டும் என்று தான் கூறுகின்றோம். சரி நூற்றுக்கு நூறு வாய்ப்பு இருப்பவர்கள் செய்து விடுவார்கள். வாய்ப்பில்லாதவர்கள் எப்படி செய்வது? அதற்கு தானே நாங்கள் வழி காட்டுகிறோம். செய்வதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது அதற்கு வேறு பணியில்லை உனக்குத்தான் இறைவன் வேறு பணி கொடுத்திருக்கிறான் அல்லவா. அப்பணியால் பணம் தனம் நன்றாக வருகிறது அல்லவா? அதை தாராளமாக கொடுத்தால் உன் சார்பாக இங்கு அதையே பணியாக செய்யக் கூடிய மனிதர்கள்சேய்கள் செய்வார்களே. இந்த சிந்தனை ஏன் யாருக்கும் இத்தனை ஆண்டுகள் வந்தும் வரவில்லை? விதி இங்குதான் விளையாடுகிறது. ஆனாலும் அதற்காக நாங்கள் இதோ எம் முன் அமரும் மனிதன் எமது பேச்சை கேட்க மாட்டான். ஒரு ஆலயம் கூட செல்லமாட்டான். ஒன்றையும் நம்ப மாட்டான். இவனுக்கு எதற்கு வாக்கு கூறுவது என்றெல்லாம் இருக்க மாட்டோம். எம்மையே இழிவாக பேசினாலும் இந்த அமைப்பையே இழிவாக பேசினாலும் நாங்கள் வாக்கை கூறிக் கொண்டு தான் இருப்போம். என்றாவது ஒருநாள் அந்த ஆத்மா மனதில் அது தைத்து நல்ல ஒரு செயலை செய்யட்டும்.

நல்லதை சொல்லிக் கொண்டே இருப்பது தான் மகான்களின் கடமை. எனவேதான் யாங்கள் கூறி ஒன்று நடந்தாலும் அது நன்மைக்கே. நடவாமல் போனாலும் அது நன்மைக்கே. இந்த தன்மை இந்த உண்மை புரிந்து கொண்டால் தான் கர்ம வினைகளை குறித்த கடுகளவு தெளிவு வரும். நாடிகளை குறித்த புரிதல் வரும். நாடி என்று இல்லை உண்மையாக கூறுகின்ற அருள்வாக்கின் தன்மையும் புரியும். இல்லையென்றால் குழப்பம்தான் மிஞ்சும். குழப்பம் வருவதோ நம்பிக்கை குறைவதோ அவரவர்கள் உரிமை தாராளமாக வாழ்ந்து விட்டு போகட்டும். ஏனென்றால் எதையும் ஆய்ந்து பார்த்து இப்படி எல்லாம் வந்தால் எப்படி ஏற்றுக் கொள்வது நம்பும்படியாக இல்லை என்று அறிவு பூர்வமாக வாதம் செய்யக் கூடியவர்கள் கடைசி வரை வாதம் செய்து கொண்டு இருக்க வேண்டியது தான். அவர்கள் விதி அவர்களை அவ்வாறு அழைத்து சென்று கொண்டே இருக்கிறது. எனவே அதுபோன்ற மனிதர்கள் அப்படி கூறிக் கொண்டே இருக்கட்டும். அதுதான் அவர்கள் விதி அவர்களை அப்படி அழைத்து செல்கிறது. எத்தனையோ தர்மங்கள் செய்தவர்கள் கூட இப்படியெல்லாம் திசை மாறி குழப்பமடைந்து தவறுதலாக பேசிக் கொண்டு செல்கிறார்களே. அவர்கள் செய்த தர்மம் ஏன் அவர்களை இந்த இடத்தில் தடுத்து நிறுத்தவில்லை? தெளிவை தரவில்லை? என்றால் சிந்திக்க வேண்டும் அந்த தர்மத்தின் பலன் அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். எப்படி கிடைக்கும். இந்த இடத்திலே தடுமாறும் பொழுது அவர்களுக்கு இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி அந்த கடுமையான பாவவினை தவறான வழியை காட்டுகிறது. யார் பேச்சையோ கேட்டு தவறாக சிந்திக்கின்றார்கள். ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இது போன்ற இடங்களிலே என்ன நடக்கின்றது? இங்கு நம்மிடம் தனத்தை வாங்கிக் கொண்டு இங்கு என்ன வேலை நடக்கிறது? அந்த தனமெல்லாம் என்னவாக மாறுகிறது? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அப்படி தன்னுடைய தனம் முழுவதும் பலருக்கு பலவிதமான உதவிகளாக செல்லும் பொழுது அது தன்னுடைய பாவங்களையும் தன்னுடைய சாபங்களையும் குறைக்கத்தானே உதவுகிறது. அதன் மூலம் தனக்கு நன்மை தானே நடக்க இருக்கிறது. இதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்தித்து இருந்தால் நல்ல வழி கிடைக்கும்.

ஆனால் தொன்னூற்றோன்பது விழுக்காடு (99%) மனிதர்கள் குழப்பத்திலும் ஐயத்திலும் தான் இருக்கிறார்கள். அவர்கள் விதி அவ்வாறு அழைத்து செல்கிறது. ஆனால் நாங்கள் அதற்காகத்தான் பாடப்பிரிவை கூறுகிறோம். ஒரு மாணவன் பல விதமான பாடப்பிரிவுகளிலே நன்கு மதிப்பெண் எடுத்தால் தான் அடுத்தக்கட்ட கல்விக்கு தேர்ச்சி அடைய முடியும். நான் கணிதத்தில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வாங்கி விட்டேன். வேறு வேறு பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வாங்கி விட்டேன். ஒரேயோரு பாடப்பிரிவில் மட்டும் எதுவும் வாங்கவில்லை? என்றால் அவனை ஒத்துக் கொள்வார்களா? அதைப் போலத்தான் பூஜை செய்ய வேண்டும். புண்ணிய காரியங்களும் செய்ய வேண்டும். நல்ல விதமாக சிந்திக்க வேண்டும். நல்லதை பேச வேண்டும். யாரையும் குற்றம் குறை கூறக்கூடாது. பொய் பகரக் கூடாது. ஒருவன் சொல்லாததை சொன்னதாக இன்னொரு மனிதனிடம் சொல்லக்கூடாது. ஆனால் பல விதமான தர்மங்களை செய்து விட்டு ஒருவன் பொய் கூறுகிறான் அதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றால் அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் கூறிய பொய்யை நம்பி பலரும் குழப்பம் அடைந்து தவறான வழியில் செல்லும்போது அத்தனை பேரின் பாவமும் அவனுக்கு வந்துவிடுகிறது . இவன் எதற்கு அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? பல தர்மங்களை செய்த அந்த மனிதனுக்கு ஏன் இப்படியோரு பொய் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது என்றால் இப்படித்தான் விதி விளையாடும்? வேண்டுமென்றே சிலவற்றை காட்டித்தரும். அப்பொழுதுதான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

அந்த இடத்திலே விழிப்புணர்வு இல்லாமல் போவதற்கு காரணம் என்ன? தன்முனைப்பு. தன்முனைப்பற்ற நிலையில் ஒருவன் எதை செய்தாலும் தப்பித்துக் கொள்வான். நாம் தான் தர்மம் செய்கிறோமே. கடவுள் நம்மை காப்பாற்றுவார். நம்மைப்போல் யார் தர்மம் செய்வார்? நாம் தான் அள்ளி அள்ளி தருகிறோமே? என்று எண்ணிக் கொண்டே தர்மம் செய்தால் சரியப்பா. நீ தர்மம் செய்திருக்கிறாய். அதற்குண்டானதை நீ எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு இறைவன் ஒதுங்கி விடுவார். இறைவன் ஒதுங்கிவிட்டால் இக்கட்டான அவனுடைய தசாபுத்தி காலங்கள் சரியில்லாத நேரத்தில் தவறான சிந்தனைகளும் தவறான மனிதர்கள் தொடர்பும் ஏற்பட்டு ஏனப்பா இப்படி தனத்தை எல்லாம் கொண்டு அங்கு தருகிறாய். அங்கு தராதே. அப்படி தந்தால் அந்த தனத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தர்மம் என்ற பெயரில் ஏதேதோ வீண் செலவு செய்கிறார்கள் என்று கூற ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ? என்று இவன் போதாத காலம் இவனை சிந்திக்க வைக்கும்.

இதையும் தாண்டி அடிப்படையிலே சில குழப்பங்களோடு இருக்கும் போது உண்மையை உண்மை பேச ஒரு தைரியம் இல்லாத மனிதனுக்கு உலகத்திலே எத்தனை செல்வம் இருந்தாலும் பெரிய பதவி இருந்தாலும் இறைவனின் அருள் ஒருபொழுதும் கிடைக்காது. உண்மையை சபை அறிய பேச வேண்டும். நான் இப்படியேல்லாம் சிந்திக்கிறேன். இது சரியா தவறா என்று புரியவில்லை எனக்கு விளக்கம் கொடு? என்று கூறினால் உண்மையில் இறைவன் இங்கு மட்டுமல்ல அவன் இல்லத்திலேயே யாராக இருந்தாலும் விளக்கம் தருவார். ஆனால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்ற மனிதர்களுக்கு இறைவன் எப்படி அருளுவார்? சரியப்பா உன் சிந்தனைப்படி வாழ்ந்துக்கொள். என்று அமைதியாக விட்டுவிடுவார். அதனால் தான் இறைவழியில் அறவழியில் செல்வதல்ல தன்முனைப்பு இல்லாமல் செல்ல வேண்டும். எனவே தன்முனைப்பு குறைய குறைய விதிப்படி சில விசயங்கள் நடந்தாலும் அதனால் வரக் கூடிய பாதிப்பை சற்று இறைவன் தணித்து தருவார் அதையும் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றிக் குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம் நாற்பத்தி ஆறாவது படலமாகும்.

சொக்கநாதரிடம் பால் அருந்திய பன்றிக் குட்டிகள் பன்றி முகமும் மனித உடலும் கொண்ட பன்றி குமாரர்களாக மாறினர். அவர்கள் பல கலைகளிலும் வல்லவர்களாக பன்றி மலையில் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் எம்பெருமானே இழிந்த பிறவியான பன்றிக் குட்டிகளுக்கு தாங்கள் பாலூட்டி அவைகளின் அறியாமையை போக்கியது ஏன்? என்று கேட்டார். அதற்கு சொக்கநாதர் உலகில் உள்ள சகல உயிர்களும் எமக்கு ஒரே தன்மையை உடையவையே. உலக உயிர்களிடம் எந்த பேதமையும் எமக்கு கிடையாது. ஆகையால்தான் எம்மை சகல ஜீவ தயாபரன் (எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையை அருளுபவன்) என்று அழைக்கின்றனர். ஆதரவின்றி தவித்த பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டி அவற்றின் அறியாமையை நீக்கினோம். இனி அப்பன்றி குமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி இறுதியில் அவர்களை சிவகணங்களாக்குவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இராசராச பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் அரசனே பன்றி மலையில் அறிவில் சிறந்த பன்னிரெண்டு பன்றி குமாரர்கள் இருக்கிறார்கள். நீ அவர்களை மந்திரியாக்கி நன்மைகளைப் பெறுவாயாக என்று கூறினார். சொக்கநாதரின் ஆணையைக் கேட்ட இராசராசபாண்டியன் விழித்து எழுந்தான். காலையில் தன்னுடைய ஆட்களை பன்றி மலைக்கு அனுப்பி பன்றி குமாரர்களை அழைத்து வரச்செய்தான். பன்றி குமாரர்களுக்கும் அரசனின் அழைப்பினை ஏற்று மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையை அடையும் போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து பரிசுகள் பல அளித்து அவர்களை மந்திரிகளாக ஆக்கிக் கொண்டான். பழைய அமைச்சர்களின் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்வித்தான். அப்பன்றி குமாரர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து பாண்டியனுக்கு நல்லோசனைகள் கூறி நல்ல நெறிகளைச் செயல்படுத்தினர். சிலகாலம் சென்றபின் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களாக மாறும் பேறு பெற்றனர். இராசராச பாண்டியனும் தேவலோகம் அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம். தகுதி பெறும் உயிர்களுக்கு உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து இறுதியில் அருளையும் கொடுத்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 468

கேள்வி: துன்பங்கள் தாங்கும் மனவலிமை பெற மறுபிறப்பு தவிர்க்க வழி முறைகள்:

இறைவனருளால் சதாசர்வகாலம் இறை சிந்தனையும் தர்ம சிந்தனையும் சத்திய சிந்தனையும் கொண்டு உண்மையாக ஒரு மனிதன் வாழ்வது. இப்படியெல்லாம் வாழ்கிறேன் என்று குடும்பத்தை புறக்கணித்துவிட்டு செல்லாமல் இருப்பது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய நியாயமான கடமைகளை செய்து கொண்டே இறை வழியில் வருவது. தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது. வார்த்தைகளால் யாரையும் புண்படுத்தாமல் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது. இதுபோன்ற நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அனுதினமும் வாழ்ந்தால் கட்டாயம் அவனுக்கு மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மறுபிறவி இருக்க வேண்டும் என்று இருந்தாலும் கூட அது இறைவனால் தவிர்க்கப்படலாம். மீறி கொடுக்கப்பட்டாலும் இறை சிந்தனையோடும் தர்ம சிந்தனையோடும் வாழக் கூடிய வாய்ப்பாக அமையும். இப்படியொரு நல்ல சிந்தனையோடு வாழ நன்மை உண்டு.

45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம் நாற்பத்தி ஐந்தாவது படலமாகும்.

ராசராச பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் மதுரை நகரில் வைகை ஆற்றின் கரைக்குத் தெற்கே குருவிருந்த துறை என்ற ஊர் ஒன்று இருந்தது. தற்போது அவ்வூர் குருவித்துறை என்றழைக்கப்படுகிறது. அவ்வூரில் சுகலன் என்ற ஒரு வேளாளன் வசித்து வந்தான். அவனுடைய மனைவி சுகலை ஆவாள். அவர்கள் பொருட் செல்வமும் மக்கள் செல்வமும் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதாவது அத்தம்பதியினருக்கு பன்னிரெண்டு ஆண்மக்கள் இருந்தனர். சில ஆண்டுகளில் சுகலன் இறந்து விட்டான். தந்தையை இழந்த சுகலனின் ஆண்மக்கள் உணவிற்காக வேடர்களோடு இணைந்து காட்டிற்கு சென்று வேட்டையாடி வந்தனர். அப்போது ஒரு சமயம் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களின் குருவான குரு பகவானைக் கண்டனர். அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த குரு பகவானை கேலி செய்தனர். பின்னர் அவர் மேல் கல்லையும் மண்ணையும் வாரி இறைத்தனர். இதனால் கோபம் கொண்ட தேவகுரு அவர்களை பன்றிக் குட்டிகளாகப் பிறந்து தாய் தந்தையரை இழந்து உணவுக்காக அலைவீர்கள் என்று சாபம் இட்டார். தேவகுருவின் சாபத்தால் அதிர்ச்சியடைந்த சுகலனின் பிள்ளைகள் எங்கள் சாபம் நீங்க வழி கூறுங்கள் என்று கதறினர். அவர்களிடம் இரக்கம் கொண்ட தேவகுரு மதுரைச் சொக்கநாதர் உங்களுக்கு தாயாய் வந்து பாலூட்டி உங்களின் பசித் துன்பத்தைப் போக்குவார். பின்னர் அவர் பாண்டியனுக்கு உங்களை மந்திரியாக்கி இறுதியில் உங்களுக்கு முக்தியையும் கொடுப்பார் என்று கூறினார்.

ரங்க வித்யாதாரன் என்பவன் புலத்தியரின் தவத்திற்கு இடையூராக யாழிசைத்து பாடினான். இதனால் புலத்தியர் கோபத்தில் பன்றியாகப் போகும்படி சபித்தார். வருந்திய அவன் புலத்தியரிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டான். அதற்கு புலத்தியர் இராசராச பாண்டியனுடனான போரின் போது மடிந்து மீண்டும் பழைய நிலையை அடைவாய் என்று புலத்தியர் சாபம் நிவர்த்தி கூறினார். அச்சாபத்தினால் ரங்க வித்யாதரன் அரச பன்றியாய் பிறந்தான்.

சுகலனின் பிள்ளைகள் அக்காட்டில் இருந்த அரச பன்றிக்கு மகன்களாக அரசி பன்றியின் வயிற்றில் தோன்றினர். அச்சமயம் ராசராச பாண்டியன் காட்டிற்கு பெரும் படையுடன் வந்து தொல்லை தந்த விலங்குகளை வேட்டையாட எண்ணினான். அதன்படி காட்டிற்கு சிறந்த வேட்டையாடுபவர்களுடன் வந்தான். இராசராச பாண்டியனின் வருகையை அரசபன்றி அறிந்தது. பின்னர் அரசி பன்றியிடம் நீ இங்கேயே பத்திரமாக நம் குழந்தைகளை கவனித்துக் கொண்டிரு. நான் பாண்டியனை எதிர்த்து போராடச் செல்கிறேன். நான் உயிருடன் திரும்பி வருவேனா? இல்லை மடிவேனா? என்று தெரியவில்லை என்றது. அதனைக் கேட்ட அரசி பன்றி நானும் உங்களுடன் வந்து பாண்டியனை எதிர்ப்பேன். வெற்றி பெற்றால் நாம் மீள்வோம். இல்லையேல் நாம் அங்கேயே மடிவோம் என்று கூறியது. பன்றிகள் பாண்டியனை எதிர்த்து போரிடப் புறப்பட்டன. இதனால் பன்றிக் குட்டிகள் தனிமை அடைந்தன. அரச பன்றி இராசராச பாண்டியனை எதிர்த்து போரிட்டு மடிந்தது. அரசி பன்றி சருச்சான் என்பவனுடன் போரிட்டு மடிந்தது. இராசராச பாண்டியனால் கொல்லப்பட்டு ரங்க வித்யாதரன் பழைய வடிவம் அடைந்தான். பன்றிகள் மடிந்த இடம் இன்றும் பன்றிமலை என்று அழைக்கப்படுகிறது. அம்மலையில் சித்தர் மற்றும் யோகிகள் வீடு பேற்றிற்காக தவம் செய்வதாக கருதப்படுகிறது.

பன்றிக் குட்டிகள் தாயையும் தந்தையையும் இழந்து உணவிற்காக அலைந்து திரிந்தன. பன்றிக் குட்டிகளிடம் இரக்கம் கொண்ட சொக்கநாதர் தாய் பன்றியாக உருமாறி பன்றிக் குட்டிகளின் முன் தோன்றினார். தம் தாயைக் கண்ட பன்றிக்குட்டிகள் ஆவலாய் தாயிடம் சென்றன. சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். சொக்கநாதரின் பாலை உண்ட பன்றிக்குட்டிகள் வலிமையையும் ஞானத்தையும் நற்குணங்களையும் பெற்றன. பின்னர் இறைவனார் அக்குட்டிகளுக்கு முகத்தை மட்டும் பன்றியாக வைத்து உடலினை மனித வடிவமாக மாற்றினார். பின்னர் சொக்கநாதர் அங்கிருந்து மறைந்து அருளினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பெரியோர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பத்தை ஏற்படுத்தினாலோ அவர்களின் செயல்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கேலி செய்தாலோ இழிவான நிலையே ஏற்படும் என்பதையும் இழிந்த நிலை உயிரினங்களாக இருந்தலும் தாயும் தந்தையுமாக இருந்து இறைவன் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 467

கேள்வி: முன்னோர்களின் சொத்துக்களை நாம் அனுபவிக்காமல் இருந்தால் முன்னோர்களின் பாவங்கள் நம்மை சேராமல் இருக்குமா?

இறைவன் அருளால் கூறவருவது என்னவென்றால் அந்த சொத்துக்களை எந்தெந்த பாவங்கள் செய்து சேர்த்தார்களோ அந்த பாவங்கள் வேண்டுமானால் வாட்டாமல் இருக்கும். அதில்லாமல் மற்ற பாவங்கள் சாபங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

44. இசை வாது வென்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இசை வாது வென்ற படலம் நாற்பத்தி நான்காவது படலமாகும்.

வரகுண பாண்டியனின் காலத்திற்கு பின் அவரது மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தான். அப்போது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினை இசையோடு பாடி வந்தாள். இராசராசனின் மனைவி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான். ஒரு சமயம் இராராசபாண்டியனின் மனைவி பாணபத்திரரின் மனைவி இசை பாடுவதைக் கண்டு தன்னைவிட நன்றாகப் பாடுகிறாளே என்று பொறாமை கொண்டாள். எப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசை பாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள். பாண்டியனும் தன்னுடைய மனைவியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி இலங்கையிலிருந்து இசை பாடுபவள் ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான். பின் பாணபத்திரரின் மனைவியை அழைத்த இராசராசபாண்டியன் ஈழத்திலிருந்து இசை பாடுபவள் ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா? என்று ஆணவமாக பேசுகிறாள். சிவபக்தையான நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி அரசே சொக்கநாதரின் திருவருளால் நான் நாளை நடைபெறும் இசைப் போட்டியில் வெல்வேன் என்று கூறினாள். பின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடல் பாடுபவளிடம் வந்து நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடல்கள் பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன் என்று கூறினான். மறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து இசை பாடுபவள் மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.

சொக்கநாதரை வணங்கிவிட்டு பாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடல் பாடுபவள் அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள். பாணபத்திரரின் மனைவி நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை என்று கூறினாள். உடனே இராசராசபாண்டியன் பெண்களே நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள் என்று கூறி இசைப் போட்டியைத் தொடங்கி வைத்தான். இருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர். ஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று அறிவித்தான். இந்த முடிவிற்கு அறிஞர்களும் சான்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவேறு கருத்து வந்ததால் அடுத்த நாள் மீண்டும் இசைப் போட்டி நடைபெறும் என்று பாண்டியன் அறிவித்தான். பாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.

சொக்கநாதரை பாணபத்திரரின் மனைவி சரணடைந்தாள். மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று மனமுருகி வழிபட்டாள். அப்போது ஆகாயத்திலிருந்து பெண்ணே அஞ்ச வேண்டாம் நாளை இசை போட்டியின் முடிவில் அவளை வெற்றி பெற்றதாக அனைவரும் அறிவிப்பார்கள். அப்போது நீ கோவிலில் இப்போட்டியை வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் பாடுகிறோம். அங்கு நீங்கள் தெரிவிக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கோவிலில் போட்டியை நடத்தும் படி கேட்டுக் கொள். வேறு வழியின்றி அனைவரும் சம்மதிப்பார்கள். அதன்பிறகு உனக்கு வெற்றி கிடைக்கும். நீயே வெல்லும்படி அருளுவோம் என்று திருவாக்கு கேட்டது. மறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். அதற்கு முன்பாகவே சான்றோர்கள் அனைவரையும் அழைத்த அரசன் ஈழத்து பெண் வெற்றி பெற்றாள் என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இருவரும் போட்டியில் பாடினர். ஈழத்துப்பெண் வென்றாள் என்று பாண்டியன் கூறினான். பாண்டியன் சொன்னது போலவே அவையோரும் ஆமோதித்தனர். உடனே பாணபத்திரரின் மனைவி அரசே உங்கள் தீர்ப்பு ஓரம் சார்ந்து இருக்கிறது. உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆகையால் நாளை இடம் மாறி ஆடிய நடராஜரின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து நீர் என்ன தீர்ப்புக் கூறினாலும் அதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் எனச் சூளுரைத்தாள். அதற்கு அரசன் உட்பட அனைவரும் உடன்பட்டனர். மறுநாள் திருகோவிலில் இசைப் போட்டி ஆரம்பமானது.

சொக்கநாதர் இசைப் புலவராய் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து புலவர்களுடன் புலவராக அமர்ந்து கொண்டார். ஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள். பாடி முடித்ததும் தன்னை அறியாமல் மெய் மறந்து ஆஹா என்ன அற்புதம் எனக் கைதட்டினான். அதையே தீர்ப்பாகக் கொண்ட மக்கள் பாணபத்திரரின் மனைவி வெற்றி பெற்றதாக ஆமோதித்துக் கரவொலி செய்தனர். சொக்கநாதரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தார். அவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து இது அற்புதம் இது அற்புதம் என்று கூறி மறைந்தார். இராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப் புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான். பின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான். பாணபத்திரரின் மனைவிக்கும் ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான். அதன்பின் இராசராசபாண்டியன் சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவரின் சூழ்ச்சியும் இறைவனை சரணடைந்தவர்கள் முன்னால் எடுபடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 466

கேள்வி: இறந்தபின் செய்யும் கண் தானம் உடல் உறுப்பு தானம் பற்றி கூறுங்கள் :

இறைவன் அருளால் யாங்கள் முன்பே இதுகுறித்து கூறியிருக்கிறோம். பலர் அறிந்ததுதான். எல்லாவகையான தானங்களையும் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உடல் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். கண் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். ஒருமுறை கூறியிருக்கிறோம் ஒரு மனிதன் வாய்ப்பு இருக்கும் பட்சத்திலே இன்னொரு நல்ல மனிதனுக்கு விழி இருந்தால் அவனால் பலருக்கும் நன்மை எனும் பட்சத்தில் உயிருடன் இருக்கும் பொழுதே விழியைக் கூட தானமாக கொடுக்கலாம் தவறொன்றுமில்லை என்று கூறியிருக்கிறோம். இந்த இடத்திலே ததீசி முனிவரை நினைத்துக் கொள்ள வேண்டும். தன் உயிர் போனாலும் பலருக்கு நன்மை என்று தன் உடைமையையும் தன் முதுகு எலும்பையும் அவர் தந்திருக்கிறார். தான் இறந்த பிறகு உடல் தானம் கொடுக்கவே மனிதன் தயங்குகிறான். எம்மைப் பொறுத்தவரை உயிரோடு இருக்கும்போது கொடுத்தாலும் உயர்வுதான்.

43. பலகை இட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பலகை இட்ட படலம் நாற்பத்தி மூன்றாவது படலமாகும்.

பாணபத்திரரின் வறுமையைப் போக்க இறைவனான சொக்கநாதர் சேரமானுக்கு திருமுகத்தில் பாடல் எழுதி கொடுத்து சேரமானிடம் பொருள் பெற்றுத் தந்தார். அதன் பின்னர் பாணபத்திரர் பகலில் வழிபாடு நடத்தியதோடு இரவிலும் திருகோவிலுக்குச் சென்று இசைபாடி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டார். எந்த நிகழ்வுகள் நடந்தாலும் திருகோவிலுக்கு இரவில் சென்று வழிபடுவதை பாணபத்திரர் நிறுத்தவில்லை. இறைவனார் பாணபத்திரரின் இசை சேவையை உலகுக்கு எடுத்துக் காட்ட விரும்பினார். ஒரு நாள் பாணபத்திரர் இரவு நேர வழிபாட்டிற்கு செல்லும் நேரத்தில் புயல் காற்று வீசியது. இடி மின்னலுடன் கடுமையாக மழை பெய்தது. பாணபத்திரரோ கடும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு வழிபாட்டிற்கு திருகோவிலுக்குச் சென்றார். மழையில் நனைந்ததால் குளிரால் பாணபத்திரரின் உடல் நடுங்கியது. பாணபத்திரர் மழை இடி மின்னல் புயல் காற்று என எதனையும் பொருட்படுத்தாது யாழினை மீட்டி பாடத் துவங்கினார். அவரது பாடல் எலும்பினையும் உருக்கும் வண்ணம் இருந்தது. கடும் சூழலிலும் விடாது முயற்சி செய்து இசை பாடிய பாணபத்திரரின் இசையினால் கவரப்பட்ட இறைவனார் பாணபத்திரா இதோ இந்த பலகை உனக்கே உரியது. இதன் மேல் நின்று பாடுக என்று வானிலே திருவாக்கு அருளினார். வானத்திலிருந்து பொன்னலாகிய நவமணிகள் பதித்த பலகை ஒன்று பாணபத்திரரின் கையினை அடைந்தது. உடனே பாணபத்திரரும் இறைவனின் ஆணையின்படி பலகையின் மீது நின்று பாடினார். வழிபாட்டினை முடித்துக் கொண்டு அவர் பலகையுடன் வீட்டிற்கு திரும்பினார். பொழுது விடிந்ததும் இறைவனார் பாணபத்திரருக்கு பரிசளித்த பலகை பற்றி அறிந்த வரகுண பாண்டியன் மிக்க மிகழ்ச்சி கொண்டான். அவன் பாணபத்திரருக்கும் திருக்கோவிலுக்கும் பல பொருட்களை பரிசாகக் கொடுத்தான். அந்நாள் முதல் பாணபத்திரர் திருகோவிலுக்குச் சென்று நான்கு காலங்களிலும் பாடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். சிலகாலம் சென்ற பின் வரகுண பாண்டியன் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் இதனை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்ட பணிகளை எத்தகைய கடும் சூழலிலும் விடா முயற்சியுடன் நேர்த்தியாக செய்பவர்களுக்கு உண்டான பலனை இறைவன் உறுதியாக கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.