ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 497

கேள்வி: ஒன்றரை வயது குழந்தைக்கு ஆறு மாத குழந்தைக்கு உள்ள வளர்ச்சிதான் இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் கரு உருவாகும் பொழுதே சதைப் பிண்டம் எப்படி உருவாக வேண்டும்? என்று அதற்குள் நுழைய உள்ள ஆன்மாவின் கர்ம வினைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல்தான் உடல் உருவாக்கப்படுகிறது. பிறகு அந்த உடலில் மாற்றங்களும் சராசரிக்கு மாறுபட்ட நிலையும் ஒரு ஆரோக்ய நிலையும் ஆரோக்ய குறைபாடும் ஏற்பட்டு விடுகிறது. எனவே மீண்டும் கர்ம வினைக்குதான் வர வேண்டியிருக்கிறது. வழக்கம் போல் இறை வழிபாடு வழக்கம் போல் தர்மம் வழக்கம் போல் பிரார்த்தனை இது போன்ற குறைபாடுகளைக் குறைக்க உதவும். ஆனால் நீக்க உதவாது. ஏனென்றால் அப்படியொரு நிலையில்தான் அந்த ஆத்மா பிறவி எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் பட்சத்தில் அப்படியொரு பிறவிதான் அமையுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 496

கேள்வி: அரசண்ணாமலையின் தெய்வீக சிறப்புகள் பற்றி :

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் நல்விதமாய் ஒரு குறிப்பிட்ட மலை அல்லது குறிப்பிட்ட ஸ்தலம் மட்டுமே உயர்வல்ல. இருந்தாலும் கூட மனிதர்களின் ஆர்வம் மிகுதியாலும் சில பல காரணங்களாலும் இவ்வாறு கேட்பதால் நாங்கள் கூறுகிறோமே தவிர எல்லா ஸ்தலங்களும் சிறப்பே. எல்லா மலைகளும் சிறப்பே. இறை சாந்நித்யம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதை உணரக்கூடிய தன்மைதான் மனிதனிடம் இல்லை என்பதே உண்மையிலும் உண்மையாகும். இதுபோல் இன்று பாழ்பட்டு கிடக்கின்ற இன்னவன் கூறுகின்ற அரசகிரி ஒரு காலத்தில் சிறப்பாக இறையருளால் நல்விதமான பூஜைகளும் சாஸ்திர சம்பிரதாயமாக சடங்குகளும் நடந்த ஸ்தலம்தான். இங்கும் கிரிவலம் வருவது சிறப்பு. ஒரு ஸ்தலம் சிறப்பு உயர்வு என்று மனிதனுக்கு தெரிந்து விட்டால் அங்கு கூட்டமாக படையெடுப்பதும் எல்லாவிதமான பூஜைகள் செய்வதையும் தவறென்று கூற வரவில்லை.

இறைவனை வணங்குவதும் ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்திலே சென்று வணங்கினால்தான் இறைவன் அருள் கிட்டும் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் தீரும் என்று எண்ணுவதும் கூட தவறல்ல. ஆனால் அப்படி எண்ணிக் கொண்டே அந்த ஸ்தலத்தை அனாச்சாரம் செய்யாமல் இருந்தால் அது சிறப்பு. ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை நோக்கி பல மனிதர்களும் சென்று இறைவனுக்கு விருப்பமில்லாத செயல்களை அங்கு செய்தால் கட்டாயம் இறையருள் என்பது யாருக்கும் கிட்டாமல் போய்விடும். பலரும் கூட்டமாக ஒரு இடத்திற்கு செல்வதோ இறைவனை வணங்குவதோ சிறப்பிலும் சிறப்புதான். ஆனால் அந்த இடத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அந்த இடத்தை பரிசுத்தமாக வைத்திருக்கிறார்களா? அங்கு பரிபூரண அமைதியை காக்கிறார்களா? வியாபார விஷயமாக அங்கு எதுவும் நடவாமல் பார்த்துக் கொள்கிறார்களா? அமைதியான முறையில் இறை நாமத்தை ஜபம் செய்கிறார்களா? என்றெல்லாம் பார்த்தால் அது மிகவும் நடக்காத செயலாகத்தான் இருக்கிறது. மனிதர்களை பொருத்தவரை பல்வேறு இடங்களில் மன மகிழ்வு மன்றம் என்றெல்லாம் வைத்திருக்கிறார்களே? அதைப்போல வெறும் லோகாயரீதியான ஒரு மன மகிழ்வு மன்றமாகத்தான் ஆலயத்தை பார்க்கிறர்களே தவிர மெய்யாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்,

தன் மனதில் உள்ள குற்றங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும். இத்தனை தீய எண்ணங்களோடு வாழ்கிறோமே? இங்கு வந்து இறைவா இறைவா என்று கதறுகிறோமே இறைவன் ஏற்றுக்கொள்வாரா? என்று ஒரு கணமாவது மனிதன் சிந்திக்க வேண்டும். இறைவன் இருக்கின்ற இடம் புனிதமான இடம் என்று கூறிக்கொண்டே அந்த இடத்தை அனாச்சாரம் செய்வது இறைவனுக்கு ஏற்புடையதா? நம் மனசாட்சிக்கு ஏற்புடையதா? என்றெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இத்தனை இறை தத்துவங்கள் இல்லாத தேசத்தில் கூட பொது இடத்தை சுத்தமாகத்தான் மனிதன் வைத்திருக்கிறான். இத்தனை தத்துவங்களும் ஞானிகளும் மகான்களும் இருக்கின்ற இடத்தில்தான் இத்தனை அறியாமைக் கூட்டம் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். இதை எப்படி கூறுவது? என்றால் அற்புதமான தாமரை மலரில் மிகவும் உயர்வான தேன் இருக்கிறது. ஒவ்வொரு மலரிலும் இருப்பது தேன்தான். இருந்தாலும் ஒவ்வொரு மலரிலும் கிடைக்கின்ற தேனிற்கு தனித்தனி ஆற்றல்கள் உண்டு. தாமரை மலரில் உள்ள தேனுக்கு பல விதமான ஆற்றல்கள் இருக்கிறது. அதுகுறித்து பிறகு சிந்திப்போம். ஆனால் அந்த தாமரையை சுற்றியுள்ள சிறு சிறு உயிரினங்கள் அந்த தேனை உண்ணுவதுமில்லை. தேன் இருப்பதை புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற வண்டினங்கள் தேனீக்கள் தேடி வந்து தாமரைப் பூவில் உள்ள தேனை உண்கிறது. அதன் பெருமையை புரிந்து கொள்கிறது. இதைப் போலதான் மனிதர்கள் இங்கும் வாழ்கிறார்கள்.

எனவே ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமையை மனிதர்கள் புரிந்து கொண்டு தாமரைப் பூவில் இருக்கின்ற தேனைப் போல இது அற்புதமான ஸ்தலம் என்பதை புரிந்து கொண்டு மண்டூகங்களாக இல்லாமல் வண்டினமாக எல்லோரும் இருக்க நல்லாசிகளை கூறுகிறோம். எனவே இந்த ஸ்தலத்திலும் ஆத்மார்த்தமான பிரார்த்தனையும் குறிப்பாய் நல்விதமாய் முழுமதி தினமன்று மலை வலம் வருவதும் வலத்தோடு மனிதன் தன் மனதை வளப்படுத்தவும் உதவட்டும் என்று நல்லாசி கூறுகிறோம்.

அரசண்ணாமலை பெருந்துறை விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 495

கேள்வி: திருப்பனந்தாள் அருகில் திருலோக்கி என்ற ஸ்தலத்திலே வேறு எங்கும் இல்லாதபடி ரிஷபத்தின் மேல் ஸ்வாமியும் அம்பாளும் இருக்க வணங்கிய கோலத்தில் குருபகவானும் இருக்கிறார்கள்:

இறைவன் அருளால் இன்னவன் திருலோக்கி பற்றி கூறுகிறான். அங்கே ஒன்றை விட்டுவிட்டானே? அதுதானே மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். திருலோக்கி என்பது இல்லற சுகம் இல்லை என்று ஏங்கக்கூடிய மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களில் ஒன்று. அதுபோக இன்னவன் கூறியபடி அனைத்து வளங்களும் நலங்களும் தரக்கூடிய ஸ்தலம். ரதியும் மன்மதனும் அருள் புரியக்கூடிய இடம். அங்கு ரதி மன்மதனின் அருளை பெறக்கூடிய பிரார்த்தனைகளை தாராளமாக செய்யலாம். மனிதர்களுக்கு எல்லாம் வேண்டியிருக்கிறதே? இதுபோல் அரூபமாக அங்கு இன்றும் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இக்கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

திருலோக்கி

குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம். அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம் மான் ஏந்தியும் முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும் இடது கரத்தில் மலர் ஏந்தியும் உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் பார்யா சௌக்யப்ரதாயினி என்பதாகும்.

அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள் நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை.

தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதியானது. சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் வணங்கும் கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானது. குரு பூஜித்து பேறு பெற்ற ஒப்பற்ற தலம் திருலோக்கி.

இடம் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம் அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி கோவில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 494

கேள்வி: கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்க ஆசிகள் மற்றும் நீதிக்கதை ஒன்று:

இறைவனின் கருணையைக் கொண்டு நல்விதமாய் இதுபோல் பல்வேறு ஆலயங்கள் கலச விழா காண வேண்டும் என பல பக்தர்கள் எண்ணுகிறார்கள். கட்டாயம் நடக்கும். நல்விதமாய் பல நல்ல உள்ளங்கள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தால் அதில் உள்ள எதிர்ப்புகள் குறைந்து நல்ல ஆத்மாக்களின் உதவியால் விரைவில் அதுபோல் திருப்பணி நடக்கும். இதுபோல் நடக்கின்ற நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் நீதி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் அற்புதமான கருத்தும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தக்க காலத்தில் மிக சிறந்த நீதிக்கதையை யாங்கள் போதிப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 493

தீய பழக்கங்களால் சிறு பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்:

அமாவாசை தோறும் அன்னை காளிக்கு வழிபாடு செய்தால் இது போன்ற தவறான பழக்கங்களுக்கு தத்தம் பிள்ளைகள் ஆட்படாமல் காத்துக் கொள்ளலாம். இது பக்தி மார்க்க வழி. அடுத்ததாக ஒரு சமுதாயம் தவறான ஒரு செயலை செய்வதாக மனிதன் எண்ணுகிறான். அதே சமுதாயம் பல நல்ல விஷயங்களையும் செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு எத்தனை மனிதர்கள் ஆதரவு காட்டுகிறார்கள்? ரத்த தானம் செய்யுங்கள் என்று கூறினால் அதைக்கண்டு மனிதன் இன்னும் அஞ்சுகிறான். உடலை தானம் தரலாம் என்று நாங்கள் கூறினாலும் அது குறித்து இன்னும் மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கொண்டு இன்னமும் மூடத்தனமாகவே வாழ்கிறான். விழி தானம் செய்யுங்கள் என்றால் எத்தனை பேர் முன் வருகிறார்கள்? எனவே நல்ல விஷயங்களை பார்க்க சிந்திக்க பின்பற்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். அடுத்ததாக கடுமையான பித்ரு தோஷங்கள்தான் குழந்தைகளுக்கு தீய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே மனம் தளராமல் நாங்கள் கூறிய வழிபாட்டை செய்வதோடு கால பைரவர் வழிபாட்டையும் செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 492

கேள்வி: ஊட்டத்தூர் பற்றி:

ஆன்மாவிற்கு அதிகம் புண்ணியத்தை ஊட்டும் ஊரப்பா. அன்னவன் கூறியதுபோல இவை சிறப்பான அபூர்வமான ஸ்தலங்கள். அதுபோல் அந்த நடராஜர் சிறப்பான நடராஜர். தன் பிள்ளைகள் கலைகளிலே தேர்ச்சி அடைய வேண்டும் விற்பன்னனாக வேண்டும் என்ற ஆசையிருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரத்திலோ அல்லது வாய்ப்பு இருக்கும் பொழுதோ சென்று உயர்வான முறையிலே வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் அந்த கலைஞானத்தை முக்கண்ணன் ஆடல்வல்லான் மூலம் வழங்குவார். எனவே அங்கும் முடிந்தவரை சிறப்பான முறையிலே கலப்படமில்லாத பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வது தூய சந்தனக்காப்பு செய்வதும் இங்குள்ள அன்பர்களுக்கும், அங்கு வரக்கூடிய அன்பர்களுக்கும் சிறப்பைத் தரும். கலை என்றால் அனைத்தும் கலைதான். ஆன்மீகமும் இந்த கலையில் சேரும். ஆன்மீகத்திலிருந்து பிறவியற்ற நிலையை அடைவதும் ஒரு கலைதான். ஞானமும் ஒரு கலைதான். அதற்கும் அங்கு சென்று வழிபாடு செய்யலாம்.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஸ்ரீசக்ராத்தில் அனுமான்

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள யந்த்ரோதரகா அனுமான் கோவிலில் கிரானைட் பாறையில் கட்டப்பட்ட ஸ்ரீசக்ராவின் மையத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனுமான்.