ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில்

திரேதாயுகத்தில் முரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களையும் தவம் இயற்றும் முனிவர்களையும் மிகவும் கொடுமை படுத்தி வந்துள்ளான். அவனது தொல்லைகள் தாங்க முடியாத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அரக்கனை அழிக்க தன் சுதர்சன சக்கரத்துடன் போருக்கு புறப்பட்டு சென்றார். திருமாலை எதிர்க்க வந்த அரக்கன் சுதர்சன சக்கரம் தன்னை நோக்கி வருவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டான். பின்னர் மாயா வடிவில் வந்து போரிடுவான். இப்படி மாறி மாறி ஒழிவதும் போரிடுவதுமாக இருந்த அரக்கன் பகவான் முன்பு எதிர்க்க முடியாமல் சோர்ந்து போனான்.

வத்திகிரி ஆஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அரக்கன் திருமாலை திடீரென்று தாக்க முற்பட்டான். ஆனால் அந்த நொடியில் லோக மாயன் மகாமாயன் மாயவண்ணன் என்ற பல பெயர்களைக் கொண்ட மாயக்காரன் மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு பெண் வடிவம் தோன்றி அவ்வரக்கனை கொன்றது. அந்த பெண் வடிவம் திருமாலின் மாயா சக்தியாகும். இதை கண்ட பகவான் மிகவும் மகிழ்ந்து யோகமாயாவிற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மாயாசக்திக்கு ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்ட அன்றைய நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாகும். முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்து திருமாலை துதித்து போற்றினர் கொண்டாடினர். இதனால் இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றனர்.

இந்த ஏகாதசிதான் முக்கோடி வைகுண்ட ஏகாதசி யாகும். இந்நாளில் தேவர்களுக்கும் வெற்றியும் மகிழ்வும் தந்த மகாவிஷ்ணு வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வணங்கி பூஜை செய்தால் இறைவனை அடையத் தடையாக இருக்கின்ற அனைத்து தீய அரக்கனையும் அழித்து வெற்றியை நல்குவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 536

கேள்வி: விரைய ஸ்தானம் வலுவாக இருக்கும் ஜாதகர் இறைவனிடம் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை விரயம் செய்துவிடு என்று பிரார்த்தனை வைக்கலாமா?

இறைவனை நோக்கி இதுவரை சேர்த்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு வரத்தை கொடு என்று கேட்டால் கட்டாயம் தருவார். ஆனால் அந்த வரத்தை தாங்குகின்ற மனோபலத்தை மனிதன் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாவம் சும்மா எளிமையாக ஒரு மனிதனை விட்டுச் சென்று விடாது. பல துன்ப அனுபவங்களை தந்துதான் பாவம் அவனை விட்டுச் செல்லும். என்னை விட்டு பாவம் போக வேண்டும் என்று ஒருவன் இறைவன் நோக்கி வேண்டினால் நிறைய துன்பங்களை எதிர்கொள்ள அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி நீ ஆயத்தமாக இருந்தால் தாராளமாக உன் பிரார்த்தனையை இறைவனை நோக்கி வைக்கலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 535

கேள்வி: சத்தி முற்றத்தில் அமைந்திருக்கும் த்வார விநாயகர் முருகன் பைரவர் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி:

இறைவன் அருளால் முன்னார் கூறியது போல் திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலம் மட்டுமல்லாமல் ராகு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் ராகு கெடு பலனை தருவதாக நம்ப கூடியவர்கள் திருமணமாகி பிரிந்திருப்பவர்கள் சென்று வணங்க வேண்டிய தலங்களுள் இன்னவன் கூறிய தெய்வ சன்னதியையும் ஒன்று அங்கே அன்றாடம் முடிந்த நெய் தீபம் ஏற்றி நறுமணமிக்க மலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்து வந்தால் வழக்கு மன்றம் வரை சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பட்டீஸ்வரம் சென்று துர்கையை வணங்கக்கூடிய மனிதர்களுக்கு வினைப் பயன் காரணமாக இந்த தலம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே பட்டீஸ்வரம் சென்று வணங்க கூடியவர்கள் திருச்சத்தி முற்றமும் சென்று வணங்குவது சிறப்பு அப்பா.

இத்தத்தலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

கர்ணனின் வில்வித்தை

கர்ணன் தனக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கும்படி துரோணாச்சாரியார் கேட்டுக் கொண்டான். துரோணாச்சாரியார் மறுத்துவிட கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலையில் செல்கிறான் கர்ணன். கர்ணனின் திறமையை சோதிக்க வானில் பறக்கும் ஒரு பறவையை குறி பார்த்து வீழ்த்தச் சொன்னர் கிருபாச்சார்யார்.

கர்ணன் அம்பை நாணில் பூட்டினான். ஒரு கணம் வானில் பறவையை குறி பார்த்தவன் அம்பை விடாமல் வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்டான். அதற்கான காரணத்தை கர்ணனிடம் கேட்டார் கிருபாச்சார்யார். அதற்கு கர்ணன் குருவே இது அதிகாலை நேரம் இந்நேரம் ஒரு பறவை வானில் பறக்கிறது என்றால் அது தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்கிறது என அர்த்தம். இப்போது எனது திறமையை காண்பிக்க அதை கொன்றுவிட்டால் நான் வீரனாவேன் ஆனால் அதன் குஞ்சுகள் அனாதையாகிவிடும் எனவே நான் அதை கொல்லமாட்டேன் என்றான். இதனைக் கேட்ட கிருபாச்சார்யார் கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம் என்றார்.

பணத்தாலும் பதவியாலும் பலத்தாலும் உயர்ந்தவர்கள் தன் பலத்தை பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும் அல்ல. சத்ரிய தர்மமும் அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 534

கேள்வி: எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்?

இறைவன் அருளால் எந்த மந்திரத்தை கூறினாலும் மனிதநேயம் இல்லாமல் மனித பண்பாடு இல்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் சத்திய வாழ்க்கை இல்லாமல் தர்மம் இல்லாமல் மந்திரங்களை கூறினால் அதனால் பலனேதும் இல்லை. பஞ்சாட்சரத்தை கூறு என்று நாங்கள் கூறுவதாக கொள்வோம். ஏன்? அட்டாட்சரம் மந்திரத்தை கூறக்கூடாதா? என்ற ஒருவன் கேட்பான். அட்டாட்சரத்தை கூறு என்றால் ஏன் பிரம்மதேவர் மந்திரத்தை கூறக்கூடாதா? என்று கேட்கப்பான். சரி பிரம்மதேவர் மந்திரத்தை கூறு என்றால் என் சடாட்சரத்தை கூறக்கூடாதா? என்பான். தெய்வத்தை எந்த மந்திரத்தை கொண்டு வேண்டுமானாலும் வணங்கலாம் தவறில்லை. அதோடு நாங்கள் கூறுகின்ற தர்ம வழியையும் கடைபிடித்தால் கட்டாயம் நூற்றுக்கு நூறு விழுக்காடு இறைவன் அருள் உண்டு. பாவங்களில் இருந்து விடுபடலாம். முன்பே கூறியிருக்கிறோம் ஏதாவது இறை நாமத்தை முன் அதிகாலையில் வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை அன்றாடம் உருவேற்றி வந்தால் கட்டாயம் நீ கூறிய நன்மை அனைவருக்கும் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 533

கேள்வி: சனி லக்னாதிபதியாக இருந்து அந்த சனிபகவான் ஏழாம் பாவத்திலிருந்து எழுக்குரிய கிரகம் ஆறாம் பாவத்தில் வலிமை பெற்று புதனோடும் உச்சம் பெற்று இருக்கிற குருவோடும் இணைந்திருக்கும் பொழுது அந்தப் பெண்ணுக்கு யோகம் வருமா? அல்லது அந்த பெண்ணை மணந்த கணவனுக்கு யோகம் வருமா? அல்லது இருவருக்குமே யோகம் வருமா?

இறைவன் அருளால் உச்சமே பெற்றிருந்தாலும் கூட சில நன்மைகளை தந்தாலும் கூட ஏழு ஆறோடு கூடி விடுகிறது. லக்னத்திற்குரிய பாவம் அங்கே கெட்டுப்போய் விடுவதால் கட்டாயம் இருவருக்கும் கெடு பலன்தான் அதிகமாக இருக்கும். சுக பலன் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சற்றே விழிப்புணர்வு பெற்று இறை வழியில் வந்துவிட்டால் கெடு பலனை குறைத்து நல்ல பலனை அதிகரித்துக் கொள்ளலாம். இதை வேறு வகையில் கூறினால் ஆன்ம வழியை நோக்கி வாழ்க்கையை திருப்பி கொண்டால் வாழ்க்கை ஒரளவு நன்றாக இருக்கும். லோகாய சுகத்திற்காக வெற்றிக்காக பாடுபட்டால் வேதனைகள் தான் மிஞ்சும். உடல் நலிவு தான் ஏற்படும்.

அச்சன் கோவில் மணிகண்டன்

அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர் ஸ்ரீ கார்யம் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியம் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தியோடு அவரை நினைத்தவாறே பணி செய்வார். அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து அதீதமான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் காணாமல் போன மரங்களின் விபரங்களை ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள். கோவிலேயே அதிக நேரம் தினம் இருந்து இறைவனையே நினைத்துக் கொண்டே இருந்தார். அதனால் வேலையில் கவனமின்மை ஆனதால் யார் வெட்டினர் என தெரியாமல் போனது. என்ன விபரம் கொடுப்பது என்று புரியாது அவர் திகைத்தார். சரியான பதில் தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தத்துடன் இருந்தார்.

தர்ம சாஸ்தா கோவிலின் திருவிழா நடைபெற்று வந்த காலம் அது. உன்னை நினைத்து நினைத்து வாழ்ந்த நான் கஷ்டத்தோடு இங்கே இருக்கிறேன். உனக்கு விழாவா என்று எண்ணிக் கொண்டே இரவு படுக்க சென்றார். அன்றிரவு தர்ம சாஸ்தா அவர் கனவில் வந்து நாளை நீதிமன்றத்தில் நீதிபதி மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும் என்று மட்டும் சொல் என்றார். மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க இவரும் எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி சொல்லுவான்’ என்றார். அதை கேட்ட நீதிபதி மணிகண்டனை அழைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர் மணிகண்டன் மணிகண்டன் மணிகண்டன் என மும்முறை அழைத்தார். பின்னர் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் யாரோடு பேசுகிறார் என அங்கே இருந்த அனைவரின் கண்களுக்கு புலப்படவில்லை. நீதிபதி தொடர்ந்து சாட்சி கூண்டில் இருந்தவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் ஸ்ரீகார்யத்தை நோக்கி மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’ என தீர்ப்பளித்தார்.

இந்த நிகழ்வைக் கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும் ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன ஆனது என பேசிக்கொண்டனர். என்ன நடந்தது யாரிடம் பேசினார் இந்த நீதிபதி. ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார். புரியாத புதிராக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு. தீர்ப்பு வந்தவுடன் ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி விழுந்தார். தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வழக்கறிஞர்கள் சிலர் நடந்தது குறித்து நீதிபதியிடம் கேள்வி எழுப்பினர். எங்கள் கண்களுக்கு தெரியாத மனிதரிடம் பேசினீர்கள் என்றனர். நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டன் என்பவர் வந்தார். அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார். வந்தவர் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள். அச்சன் கோவில் வந்தார் ஆங்கிலேய நீதிபதி. மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே வந்தது இவர் தான். இவர் தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.

இந்த ஆலயம் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகாவில் அச்சன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பஞ்ச சாஸ்தா கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் குளத்துப்புழா ஆரியங்காவு சபரிமலை மற்றும் கந்தமாலா கோவில்கள் ஆகும். அச்சன் கோவில் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு ஆறு கோயிலுக்கு அருகில் உருவாகிறது. சபரிமலை கோயிலைப் போலவே அச்சன்கோவில் கோயிலிலும் பதினெட்டு படிகள் உள்ளன. அச்சன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இந்த பரசுராமரால் நிறுவப்பட்டது. இங்குள்ள ஐயப்பனின் பிரதிஷ்டை கேரளாவில் உள்ள மற்ற சாஸ்தா ஆலயங்களில் இருந்து மிகவும் தனித்துவமானது. இந்த சிலை ருத்ராட்ச சிலை என்று அழைக்கப்படுகிறது. அச்சன் தனது இரண்டு மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலாவுடன் கிரிஹஸ்தாஷ்ரமியாக திருமண வாழ்க்கையை நடத்துபவராக சித்தரிக்கப்படுகிறார். விஷமுள்ள பாம்புக் கடிகளைக் குணப்படுத்துவதில் இந்த ஆலயம் புகழ் பெற்றது. இதனால் அய்யப்பன் பெரும்பாலும் மகாவைத்தியராக அருள் பாலிக்கிறார். சிலையின் வலது உள்ளங்கையில் எப்போதும் சந்தனம் மற்றும் தீர்த்தம் ஆகியவை இருக்கிறது. இவை மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது. இக்கோயிலில் மாளிகைப்புறத்தம்மா துர்க்கை நாகராஜா நாகயக்ஷி கணபதி முருகர் கருப்பசுவாமி கருப்பாயி அம்மா செப்பனிமுண்டன் சப்பாணிமாடன் மாடத்தேவன் காளமாடன் கொச்சட்டிநாராயணன் ஷிங்காலி பூதத்தன் அருக்கோலத்தன் போன்ற உப தெய்வங்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் நாகர் உள்ளார்.

காமத்தை வெல்வது பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் மிகுந்த பதட்டத்துடன் இளைஞன் ஒருவன் வந்து என் மனத்தை எவ்வளவு அடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் கீழான ஆசைகளும் வெறுக்கத்தக்க உணர்ச்சிகளும் என் மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனால் நான் அமைதியை இழந்து தவிக்கிறேன் காமம் எப்படி விலகும்? என்று கேட்டன்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்பா இறைக்காட்சி கிட்டாதவரை காமம் அடியோடு விலகுவதில்லை. அதன் பிறகும் உடல் இருக்கும் வரை அதன் சுவடு சிறிது இருக்கவே செய்யும். அதனால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. என்னிடமிருந்து முழுமையாகக் காமவாசனை போய்விட்டதென்றா நினைக்கிறாய்? காமத்தை வென்று விட்டதாக நான் ஒரு சமயம் நினைத்தேன். அதன் பிறகு ஒருநாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தபோது என்னைமீறிக் காம உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. என்னால் அடக்கவே முடியாது போல் தோன்றிற்று. நான் ஆடிப் போய்விட்டேன். உடனே தரையில் விழுந்து புழுதியில் முகத்தைத் தேய்த்துக் கொண்டு அழுத வண்ணம் அன்னை காளியிடம் அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன். காமத்தை வென்றதாக இனி எண்ணவே மாட்டேன் என்று முறையிட்டேன். அதன் பின்னரே அந்த உணர்ச்சி என்னை விட்டு நீங்கியது. நீயோ வாலிபன். அதனால்தான் உன்னால் அந்த வேகத்தை அடக்க இயலவில்லை. பெரு வெள்ளம் புரண்டு வரும்போது அது கரையைப் பற்றி கவலைப்படவா செய்யும். கரையோவஎதுவோ வழியிலுள்ள அனைத்தையும் உடைத்துக் கொண்டு அது முன்னேறுகிறது. வயல்களில் புகுந்து பெரும் உயரத்திற்குத் தேங்குகிறது.

கலியுகத்தில் மனத்தினால் அறியாமல் செய்கின்ற பாவம் பாவமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. ஏதோ ஒருமுறை கெட்ட எண்ணம் எழுந்து விட்டதற்காக ஏன் இப்படிப் படபடக்கிறாய்? உடலின் இயற்கைப் படி இந்த உணர்ச்சிகள் சில சமயம் வந்துபோகத்தான் செய்யும். இதையும் மலம் கழிப்பது போன்ற சாதாரண உணர்ச்சியாக எண்ணிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாராவது கன்னத்தில் கைவைத்து கொண்டு கவலைப்படுகிறார்களா? அதேபோன்று இத்தகைய உணர்ச்சிகளையும் இயல்பானவையாக அற்பமானவையாகக் கருது. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய். இறை நாமத்தை ஜெபி. அவரது பெருமையில் ஈடுபடு. கெட்ட எண்ணங்கள் வரட்டும் போகட்டும். அவற்றைக் கண்டு கொள்ளாதே. தாமாகவே அவை கட்டுக்குள் அடங்கி விடும் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 532

கேள்வி: பிரார்த்தனை பற்றி:

இறைவன் அருளால் ஒரு மனிதன் இதையெல்லாம் பெறலாம் இதையெல்லாம் பெறக்கூடாது என்று அவன் முந்தைய பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவி இறைவனால் வகுக்கப்படுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்ட பிறகு அது வேண்டும் என்று வினவுவது மனித ஆசையாக இருக்கலாம். தரக்கூடாது என்பது விதியாக இருக்கும் பட்சத்தில் அது சற்று கடினம்தான். இருந்தாலும் ஆசைப்பட்டதை பிரார்த்தனை மூலம் நல்ல தருமத்தின் மூலம் போராடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவையெல்லாம் எனக்கு வேண்டுமோ இறைவா அதை நீயே தந்துவிடு. எது கிடைத்தால் எனக்கு நலமோ அதை நீ எனக்கு தந்துவிடு. எதை இழந்தால் எனக்கு நலமோ அது என்னை விட்டுப் போகட்டும் என்று இறைவனிடம் பொதுவாக ஒரு பிரார்த்தனை செய்து விடுவதே சிறப்பு. வேண்டும் வேண்டும் வேண்டும் என்று வேண்டுவதை விட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற பிரார்த்தனையே உண்மையான பிரார்த்தனையாகும்.

ராமாயணம் இறுதிக் கட்டத்தில் ராமரைப்பற்றி ஐனகர் சொன்னது

மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா. அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஒன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன் மனைவியிடம் கொடுத்தார். ஐனகர் ராஜரிஷி. அந்த செய்தி அவர் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஓலையை வாங்கி வாசித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனை எத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்ற போது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேய, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள். சில ஆண்டுகளுக்கு பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண் மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை அயோத்தி வராமல் காட்டிற்குள்ளேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது. லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள். இதெல்லாம் முடிந்ததே இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை. ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள். சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா. இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாகத்தான் இனி வாழ வேண்டும்.

ராமனும் பரதனும் சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சி வசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள் தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம் எனப் புறப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி அயோத்தி மாநகரை வந்தடைந்தது. அயோத்தி வீதிகளில் மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன. மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்க வேண்டும். தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர். தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் குதிரைகள் பறந்தன. நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம். \

ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியின் கரையில் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன் சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத் தொடங்கியது. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டதை உணர்ந்த மக்கள் ராமா ராமா என கோசம் எழுப்பினார்கள். ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

ராமர் நம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாரே இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே உங்களுக்கு வருத்தமாக இல்லையா? ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது. சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா? என அவள் ஏங்கினாள். மாண்டவி சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்க பேச ஆரம்பித்தார்.

மனித உடல் என்பது உறை. ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான். வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்து விட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம் என்றார்.

சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா? என்று கேட்டாள். அதற்கு ஐனகர் ஆமாம் ஒன்றை யோசி அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும் என்றார். அதற்கு சுனயனா இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா? என்று கேட்டாள்.

ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் என்று ஜனகர் ஒரு கட்டளை போல் கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கணத்தில் ஆதிசேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக மாறி திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.

ராமரைக் கண்ட மக்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ஜெய் ஸ்ரீராம் என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன. ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்று அறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ராம ராம என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.