கேள்வி: இறை தரிசனம் கிட்டும் போது நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஐயனே:
இறைவனே தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணி கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை விடவில்லை. எனவே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை வைக்கும் பொழுதே இறைவா நீ என்னை ஆட்கொண்டு விடு. நீ வேறு நான் வேறு என்று இல்லாமல் எப்படி நதி தனியாக இருக்கும் வரை நதி அது கடலில் கலந்து விட்டால் அது நதி இது கடல் என்று பிரிக்க முடியாதோ அதை போல் என்னை ஆக்கிவிடு என்ற ஒரு பிரார்த்தனையை வைத்தால் போதும்.
கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்
தருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை கொல்ல அனுப்பிய புலியின் தோலினை உரித்து உடுத்திக் கொண்ட தோற்றம் சார்த்துலஹர மூர்த்தியாகும்.
தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.
தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் அபிசார ஹோமம் என்ற யாகத்தினை வளர்த்தனர். அதன் மூலம் உருவாக்கப்பட்ட கூரிய கொடிய புலியை சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் அப்புலியை அடக்கி அதன் தோலினை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்டார். அக்கோலமே சார்த்துலஹர மூர்த்தியாகும்.
மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது.
கேள்வி: காலம் தானாக சுழற்சி பெறுமா? அல்லது மறுபடியும் அதை இறைவன் ஆரம்பத்திலிருந்து இயக்குவாரா?
இறைவனின் கருணையாலே வளைந்த நிலையிலே உள்ள ஆரத்திற்கு எது ஆரம்பம்? எது முடிவு? அதைப் போலத்தான் இந்த அண்ட சராசரமும் இறைவனின் இயக்கமும் இன்று ஆரம்பம் போல் தோன்றும். இன்னொன்று முடிவு போல் தோன்றும். முடிவிலும் ஆரம்பம் இருக்கும். ஆரம்பத்திலும் முடிவு இருக்கும்.
தன்னைத்தானே அர்ச்சிக்கும் மூர்த்தி சதாசிவ வடிவமாகும். அகவழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவ லிங்கமாயும் நிற்கும். உருவம் அருஉருவம் (லிங்கம்) என இரண்டு நிலைகளை பார்க்கும் வண்ணமும் அருபத்தை உணரும் வண்ணமும் இத் திருவுருவம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் மேலப்பழுவூரிலும் சிவலிங்கத்தைத் தோளில் சுமந்தவாறு காட்சி தரும் அரிய சதாசிவனின் சிற்பங்கள் உள்ளன.
மாகபலி மன்னனுக்கு வாணாசுரன் எனும் மகன் இருந்தான். இவன் ஆயிரம் கைகளைக் கொண்டவன். இவனது மனைவி சுப்ரதீகை. இவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கத்தை அமைத்து அதற்கு தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வந்தான். சிவபெருமான் இவனுக்குக் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இவன் உலகம் முழுவதையும் நானே அரசாட்சி செய்ய வேண்டும். நான் இருக்கும் சோணிதபுரத்தை சுற்றி என் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாதபடி நெருப்பினால் ஆன மதில் சுவர் அமைய வேண்டும். அழிவே இல்லாத நிலை வேண்டும் என்று கேட்டான். அதன்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் வரத்தை அருளிக் கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் வெற்றி பெற்று ஆட்சி செய்தான். மீண்டும் சிவபெருமானை தரிசித்து வரத்தைப் பெற விரும்பி வெள்ளி மலையை அடைந்தான். அங்கு தனது ஆயிரம் கைகளிலும் குடமுழா வாத்தியக் கருவியை வாசித்து தவம் செய்தான். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்திற்கு வந்து வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான். அவனின் தவப்பலனால் சிவபெருமான் குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே வசித்தார். இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு இழுத்து தோற்கடித்ததால் அனைவரும் ஓடி மறைந்து வாழ்ந்தார்கள். போர் செய்ய ஆட்களை தேடினான். யாரும் இல்லாமல் இறுதியில் தன்னுடன் போர் புரியும் படி சிவபெருமானை அழைத்தான்.
சிவபெருமானோ தனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டான். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள். அந்த செய்தி உனக்குக் கிடைக்கும் போது வருவான் என்றார். வாணாசுரனின் மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர் புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமானை கண்டான். சிவபெருமான் கண்ணனை சண்டைக்கு அழைத்தார். கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் கண்ணனைத் தேற்றி வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய். அதற்கு முன் எண்ணிடம் போர் புரிந்து பயிற்சி செய்வாயாக என்றார். இருவருக்கும் பல காலங்கள் போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க போர் நின்றது. பின் கண்ணனுக்கும் வாணாசுரனுடன் பயங்கரப் போர் நடைபெற்றது. அவனது கரங்கள் ஒவ்வொன்றாக கண்ணன் துண்டித்தான். சிவபெருமானை தொழுத கைகளை மட்டும் வெட்டாமல் கண்ணன் விட்டார். மனம் மாறிய வாணாசுரன் இறைவனிடம் மன்னிப்பு வேண்ட மன்னிக்கப்பட்டு மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. சிவபெருமான் இருப்பிடத்தில் குடமுழா வாத்தியக் கருவியை வாசிக்க பணி அமர்த்தப்பட்டான். அவனது மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணனுடன் போர் புரிய சிவபெருமான் எடுத்த உருவமே ஜ்வாரபக்ன மூர்த்தியாகும்.
ஜ்வராபக்ன மூர்த்தியை நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டிய குடியில் உள்ள கோயிலில் காணலாம். இறைவியின் பெயர் வேதநாயகி ஆகும்.
கேள்வி: நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் மூலம் பரமசிவன் திருவிளையாடல் புரிந்ததன் தாத்பர்யம் குறித்து விளக்குங்கள்:
எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட அவன் செய்கிற தவறை ஆதரிக்கக் கூடாது. தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம்.
தண்டு முனிவர் என்பவர் சிவபெருமானின் பக்தராகவும் நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார். சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்தார். தான் கற்ற நடனத்தை தண்டு முனிவர் பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்கு தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவ லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரத முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் இறுதியான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன. இதனால் பரதரின் பெயரைத் தாங்கி நாட்டியமானது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவன் நாட்டியத்தை தண்டு முனிவருக்கு கற்றுக் கொடுக்கும் இந்த சிற்பம் இருக்கும் இடம் மாமல்லபுரம்.
கஜாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவத்துடன் இருப்பவன். அவன் மேருமலையின் மேல் பிரம்மாவை நினைத்து கடும் தவம் செய்தான். தவத்தின் பலனாக பிரம்மா தோன்றினார். கஜாசுரன் யாராலும் தன்னை அழிக்க முடியாத வரமும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். சிவனை தவிர வேறு யாராலும் உனக்கு அழிவு இல்லை என்றும் வெற்றி கிடைக்கவும் பிரம்மா வரத்தைக் கொடுத்தார். வரம் கிடைத்ததும் அவன் தனது குணத்தைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானைத் தவிர அனைவருக்கும் தொல்லைகளையும் கொடுமைகளையும் செய்யத் தொடர்ந்தான். இந்திர லோகத்தின் தலை நகரான அமராவதியை நோக்கி சென்றான். எதிர்த்த இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான ஐராவம் யானையின் வாலைப் பிடித்து இழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். தேவர்களையும் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தி விரட்டினான். அவனைக் கண்டு பயந்த அனைவரும் காசியில் வீற்றிருந்த சிவபெருமானிடம் சென்றார்கள். பிரம்மாவிடம் அழியாத வரம் வாங்கிய கஜாசுரன் இங்கு வந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சிவபெருமானிடம் சரணடைந்தார்கள். மக்களின் பின்னாலேயே வந்த கஜாசுரன் சிவபெருமானை தான் எதிர்க்கக் கூடாதது என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலய வாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடுரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்ற சிவபெருமான் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.
சிவபெருமான் கஜாசுரனை தனது திருவடியால் உதைக்க அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். சிவனது உக்கிரத்தை கண்டு அனைவரும் நடுங்கியபடி இருந்தார்கள். கஜாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சிவபெருமான் சாந்தமடைந்தார். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயர். இவருக்கு யானை உரித்த பெருமான் என்ற பெயரும் உள்ளது.
தாரகாபுரத்து முனிவர்கள் பிட்சாடனராக வந்த சிவபெருமானை அழிக்க யாகம் செய்து தங்களது மந்திர சக்தியைக் கொண்டு யாகத்தில் வந்த யானையால் சிவனானை அழிக்க ஏவினார்கள். சிவபெருமான் யானையின் உடலில் புகுந்து யானையின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார். அவரை கஜசம்கார மூர்த்தி என்றும் அழைப்போம்.
புராண சிவன் கோயில்கள் பலவற்றில் கோபுரத்திலும் தூண்களிலும் சுதை சிற்பமாகவும் இந்த கஜயுக்த மூர்த்தியின் சிற்பமும் கஜசம்கார மூர்த்தி சிற்பமும் உள்ளது.
கேள்வி: ஐயனே தவிர்க்க முடியாமல் ஒரு பாம்பை கொல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
அப்படித்தானப்பா சித்தர்கள் இருக்கும் பகுதிக்கு மனிதர்கள் வந்து விட்டால் நாங்களும் தவிர்க்க முடியாமல் அவர்களை கொன்று விடலாமா? பாம்புக்கு தெரியுமா? பாம்பு திட்டமிட்டு ஏதாவது செய்கிறதா? ஆனால் திட்டமிட்டு பொறி வைத்து அதை பிடித்து தோலை உரித்து வியாபாரம் செய்வது யார்? எனவே வாகனத்தில் செல்லும் பொழுது கண் பார்வையில் சிக்காமல் சில ஜீவன்களை கொல்ல நேர்ந்தால் கூட பிரம்மஹத்தி தோஷம் அவனுக்கு பீடிக்கும் என்றால் மற்றவைகளுக்கு நீயே யோசித்துக்கொள். என்றாலும் ஒரு ஜீவன் ஒரு மனிதன் மூலம் விதி முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது இவ்வாறு நடப்பது உண்டு. அதனால் இவனுக்கு கர்மா வர வேண்டும் என்ற விதி இருக்கும்.