46 – திருமூலர்

திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.

இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளியிருக்கும் பொதிகை மலையை அடையும் பொருட்டுத் திருக்கைலையிலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி, வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருக்கேதாரம், பசுபதிநாதர் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்து விட்டு பின்பு காஞ்சி நகரையடைந்து, திருவேகம்பப் பெருமானை வழிபட்டு அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர் திருவதிகையை அடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரை வந்தடைந்தார். எல்லா உலகங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார்.

தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார் அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருத்தலமான திருவாவடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு அத்திருத்தலத்திலே சிறிது காலம் தங்கியிருந்தார். சில காலம் கழித்து திருவாவடு துறையிலிருந்து கிளம்பிச் செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்று தொட்டு ஆநிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச்சுற்றி வந்து வருந்தி அழுதன. மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் இப்பசுக்களின் துயரத்தினை நீக்குதல் வேண்டும் என்ற எண்ணம் திருவருளால் தோன்றியது. இந்த இடையன் உயிர் பெற்று எழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்காது என எண்ணிய தவமுனிவர் தம்முடைய திருமேனியைப் பாதுகாப்பாக ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தியினால் தமது உயிரை அந்த இடையனது உடம்பில் புகுமாறு செலுத்தினார். மூலன் அதுவரை உறங்கியிருந்தவன் போல் சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தான்.

திருமூலர் விழித்தெழுந்ததைக் கண்டு பசுக்கள் மகிழ்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தின. துள்ளிக் குதித்தன. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் பசுக்களைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு சேர்ந்து துள்ளிக் குதித்தார். மாலை வந்ததும் வீடு நோக்கி பசுக்கள் புறப்பட திருமூலரும் கூடவே புறப்பட்டார். ஒவ்வொரு பசுவும் தத்தம் வீடு அறிந்து புகுந்து கொண்டன. திருமூலர் அவற்றை எல்லாம் வீடு சேர்த்தார். ஆனால் மூலன் மட்டும் அவரது வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் ஞான திருஷ்டியால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தார். அதனால் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினார். மூலனின் மனைவி கணவன் வரவை வெகு நேரமாக எதிர்பார்த்துப் பயன் ஏதும் இல்லாததால் கணவனைத் தேடிப் புறப்பட்டாள். வரும் வழியிலே ஓரிடத்தில் கணவன் அமர்ந்து இருப்பதைக் கண்டு வியப்பு மேலிட அருகே சென்று வீட்டிற்கு வரக் காலதாமதம் ஆனது பற்றி வினவினாள். மூலன் மௌனம் சாதித்தார். மூலனின் மனைவி வியப்பு மேலிட கேள்வி மேல் கேள்வி கேட்டாள். திருமூலர் மௌனமாகவே இருந்தார். அவரது மனைவிக்கு புரியவில்லை. திருமூலரின் கையைத் தொட்டு அழைக்க முற்பட்டாள். அம்மையார் செய்கை கண்டு திருமூலர் சிறிது எட்டி விலகினார். அதைக் கண்டு அந்தப் பெண்மணி அஞ்சி நடுங்கி உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? எதற்காக இப்படி விலகுகிறீர்கள்? என்று மன வருத்தத்தோடு கேட்டாள். திருமூலர் மூலனின் மனைவியிடம் என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும் எனக்கும் இனி மேல் எவ்வித உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு அமைதி பெறுவாயாக என்று கூறினார். அதற்குமேல் அவள் முன்னால் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூல யோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கிப் போனாள் மனைவி. கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கவலையோடு வீடு திரும்பினாள்.

இரவெல்லாம் பெருந்துயர்பட்டுக் கிடந்தாள். மறுநாள் மூலனின் மனைவி சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு அவர் இருக்குமிடத்திற்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத்தில் தெய்வ சக்தி தாண்டமாடுவது போன்ற தனிப் பிரகாசம் பொலிவு பெறுவது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். இருந்தும் அவர்கள் மூலனின் மனைவிக்காக திருமூலரிடம் வாதாடினர். ஒரு பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு திருமூலர் ஒரு முனிவர் என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் மூலனின் மனைவியிடம் உன் கணவர் முன்னைப்போல் இல்லை. இப்பொழுது அவர் முற்றும் துறந்த முனிவராகி விட்டார். இனிமேல் இந்த மெய்ஞானியாரோடு வாழ வேண்டும் என்பது நடக்காத காரியம் என்ற உண்மையைக் கூறினர். அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி கணவனுக்கு இப்படிப் பித்துப் பிடித்து விட்டதே என்று தனக்குள் எண்ணியவாறே அவரது கால்களில் விழுந்து வணங்கி வேதனையோடு வீடு திரும்பினாள். சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர் மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிடைக்கவில்லை முதலில் யோகியாருக்கு சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை உணர எண்ணம் கொண்டார். தபோ வலிமையால் இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் உடலை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார். திருமூலநாயனார் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

மூலனின் ஊரிலிருந்து புறப்பட்ட திருமூலர் திருவாவடுதுறை திருத்தலத்தை அடைந்து மூலவர் பெருமானைப் பணிந்தவாறு மதிலுக்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று இதயக் கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். உணர்வு மயமாய்த் திகழ்ந்தார். உலகோர் பிறவியாகிய துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையை பாடினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல். தெய்வீக ஆற்றலுடன் திகழ்ந்து சிவபதவியை நினைப்பவரைப் பாவக் குழியிலிருந்து வெளியேற்றிக் காப்பதால் திருமந்திரம் எனத் திருநாமம் பெற்றது.

திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும் இலக்கியங்களையும் நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டராக போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்குத் தான் திரும்பும்வபொழுது கொண்டு வந்தார் என்பதும் அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இதற்குச் சான்றாக இன்றளவும் பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இருப்பதை இன்றும் காணலாம். இவரது திருநூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது. அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.

திருமூலர் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றி பாடியருளிய திருமந்திரம் வேத ஆகமங்களின் சாரம். இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது. சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்தப் புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின் திருமூலர் சிதம்பரம் சென்று தில்லை நாதனுடன் கலந்து தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிற்குறிப்பு:

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்ற போதும் திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தான் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை ஆலையத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்துவிட்டு அவர் சிதம்பரம் சென்று நந்தீசுவரருடன் கலந்து விட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்) தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலின் வாயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே என்ன என்று பாருங்கள்’ என்று கூறி கொடி மரத்தின் அடியில் உள்ள மண்ணைத் தோண்டச் செய்து அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளை கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் அதை வெளியிட்டு அனைவருக்கும் ஓதி அருளச் செய்தார்.

பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாக சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

குருபூஜை: திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.