சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான பகுதியிலே வணிக குல மரபில் அமர்நீதியார் பிறந்தார். 7 ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய் மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும் மணியும் முத்தும் வைரமும் வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பும் அவரது செல்வச் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டியது. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து ஆடையும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்கள் தங்குவதற்காக திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில் அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார்.
சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பக்திப் பண்பினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவத்தில் அவர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். அமர்நீதியார் அந்தணரைப் பார்த்ததும் தாங்கள் இம்மடத்திற்கு இப்போது தான் முதல் தடவையாக வருகிறீர்கள் என்று கருதுகிறேன் தாங்கள் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்றார். அதற்கு எம்பெருமான் அடியார்களுக்கு அமுதளிப்பதோடு அழகிய வெண்மையான ஆடைகளும் தருகின்றீர்கள் என்ற செய்தி கேட்டு உங்களை பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன் என்று பதிலுரைத்தார். அந்தணரின் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளம் குளிர மடத்தில் அந்தணர்களுக்காக வேதியர்களால் தனியாக உணவு செய்கின்றோம். அதனால் தயவு கூர்ந்து உணவருந்தி அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று உங்களது விருப்பத்தை நான் உளமாற ஏற்றுக் கொள்கிறேன். முதலில் நான் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றேன். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை வானம் மேகமாக இருப்பதால் மழை வந்தாலும் வரலாம். எனது உடை இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை கொடுத்து விட்டுப் போகிறேன். பாதுகாப்பாக வைத்திருந்து நான் வரும் போது தரவேண்டும். இந்தக் உடைகளை சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். இதன் பெருமையைப் பற்றி வார்த்தைகளால் எடுத்து சொல்ல முடியாது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அந்தணர் தன்னிடம் இருந்த உடையில் ஒன்றை எடுத்து அமர்நீதியாரிடம் கொடுத்து விட்டு நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். அடியவர் சொன்னதை மனதில் கொண்ட அமர்நீதியார் அந்த உடையை மற்ற உடைகளோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்புடன் வைத்தார்.
அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட சிவபெருமான் அமர்நீதியாரிடம் கொடுத்த உடையை மாயமாக மறையச் செய்து அமர்நீதியாரை சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். அந்தணர் சற்று நேரத்தில் மழையில் நனைந்து கொண்டே மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார் அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அந்தணர் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார் விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணியைக் கொடுத்தார். முதலில் நான் கொடுத்த உடைகளை எடுத்து வாருங்கள் எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகி விட்டது என்றார் அந்தணர். அமர்நீதியார் உடைகளை எடுத்து வர உள்ளே சென்றார். உடைகளை தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு உடைகளை காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார் பலனேதுமில்லை. அமர்நீதியாரும் அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய புதிய உடையை எடுத்துக்கொண்டு அந்தணர் முன் சென்று வேதனையுடன் தலை குனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி ஐயனே எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட அந்தணர் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றுமே புரிய வில்லை என்றார். ஐயனே தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட உடையைப் பாதுகாப்பான இடத்தில் தான் வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இந்த புதிய உடையை அணிந்து கொண்டு எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.
அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அந்தணரின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உள்ளது உங்கள் பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற உடை அதற்குள் எப்படிக் காணாமல் போகும் நான் மகிமை பொருந்திய உடை என்று சொன்னதால் அதனை நீங்களே எடுத்துக்கொண்டு மற்றொரு உடையைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? இந்த நிலையில் நீங்கள் அடியார்களுக்குக் உடை கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ கொள்ளை லாபம் கொழிக்க நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப் பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உங்களை நம்பி நான் மோசம் போனேன். என்று இறைவன் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். அந்தணரின் சொன்னதேக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார் அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். நான் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமல் போன உடைக்கு ஈடாக அழகிய விலை உயர்ந்த பட்டாடைகளும் பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். நீங்கள் உங்கள் கோபத்தை தணித்து என் தவறை பொறுத்தருள வேண்டும் என்று பயபக்தியுடன் கேட்டுக் கொண்டார். பலமுறை மன்னிப்புக் கேட்டார். அந்தணரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார் கல்லும் கரையக் கெஞ்சுவதை கண்டு கோபம் சற்று போனது போல் பாவனை செய்த அந்தணர் தன்னிடம் இருக்கும் நனைந்த உடையைக் காட்டி இந்த உடைக்கு எடைக்கு எடை புதிய உடையை கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எனக்கு எதற்கு என்று கூறினார்.
அந்தணர் சொன்னதைக் கேட்ட அமர்நீதியார் சற்று மன அமைதி அடைந்தார். உள்ளே சென்று தராசை எடுத்து வந்து நடுவர்கள் முன் வைத்தார். அந்தணரிடமிருந்த உடையை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த உடையை மற்றொரு தட்டிலும் வைத்தார். நிறை சரியாக இல்லை. அதை கண்ட அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த வேறு புதிய உடைகளை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை. அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. இருந்த மற்ற உடைகளையும் தட்டில் வைத்துக் கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் உடை இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. இதனைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும் பட்டாடைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார். எவ்வளவு தான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற அமர்நீதியார் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும் வெள்ளியும் வைரமும் நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டு வந்து மலை போல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இப்போது எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்று தான் அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார். ஐயனே எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. நானும் என் மனைவியும் குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் அமர்நீதியார்.
அமர்நீதியாரும் அவரது மனைவியாரும் மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுவரை தவறு ஏதும் செய்யாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்க வேண்டும் என்று வேண்டி திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும் மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். தராசின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர். அதற்குள் அந்தணர் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார். அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழை போல் பொழிய முரசு முழங்கின. அமர்நீதியாரும் மனைவியாரும் மகனும் தராசுத் தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் தராசுத் தட்டு புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புஷ்பக விமானத்தில் கைலயத்தை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.
குருபூஜை: அமர்நீதி நாயனார் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.