சோழவள நாட்டில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் தாயனார். அவர் சிவபெருமானின் திருவடியை அன்புடன் தொடர்ந்து துதித்து வழிபட்டு வந்தார். பெரும் செல்வந்தராக இருந்த தாயனார் நாள் தோறும் ஈசனுக்கு செந்நெல் அரிசியில் உணவும் செங்கீரையும் இனிய மாவடுவும் நைவேத்தியமாக படைத்து தொழுவார். இறைவன் உணவை எடுத்துக் கொண்டதற்கு சான்றாக தாயனாருக்கு விடேல் என்ற சத்தம் ஒன்று கேட்கும். சத்தத்தை கேட்ட பின்பே உணவருந்து அன்றைய காரியத்தை தொடங்குவார் தாயனார். தன் மீது அன்பு கொண்ட பக்தர்களின் பக்தியின் உச்சத்தை சோதித்து அவர்களை உலகிற்கு தெரியப்படுத்த இறைவனுக்கு விரும்பினார். அதற்கான விளையாட்டை தொடங்கினார். இது நாள் வரை செல்வச் செழிப்பில் திளைத்து வந்த தாயனாரின் செல்வம் குறையத் தொடங்கியது. வறுமைக்கு தள்ளப்பட்டார். வறுமையில் இருந்தாலும் தாயனார் தளர்வின்றி முன்பை விட அன்புடன் இறைவனுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் முன்புபோலவே இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்தார். வறுமையின் பிடியில் இருந்த தாயனார் கூலி நெல் அறுத்து அதன் வாயிலாக கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு இறைவனுக்கு நெய்வேத்யம் செய்து அகமகிழ்வார். செய்த வேலைக்கு கூலியாக வரும் செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே படைத்தார். கார் நெல்லை மட்டும் உணவாக்கி தாயனாரும் அவரது மனைவியும் உண்டார்கள். இதற்கும் இறைவன் தடை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் கூலியாக கிடைக்கும் நெல் அனைத்தும் செந்நெல்லாகவே இருந்தது. கார் நெல் கிடைக்கவில்லை. செந்நெல் முழுவதும் இறைவனுக்கே என்ற கூற்றில் இருந்து பின் வாங்காத தாயனார் அப்போதும் கூட இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்று மனம் மகிழ்ந்து அனைத்து செந்நெல்லையையும் உணவாக்கி இறைவனுக்கு நைவேத்யம் செய்து வந்தார்.
தாயனார் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கீரைகளை சமைத்து கணவனும் மனைவியும் உண்டு வந்தனர். சில நாளில் கீரையும் கிடைக்காமல் தண்ணீரை மட்டுமே அருந்தி இறைதொண்டை எந்த தடையும் இன்றி தொடர்ந்து வந்தார் தாயனார். பல நாள் பட்டினி கிடந்தாலும் கூலியாக வரும் செந்நெல்லைச் சிவபெருமானுக்கே அமுது செய்து படைக்கும் தாயனாரின் திருவுள்ளம் அவரது அயராத அன்பு அதற்கு உடன்பட்டு உறுதுணையாக நின்ற அவரது மனைவியின் செயல் பக்தியின் எல்லையாக இருந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தாயனார் கூடை நிறைய தூய செந்நெல் செங்கீரை மாவடு போன்றவற்றை சுமந்து கொண்டு மனைவியுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல நாட்களாக பட்டினி என்ற நிலையால் அவரது கால்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடின. தாயனாரின் பின்னால் வந்த அவரது மனைவி தன் கணவன் கீழே விழுந்து விடாமல் இருக்க தன் வலக்கரத்தால் கழுத்தை தாங்கிப் பிடித்தும் சரிந்து விழுந்தார் தாயனார். இதனால் அவர் தலையில் சுமந்திருந்த கூடை விழுந்து செந்நெல் அரிசி கீரை மாவடு போன்றவை தரையில் பரவி தூய்மையற்றதாய் மாறியது நொந்து போனார் தாயனார்.
இறைவனுக்கு படைக்க வைத்திருந்த அனைத்தும் சிதறிப் போனப் பின் கோவிலுக்கு சென்று என்ன செய்வது என்று சிந்தித்தார். அனைத்தும் இறைவன் இருக்கும் இடமே அவன் இல்லாத இடமே இல்லை. அப்படியென்றால் நிலப்பரப்பிலும் அவன் இருக்கவே செய்வான். ஆகவே தாயனார் இறைவனை வேண்டினார். இறைவா நீ எங்கும் நிறைந்தவன் எல்லாம் ஆனவன். இந்த நிலத்திலும் நீயே இருக்கிறாய். எனவே நிலப்பரப்பில் விழுந்து கிடக்கும் இந்த உணவை நைவேத்தியமாக எடுத்துக் கொண்டு அருளுங்கள் இல்லையேன்றால் நான் தவறு செய்தவனாவேன். நீங்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் என்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று ஈசனிடம் மன்றாடினார். நாள்தோறும் இறைவனுக்கு தாயனார் உணவு படைக்கும் போது விடேல் என்ற ஒலி கேட்பது வழக்கம். அந்த ஒலி இப்போது கேட்காததால் இறைவன் தான் கூறியும் உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து தன் இடையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது நிலவெடிப்பில் இருந்து வெளிப்பட்ட ஒரு கை தாயனாரை தடுத்து நிறுத்தியது. மேலும் மாவடுவைக் கடிக்கும் ஒலியாக விடேல் விடேல் என்னும் ஓசையும் எழுந்தது. இறைவனுடைய திருக்கரம் தாயனாரின் கரத்தைப் பற்றியவுடன் கழுத்தை அறுக்க முயன்றதால் உண்டாகிய காயமும் பிற வினைகளும் அகன்றன. அவற்றை உணர்ந்த தாயனார் அச்சமும் அன்பும் கொண்டு ஈசன் தனக்கு தந்த பெருங்கருணையை எண்ணி அதிசயித்து கரங்களைக் கூப்பி பாடி வழிபாடு செய்தார். அப்போது இடப வாகனத்தின் மீது இறைவியுடன் காட்சி தந்தார் இறைவன். அன்பனே நீ புரிந்த செய்கை நன்றாகும். உன் மனைவியுடன் என்றும் சிவலோகத்தில் நம்மை விட்டு நீங்காது வாழ்வாய் என்று அருள் செய்து மறைந்தார் ஈசன். தன்னுடைய கழுத்தை அரிவாளால் அரிந்த காரணத்தால் தாயனார் அரிவாட்டாய நாயனார் என்னும் திருப்பெயர் பெற்றார்.
குருபூஜை: அரிவாள் தாய நாயனாரின் குருபூஜை தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.