வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம். செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம். ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாக்ஷம். அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா. மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம். சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம். சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில். உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம். தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி.
கேள்வி: நிகழ்காலத்தை கவனித்தாலே போதும் என்று மகான்கள் கூறுகிறார்களே. அது பற்றி:
கடந்த காலத்தை எண்ணி தொடர்ந்து விசனப்படுவதை விட எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுவதை விட நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதை நேர்பட ஒழுங்காக செய்தால் நலம் என்ற கூற்றில் இது கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் கடந்த காலத்தை மீண்டும் அந்தத் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கு திரும்பி பார்ப்பது தவறல்ல. கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் பாவமாக மாறுகிறது என்பதால் அதை நினைவில் வைத்துக் கொண்டு விழிப்புணர்வோடு வாழ அந்தக் கடந்த கால அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பொறுத்தவரை நிகழ்காலத்தில் கூடுமானவரை தெளிவாக இருக்கிறோம். நல்லதை எண்ணி நல்லதை செய்கிறோம். இருந்தாலும் சிலவற்றை செய்யத் தவறி விட்டோம். இதையாவது இனி எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருவதற்கு சற்று அவகாசம் எடுத்து எதிர்காலத்தை நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக சதா சர்வகாலம் கடந்த காலக் கவலையிலும் எதிர்கால அச்சத்திலும் இருந்து கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடக்கூடாது என்பதுதான் எம்போன்ற ஞானிகளின் வாக்காகும்.
கேள்வி: ரமண மகரிஷியின் நான் யார்? என்ற விசாரமே வேதத்தின் முடிவா?
அது ஒரு உச்ச நிலை. அதை நோக்கி செல்வதற்கு ஏற்கனவே ஏற்கனவே பல பிறவிகளில் அன்னவன் (ரமண மகரிஷி) முயற்சி செய்தது போல் செய்திருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே உச்ச நிலையை நோக்கி சென்றால் ஒரு மனிதனுக்கு சோர்வு தட்டும். எனவே தான் எளிய பக்தி மார்க்கமும் வேறு பல செயல்களும் செய்து கொண்டே சென்றால் ஒரு கட்டத்திலே அவனவன் ஆத்மாவிற்கே அந்த விசாரம் செய்வது எப்படி? என்பது இறைவனால் உணர்த்தப்படும்.
ஆகவே பற்றில்லாமல் எப்போதும் ஆற்ற வேண்டிய உனது கடமைகளை செய்து கொண்டிரு. ஏனெனில் பற்றில்லாமல் கடமைகளை செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அர்ஜூனா நீ இறைவனை உணர்ந்த ஞானி இல்லை. ஆகவே நீ எதன் மீதும் பற்றில்லாமல் உனக்கான கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இரு. தனக்குண்டான கடமைகளை பற்றில்லாமல் செய்பவன் இறைவனை அடைகிறான்.
கர்நாடகாவில் சக்லேஷ்பூர் அருகே உள்ள மேகனகட்டேவில் உள்ள பைரவேஸ்வரா கோவில் பழமையான கோவில். இந்த கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கெம்புஹோல் மற்றும் குமாரதாரா என்ற இரண்டு ஆறுகள் இங்கிருந்து தோன்றுகின்றன. இரண்டு ஆறுகளும் நேத்ராவதி ஆற்றில் இணைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மலை மீது உள்ள மலை என பல மலைகளால் சூழப்பட்டுள்ளது 2.5 கிமீ மலையேற்றம் மூலம் கோயிலை அடையலாம். வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடுகிறார்கள். துரியோதனனுடனான பகடை விளையாட்டில் தோற்ற பிறகு பாண்டவர்கள் 12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டனர். தலை மறைவாக வாழும் அங்ஞாதவாசத்தில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். அந்த இறுதி ஆண்டில் பாண்டவர்கள் இங்கு சில காலம் தங்கியிருந்தார்கள். அப்போது சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள். இந்த கோவிலை சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் காட்டு விலங்குகள் இங்கு சுற்றித் திரிகின்றன. ஆகையால் கோவிலில் வழிபட செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதிசங்கரர் இங்கு வழிபட்டிருக்கிறார்.
கேள்வி: கொங்கண சித்தரின் ஜீவ சமாதி திருப்பதியில் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது?
ஜீவ அருட் பீடங்கள் என்று நாங்கள் கூறுகின்ற முறை வேறு. மனிதர்கள் அறிந்த முறை வேறு. பெரும்பாலும் புராண கால ரிஷிகளுக்கெல்லாம் இந்த ஜீவ அருட் பீடங்கள் அதாவது மனிதர்களால் கூறப்படும் ஜீவ சமாதிகள் என்றுமே கிடையாது. ஆண் பெண் கலப்பிலே யோனிப் பிறப்பாக வந்தவர்களில் சிலருக்கு மட்டும்தான் இந்த ஜீவ சமாதி என்பது அதுவும் அந்தந்த சித்தன் நினைத்தால் இறைவன் அருளினால் கிடைக்கிறது. மற்றவை எல்லாம் அந்தந்த சித்தர்கள் அங்கு வந்து சிலகாலம் தங்கி வழிபாடு நடத்திய ஆலயங்கள் என்ற அளவிலே பொருள் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கருத்தை அவரவர்கள் சொந்தக் கருத்தோடு சேர்த்து வைத்து குழப்பம் அடையாமல் அப்படி இந்த இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறினால் தாராளமாக வணங்கி விட்டு செல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இதுதான். முன்னர் முன்னர் புராண கால ரிஷிகள் யாருமே ஜீவ சமாதி என்பது அடைந்தது கிடையாது. அவர்கள் நித்திய சொரூபிகள். இறை போல் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள் இனியும் இருப்பார்கள்.
கேள்வி: ஒரு புறம் பசு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் மறுபுறம் கொலைக் களத்திற்கு பசுமாடுகளை அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?
இந்த உலகம் தோன்றிய நாள் முதல் நன்மையும் தீமையும் கலந்தேதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படி தீமையை செய்கின்ற மனிதன் எப்படி யார் சொன்னாலும் கேட்காமல் தீமையை செய்கிறானோ அதைப் போல நன்மையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த மனிதனும் யார் சொன்னாலும் அந்த நன்மையை விட்டுவிடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? தீமை செய்கின்ற எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அது கண்டு அஞ்சாமல் தொடர்ந்து தீமையை செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நன்மையை எண்ணி இறங்குகின்ற மனிதன் சிறு எதிர்ப்பு வந்தாலும் சோர்ந்து விடுகிறான். எனவே இது போன்ற தீமைகள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். கூட்டு வழிபாடும் தொடர்ந்து அவரவர்களால் முடிந்த நன்மையான தர்ம காரியங்களை செய்வதன் மூலம்தான் இதனை தடுக்க அல்லது குறைக்க இயலும்.
எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
எவனொருவன் பேரொளியாக இருக்கும் இறைவன் தான் தனக்குள் ஆத்மாவாக இருக்கிறான் என்பதையும் தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்பதை உணர்ந்து ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் பேரின்பத்தில் சமாதி நிலையில் இருக்கிறானோ அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை.
அந்த மனிதன் இந்த உலகில் கர்மங்களைச் செய்தாலும் எந்த பயனும் இல்லை. செய்யாவிட்டாலும் எந்த பயனுமில்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டியது என்ற தொடர்பு சிறிது கூட இல்லை.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் மனிதர் இறைவனை தனக்குள் உணர்ந்த ஞானி ஆவார். அவர் எந்த விதமான பயனையும் தனக்காக பெறுவதற்கு கர்மம் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தாலும் அவருக்கு எந்த விதமான பாவமோ புண்ணியமோ எற்படுவதில்லை. மேலும் தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள அவர் இந்த உலகத்தில் எந்த பொருளையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதாமி நகரில் பாதாமி குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தின் இரட்டை நகரங்களான ஹூப்ளி தார்வாடுக்கு வடகிழக்கில் 110 கிமீ தொலைவில் இக்கோயில்கள் உள்ளன. வரலாற்று நூல்களில் வாதாபி வாதாபிபுரி வாதாபிநகரி என்ற பெயரில் பாதாமி சாளுக்கியரின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் விளங்கியது. இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. பாதாமி நகரின் தென்கிழக்குப் பகுதியில் செங்குத்தான மலைச் சரிவில் இக்குகைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. இங்கு நான்கு குகைக் கோயில்கள் உள்ளன. முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.
முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம் ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும் மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன. மூன்றாம் குகையில் நாகர திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும் கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர சக்கர வடிவ வேலைப்பாடுகளும் வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன. முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை குறிப்பாக சிவன் திருமால் குறித்த சிற்பங்களையும் நான்காவது குகை ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன. பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.
நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும் இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும். முதன்மையான நான்கு குடைவரைக் குகைக்கோயில்கள் வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் 27 சிற்பங்களுடைய மற்றொரு குகையொன்று 2013 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் இக்குகையிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. விஷ்ணு மற்றும் பிற இந்துக் கடவுளரின் சிற்பங்களுடன் தேவநாகரியில் அமைந்த கல்வெட்டும் இங்குள்ளது. இச்சிற்பங்களின் காலம் அறியப்படவில்லை.
தீபத்தை ஏற்றுவதின் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஔியே தெய்வ சக்தி. எனவே ஔியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக மனிதன் பார்த்து வழிபாடு செய்து வந்தான். ஔி அக்னியாக மின்னலைக் கண்டு அதும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவேதான் இன்றும் தற்காலத்திலே எத்தனையோ எண்ணையில்லா விளக்குகள் மனிதன் கண்டு பயன் படுத்தக்கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் தீபம் எல்லாவற்றிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மைப் படுத்துகிறான். எனவே அந்த தீபத்தீல் அவன் இடுகின்ற பொருளுக்கும் அந்த சுற்று வெளிக்கும் பரவெளிக்கும் தொடர்பு இருக்கிறது. பொதுவாக தூய்மையான நெய்தீபம் அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணையைக் கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையிலும் ஏற்றலாம். தேங்காய் எண்ணையில் தாராளமாக ஏற்றலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில்தான் இந்தந்த தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப் படுத்தினால் அது கடுமையான தோஷத்தை செய்கின்றவனுக்கு ஏற்படு்த்தும். ஆலயத்தை தூய்மைமாக பராமரிப்பதும் பக்தியில் ஓர் அங்கம்தான்.
கேள்வி: குடும்ப ஒற்றுமைக்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்:
கருத்து வேறுபாட்டை பகை என்று எண்ணுகின்ற குணம் மனிதர்களிடம் என்றென்றும் இருக்கிறது. கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை பகையாக்க முயற்சி செய்யாமல் இருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையைத் தரும். அதே சமயம் பாவ வினைகள்தான் இது போன்ற உறவு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழப்பழகி விட்டால் இல்லத்தில் பெரிதும் குழப்பம் இராது.
பார்த்தா எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு சுழழும் வட்டமாக வைக்கப்பட்ட படைப்பு சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி தன் கடமையை ஆற்றவில்லையோ புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை உடையவன் வீணே வாழ்கிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சுலோகம் 133 மற்றும் 134 இல் உள்ளபடி உலகில் படைப்புகள் வட்டமாக சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த சுழழும் வட்டத்தை பின்பற்றி எவனொருவன் கர்ம யோகத்தில் ஈடுபட்டு தனக்குண்டான கடமையை செய்யாமல் தனது புலன்களின் வழியாக வரும் போகங்களில் ஈடுபடுகிறானோ அவன் தன் பிறவியை வீணடித்துக் கொண்டு பாவ வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.