ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 156

கேள்வி: பெரிய கருப்பூர் ஆலய முருகனுக்கு சேவல் கொடி வாங்கி அளிக்க:

திருச்சியிலிருந்து 14 கி.மீ உள்ள ஜீயபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய கருப்பூர் ஆலய முருகனுக்கு திருச்சி அன்பர்கள் சேவல் கொடி வாங்கி அளிக்க ஆசிகள் கேட்டபோது அகஸ்தியம் பெருமான் அருளிய வாக்கு.

கொடிய வினை போக

கொடிய பாவம் போக

கொடிய மாந்தனின் (மனிதனின்) வாழ்வு மாய

கொடிய உறவுகள் விலகிப் போக

கொடிய சம்பவங்கள் வாழ்வில் நடக்காமல் இருக்க

கொடியை வாங்கி திருத்தொண்டு செய்வது சிறப்பு.

கேள்வி: கூத்தைப் பார் அம்பாள் ஆனந்தவல்லி குறித்து:

கோவில் உள்ள இடம்: கூத்தப்பர் (திருச்சியிலிருந்து 15 கி.மீ திருவெறும்பூர் வட்டம்)

பெயரிலேயே இருக்கிறதப்பா ஆனந்தம் என்பது. மெய்யான அன்போடு பக்தியோடு அவனவன் பிறந்த நட்சத்திர நாளன்றும் பெளர்ணமி நாளன்றும் அன்னைக்கு முடிந்த வழிபாட்டை செய்தால் திருமண தோஷம் நீங்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை நீங்கும். அன்னை திரு வின் அதாவது அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். இந்த ஆலயத்திலே சத்ரு சம்ஹார யாகத்தையும் செய்யலாம். அனைத்தையும் விட சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதைப் போல தேகம் நன்றாக இருப்பதற்கான ஆயுள் விருத்தி யாகத்தையும் இங்கு செய்யலாம். எனவே இந்த கூத்தைப் பார் ஆலயம் ஒரு சிறப்பை அல்ல பல சிறப்புகளை கொண்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 155

கேள்வி: பித்ருக்களுக்கு திலதர்ப்பணம் செய்யும் முறை பற்றி:

தெய்வ சமுத்திரக் கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று அது ஏனோ தானோ என்று இருந்தாலும் ஒரு முறை செய்துவிட்டு பிறகு அங்கு முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு இறைவனுக்கு வழிபாடுகள் செய்து விட்டு தீபங்களும் ஏற்றி விட்டு பிறகு அமைதியாக அவரவர் இல்லத்திற்கு வந்து கூட பித்ரு சாப நிவர்த்தி பூஜையை செய்து கொள்ளலாம். தில தர்ப்பணம் என்றால் எள்தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. மற்ற யாகங்களைப் போல் சகல பொருள்களை பயன்படுத்தியும் செய்யலாம். முதலில் வழக்கம் போல் கணபதி யாகம் குல தெய்வ யாகம் செய்து விட்டு நவகிரக யாகம் நரசிம்மர் யாகம் சுதர்சனர் யாகம் சரபேஸ்வரர் யாகம் துர்கை யாகம் செய்து விட்டு நவகிரகங்களின் அதி தேவதைகளுக்கும் பூஜை செய்து பிறகு இறுதியாக எந்த இல்லத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அவர்களுக்குத் தெரிந்த முன்னோர்களின் பெயரை எல்லாம் கூறி (இதில் கூட எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஏன் என்றால் பெயர் என்பது உடலுக்கு இடப்படுவது தான். என்றாலும் அப்போது வாழ்கின்ற மனிதர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நாமாவளி) மானசீகமாகவோ அல்லது வாய்விட்டோ எங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் இன்று யாங்கள் செய்கின்ற யாகம் பூஜை மற்றும் தர்ம பலனால் இந்த பலனின் எதிரொலியால் இறைவனின் அருளால் பித்ரு தேவதைகள் இந்த பலனை எடுத்து அவர்களுக்கும் பயன்படுத்தி அதன் மூலம் அவர்களின் நிலை மாறி நற்கதியும் சற்கதியும் அடைவதற்கு இந்த பூஜையை பயன்படுத்தி கொள்ளுமாறு இறையிடமும் ஏனைய தேவதைகளிடமும் மனதார பிராத்தனை செய்து கொள்கிறோம் என்ற கருத்து வருமாறு வாசகங்களை அமைத்து கொள்ள வேண்டும்.

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையில் அதாவது தில யாகத்திலே மிகச்சிறப்பே கோ (பசு) தானம் தான். தானங்கள் 32 க்கும் மேற்பட்டு உள்ளன. கோ தானம் சுவர்ண தானம் வெள்ளி தானம் அன்ன தானம் என்று விதவிதமான தானங்கள் உள்ளன. ஆனால் அனைவராலும் இவைகளை செய்ய முடியாது. வாய்ப்பு இருப்பவர்கள் செய்யலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் பசுவிற்கு ஒரு வேளை உணவாவது கொடுக்க வேண்டும். பிறகு ஆலயம் சென்று முடிந்த பூஜைகள் செய்து மோட்ச தீபம் ஏற்றி அந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். தில தர்ப்பணத்தை புண்ணிய நதிக்கரையிலோ புண்ணிய கடற்கரையிலோ செய்யும் பொழுது கூறுகின்ற மந்திரங்களின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். அது மட்டும் அல்லாது எல்லோருடைய இல்லமும் புனிதமானதாக இராது. தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தோஷமுள்ள வீடுகளில் பூஜை செய்தால் அதன் பலன் குறைவு. அதனால்தான் ஆத்ம பலம் தெய்வ பலம் உள்ள சேத்திரங்களை முன்னோர்கள் கூறி வைத்தார்கள்.

திருமூலர் அபிசேகம் ஆராதனை

2022 வருட பிறப்பை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமூலர் சந்நிதியில் நடைபெற்ற அபிசேகம் மற்றும் ஆராதனை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 154

கேள்வி: யாகத்தின் போது அபிஷேகம் செய்யும் முறை:

பொதுவாக யாகம் முடிந்த பிறகுதான் அந்தந்த முர்த்தங்களுக்கு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு செய்வது வம்சாவளியாக வரும் பழக்கம். எம்மை பொருத்தவரை யாகத்திற்கு முன்பும் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் போன்ற வழிபாடு செய்து யாகம் பூர்த்தி அடைந்த பிறகும் ஒரு அபிஷேகம் வழிபாடு செய்வதுதான் பரிபூரணமான ஒரு முறையாகும். அடுத்து யாகம் செய்விப்பவனும் கலந்து கொள்பவனும் மனதை பூப்போல் வைத்திருக்க வேண்டும். அங்கு எதிர்மறை வார்த்தைகளோ எரிச்சலூட்டும் வார்த்தைகளோ வெறுப்பை உமிழும் வார்த்தைகளோ பேசக்கூடாது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆடைகள் பழையதாக இருந்தாலும் துவைத்து சுத்தமாக இருக்க வேண்டும். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பின் மீது அமர வேண்டும். யாகத்தில் கலந்து கொள்ளும் ஆண் பெண் இருவருமே எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு வர வேண்டும். நகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது அறவே நீக்கி விட வேண்டும். மறை ஓதுவோர்கள் மந்திரங்களை உச்சரிக்கும் போது வாயில் இருக்கும் எச்சில் யாகத்தீயிலோ வேறு எந்த யாகப் பொருள்களின் மீதோ விழக் கூடாது.

ஆண் பெண் இருபாலரும் கை கால்களில் மறுதோன்றியை (மருதாணி) இட்டுக் கொள்வது சிறப்பு. உடைகளில் பருத்தி ஆடைகள் ஏற்றது. ஆண்கள் மேல் ஆடை அணியாமல் இருப்பது சிறப்பு. மந்திரங்களை அவசர அவசரமாக மென்று விழுங்கி மென்று விழுங்கி ஏனோ தானோ என்று உச்சரிக்காமல் அட்சர சுத்தமாக ஸ்பஷ்டமாக ஆணித்தரமாக நிதானமாக சொல்வது நல்ல பலனைத் தரும். எந்த ஒரு யாகத்திற்கும் முன்பாக மூத்தோனுக்கு உரிய கணபதி யாகத்தை செய்து மற்றவற்றை பின் தொடரலாம். நெருப்பினால் சமைக்கப்பட்ட உணவைவிட இயற்கை கனிகள் அன்னைக்கு ஏற்றது. எல்லா வகை வாசமிக்க மலர்களையும் குறிப்பாக தாமரை மலர்களை தூய்மையான நெய்யிலே கலந்து கலந்து கலந்து இடுவது சிறப்பு. அதோடு ஒவ்வொரு பொருளையுமே நெய்யோடு கலந்து இடுவது மிகுந்த பலனைத் தரும். யாகப் பொருள்களை சிதற விடாமல் ஒழுங்காக வைப்பது சிறப்பு. ஆலயமாக இருந்தாலும் யாகக் கல்லை அடுக்குவதற்கு முன்னால் அந்த இடத்தை தூய நீரினால் சுத்தி செய்து பசும் கற்பூரம் மங்கலப் பொடி கலந்த நீரினாலும் சுத்தம் செய்து விட்டு யாகக் கல்லையும் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளே போடும் மணல் உமி போன்றவற்றை சலித்து தூய்மை செய்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். எதையெல்லாம் நீரினால் சுத்தம் செய்ய முடியுமோ செய்ய வேண்டும். பல்வேறு மனக்குழப்பத்தில் இருக்கும் மனிதர்களை அதிக காலம் ஒரே இடத்தில் அமர வைக்க முடியாது. நீண்ட காலம் பூஜை செய்வது என்பது மனம் பக்குவப்பட்ட ஆத்மாக்களால் மட்டும்தான் முடியும். யாக மந்திரம் ஒலிக்கும் போது தேவையற்ற பேச்சிக்களும் தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. எனவே மந்திர ஒலி ஒலிக்கத் தொடங்கி விட்டால் அனைவரும் அமைதியாக கவனிக்க வேண்டும். யாகத்தை சிறப்பாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் செய்ய வேண்டும்.

சுலோகம் -85

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-38

வெற்றி தோல்விகளையும் லாப நஷ்டங்களையும் சுக துக்கங்களையும் சமமாகக் கருதய பின் யுத்தம் செய். இவ்விதம் நீ யுத்தம் செய்வதால் உனக்கு எந்த பாவமும் வந்து சேராது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த யுத்தத்தை நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் இந்த ராஜ்யமும் சுகமும் கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தில் எதிர்த்து வரும் உறவினர்களையும் நண்பர்களையும் நான் கொல்கிறேன் என்ற எண்ணம் இல்லாமலும் இந்த யுத்தத்தின் பலன்கள் சுகமானதாக இருந்தாலும் துக்கமானதாக இருந்தாலும் இரண்டையும் சமமாக கருதுவேன் என்ற எண்ணத்தை வரவழைத்து அதன் பின் யுத்தம் செய். இவ்வாறு யுத்தம் செய்வதனால் உனக்கு எந்த விதமான பாவமும் வந்து சேராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 153

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 153

கேள்வி: திருவண்ணாமலையில் அருணகிரிக்கு முருகன் காட்சி தந்தது பற்றி:

அந்த வாதம் எந்த நோக்கிலே துவங்கப்பட்டதோ அப்போது அருணகிரிநாதர் எதை ஆரம்பித்தாரோ அந்த பாடல் ஒரு நிலை பூர்த்தி அடைந்தவுடன் முருகன் காட்சி அளித்தார். அவற்றில் சில பாடல்கள் மனிதர்களின் கண்களுக்கு இன்னும் சிக்கவில்லை. அப்போது வல்லாள மகாராஜாவின் கண் பார்வை பறிபோனது உண்மை. பொதுவாக அதிரூப இறை காட்சிகளை மகான்களின் காட்சிகளை முழுமையாக அல்ல ஓரளவு பார்த்தாலே விழியிலே பார்வை குறையத்தான் செய்யும். அந்த அளவிலே அந்த நிகழ்வு உண்மைதான். ஆனால் அடுத்த ஒரு வினா எழும். அதி உன்னதமான இறைவனை பார்த்தால் கண்கள் பறி போய்விடும் என்றால் எப்படி இறைவனை பார்ப்பது? என்று. அதற்கு ஏற்ப மனித உடல் தேகம் பக்குவமடைய வேண்டும். இருந்தாலும் வல்லாள மகாராஜாவிற்கு மீண்டும் பார்வை வந்ததும் உண்மை.

கேள்வி: சப்த மாதர்கள் பற்றி:

பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை பெண்களாக பிறந்து விட்டோமே? என்று கவலைப்படும் பெண்கள் சப்த மாதர்களை வழிபட்டால் குறைபாடு நீங்கும். பெண்களுக்கே உண்டான உடல் பிரச்சனைகள் தீர்வதற்கு இவர்கள் வழிபாடு உதவும். ஆண்கள் மனோ தைரியம் இல்லாமலிருப்பது ஒன்றை நினைத்து சதா சர்வ காலமும் கவலைப்படுவது தைரியம் இல்லாமலிருப்பது போன்ற துன்பங்களுக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலே உயர்வான அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் நலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 152

கேள்வி: யாகத்தை பற்றிய பொதுவாக்கு:

நல்விதமாய் பூஜைகள் நடத்திடத்தான் கால காலம் மூத்தோனை (விநாயகரை) வணங்கி செயல்பட நன்மை உண்டு. அனைத்திலும் உயர்தரம் பரிசுத்தம் உடலும் சுத்தம் உள்ளமும் சுத்தம் ஆடையும் சுத்தம் இடமும் சுத்தம் பொருளும் சுத்தம் உணவும் சுத்தம் என்று அனைத்திலும் சுத்தமாக இருப்பது இறை அருளை எளிதாக கூட்டுவிக்கும். தன் குறைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுவிட்டு எவனொருவன் இதிலே கலந்து கொள்கிறானோ அவனுக்கு இறைவனின் பரிபூரண அருள் உண்டு. இதிலே கலந்து கொண்டபிறகு கர்மாக்கள் குறைவதால் எதிர்காலத்திலே இறையின் தரிசனம் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஆத்மார்த்தமாக கலந்து கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த பூஜையை முடித்த அடுத்த பட்சத்திற்குள் (ஒரு பட்சம் என்பது பதினைந்து நாட்கள் ஏழைகளுக்கு அன்ன சேவையும் மருத்துவ உதவிகளையும் செய்வது இறைவனின் அருளை மேலும் கூட்டி வைக்கும். எந்த அளவிற்கு யாகத்திற்கு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு இத்தகைய அறப்பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இறை அருளை விரைவாக கூட்டி வைக்கும்.

கேள்வி: யாகத்தில் எப்படி பங்கு கொள்ள வேண்டும்?

உடல் சுத்தம் உள்ள சுத்தம் வேண்டும். விரல் நகங்களை அகற்றிட வேண்டும் (முடியாத பட்சத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்). வெள்ளிக்கிழமைகளில் நகம் அகற்றாமல் இருப்பது நல்லது. அந்தி நேரம் (மாலை நேரம்) இரவு நேரங்களிலும் மற்றும் வீட்டின் நடுக்கூடத்திலும் நகம் வெட்டக்கூடாது). ஒவ்வொரு முறையும் வாய்ப்பு இருந்தால் எண்ணெய் ஸ்நானமே செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்போர் புதிய ஆடையையும் வாய்ப்பு இல்லாதோர் துவைத்த ஆடையையும் அணிவது நல்ல பலனைத் தரும். ஆண்கள் மேலாடை இல்லாமலோ அல்லது மேலே ஒரு வஸ்திரத்தை போர்த்திக் கொள்வது நல்ல பலனைத் தரும். பெண்கள் தூய்மையாக குளிப்பதோடு முன் தினமே மருதாணியை கை கால்களில் இட்டு கொள்வது நல்ல பலனை தரும்.

சுலோகம் -84

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-37

இந்த யுத்தத்தில் நீ கொல்லப்பட்டால் சொர்க்கத்தை அடைவாய். இல்லை என்றால் இந்த பூமியை ஆட்சி செய்வாய். ஆகையால் யுத்தம் செய்ய துணிந்து எழுந்து நில்

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யும் போது கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு செல்வாய். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யும் போது வெற்றி பெற்று விட்டால் இந்த பூமியை ஆட்சி செய்வாய். இரண்டில் எது நடந்தாலும் அது உனக்கு நன்மையானதே. ஆகவே துணிந்து நின்று இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 151

கேள்வி: கந்தர் அலங்காரம் பற்றி:

பொதுவாக ஆரங்களாலும் அணிமணிகளாலும் இறைவனுக்கு அலங்காரம் செய்வதே பக்தனுக்கு வழக்கமாக உள்ளது. அதையே மொழியின் வார்த்தைகளாக செய்வது தான் இந்த அலங்காரம். இதன் உட்பொருள் மீண்டும் மெய்ஞானத்தைதான் குறிக்கிறது. ஆனாலும் கூட இதையும் இல் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்றால் புற வாழ்க்கைக்கு மேனி அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் அது தொடர்பான துறையிலே இருப்பவர்கள் உடல் வசீகரமாக இருக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த கந்த அலங்காரத்தை ஓதி வரலாம்.

கேள்வி: கலசவிழா (கும்பாபிஷேகம்):

புறத்தே ஒன்றை வைத்து அகத்தே திசை திருப்ப செய்யப்பட்ட எத்தனையோ வழிபாடு முறைகளில் கலச நீராட்டு விழாவும் ஒன்று. அங்கனமாயின் ஒரு மனிதன் தன் தேகத்தை யோகாசனங்களால் வலுவாக்கி திடமாக்கி உள்ளத்தை உரமாக்கி உயர்வாக்கி கர்மங்களை எல்லாம் குறைத்து வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பத்மாசனமிட்டு தொடர்ந்து தவத்தில் ஈடுபட ஈடுபட தான் யார்? ஆத்மா யார்? அது எதற்காக வந்தது? என்பதை உணர்ந்து தனக்குள்ளே ஊறுகின்ற ஓர் அமுதத்தை தன் ஆத்மா முழுவதும் பரவ செய்வதுதான் உண்மையான அக கலச விழா. அதை குறிப்பது தான் இந்த புற கலச விழா.

சுலோகம் -83

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-36

உன்னுடைய எதிரிகள் உன்னை நிந்தித்துப் பலவிதமான சொல்லத் தகாத வார்த்தைகளை கூறுவார்கள். உன் திறமையை பழிப்பார்கள். அதைவிட அதிகம் துயரம் கொடுக்கக் கூடியது வேறு என்ன இருக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உன்னுடைய எதிரிகளான கௌரவர்கள் உன்னை கோழை என்றும் மரணத்திற்கு பயந்தவன் என்றும் இதுநாள் வரை நீ தவம் செய்து யுத்தம் செய்து பெற்ற உன்னுடைய புகழை கலங்கப்படுத்தி சொல்லத் தகாத வார்த்தைகளால் பேசுவார்கள். மேலும் இதற்கு முன் நீ செய்த யுத்தம் அனைத்திலும் திறமை இல்லாதவர்களுடன் யுத்தம் செய்து வென்றிருக்கிறாய். இப்போது திறமையுள்ளவர்களுடன் யுத்தம் செய்தால் தோற்று விடுவோம் என்று பயந்து ஓடுகிறாய் என்று உனது திறமையை பழிப்பார்கள். உனது வாழ்க்கையில் இந்த தகாத வார்த்தையை விட துயரம் கொடுக்ககூடிய வார்த்தை வேறு ஒன்று இருக்காது என்று ஆகவே இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.