சுலோகம் -89

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-42

வேதங்களின் வரிகளில் உழன்று சொர்க்கத்தை விட சிறந்த பலன் வேறு இல்லை என்று சாதிப்பார்கள். இவர்கள் மலர்களைப் போன்று அழகாக பேசி தங்களது கருத்துக்களை தவிர மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று சொல்வார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வேதங்களில் யாகம் செய்வதினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. அதன் உண்மையான உள் விளக்கம் மோட்சம் அடைவதை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பலர் வேத வரிகளின் உட்கருத்தை புரிந்து கொள்ளாமல் வேதங்களில் உள்ள வரிகளில் உள்ள வார்த்தையின் விளக்கத்தை மட்டும் புரிந்து கொண்டு இதனைச் செய்தால் இந்த சக்தி கிடைக்கும் இதன் வழியாக சொர்க்கத்திற்கு செல்லலாம் அங்கு மேலும் சுகவாசியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பலனை எதிர்பார்த்து இருப்பார்கள். தங்களது இந்த கருத்து மட்டுமே சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று வேதத்தின் வரிகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று மலர்களைப் போன்று அழகாக பேசுவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 160

ஒரு அன்பர் மகாலட்சுமி யாகம் செய்துவிட்டு வந்தவுடன் அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு:

இக்கேள்விக்கு திரு என்ற ஒரு தமிழ் வார்த்தையை வைத்து பதில் சொல்லி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார் அகத்தியர்.

திரு என்றால் மகாலட்சுமி என்று பொருள். திருப்தியாய் திரு யாகம் (திரு = மகாலட்சுமி) அன்னை திரு யாகம் அது அக்னி அணையா திரு யாகம் சிறப்பாய் அமைந்தமைக்கு இறைவன் அருளால் யாம் அருளாசி கூறுகிறோம்.

இறையிடம் கேட்கா திரு

எதையும் எதிர்பாரா திரு

இறையிடம் ஒன்றும் வேண்டாம் என் றிரு

இறையிடம் என்றென்றும் அன்பாய் இரு

பஞ்ச புலனை (ஐந்து புலனை) அடக்கி இரு

மனம் அலையாமல் அதனை இறுக்கி இரு

ஒவ்வொரு நாளும் அன்னை திரு வை (மகாலட்சுமி) எண்ணுங்கால் அந்த மெய்ப்பொருளே உண்மை பொருள் என்பதை உணர்ந்தே இரு

கேட்கா திரு. ஆனால் யாருக்கும் தரா இரா என்ற நிலையிலே அள்ளித் தரும் நிலை வரும் வரை மனம் அதில் ஆழும் வரை இருக்க இரு.

அந்த அன்னை திரு அது அனைவரையும் அணைக்கும் திரு. கேட்பதை கொடுக்கும் திரு அந்த உயர் திரு மைந்தனை உயர்த்தும் திரு.

எதையும் எண்ணா திரு அதைத் தவிர வேறு எதையும் எண்ணா திரு.

அன்னை திரு வின் திரு வடியை எண்ணும் திரு இயம்பு திரு. உயர்வு திரு. இப்படி வரும் திரு.

சில சமயம் போகும் திரு. இருந்தாலும் வரும் திரு போகும் திரு. எண்ணா திரு. அதிலே உயர் திரு.

இத் திரு அத் திரு எத் திரு? என்று பாராமல் காத் திரு காத் திரு.

அன்னை திரு என்றும் அனைவரையும் ரட்சித் திரு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 159

சில அன்பர்கள் ஒரு சிவன் ஆலயத்திற்கு சென்ற பொழுது இறை ரூபங்களின் மீது பூக்களை வைத்து வழிபட்டுவிட்டு வந்தனர். அதன் பிறகு அகத்திய மாமுனிவர் அருளிய வாக்கு:

கேள்வி: ஐயனே கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு வந்தோம். அதற்கு ஆசி வழங்க வேண்டும்.

அதெல்லாம் சரி. ஒன்று பூக்களை ஒரு மனிதன் மாலையாகப் போட்டுக் கொள்வான். அல்லது கலிகாலத்திலே அழகுற மேல் அங்கியிலே சொருகிக் கொள்கிறான். அதை விட்டுவிட்டு உதிரி பூக்களை அள்ளி தலையில் வைத்துக் கொண்டு ஒருவன் நடந்தால் அவனை என்னவென்று அழைப்பீர்கள்?

அன்பர்கள்: பைத்தியக்காரன் என்று அழைப்போம்

பின் ஏனடா நந்தியின் தலையிலே பூக்களை அப்படி அள்ளி வைக்கிறீர்கள்? தாமரையை மாலையாகக் கட்ட வேண்டும். தாமரையிலே இருக்கின்ற தேன் மிக உயர்ந்த தேன். தாமரை பூக்களின் தேனை மட்டும் அன்னை கலைவாணி (சரஸ்வதி தேவி) ரூபத்திற்கு அபிஷேகம் செய்தால் ஒருவனுக்கு முக்காலமும் உணரக்கூடிய ஞானம் பிற்காலத்திலே வரும். கல்வி கேள்வியில் வெற்றி கிடைக்கும்.
எனவே தாமரை பெரியதாக இருக்கிறது என்பதற்காக இதோ இந்த மூடன் அப்படி அப்படியே எடுத்து வைத்திருக்கிறான். தாமரை மாலை மிக மிகச் சிறப்பு. தனியாக வைப்பது தவறு என்று கூறவில்லை. அதை விட இது சிறப்பு என்றுதான் கூறுகிறோம்.

கேள்வி: சமீபத்தில் வாக்கு உரைப்பது தடைபட்டிருப்பதற்கான காரணத்தை குருநாதரிடம் வினவிய போது:

வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உறைப்பதில்லை வாக்கு உரைக்கின்றோம்.

இந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் அகத்தியர் தழிழில் விளையாடி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிலை விளக்கத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.

வாக்கு உரைக்கின்றோம் (விளக்கம் சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த விளக்கம் உங்களுக்கு புரியவில்லை)
வாக்கு உரைக்கின்றோம் (கேள்விக்கு பதில் அளிக்கின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை)!
வாக்கு உரைக்கின்றோம் (திருவாக்கு சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அதனை ஏற்றுக் கொண்டாலும் சொல்லுகின்ற வாக்கை உறுதியாக கடைபிடிப்பதில்லை)
வாக்கு உறைப்பதில்லை (சொல்லுகின்ற வாக்கு உங்கள் மனதில் பதியவில்லை) வாக்கு உரைக்கின்றோம் (ஆனாலும் சொல்லுகின்ற வாக்கை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்).

திருமூலர் – வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் 19-06-2021 அன்று Zoom நேரலையில் நிகழ்த்திய கலந்துரையாடல்.

சுலோகம் -88

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-41

குரு வம்சத்தில் வந்தவனே இந்த கர்ம யோகத்தில் உறுதியான புத்தி ஒன்று தான் இருக்கிறது. இந்த கர்ம யோகத்தில் மனதை நிலை நிறுத்தாமல் உள்ளவர்களுக்கு அறிவு பல வழிகளிலும் பாய்கிறது. இது முடிவில்லாததாக இருக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்ம யோகத்தின் வழியில் எதிர்பார்ப்பில்லாத செயலை செய்யும் போது அவனது புத்தி ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு அது அவனை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது. ஆனால் குறிப்பட்ட பலன்களை எதிர்பார்த்து செயலை செய்யும் போது புத்தியானது ஒரே சிந்தணை குறிக்கோளுடன் இருப்பதில்லை. புத்தியானது தனது சிந்தனைகளையும் முடிவுகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. இது முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 158

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 158

கேள்வி: ஐயனே தங்களை எங்களுக்குக் காட்டி அருள வேண்டும்:

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ நீதி வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளை காட்டி அருளுகிறோம். எனவே இறையே காட்டானை மீது அமர்ந்து வந்தாலும் தன்னைக் காட்டானை காட்டானை என்றுதான் இறையே இருக்கிறார். இந்த காட்டானையை நீ பிடித்து நன்றாக வழிபடு. காட்டானை உன் அருகில் இருக்க அதை தவிர வேறு காட்டானை எதற்கு? எனவே காட்டானை காட்டானை ஆக இருக்க நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும் காட்டிக் காட்டிக் காட்டி அருளுகிறோம். காட்டானை திருவடி வணங்கி நாங்கள் காட்டி அருளுகிறோம் காட்டானை. தன்னைக் காட்டாத காட்டானை நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் காட்டானையின் திருவருளாலே எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு அந்தக் காட்டானை அருள் புரிந்தால் நாங்கள் எங்களையும் காட்டி அருளுகிறோம். காட்டானை அருள வேண்டும் என்று தன்னைக் காட்டானை திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

இந்த கேள்வியில் காட்டி என்ற தமிழ் வார்த்தை வைத்து பதில் கொடுக்கும் அகத்தியர் தழிழில் விளையாடி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிலை கீழே விளக்கத்துடன் கொடுத்திருக்கிறோம்.

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ நீதி வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எனவே இறையே காட்டானை (காட்டு யானையின் தோலை உரித்து அதன் மீது அமர்ந்திருக்கும் கஜசம்ஹார மூர்த்தி) மீது அமர்ந்து வந்தாலும் தன்னைக் காட்டானை (வெளிப்படுத்தாமல் இருப்பவனை) காட்டானை (வெளிப்படுத்தாமல் மறைந்து இருக்க வேண்டும்) என்றுதான் இறையே இருக்கிறார். இந்த காட்டானையை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனை) நீ பிடித்து நன்றாக வழிபடு. காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல்) உன் அருகில் இருக்க அதை தவிர வேறு காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வேறு ஞானிகளோ சித்தர்களோ) எதற்கு? எனவே காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவன்) காட்டானை (தன்னை மறைத்துக் கொண்டு இருக்க) ஆக இருக்க நாங்கள் மட்டும் காட்டி (வெளிப்படுத்திக் கொண்டு) அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும் காட்டிக் காட்டிக் காட்டி (பல வழியாகத் தெரிவித்து) அருளுகிறோம். காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவனின்) திருவடி வணங்கி நாங்கள் காட்டி (தகுதியுள்ளவர்களுக்கு வெளிப்படுத்தி) அருளுகிறோம் காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனை). தன்னைக் காட்டாத (வெளிப்படுத்திக் கொள்ளாமல்) காட்டானை (மறைந்து இருப்பவனை) நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் காட்டானையின் (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனின்) திருவருளாலே எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு அந்தக் காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவன்) அருள் புரிந்தால் நாங்கள் எங்களையும் காட்டி அருளுகிறோம். காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவன்) அருள வேண்டும் என்று தன்னைக் காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவனின்) திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

கேள்வி: சித்தர் காடு பற்றி

நாடி என்னும் நாமம் உடைய சித்தன் அங்கு அடங்கி இருப்பது உண்மை. குருவாரம் (வியாழக்கிழமை) முழு மதி தினங்களில்(பெளர்ணமி) அங்கு வழிபாடு செய்வது நன்மையைத் தரும். பித்த நிலை மனிதர்களுக்கு பித்தம் தெளியும்.

நாடி என்று அழைக்கப்படும் சிற்றம்பல நாடி சித்தரின் வரலாற்றை அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -87

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-40

கர்ம யோகத்தின் மூலம் தொடங்கப்பட்ட முயற்சிக்கு அழிவில்லை. இந்த முயற்சியில் பாவங்கள் ஏற்படுவதில்லை. இந்த கர்ம யோகம் என்ற தர்மத்தை சிறிதளவு கடைபிடித்தால் கூட இந்த தர்மமானது சம்சார பந்தம் என்ற பிடியில் இருந்து காப்பாற்றும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்ம யோகம் என்பது செய்கின்ற செயல்களில் பலனை எதிர்பார்க்காமலும் வருகின்ற பலன் மீது பற்று வைக்காமலும் தொடர்ந்து செயலாற்றுதல் ஆகும். கர்ம யோகத்தை கடைபிடிக்க ஆரம்பித்த சாதகர் அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டு விட்டாலும் ஆரம்பத்தில் செய்த கர்மத்தின் பலனானது அழிவதில்லை. அது சாதகரின் உள்ளத்தில் விதை போல் ஊன்றி நின்று சாதகரை மீண்டும் இந்த யோகத்தை செய்ய உந்துதலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த கர்ம யோகத்தை சரியாக செய்யும் போது ஏதேனும் தெரியாமல் தவறு செய்துவிட்டாலும் கூட பாவங்கள் ஏற்படாது. இந்த கர்ம யோகத்தின் தர்மமானது சம்சார பந்தம் என்னும் பிடியிலிருந்து காப்பாற்றி மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 157

கேள்வி: பார்வதி சுயம்வர யாகம் எப்போது நடத்தலாம்?

பொதுவாக இறைவனை வணங்க காலம் திதி நாழிகை எதுவும் முக்கியமல்ல என்றாலும் சிறப்பாக கூறவேண்டும் என்றால் பொதுவாக திருமணம் என்பது யாருடைய பொறுப்பு? சுக்கிரன் பொறுப்பு. எனவே வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். அதேசமயம் திருமணம் நிகழவேண்டும் என்றால் யார் பார்வை வேண்டும்? குரு அப்படியானால் வியாழக்கிழமையும் தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம் திருமணம் எனப்படுவது மங்கலம் எனவே மங்கலவாரமான செவ்வாய்க்கிழமையும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் திருமணம் திருமணத்திற்குரிய எண்ணம் சிந்தனை போன்றவை சந்திரனுக்கு உட்பட்டது. எனவே திங்களையும் தேர்வு செய்யலாம். அடுத்து நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் பொதுவாக ஒரு நட்சத்திரத்தை நாங்கள் கூறுவதாகக் கொள்வோம். அதில் கலந்து கொள்பவர்களுக்கு அன்று சந்திராஷ்டமம் ஆகயிருந்தால் நீ என்ன செய்வாய்? எனவேதான் இதுபோன்ற பொது பூஜைகளுக்கு நாள் நட்சத்திரம் பார்ப்பதைவிட அனைவரும் கலந்து கொள்ளும்படியான ஒருநாளை தேர்வு செய்வதே சிறப்பு.

கேள்வி: ஒழுக மங்கலம் பைரவரைப் பற்றி:

ஒழுக மங்கலம் கோவில் உள்ள இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்

கடுமையான தலைமுறை தோஷங்களையும் பித்ரு தோஷங்களையும் பிதுராதி வழி வருகின்ற சாபங்களையும் பிதுர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறிய தோஷங்களையும் பிரம்மஹத்தி தோஷங்களையும் நீக்க கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த பைரவருக்கு அணையா தீபம் தொடர்ந்து ஏற்றுவது தில யாகம் செய்வதற்கு சமம்.

இக்கோவிலை இறைவனின் புகைப்படங்களை மேலும் பார்க்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

பைரவர்

மெய்ஞானபுரீஸ்வரர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதான மூர்த்தியாக இருக்கிறார்.

கி.பி.985 -1014ல் அரசு புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற நூலை போதிக்கும் அந்தணர்களுக்கு அறக்கொடை நல்கியது. மாறவர்மன் குலசேகர பாண்டியன் சுந்தரபாண்டியன் விஜய நகர அரசர்கள் புஜபலதேவன் அச்சுத தேவராயன் மதுரை விசுவநாத நாயக்கர் தஞ்சை ரகுநாத நாயக்கர் ஆகியோர் கால கல்வெட்டுகளும் தான சாசனங்களும் இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

சுலோகம் -86

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-39

சுலோகம் -86

பார்த்தனே இது வரை உனக்கு ஆத்ம ஞானம் பற்றி கூறினேன். இனி கர்ம யோக வழியில் சொல்கிறேன். நீ இந்த புத்தியோடு கூடியவனாகி கர்ம பந்தத்தை விலக்கி விடுவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்ம ஞானம் என்பது பரம்பொருளுக்கும் ஜூவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஞானம் ஆகும். ஆத்ம ஞானம் மோட்சம் பெறுவதற்கான ஒரு வழியாகும். இந்த ஆத்ம ஞானத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் இதன் வழியாக மோட்சம் அடைவதற்கான கர்மங்களை சரியாக செய்வதில் புத்தியை பயன்படுத்த வேண்டும். இதுவரையில் ஆத்ம ஞானம் பற்றி உனக்கு விளக்கமாக கூறினேன். நீ தெரிந்து கொண்ட இந்த ஆத்ம ஞானத்தின் வழியாக கர்ம யோகத்தில் உனது புத்தியை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இனி கர்ம யோகம் பற்றி கூறுகிறேன். கர்ம பந்தம் என்பது கர்மம் மூலம் உண்டாகும் சம்சாரப் பிடிப்பு ஆகும். இதனையும் நீ அறிந்து கொண்ட பின்னர் கர்மத்தினால் உண்டாகும் விளைவுகள் குறித்து நீ கவலைப் படமாட்டாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.