விதி

துரியோதனனுக்கு யுதிஷ்டிரரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது. சூதாட்டத்தின் மூலமாகத்தான் யுதிஷ்டிரருடைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுனி. சூதாட்டம் ஆட வா என்று அழைக்க முடியாது. அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் அதை விழாவாக வைத்து அனைவரையும் அழைத்து சூதாடலாம் என்று நினைத்தான் துரியோதனன். அதன்படியே மண்டபம் கட்டும் வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள் மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுனியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.

யுதிஷ்டிரருக்கு விதுரர் அழைப்பு ஓழையை கொடுத்தார். அதைப் படித்த யுதிஷ்டிரர் தனது சகோதரர்களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா என்று கேட்கிறார். மூன்று சகோதரர்கள் போகலாம் என்றார்கள். சகாதேவனிடம் இதே போன்று கேட்டதும் ஓலை கொண்டு வந்தது யார் என்று கேட்கிறான். விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் யுதிஷ்டிரர். அனுப்பியது யார் என்றான் சகாதேவன். துரியோதனன் அனுப்பினான் என்கிறார். ஓலையில் கையெழுத்து அது யார் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார் என்றார் யுதிஷ்டிரர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். எதற்கு கேட்கிறாய் சகாதேவா என்று யுதிஷ்டிரர் கேட்டார். நமக்கு ஓலை அனுப்பியது ஒருவர். கையெழுத்திட்டது ஒருவர். அனுப்ப நினைத்தது ஒருவர். கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும் செய்வது விதி ஒருவன் தான் என்றான் சகாதேவன்.

காவி உடை

காவி என்பதை நம் முன்னோர் துறவற நிறமாக வைத்தனர். இல்லறத்தை துறந்து துறவறம் செல்வோர் அனியவேண்டியது. வெள்ளை வேட்டியை சில மூலிகைகளை தண்ணீரில் போட்டு நனைத்து கட்டுவதே காவி உடை. காட்டில் செல்லும்போதும் பல இடங்களில் உறங்கும் போதும் பல புழுப்பூச்சிகள் விலங்குகள் கடிக்கும். இந்த காவி நிற உடையிலிருந்து வரும் மூலிகையின் வாசனை பூச்சிகள் பெரிய விலங்குகள் அருகில் வராமல் தடுக்கும்
காவி கட்டுவோர் இல்லறம் துறந்தார் என்று சிவாகமத்தில் கூறப்படுகிறது.

மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில்போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலிபருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிறதுணியை அந்த சுடு நீரில் போட்டு துவைத்து எடுத்தால் வெண்மையான துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகி விடும். இந்த ஆடையை துறவறம் பூண்டு காட்டிற்கு செல்பவர்கள் அணிந்தார்கள். இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள். ஆனால் இன்று இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகி விட்டது. காவி உடை எதற்கு ஏன் என்று பலருக்கும் இன்று தெரியாமல் போனது.

எண்ணங்கள்

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யுதிஷ்டிரர் ஒருமுறை வீதியில் நடந்து சென்றார். துரியோதனன் அந்தப் பக்கமாக தேரில் வந்தான். யுதிஷ்டிரர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் வீதியில் நடக்க வேண்டும் இதுபற்றி அவன் யுதிஷ்டிரரிடம் கேட்டான். அண்ணா நம்மைப் போன்றவர்கள் வீதியில் நடக்கலாமா நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் இருந்தும் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள். இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ என்றான். யுதிஷ்டிரர் அவனிடம் தம்பி நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு வீதியாக நடந்தால் தான் நமது நாட்டின் நிலைமை மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்றதும் துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது. நாடாளப் போவது நானல்லவா அப்படிப் பார்த்தால் நானல்லவா வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவரைப் போலவே நாமும் நடப்போம் என தேரில் இருந்து குதித்தான்.

மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம் இவனும் கவனித்துப் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன் ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவனது காலில் ஒரு முள் குத்தினால் ஆ வென அலறுகிறான். ஆனால் இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா என்று அவனை மனதுக்குள் எண்ணியபடியே நடந்தார். அப்போது அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன. இதைப்பார்த்த யுதிஷ்டிரர் தவறு செய்துவிட்டோமே இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும் மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும் நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால் இவனைப் பற்றிய தப்பான எண்ணம் என் மனதில் ஏன் ஏற்பட்டது. நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.

வீட்டிற்கு சென்றதும் இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டான். நடந்தவைகள் அனைத்தும் கேட்டவர்கள் யுதிஷ்டிரனுக்கு பதில் சொன்னார்கள். தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால் துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட எண்ணங்களும் காற்றில் பரவி உன்னையும் பாதித்து விட்டது. இதனால் தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே கருடனின் வெள்ளித்தூண் உள்ளது. அந்தத் தூணில் கருடன் பொறிக்கப்பட்டுள்ளார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் குக்கி சுப்ரமண்யா என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகாரத்தின் ஈசான மூலையில் உள்ளார். கந்தபுராணத்தில் தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் குமாரதாரா நதி ஓடுகிறது. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின் தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.

புராணக்கதைப்படி தாருகாசூரன் சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்ற பின்பு சுப்ரமணியசுவாமி வினாயகருடன் இக்குமாரமலையில் தங்கினார். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்ரமணியசுவாமியை வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை சுப்ரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற சுப்ர மணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம் குமாரமலையில் நடந்தது. பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனாவுடன் சுப்ரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

காசியப முனிவரின் மனைவியரான கத்ரு வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில் யாருடைய கருத்து சரியானதோ அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில் கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும் அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன் நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான் என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன் குக்குட த்வஜ கந்தஸ்வாமி என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் பல யுகம் கண்ட கோயிலாகும்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் மங்களுரிலிருந்து 105 கி.மீ. தூரத்திலும் பெங்களூரிலிருந்து 317 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பெங்களூர் – மங்களூர் ரயில்வண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலை அடையலாம்.

கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்

ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.

நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.

ஊதியூர் மலை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும். இந்தக் குகையிலிருந்து பழநி அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்தது. கொங்கணர் தங்கம் பதுக்கி வைத்தருக்குன்றார் என்ற மக்களின் தேடுதலால் மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது. கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது. பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன. அதனால் சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம். அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது. பொன்னுருக்கி சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக ஊதி மலையில் காட்சியளிக்கிறார். இம்மலையின் புராணபெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தருக்கும் தனிக்கோயில் உள்ளது. அருணகிரிநாதர் முருகபெருமானை தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவையின் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

கோவிலின் முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது, அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார். புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும் கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.

இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது. அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது. இங்கு கொங்கண சித்தர் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார். சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என்றும் மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார். கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்றார். திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் கோவிலில் உள்ள வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை, கால்களில் வெட்டினான். இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே வெட்டுப்பட்டு இறப்பாய். எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்தார்கள். அதுபோலவே திப்புசுல்தான் இறந்தார். இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்.

தானத்தில் சிறந்தவர்

ஒரு முறை பாண்டவர்கள் தங்களில் மூத்தவரான யுதிஷ்டிரரையும் அவரது கொடைத் தன்மையையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர் கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார். யுதிஷ்டிரரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன் என்றார். என் மேல் வருத்தப் பட வேண்டாம் நாளை நிரூபிக்கிறேன் என்றார். பொழுது விடிந்தது. என்னுடன் வாருங்கள் என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார். பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து இன்று சூரிய அஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும் என்றார்.

இவ்வளவுதானா என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி அனைவரையும் வரச்செய்து அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கத் துவங்கினார்கள். போவோர் வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி கூப்பிட்டு கூப்பிட்டு தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர். பொழுதும் சாய்கிறது. மலை கால்வாசி கூட கரைந்த பாடில்லை. பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி. யுதிஷ்டிரர் சோர்ந்து போய்ச் சொன்னார். கிருஷ்ணா தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எங்களால் ஒரு மலையில் கால்வாசி கூட கொடுக்க முடியவில்லை. அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார். கர்ணா இந்த இரண்டு தங்க மலைகளையும் பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன கிருஷ்ணா என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன். காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால்வாசிதான் கொடுக்க முடிந்திருக்கிறது. இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க நேரம் நகர்கிறது. இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது. அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான். இந்தா இந்த இரண்டு மலைகளையும் நீயே வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான். சூரியன் மறைந்தது. கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

கிருஷ்ணன் பாண்டவர்களிடம் இந்த மலையை முழுவதும் தானமாக தரவேண்டும் என்றதும் இது நம்முடையது என்ற எண்ணமும் தங்களால் அவைகளை முழுமையாக தரமுடியும் என்ற மமதையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலையை வெட்டி எடுத்து கொடுத்தார்கள். ஆனால் கர்ணனனிடம் மமதை இல்லை. மேலும் தானம் செய்ய வேண்டும் எண்ணம் மட்டுமே இருந்தது அதை எப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

பாதாள புவனேஷ்வர்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர் குளிப்பதற்காக வைத்துயிருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது அந்த உருவத்தை தனது பிள்ளையாக பாவித்த பார்வதிதேவி எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்ககூடாது என்று பிள்ளையாருக்கு சொல்லி விட்டு நீராட சென்றுவிட்டார். அந்த சமயம் சிவன் பார்வதியை பார்க்க அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்ச்சிக்கும் போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி நடந்து முடிந்தவற்றைக்கண்டு மனம் வருந்தினாள். இதைப்பார்த்த சிவபெருமான் பிரம்மனை அழைத்து விநாயகர் தலை இல்லாத உடம்பில் பொருத்துவதற்காக தலையை கொண்டு வரச்சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக்கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான் விநாயகர் உடல் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ்தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர்பெறச்செய்தார். வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் இந்த குகையில் அப்படியே இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குமாஊன் என்ற இடத்தில் உயர்ந்த மலை சுற்றிலும் பாய்ந்தோடி செல்லும் நதி அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையில் பாதாள புவனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் அருள்புரியும் இடம் சுண்ணாம்பு குகை ஆகும். இந்த குகை 100 அடி ஆழமும் 160 அடிநீளமும் கொண்டது. பாதாள புவனேஸ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் பாரி ஜாதப்பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட வினாயகர் தலை மேல் விழுகிறது. இந்த குகைகோயில் இந்தியதொல்பொருள் ஆய்வுமையத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாதாள புவனேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கவேண்டும். அனைவரும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தான் குகைக்குள் சென்று பார்க்கமுடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக்குகையில் சிவபெருமானுடன் 33 கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிக்கிறார்.

திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார் ஆதிசேஷன் ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச்சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்கவைக்கும் காட்சியைக் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபாரயுகத்தின் போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிராத்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்தகுகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது. படிகளின் நடுவே நரசிம்மனின் உருவம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கிழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிஷேசன். பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைதாண்டி ஒரு யாககுண்டம் உள்ளது. இங்கு தான் ஜனமேஜயன் தன் தந்தை பரிசித்தன் மரணத்துக்கு பழி வாங்குவதற்க்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்பயாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளைகுகை கைலாயமலையை சென்று அடைகின்றது என்று புராணங்கள் கூறுகின்றது. அதன் முன்பாக சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஒட்டுடன் காட்சி தருகிறார். சிவன் தன் சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் சடாமுடியை போல் மலையின் ஒரு பகுதி தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே பைரவர் முன்னால் முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே அன்னப்பட்சி தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் காட்சி. கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுயிருந்தது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. அடுத்து கழுத்தில் பாம்புயை சுற்றியப்படி ஜடாமுடியுடன் சிவன். சிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடுவதுபோல் காட்சி கொடுக்கின்றார். மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஜராவதம். குகையின் ஒரு பகுதியில் கலியுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இதன் மேலிருக்கும் கூம்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது லிங்கத்தின் மேலிருக்கும் மலையை எப்பொழுது தொடுகிறதோ அப்பொழுது கலியுகம் முடியும்.

தக்ஷகன் பாம்பு

பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள் என அற்புதமாக இந்திரப்பிரஸ்தத்தை தேவலோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணனின் அருளாசியுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர்கள் மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் அவனைச் சார்ந்த தாயாதியருக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் யுதிஷ்டிரன். இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது அதனை எப்படி அழிப்பது என சிந்தித்தபடியே பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான். ஒருநாள் காலையில் மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன். அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால் அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால் தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது. உயரே நோக்கினான். அங்கே பாண்டவர்களின் மனைவி திரௌபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்து அவள் சிரித்தாள். சிரிப்பது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.

விழாவுக்கு வந்த உறவினர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினாள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன் ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் கிருஷ்ணர். கலங்காதே திரௌபதி நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன் அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு ஏன் பதில் கூறவில்லை என்று கேட்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல் அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும் விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே இன்று யாருடைய முறை? ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கிருஷ்ணா இதென்ன மாயம். யாரந்த தக்ஷகன். அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி பயந்து ஓடுகிறான் என்று கேட்டாள். கிருஷ்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

பானுமதி துரியோதனனின் மனைவி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும் மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் சாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்று கொண்டிருந்த தக்ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால் அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான் அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பௌர்ணமி தோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியது தான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் கிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கிருஷ்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

துரோணாச்சார்யாரிடம் யாசகம் கேட்ட கிருஷ்ணர்

துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்று அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ணர் ஒருவர் தான். பாரதப்போரில் துரோணர் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை அழிக்க வேண்டும். அவர் குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது.

அதன்படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார். சுவாமி என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது. ஆனால் மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர் முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல் மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து ஐயா பெரியவரே இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார். வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார். துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக்கொண்டார். அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும் குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார். அதன்பின் தனது யுக்தியால் துரோணரை அழித்தார்.