கேள்வி: மனம் தடுமாறி தீய வழியில் செல்லும்பொழுது எந்த இறை நாமத்தை ஜபிப்பது?
மனம் தடுமாறாமல் இருக்க மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாட்சரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக் கொண்டே வந்தால் மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி. பக்தியை ஏற்றுக் கொள்ளாத மனிதருக்கு அறிவு பூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும் பொழுதோ அவன் எப்படி சிந்திக்க வேண்டும்? என்றால் உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். இது வெறும் எண்ணம்தானே? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக் கொள்வானானால் இவன் அதை தாராளமாக எண்ணலாம
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாகம் எய்த படலம் இருபத்தி எட்டாவது படலமாகும்.
அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சொக்கநாதக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
அவன் தீவிர சிவபக்தனாக இருந்தான் எப்போதும் ருத்ராட்சம் திருநீரும் அணிந்து பஞ்சாட்சரம் ஜெபித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. அதைக் கண்ட சமணர்கள் சமணமதம் நசித்துவிடுமோ என்றஞ்சி பாண்டியனை ஒழித்து விட விக்கிரம பாண்டியன் காலத்தில் செய்தது போல் ஆபிசார வேள்வி (மரண வேள்வி) செய்ய தீர்மானித்தார்கள். சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும் மதுரையையும் அழிக்க அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி (மரண வேள்வி) ஒன்றினைத் தொடங்கினார்கள். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான். அவ்வவுணன் சமணர்களிடம் எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது? என்று வினவினான். சமணர்கள் அவனிடம் நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும் அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு என்று கட்டளையிட்டனர். அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.
மதுரை நகரின் எல்லைக்கு வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விஷ மூச்சுக் காற்றால் அங்கு இருந்த மரங்கள் பயிர்கள் எல்லாம் கருகின. நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும் செயலையும் தெரிவித்தனர். நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான். இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான். இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது. நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது. மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து இறைவா மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள். கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள். தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை சித்தர் வடிவில் தோன்றி மதுரையின் மீது தெளித்தார். இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தீயவர்களின் சூழ்ச்சியினால் வரும் துன்பத்தினை பிரார்த்தனையாலும் இறை நம்பிக்கையினாலும் இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
ஆஞ்சநேயர் இறைவனின் அம்சம். சாட்சாத் சிவபெருமானின் சக்திதான் மால்தூதன். ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல ஜடாயு என்ற பட்சி வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார். அதுபோல் இவரின் சகோதரர் சம்பாதி என்ற பட்சியும் ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அங்கம் வெட்டின படலம் இருபத்தி ஏழாவது படலமாகும்.
குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை. இருவரும் இறைவனான சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நேரம் போக மீதிநேரம் சொக்கநாதரின் ஆலயம் சென்று இறை வழிபாட்டிலேயே காலம் கழித்து வந்தார். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான். நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான். சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான். தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன் தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான். ஆனால் அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.
குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான். ஒருநாள் குரு வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்க மாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான். பின் மாணிக்க மாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்க மாலை உள்ளே சென்று கதவை தாளிட்டாள். சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்க மாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறி சென்று விட்டான். மாணிக்க மாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள். மாணிக்க மாலை நடந்த விசயங்களை தன் கணவனிடம் கூறினால் சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனை சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை? என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள். இறுதியில் திக்கற்றவளாய் சொக்கநாதரை சரண் அடைந்தாள். இறைவா என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று கதறினாள். மாணிக்க மாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவனார் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார். மறுநாள் இறைவனார் வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்கு சென்றார். சித்தனிடம் சித்தா இளைஞனான நீயும் வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால் நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரி என்று கூறினார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த சித்தன் அதற்கு சம்மதித்தான். நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்க மாலையை அடைந்து விடவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும் வாளாசிரியன் உருவில் வந்த இறைவனாருக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.
வாளாசிரியர் வடிவில் இருந்த இறைவன் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி உன் குருவின் மனைவியை விரும்பிய உள்ளத்தையும் தகாத வார்த்தை பேசிய நாவினையும் தொட்ட கைகளையும் கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள் என்று கூறினார். பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார். தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர். வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்க மாலை வாளாசிரியர் இறைவனை வழிபட திருக்கோவிலுக்கு சென்றதாகத் தெரிவித்தார். அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்கு வந்தார். அவரிடம் மாவணவர்கள் சித்தனைக் கொன்ற பின் தாங்கள் எங்கே சென்றீர்கள்? என்ற கேட்டனர். வாளாசிரியரும் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்க மாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார். வாளாசியரின் மாணவர்களும் போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்க மாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர். அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சொக்கநாதர் தனது உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாத உணர்ந்து பக்தி வெள்ளத்தில் உருகினார். இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான். பின் தன் மகனான அனந்தகுண பாண்டியனுக்கு அரசு உரிமை அளித்து சிவப்பேறு பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனுக்கு செய்யும் துரோகத்தை கூட இறைவன் மன்னிப்பார். ஆனால் குருத்துரோகத்தை இறைவன் மன்னிக்க மாட்டார் என்பதையும் குருநிந்தனை செய்யக் கூடாது என்பதையும் குரு நிந்தை செய்வோரையும் தன்பக்தர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் கொடியவர்களை இறைவன் அழித்து விடுவார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: சித்தர் அருட் குடிலில் இராமாயண பிரசங்கம் நடத்த அனுமதி தர வேண்டும்:
இறைவன் அருளால் இங்கு வருகின்ற அன்பர்கள் பாரி ஆய் பேகன் போன்றோர் இருந்த பகுதியிலிருந்து வருகின்ற பலரும் ஒருமுறை எம்மை நோக்கி ஒரு வினா வைத்தார்கள். எங்கெல்லாம் இராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் ஆத்மார்த்தமாக இராமாயணம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு வடிவிலே ஆஞ்சநேயர் வருவார் என்று கூறுகிறார்கள். பல இடங்களில் அது நடந்திருக்கிறது. இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த குடிலிலே இராமாயணத்தை நல்ல முறையில் ஓதினால் அதைப் பலரும் வந்து அன்றாடம் கேட்டால் அதன் மூலம் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கலாமே என்ற ஒரு நல்ல எண்ணத்திலே ஒரு வினாவை எழுப்பினார்கள். இதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. தாராளமாக இதுபோன்ற ஒரு சத்சங்கத்திலே இராமாயணத்தை ஓதலாம். ஓதலாம் என்று நாங்கள் அனுமதித்து விட்டால் அடுத்ததாக இதழ் ஓதும் மூடன் கேட்பான். இதற்கு உண்டான செலவினங்களுக்கு எங்கு செல்வது? இதற்கு உண்டான நடைமுறையை எங்கிருந்து பார்ப்பது? ருணம் பெற்றால் ருணம் வந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்களே? என்று. நாங்கள் ஒரு நல்லதை செய் என்றுதான் கூற இயலும். நாங்களே எல்லாவற்றையும் நடத்த இயலாது. எனவே நல்ல செயலை தாராளமாக செய்யலாம். ஆஞ்சநேயர் வருகிறாரா? இல்லையா? என்பது அவனவன் ஆத்மார்த்தமான பக்தியைப் பொறுத்தது.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாபாதகம் தீர்த்த படலம் இருபத்தி ஆறாவது படலமாகும்.
குலோத்துங்க பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த காலத்தில் அவந்தி நகரில் வேதியர் ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒழுக்கசீலராகவும் முறையான வாழ்வினை உடையவராகவும் இருந்தார். அவர்களுக்கு மகன் ஒருவன் பிறந்தான். அவன் துர்குணம் மற்றும் கெட்ட நடத்தைகள் உடையவனாக இருந்தான். தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்த செல்வத்தைக் கவர்ந்து சென்று விலை மகளிரிடம் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்து வந்தான். ஒரு கட்டத்தில் மகனுடைய கெட்ட நடத்தையால் அவர்களிடம் இருந்த செல்வ வளம் குன்றவே அவர்கள் குடிசைக்கு வந்தனர். விலை மகளிருக்கு கொடுக்க செல்வம் இன்றி அவன் சிற்றின்பத்திற்காக தனது தாயிடம் பணம் கொடுக்குமாறு நிர்பந்தித்தான். இதனை அறிந்த அவனுடைய தந்தை தன்னுடைய ஊழ்வினை மகன் வடிவில் வந்திருப்பதாக மிகவும் வருந்தினார். தாயை நிர்பந்தித்ததால் தந்தை அவனை கடுமையாக கண்டித்தார். இதனை விரும்பாத அவன் சிற்றின்ப மோகத்தில் தந்தை என்றும் பாராமல் அவரைக் கொன்றான். பின் அரச தண்டனைக்கு பயந்து வேறு ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி நடு இரவில் தந்தையின் உடலை எரித்துவிட்டு தனது தாயுடன் தன்னால் இயன்ற பொருளையும் எடுத்துக் கொண்ட கற்கள் நிறைந்த காட்டின் வழியே சென்றான். அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் மகனிடமிருந்த பொருளையும் கொள்ளையடித்து விட்டு தடுத்த தாயையும் கொன்று விட்டு சென்றனர். வேதியனாகிய தந்தையைக் கொன்றதால் மகனுக்கு பிரம்மஹத்தி பாவம் பிடித்து அவன் உடல் மெலிந்து நோய் வாய்ப்பட்டதோடு மனதளவிலும் பெரிதும் பாதிப்படைந்து அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தான். தாயும் இல்லை தந்தையும் இல்லை உற்றார் உறவும் இல்லை. அனாதையாய் ஆண்டியாய் உடுத்திய உடையுடன் பிச்சை எடுத்தான். ஊழ் வினையின் போக்கை அப்போதுதான் உணர்ந்தான். தான் செய்த பாவங்களை எண்ணிக் கண்ணீர் விட்டான். கோவில் கோவிலாக சுற்றியதன் பலனாக இறுதியில் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதியை அடைந்தான். அங்கு அவன் திருகோவிலின் அருகே செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.
இறைவனான சொக்கநாதர் வேடுவனானகவும் மீனாட்சியம்மை வேடுவச்சியாகவும் வடிவம் கொண்டு கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது இறைவனார் அம்மையிடம் இளைஞனான மாபாதகனையும் அவன் செய்த தவறுகள் குறித்து கூறினார். பின்னர் இறைவனார் அம்மையிடம் கள்ளுண்ணலும் சிற்றின்பமும் அறிவைக் கெடுக்கும். இவற்றில் கள்ளானது உண்டால் மட்டுமே அறிவைக் கெடுக்கும். சிற்றின்பத்தை எண்ணுதலும் பார்த்தலும் கேட்டலும் ஆகியவை தலையில் கொடிய விஷம் போல் பரவி அறிவினைக் கெடுத்து விடும். முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி விடும். இறுதியில் அழிவினையும் கொடுக்கும் என்று கூறினார். பின்னர் நோய்வாய்பட்ட இளைஞனிடம் சென்ற இறைவனான வேடுவன் இளைஞனே உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது? என்று கேட்டார். வேடுவன் கேட்டதும் அவ்விளைஞன் தன் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி அவற்றிற்காக அழுதான். இளைஞனிடம் கருணை கொண்ட இறைவனான வேடுவன் சரி நீ படும் துன்பத்திற்கு தீர்வு கூறுகிறேன் கேள். சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து பசுக்களுக்கு அருகம்புல்லும் நீரும் கொடு. தினம் இறைவனது அபிஷேக நீரில் குளித்து விட்டு பொற்றாமரைக் குளம் மற்றும் திருகோவிலை சுற்றி அங்கப்பிரதட்சிணம் செய். நீ கையால் பிச்சை எடுத்து தினமும் ஒருபொழுது மட்டும் உண்ண வேண்டும். பிரதிபலன் கருதாமல் சிவனடியார்களுக்கு தொண்டு செய். இவ்வாறு செய்து வந்தால் உன்னுடைய பழி மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று அருளினார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமையம்மையாகிய வேடுவச்சி இறைவனாரிடம் ஐயனே உலகில் நல்லோர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் அருள்புரியாது மாபாதகத்தை செய்த இப்பாவிக்கு அருள்புரிவது ஏனோ? என்று கேட்டார். அதற்கு இறைவனார் நல்லவர்கள் இப்பூமியில் நன்றாக வாழ வேண்டும் எனில் கெட்டவர்கள் திருந்த வேண்டும். மாபாதகம் புரிந்த இவ்விளைஞன் இன்றைக்கு அதற்குரிய தண்டனையும் அனுபவித்து அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனையும் காப்பாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு அருள்புரிந்தேன் என்று விளக்கம் கூறினார். அதற்கு உமையம்மை தங்களுடைய திருவிளையாடலைப் புரிந்து கொள்பவர் யார்? ஆட்டுபவரும் ஆட்டுவிப்பவரும் தாங்களே என்று கூறினார். பின்னர் இருவரும் மறைந்தருளினர். இளைஞனும் இறைவனான வேடுவர் சொன்னபடி நடந்து வந்தான். சிலநாட்களில் அவனுடைய பாவங்கள் நீங்கியதால் நோய் நீங்கப் பெற்றான். பின் அந்த இளைஞன் ஒழுக்கமானவனாக மாறி சிவசிந்தனையுடன் வாழ்ந்து இறுதியில் நல்கதியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
முறையற்ற சிற்றின்பம் அறிவை கெடுத்து பஞ்சமகா பாவத்தை செய்ய வைக்கும் என்பதையும் இறுதியில் அவனிடம் உள்ள அனைத்தையும் அழித்து விடும் என்பதேயும் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்த பின்னர் அவர்களும் இறைவனடி சேர வாய்ப்பளிக்கும் இறைவனின் கருணை உள்ளத்தையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: ஆஞ்சநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் இராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கத்தில் கூறப்பட்டது? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?
இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல் அனைத்தும் நீயாக இருக்கிறாய். யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்களும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த இராமபிரான் மீது மால்தூதனாகிய ஆஞ்சநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.
இராமாயணம் நடந்த காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டு பிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் பல்வேறு விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கின்றன. அது தொடர்பாக சில கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் இராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பழி அஞ்சின படலம் நூலின் இருபத்தி ஐந்தாவது படலமாகும்.
நடராஜரின் கால் மாறிய நடனத்திற்கு காரணமான இராசசேகரப் பாண்டியனுக்குப் பின் அவனது மகன் குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். அப்போது மதுரையை அடுத்த திருப்பத்தூரில் வேதியன் ஒருவன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் இருக்கும் தனது மாமன் வீட்டிற்கு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வரும்போது வேதியனின் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனவே வேதியன் தனது மனைவி மற்றும் குழந்தையை ஒரு ஆலமரத்தின் நிழலில் விட்டுவிட்டு தான் மட்டும் தண்ணீர் தேடிச் சென்றான். இலைகள் நிறைந்த ஆலமரத்தில் முன்னொரு நாளில் யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு சிக்கிக் கொண்டு இருந்தது. ஆலமர இலைகளில் அம்பு சிக்கி இருந்ததை அப்பெண் கவனிக்கவில்லை. வேதியனின் மனைவி தனது குழந்தையை அருகில் விட்டுவிட்டு ஆலமரத்தின் நிழலில் அயர்வுடன் படுத்தாள். காற்றினால் அசைந்து அக்கூரிய அம்பு கீழே படுத்திருந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் ஊடுருவியது. ஊழ்வினையால் வேதியனின் மனைவி மாண்டாள். அப்பொழுது ஆலமரத்தின் மற்றொரு புறத்தில் வேடன் ஒருவன் இளைபாறிக் கொண்டிருந்தான். அவ்வேடன் மரணமடைந்திருந்த வேதியனின் மனைவியைக் கவனிக்கவில்லை. தண்ணீர் தேடிச் சென்ற வேதியன் தண்ணீருடன் ஆலமரத்தடிக்கு திரும்பினான். அங்கே அவனுடைய மனைவி அம்பால் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் அவனுடைய குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டான்.
வேதியன் மரத்தைச் சுற்றிப் பார்த்தபோது இளைப்பாறிய வேடனைக் கண்டான். அவ்வேடன்தான் தன்னுடைய மனைவியைக் கொன்றதாகக் கருதி அவனை அரசனிடம் முறையிட அழைத்தான். அவ்வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். ஆனால் வேதியனோ வேடனின் அம்பால்தான் தன்மனைவி இறந்தாகக் கருதி அவனை வலுக்கட்டாயமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையை அடைந்த வேதியன் குலோத்துங்கப் பாண்டியனிடம் நடந்தவைகளைக் கூறி தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு இவ்வேடனே காரணம் என்று கூறினான். குலோத்துங்கப் பாண்டியனும் வேடனிடம் விசாரித்தான். வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். அரசனோ வேடனை சந்தேகப்பட்டு சிறையில் அடைத்து அவனை சித்திரவதை செய்த போதும் வேடன் வேதியனின் மனைவியைக் கொல்லவில்லை என்பதையே கூறினான். இதனை அறிந்த மன்னன் தன் நாட்டில் நடைபெற்ற ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் போய் விடுமோ என்று மிகவும் வேதனையடைந்து சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்தருள வேண்டினான். அப்போது இறைவன் பாண்டியா கவலை வேண்டாம். மதுரை நகரில் உள்ள வைசிய வீதியில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. நீ அங்கு வேதியனோடு வருவாயாக. அங்கே வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகம் தீரும் என்று திருவாக்கு அருளினார்.
இறைவனின் திருவாக்கின்படி குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் வைசிய வீதியில் நடைபெற இருந்த திருமண மண்டபத்தினை அடைந்தனர். திருமண வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பலருக்கு நடுவில் நிலக்கரி போல் கறுத்து பனைமரம் போல் உயர்ந்திருந்த இருவர் அரசனின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தான் அரசன். அவர்கள் மெதுவாக உரையாடியதை குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் கவனத்துடன் கேட்டார்கள். இறைவனின் திருவருளால் அவர்கள் எமதூதர்கள் என்று இருவரும் புரிந்து கொண்டார்கள். எமதூதர்களில் ஒருவன் இங்கே மணமகனாக அமர்ந்திருப்பவனின் உயிரினை எடுத்து வர நமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். எவ்வாறு இவனுடைய உயிரினை எடுப்பது? என்று கேட்டான். அதற்கு மற்றவன் ஆலமரத்தில் சிக்கியிருந்த கூரிய அம்பினை காற்றால் அசைத்து கீழே படுத்திருந்த வேதியன் மனைவியின் வயிற்றினை கிழிக்கச் செய்து அவளுடைய உயிரினை எடுத்தோம் அல்லவா? அதுபோல திருமணம் முடிந்ததும் கோ தானம் செய்வதற்காக திருமண மண்டபத்திற்கு வெளியில் நிற்கும் கன்று ஈன்ற பசு நிற்கிறது. அதனை இவ்விழாவின் ஆரவாரத்தால் கோபம் மூட்டி மணமகனை முட்டச் செய்து அவனுடைய உயிரினைப் பறிப்போம் என்று கூறினான். எமதூதர்களின் பேச்சினைக் கேட்ட குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேதியன் அரசனிடம் இங்கு கூறியபடியே மணமகன் இறந்தால் என் மனைவியும் அவ்வாறு இறந்ததாக ஏற்றுக் கொள்வேன். ஆகையால் இங்கு நடக்கும் நிகழ்ச்சியைக் காண்போம் என்றான்.
குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அங்கே நடப்பதை அறிய இருந்தனர். திருமண விழாவிற்காக எல்லோரும் கூடினர். அங்கே பலவித இசைக்கருவிகள் முழங்கின. இதனால் அவ்விடத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது. பேரிரைச்சலால் கன்று ஈன்ற பசு கோபம் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்குள் புகுந்தது. மக்கள் எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பசுவானது மணமகனை கோபத்தில் முட்டியது. மணமகன் அவ்விடத்திலேயே இறந்தான். இதனைக் கண்ட வேதியன் பெரிதும் வருத்தம் கொண்டான். அரசன் அரண்மனையில் எல்லோருக்கும் நடந்தவைகளை விளக்கிக் சொல்லி வேடனை விடுதலை செய்து தன்னுடைய பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான். வேதியனுக்கு பொன்னும் பொருளும் அளித்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான். குலோத்துங்கப் பாண்டியன் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே எனக்காக தாங்கள் பழி அஞ்சிய நாதராய் இருந்தீர் என்று கூறி பலவாறு போற்றி வழிபட்டான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தன் நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் கொடும்பழிக்கு ஆளாவோம் என்று அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் இறைவன் தெளிய வைத்தார். தர்ம வழியில் செல்லும் போது ஏதேனும் துன்பம் வந்தால் தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: இறைவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் வாழ்ந்த பூமியில் தற்சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு என்ன பரிகாரம் செய்வது?
ஆஞ்சநேயர் வழிபாடு தொடர்ந்து ராம நாம ஜெபம் குறிப்பாக மாருதி கவசம் மாருதி காயத்ரியை பெண்கள் எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டே இருந்தால் இது போன்ற இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும். இது எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு இருப்பதுதான். இறைவன் முன்னால் ஆலயத்திலேயே நடந்ததுதான். ஏன்? கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்திலேயே என்ன நடந்தது என்பது பாரதம் படித்த அனைவருமே உணர்ந்ததுதான். எனவே அசுரர்கள் எக்காலத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு எதிராக வாழ வேண்டும் என்றால் ஆன்ம பலத்தை பக்தியை தர்மத்தை புண்ணியத்தை ஒவ்வொரு மனிதனும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அசுரர்கள் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டியதுதான்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கால் மாறி ஆடிய படலம் நூலின் இருபத்தி நான்காதாவது படலமாகும்.
விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அவன் ஆயகலைகள் 64 இல் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான். வெள்ளி அம்பலத்தில் நடனம் புரியும் அம்பலவாணனின் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை என்று நடராஜரின் மீது கொண்ட அன்பால் பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.
இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64 இலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன். ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன். அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் எங்கள் அரசர் ஆயகலைகள் 64 யையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை உங்களுக்கு வராது. ஆகவே உனக்கு ஒரு கலை குறைவு. இதை நான் கூறவில்லை. உன் மக்களும் சோழமன்னனும் கூறுகின்றனர் எனக் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான். பின் தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும் என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.
இராசசேகர பாண்டியன் பரதக் கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக் கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும் போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான். அப்போது அவன் நடராஜரை நினைத்து வெள்ளி அம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் அம்பலவாணனுக்கும் இதே போல் உடல் வலியும் கால் வலியும் சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான். அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் இறைவா தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும் ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும் என்று பலவாறு பலமுறை வேண்டினான். நடராஜரின் விக்கிரகத்தில் தன் காலை மாற்றாமல் அப்படியே நின்றார். உடனே தன் உறையிலிருந்து கத்தியை எடுத்து இப்போது நீங்கள் காலை மாற்றி வைக்கா விட்டால் என்ற சிரத்தை அறுத்துக் கொள்வேன் என்று தன் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொள்ள முனைந்தான்.
இராசசேகர பாண்டியனின் கழுத்தில் தன் கத்தியை வைத்த அடுத்த நொடி நடராஜர் இடது காலை தூக்கியும் வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். நடராஜர் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும் என்று மனமுருக பிராத்தித்தான். அன்று முதல் இன்றைக்கும் மதுரையில் இருக்கும் வெள்ளி அம்பலத்தில் நடராஜ பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். கால்மாறி ஆடிய நடராஜரின் திருவருளால் ராஜசேகரனுக்கு குலோத்துங்கன் என்ற சத்புத்திரன் பிறந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவன் தன்மேல் எப்போதும் உறுதியான மனதுடன் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.