மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -9

விதுரர் திருதராஷ்டிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட துரியோதனன் விதுரரிடம் சென்று நீங்கள் எப்போதும் பாண்டவர்களுக்கு உரியவர் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு உணவளிக்கும் என்னிடத்தில் உங்களுக்கு நன்றி இல்லை. எப்பொழுதும் என்னை இகழ்ந்து பேசுவதே உங்களுக்குரிய தொழிலாக உள்ளது. கௌரவர்களாகிய எங்களை நீங்கள் வெறுக்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் நன்றாக இருக்கின்றோம். உங்களுடைய ஆதரவு பாண்டவர்களுக்கு இருந்தும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளாகப் போவார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு வரும் அழிவை இப்பொழுதே நீங்கள் குறி சொல்கிறீர்கள். ஆனால் நீங்களும் பாண்டவர்கள் உட்பட அனைவரும் அழிவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் இந்த மண்ணுலக வாழ்வை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துரியோதனன் சூதாட்ட மேடைக்கு சென்றான்.

கபடம் நிறைந்த சகுனியால் பாண்டவர்களுடைய சொத்து முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. தோல்வி அடைந்த யுதிஷ்டிரனை கேலி செய்யும் பாங்கில் இன்னும் உன்னிடத்தில் பணயம் வைக்க ஏதேனும் உண்டா என்று சகுனி கேட்டான். அதன் பிறகு யுதிஷ்டிரன் ஆசையை மேலும் தூண்ட துரியோதனன் தாராளமான சலுகை ஒன்றை காட்டினான். இத்தனை நேரம் நீ பணயம் வைத்து இழந்த பொருள்கள் அனைத்தையும் நான் பணயமாக வைக்கிறேன் இதற்கு இணையாக நீ எதையும் வைக்க வேண்டியதில்லை. இப்பொழுது பகடையில் வெற்றி பெற்றால் இவையாவும் உனக்குச் சொந்தம் ஆகும் என்றான். மீண்டும் அவர்கள் விளையாடினார்கள். யுதிஷ்டிரன் மீண்டும் தோற்றுப் போனான்.

கௌரவர்கள் கொள்ளையடிக்க விரும்பிய பொருள்கள் அனைத்தும் சூதாட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். துரியோதனன் கூறிய ஆசை வார்த்தையால் மதியிழந்த யுதிஷ்டிரன் தன்னிடத்தில் இன்னும் ஏதோ பணயம் வைக்க பொருள் இருப்பதாக அவனுடைய உள்ளத்தில் தோன்றியது. தம்பிமார்கள் நால்வரும் அவனுக்குச் சொந்தம். ஆகவே சூதாட்ட வெறியினால் தூண்டப் பெற்று தம்பிமார்களையும் பணயம் வைத்தான். அதி விரைவில் அந்த நால்வரையும் சூதாட்டத்தில் இழந்தான். சூதாட்ட வெறியில் சுய அறிவை இழந்த யுதிஷ்டிரன் பிறகு தன்னையே பணயம் வைத்து அதிலும் தோற்றுப் போய் தன்னையும் கௌரவர்களிடம் இழந்தான். மானுடர்களை பணயம் வைப்பது யாராலும் கையாளப்படாத ஒரு நூதனமான முறையாக இருந்தது. கௌரவர்களே இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது யுதிஷ்டிரனை பார்த்து சகுனி திரௌபதியை ஏன் பணயம் வைக்கலாகாது என்று பரிகாசம் பண்ணினான். மூடத்தனமாக திரௌபதியையும் அவன் பணயம் வைத்து இழந்தான். இப்போது பாண்டவர்கள் அறவே கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது சுதந்திரத்தையும் இழந்து அவர்கள் கௌரவர்களுக்கு அடிமைகள் ஆகி விட்டார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -8

யுதிஷ்டிரன் கூறிய அனைத்தையும் கேட்ட சகுனி உன்னிடத்தில் நாடு மற்றும் செல்வத்தில் பற்று அதிகரித்து உள்ளது. க்ஷத்திரியனுக்கு உண்டான தைரியம் இல்லாமல் துரியோதனின் அறைகூவலுக்கு அஞ்சி ஓடுகின்றாய் என்றான். அதைக்கேட்ட யுதிஷ்டிரனுக்கு கோபம் உருவெடுத்தது. பொருளில் நீ வைத்திருக்கின்ற பற்றுதல் என்னிடத்தில் இல்லை. உன்னுடைய அறைகூவுதலுக்கு நான் இணங்குகின்றேன். யாரோடு நான் விளையாட வேண்டும் எதை பணயமாக வைக்க வேண்டும் என்று சகுனியிடம் கேட்டான். அதற்கு துரியோதனன் பணயமாக நீ எதை வைக்கின்றாயோ அதற்கு சரிசமமானதை நானும் பணயமாக வைக்கின்றேன். எனக்காக என் மாமா சகுனி பகடையை ஆடுவார் என்றான். பொருளை பணயம் வைப்பது ஒருவன் அவனுடைய பிரதிநிதியாக மற்றொருவன் விளையாடுவது பகடை விளையாட்டின் சட்டதிட்டம் ஆகாது. இந்த சட்டத்திற்கு மாறாக நீ விளையாட தீர்மானித்து இருக்கின்றாய். ஆனாலும் உன்னுடைய விருப்பப்படி விளையாட்டை துவங்குவோம் என்று யுதிஷ்டிரன் சூதாட அமர்ந்தான். யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியது கௌரவர்களுக்கு பிரதகூலமாக அமைந்தது.

சூதாடும் மண்டபத்திற்குள் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். பீஷ்மர், விதுரர். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், போன்ற பெரு மக்களும் அங்கு இருந்தனர். திருதராஷ்டிரனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்த விளையாட்டில் ஊக்கம் மிக இருந்தது. பகடை விளையாட்டு துவங்கியது. யுதிஷ்டிரன் தன்னிடம் இருந்த நகைகள் ரத்தினங்கள் தங்கம் ஆகியவைகளை பணயமாக வைத்து பகடையை உருட்டினான். ஆனால் பகடை அவனுக்கு பலிதமாகவில்லை. அடுத்தபடியாக சகுனி பகடையை உருட்டினான். பகடையை உருட்ட உருட்ட இதோ வெற்றி இதோ வெற்றி என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். அதற்குப் பிறகு வைத்த பணத்தை எல்லாம் யுதிஷ்டிரன் இழந்து கொண்டே வந்தான். ஒவ்வொரு தடவையும் சகுனி வென்று கொண்டே இருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெரிய செல்வங்கள் எல்லாம் துண்டு துண்டாக கௌரவர்கள் வசம் கவர்ந்து எடுக்கப்பட்டன. இந்நிலைமையை பார்த்து யுதிஷ்டிரனுக்கு விவேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சூதாட்ட வெறியில் விவேகத்தை இழக்கலானான். மந்திர சக்தி வாய்ந்த மாந்திரீகனாக மாறி சகுனி செயல்பட்டான். யுதிஷ்டிரன் பணயம் வைக்கும் பொம்மையாக மயங்கிப் போனான்.

இந்த அக்கிரமத்தை மேலும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொள்ள முடியாமல் விதுரர் திருதராஷ்டிர மன்னனை அணுகி பாண்டவர்கள் உங்களுடைய தம்பியின் புதல்வர்கள். துரியோதனன் அவர்களை சூதாடும் பாங்கில் கொள்ளையடிக்க நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள். பேராசையின் வேகத்தால் நீங்களும் உங்களுடைய மகனும் அறிவை இழந்து விட்டீர்கள். இந்த சூதாட்டத்தின் விளைவாக குரு வம்சம் அழிந்து பட்டுப்போகும். நீங்கள் மரணமடைவதற்கு முன்பே உங்களுடைய மக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்கு கேட்கும் தௌர்பாக்கிய நிலை உங்களுக்கு உண்டாகும் என்றார். ஆனால் இந்த எச்சரிக்கையை பேராசை பிடித்த திருதராஷ்டிர மன்னன் கண்டு கொள்ளவில்லை.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 89 கும்பகோணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.

இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.

ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.

கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.

இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 85 வது தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். புராண பெயர் திருச்சத்திமுத்தம். மூலவர் சிவக்கொழுந்தீசர் தழுவக்குழைந்த நாதர் சக்திவனேஸ்வரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. தீர்த்தம் சூல தீர்த்தம். அம்மாள் சிவனுக்கு பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது. இங்கு அம்மாளுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு அருகில் சிவலிங்கத்தை அம்மாள் கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலம் உள்ளது. காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக தலவரலாறு உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களைக் கொண்ட கிழக்கு நோக்கிய பெரிய கோவில். வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும் மறுபுறம் சத்திமுத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம் கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன. சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி சிவனுக்கு முத்தமளிக்கும் தல மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. நடராஜர் சரபேஸ்வரர் கஜலட்சுமி அகஸ்தியர் காசி விஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சூரியன் சந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளது. நாகர் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ளது. சனீஸ்வரர் பிரதான மண்டபத்தில் உள்ளர். இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை.

சிவனும் சக்தியும் பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினர். இதற்காக சக்தி காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே இத்தலம் உள்ள இடத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். சக்தியின் மன உறுதியை அனைவரும் அறிந்து கொள்ள சிவன் வராமல் காலம் தாழ்த்தினார். சக்தி தனது உறுதி கலையாமல் தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினார். பார்வதி தேவி உருவாக்கிய சிவலிங்கம் வெள்ளத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தது. உடனே அதைத் தழுவி நீரிலிருந்து பாதுகாத்தபடியே தவத்தை தொடர்ந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும் அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த சக்தி அந்த நெருப்பை கட்டித் தழுவினாள். சிவன் குளிர்ந்து அம்மாளை தன்னோடு ஏற்றுக் கொண்டார். தற்போதும் பிரதான லிங்கத்தில் அக்னியின் தடயங்கள் உள்ளன.

திருநாவுக்கரசர் தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப் பாடினார். இறைவன் திருநல்லூருக்கு வருமாறு கூறி அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். திருஞானசம்பந்தருக்கு இத்தலத்திலிருந்து இறைவன் முத்துப்பந்தல் அருளினார். அதன் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும் விளக்கேற்ற காசும் ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை பார்வதி அகத்தியர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் மருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார்தம் திருச்சத்திமுற்றம் என்று பாடியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 83 நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 83 வது தேவாரத்தலம் நல்லூர் புராணபெயர் திருநல்லூர். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். இங்கு சிவன் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். 1. தாமிர நிறம் 2. இளம் சிவப்பு 3. தங்க நிறம் 4. நவரத்தின பச்சை 5. இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால் இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. உற்சவர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாள் கல்யாணசுந்தரி கிரிசுந்தரி. தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வம் மிகவும் பழமையானது. முதன் முதலாக தோன்றிய வில்வமரம் என்பதால் இதற்கு ஆதிமரம் என்ற பெயரும் உண்டு. தீர்த்தம் சப்த சாகரம். பிரம்மதேவர் இத்திருக்குளத்தின் கிழக்குத் திசையில் ரிக் வேதத்தையும் தெற்கு திசையில் யசூர் வேதத்தையும் மேற்குத் திசையில் சாம வேதத்தையும் வடக்கு திசையில் அதர்வண வேதத்தையும் நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். முருகப் பெருமான் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ மகாகாளி இங்கு அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர் அகத்தியர் காசிவிஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் காசி விஸ்வநாதர் கணநாதர் காசிவிநாயகர் பாணலிங்கம் விஸ்வநாதர் முருகன் நால்வர் குந்திதேவி தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் ஆகியோரை மண்டபங்களிலும் பிராகாரத்திலும் தரிசிக்கலாம். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார். கொடிய அரக்கனாகிய இரண்யனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியனை மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று இறைவன் பணித்தார். அதன்படி அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரத்துடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும் அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும் தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகன் அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் உள்ளது. ஒருசமயம் ஆதிசேசனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேசன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேசன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும் மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என எண்ணிய அகத்தியருக்கு நினைக்கும் போது திருமண காட்சியை கொடுப்பதாக இறைவன் வரமளிக்கிறார். அதன்படி இத்தலம் வந்து திருமணக் காட்சியை காண எண்ணிய அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவலிங்கத்தின் பின்னால் அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும் பிரம்மாவும் காட்சி தர அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம். திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப் போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி மாசி மகத்தின் போது கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும் விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம் பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும் காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண் என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும் எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று 48 நாட்கள் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வேறு வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடி தன் தோஷங்கள் நீங்கப் பெற்றாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும் இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று தல புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடல்கள் பாபாடியுள்ளனர்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -7

பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் இருக்கும் பொழுது அவர்களை அழைத்து வர விதுரருக்கு திருதராஷ்டிரர் கட்டளையிட்ட போது மகிழ்ச்சியுடன் சென்ற விதுரர் இப்பொழுது திருதராஷ்டிரன் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பாண்டவர்களை அழைத்து வர தயங்கினார். ஆயினும் அரசனுடைய ஆணைக்கு உட்பட்டு விதுரர் அங்கு சென்றார். பாண்டவர்கள் கருத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் விதுரருடைய வருகை யுதிஷ்டிரனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அவருடைய முகத்தில் அமைந்திருந்த கவலையை யுதிஷ்டிரன் கவனித்து விட்டான். அவரின் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அதற்கு அஸ்தினாபுரம் அருகே புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பகடை விளையாட பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைக்கிறார் என்று விதுரர் விஷயத்தை விளக்கி கூறினார்.

யுதிஷ்டிரனுக்கு இந்த சூழ்ச்சியின் உட்கருத்து உடனே விளங்கியது. பல தீமைகளுக்கு காரணம் சூதாட்டம் என்பது அவனுக்குத் தெரியும் அவன் மேலும் விசாரித்த போது சகுனியும் இன்னும் சில திறமை வாய்ந்தவர்கள் அந்த விளையாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது. பகடை விளையாட்டில் யுதிஷ்டிரன் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தான். விளையாட்டில் ஈடுபடும்படி மன்னராகிய பெரியப்பாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அவருடைய உத்தரவுக்கு அடிபணிவது தன் கடமை என யுதிஷ்டிரன் எண்ணினான். மேலும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவன் கடமைப் பட்டிருந்தான். க்ஷத்திரர்களை விளையாட்டுப் போட்டிக்கு கூப்பிட்டால் அதற்கு மறுப்பு கூறுவது முறை ஆகாது. அழைப்பை ஏற்றுக் கொள்வதே முறை. இவ்வாறு வடிவெடுத்து வந்த சூழ்நிலைகள் யுதிஷ்டிரனுக்கு கேடுகாலமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அமைதியாக இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தெய்வச் செயலாக வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய உற்றார் உறவினருடன் அவன் அஸ்தினாபுரம் புறப்பட்டுச் சென்றான்

தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை திருதராஷ்டிர மன்னன் பேரன்புடன் வரவேற்றான். வசதிகள் நிறைந்த மண்டபங்களில் ஆங்காங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உள்ளன்போடும் ஊக்கத்தோடும் கௌரவர்கள் அவர்களோடு நடந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் இருந்த மன வேறுபாடுகள் எல்லாம் அறவே அகற்றப்பட்டது போன்று தென்பட்டது. அத்தகைய அமைப்பே பாண்டவர்களை அழிப்பதற்கு முதல் சூழ்ச்சியாக இருந்தது.

பாண்டவர்களை படுகுழியில் ஆழ்த்தும் துர்தினமும் வந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தை பார்க்க அழைத்துச் சென்று அதன் அமைப்பு அவர்களுக்கு காட்டப்பட்டது. அதன் பிறகு பொழுது போக்காக பகடை விளையாடலாம் என்று சகுனி சொன்னான். யுதிஷ்டிரனுக்கு அந்த விளையாட்டின் மீது சிறிது நாட்டம் இருந்தது. எனினும் அதை குறித்து அவன் இப்பகடை விளையாட்டு ஏமாற்றுவதற்கென்றே அமைந்துள்ளது. பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சூதாட்டம் மனிதனுடைய பகுத்தறிவை விரட்டுகிறது. அது மதுபானத்திற்கு நிகரான மயக்கத்தை உண்டு பண்ணவல்லது என்று யுதிஷ்டிரன் சகுனியிடம் சொன்னான்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 51 திருஐயாறு (திருவையாறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது. மூலவர் பஞ்சநதீஸ்வரர் ஐயாற்றீசர் செம்பொற்சோதீஸ்வரர் பிரணதார்த்திஹரன் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். எனவே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட தட்சிணாமூர்த்தி தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவரை ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம் அபய முத்திரையும் இடது கரங்களில் சூலம் வேதச்சுவடிகள் தாங்கியும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் இது. திருவீழிமிசையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இக்கோவில் குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளார். தலமரம் வில்வம். தீர்த்தம் சூரியபுட்கரணி மற்றும் காவிரி. சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுள் ஐயாறப்பர் கோயில் தென் கயிலைக் கோயில் ஒலோகமாதேவீச்சரம் என்று மூன்று கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பது பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும் 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுர மண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும் சப்தமாதர்களும் ஆதிவிநாயகரும் நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் தட்சினாமூர்த்தி நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும் அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும் உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகங்களில் இக்கோவில் சூரிய தலமாகும். சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தென் கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே இந்த ஆட்கொண்டாரின் உருவம். இவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். சில சமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் சாற்றப்படுவதுண்டு. இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. அப்போது அங்கு நான்கு குழிகள் தோண்டி அதில் தங்கமும் வெள்ளியும் போட்டு வைத்திருந்தனர். இதனை கட்டியவர்கள் தங்களுக்கு கூலியாக தங்களால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

இக்கோவில் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்த போது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய் அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.

சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. அவரது தந்தை குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால் நந்தி வாய்நுரைநீர் அமிர்தம் சைவ தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். நந்திகேசர் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்து கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஏழுகோடி முறை ஓம் நமசிவாய உருத்திர ஜபம் செய்தார். தவத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும் சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியையும் அருளினார். அத்துடன் இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் மகளை சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமணம் செய்துவைத்தார். சுந்தரரும் சேரமான் நாயனாரும் அக்கோவில் இறைவனை தரிசிக்க வரும்போது காவிரியின் இரு பக்கத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடியதும் வெள்ளம் ஒதுங்கி நின்று இருவருக்கும் வழி தந்தது. பிற்காலச் சோழர் பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. திருநந்தி தேவர் லட்சுமி இந்திரன் வருணண் வாலி சேரமான் பெருமாள் ஐயடிகள் காடவர்கோன் பட்டினத்துப் பிள்ளையார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 50 திருப்பழனம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 50 வது தேவாரத்தலம் திருப்பழனம். அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். கதலிவனம் மற்றும் பிரயாணபுரி என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. மூலவர் ஆபத்சகாயர். பிரயாணபுரீசர் அமுதலிங்கேசர் சுதாலிங்கமூர்த்தி கரிதலேஸ்வரர் பழனநகரார் என்ற பெயர்களும் உண்டு. சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது. அம்பாள் பெரியநாயகி. ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அருள் பாலிக்கிறார். தலமரம் வாழை வில்வம். தீர்த்தம் மங்களதீர்த்தம் (தற்போது இல்லை). பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரம் இல்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள் விநாயகர் வேணுகோபாலர் சந்நிதிகளும் பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும் நடராஜர் சபையும் பைரவர் நவக்கிரகமும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும் தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும் மேற்கு திசையில் அண்ணாமலையார் நின்ற நிலையிலும் வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர். அர்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார். சுவாமி சன்னிதிக்குப் பின்புரம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார்.

கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப் பிரயாணபுரி என்றும் இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயர் வந்தது. பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்தார். இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரரை இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார் காளி மூலம் அளிக்கப்பட்டார்கள். பின்பு கௌசிகர் அமுதத்தை கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல யாத்திரையாக வந்தான். அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான். அன்று கனவில் எமதர்மன் தோன்றி இன்று முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய் எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு திருப்பழனப் பிரானை சரணடைந்தான். சிவபெருமான் அசிரீரியாக நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய் என்று அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார். எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார். சந்திரன் குபேரன் திருமால் திருமகள் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். தர்மசர்மா என்னும் அந்தணன் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும். அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 48 திருவைகாவூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 48 வது தேவாரத்தலம் திருவைகாவூர். மூலவர் வில்வவனேஸ்வரர் வில்வவனநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சர்வஜனரக்ஷகி வளைக்கைநாயகி. அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. தலமரம் வில்வம் தீர்த்தம் எமதீர்த்தம். புராண பெயர் வில்வவனம். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவ விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும் பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள். அருகில் கையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி இருக்கிறார். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது. வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாக புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்து மழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மை நோக்கி திரும்பி (கிழக்கு நோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் வாயிலில் இடது பக்கம் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும் சுந்தரமூர்த்தி விநாயகர் சன்னதியும் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன. இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல் எண்கண் எட்டுக்குடி பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள் மயிலின் தோகைகள் மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் மயில் திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார். கை ரேகை நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும். இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருக்கிறது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி அம்பாள் சந்நிதிகள் நேர்கோட்டில் உள்ளன. உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும் இங்கு சிவனை வேண்டி சாபநிவர்த்தி பெற்றார்கள். மற்ற கோவில்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக வரலாறு இருக்கும். இத்தலத்தில் சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை. யம பயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது.

இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது. சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். நான்காம் யாமத்தில் வேடன் வேடுவச்சி இறைவன் காட்சி புறப்பாடு நடைபெறுகிறது. மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி மூலஸ்தானத்தில் சிவனுக்கும் அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவார்கள். வேடன் மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் வேடன் வேடுவச்சியும் புறப்பாடாவார்கள். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்கள். இரவில் சுவாமி அம்பாள் இருவரும் ஒரு ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். இந்த சப்பரம் விசேஷமாக மூங்கில் கீற்றில் தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்து விடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள் ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனை அறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவர் யமன் வருவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி யமனை விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். இறைவனுக்கு பயந்த நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவர் விடுவிக்கப்பட்டார். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் கோவிலுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக எதிர்புறமாக திரும்பி இருக்கிறார்.

குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில். சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 47. திருக்கடையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 47 வது தேவாரத்தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆகும். புராண பெயர்கள் திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் அமிர்தத்தை உண்ண வேண்டுமென்று அமிர்த குடத்தை இங்குக் கொண்டு வந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று பெயர் பெற்றது. மூலவர் அமிர்தகடேஸ்வரர் வேறு பெயர் அமிர்தலிங்கேசுவரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். உற்சவர் காலசம்காரமூா்த்தி. அம்பாள் அபிராமியம்மன். வேறு பெயர்கள் அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள் என பல பெயர்கள் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் கால சக்தி பீடம் ஆகும். தல விருட்சம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் என்ற ஜாதிமுல்லை. தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் குகாம்பிகையாக அருள் பாலிக்கிறாள்.

ஒருசமயம் பிரம்மதேவர் ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர் விதைத்த வில்வ விதை இத்தலத்தில் 24 நிமிடத்தில் மரமாக வளர்ந்தது. இங்கு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக சிவனே ஆதி வில்வநாதராக தனிசன்னநிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியில் விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர் அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின் புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். அட்டவீரட்ட தலங்களில் இத்தலம் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். முருகப் பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இந்த வினாயகர் துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரக பூஜைகள் இங்கு கால சம்கார மூர்த்திக்கே செய்யப்படுகிறது.

திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது 50 ஆம் திருமண விழா பூஜையும் 59 வயது பூர்த்தியாகி 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும் 60 வயது பூர்த்தியாகி 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும் 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜையும் 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் 90 வயது பூர்த்தியாகி 91 வயது தொடங்குகிறவர்கள் கனகாபிஷேகம் பூஜையும் 100 வயது தொடங்குகிறவர்கள் பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த பூஜைகள் செய்பவர்கள் திதி நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. இந்த பூஜைகளை செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம். இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோக நிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளி மயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக் கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சன்னதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் சஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அபிராமி பட்டரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவு பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சன்னதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970 களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அனுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு. ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப் பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப் பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கிறார்கள்.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார்.

எமன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும் திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும் மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க முடியாது. பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் ஆகும். எமனுடன் இருப்பது உயிர்ப்பித்த அனுக்கிர மூர்த்தி கோலம் ஆகும். ஆக பீடம் திறக்கும் போது ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிர மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை சிறுமி வடிவில் இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக தினமும் காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்தது. பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் தற்போதும் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வது தலமாகும்.

திருக்கடையூரில் இருந்து தென்மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள திருமணல்மேட்டில் மார்க்கண்டேயருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு மூல சன்னதியில் மார்க்கண்டேயர் சிலை உள்ளது. அந்த இடத்தில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மகன் பிறக்க வேண்டி கடவுளை வழிபட்ட கோவிலும் உள்ளது.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவனது பெயர்கள் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் கோயிலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதற்கு திருக்கடையூர் ரகசியம் என்று பெயர். இக்கோயிலை தற்போது தரும்புரம் ஆதினம் நிர்வாகித்து வருகிறார்கள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இங்குதான் அவதரித்தார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். பிரம்மன் அகத்தியர் புலஸ்தியர் வாசுகி துர்க்கை பூமாதேவி முதலியோர் வழிபட்ட தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரியார் தனது திருப்புகழ் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.