ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 586

கேள்வி: ஐயனே தவிர்க்க முடியாமல் ஒரு பாம்பை கொல்ல நேர்ந்தால் என்ன செய்வது?

அப்படித்தானப்பா சித்தர்கள் இருக்கும் பகுதிக்கு மனிதர்கள் வந்து விட்டால் நாங்களும் தவிர்க்க முடியாமல் அவர்களை கொன்று விடலாமா? பாம்புக்கு தெரியுமா? பாம்பு திட்டமிட்டு ஏதாவது செய்கிறதா? ஆனால் திட்டமிட்டு பொறி வைத்து அதை பிடித்து தோலை உரித்து வியாபாரம் செய்வது யார்? எனவே வாகனத்தில் செல்லும் பொழுது கண் பார்வையில் சிக்காமல் சில ஜீவன்களை கொல்ல நேர்ந்தால் கூட பிரம்மஹத்தி தோஷம் அவனுக்கு பீடிக்கும் என்றால் மற்றவைகளுக்கு நீயே யோசித்துக்கொள். என்றாலும் ஒரு ஜீவன் ஒரு மனிதன் மூலம் விதி முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது இவ்வாறு நடப்பது உண்டு. அதனால் இவனுக்கு கர்மா வர வேண்டும் என்ற விதி இருக்கும்.

திருக்கழுக்குன்றம் கழுகுகள்

கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் திருக்கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாயுச்சியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) பதவிக்காக தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் முடிவில் இறைவன் தோன்றி சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) பதவியாக வரம் தந்து இப்பதவியில் சில காலம் இருங்கள் பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்து இறைவனோடு வாதம் செய்த புத்திரர்களை கழுகுருவம் அடைக என்று சாபமிட்டார். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகுகளுக்கு உணவு கொடுக்கும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் என்னும் கழுகுகளும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன் மாகுத்தன் என்னும் கழுகுகளும் நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. இறைவனின் வரத்திற்கு சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) ஏற்ப இந்த கழுகுகள் இறைவனாகவே பக்தர்களால் வழிபடப்பட்டன.

கழுகுகள் இராமேஸ்வரத்தில் குளித்து கழுக்குன்றத்தில் உணவு சாப்பிட்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு பட்சி தீர்த்தம் என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. சில வருடங்கள் முன்பு வரை இக்கழுகுகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு சென்று கொண்டிருந்தது. தற்போது வருவதில்லை. இடம்: வேதகிரீஸ்வரர் கோவில் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம்.

சிவ வடிவம் 22. அர்த்தநாரீஸ்வரமூர்த்தி

அர்த்தம் என்பது பாதி நாரி என்பது பெண். சிவன் ஆண் உருவம் பாதி வலப்பக்கமும் சக்தி பெண்ணுருவம் பாதி இடப்பக்கமும் உள்ள உருவமே அர்த்த நாரீஸ்வரர் ஆகும். இது சிவனின்றி சக்தி இல்லை சக்தியின்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும்.

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால் நான்முகன் இந்திரன் என அனைத்தும் தேவர் உலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும் சிவபெருமானையும் வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கியபடி சென்றார். பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இதனை கவனித்த பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார். ஆனாலும் பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். இதைக் கண்ட சக்தி சிவனிடம் நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று முறையிட்டாள். சிவபெருமானும் தனது சரிபாதி இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். இருவரும் அம்மையப்பனாய் நின்றார்கள்.

பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளி முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார். சிவசக்தி இருவரும் சரிபாதியாக அர்த்தநாரீஸ்வரராக நின்று பிருங்கி முனிவருக்கு அருள் புரிந்தார்கள்.

ஈரோடு அருகேயுள்ள திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவரராக அமர்ந்துள்ளார். இறைவி பெயர் பாகம்பிரியாள். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி பாகம்பிரியாள் என்று பெயர். இங்கு அர்த்தநாரீசுவரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி தேவார பாடல்களில் புராண நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 585

கேள்வி: கோயில்களுக்கு சென்றால் தற்கொலை எண்ணம் மாறிவிடும் என்பது பற்றி:

இது அனைவருக்கும் பொருந்தாது. எதுவாக இருந்தாலும் கூட இறுதியில் ஜெயிப்பதற்கு தான் விதி படைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதியை தாண்டி ஒரு மனிதன் மேலேற வேண்டும் என்றால் அந்த அளவுக்கு அவனிடம் ஆத்ம பலம் வேண்டும். தர்மத்தாலும் பிரார்த்தனையாலும் தலங்கள் தோறும் செல்வதாலும் மனதிலே கள்ளமில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் மட்டும்தான் சாதிக்க முடியும். ஆத்ம பலம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் விதியை வெல்ல முடியும். இல்லையென்றால் பிரம்மஹத்தி விடாது. பிதுர் சாபங்கள் விடாது.

சிவ வடிவம் – 21. கல்யாணசுந்தரமூர்த்தி

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருக்கைலையில் அனைத்து தேவர்களுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைவன் முன் சென்றார். தட்சன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக உனது பெயர் மாறும். நீ பெரியவளானதும் நான் வந்து உன்னை மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார் பார்வதிதேவி. அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர்.

பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி மணப்பருவம் வந்ததும் சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். சிவபெருமான் பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை திருமணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து திருமணம் புரிவேன் என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்த ரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் திருமண நாளாக குறிக்கப்பட்டது. தேவர் உலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வட திசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அகத்தியர் திருமண கோலத்தை காண முடியாதே என்று எண்ணி தயங்கினார். இதனை அறிந்த சிவபெருமான் நீ விரும்பும் போதேல்லாம் உமக்கு எம் திருமணக் கோலத்தை காட்டுவோம். எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறே சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்ய எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையில் கல்யாணசுந்தரமூர்த்தி உள்ளார். இங்கு மூலவர் பெயர் விழியழகர் இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை ஆகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் பார்வதியின் திருமணக்கோலம் உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள கோயிலிலும் கல்யாணசுந்தரர் அருள்பாலிக்கிறார். மேலும் பல புராண கோயில்களில் மூலவருக்கு பின்புறம் சுதை சிற்பமாக கல்யாண சுந்தரமூர்த்தி திருமணக்கோலத்தில் உள்ளார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 584

கேள்வி: குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றி:

சுருக்கமாக கூறிங்கால் இவ்வாறு (ஜாதகத்தில்) ஒரு அமைப்பு பெற்றவர்கள் தனக்கு குருவாக இருக்கக் கூடியவர்களை எதிர்க்கக் கூடிய நிலை வரும். அது குருவின் குற்றம் காரணமாகவோ அல்லாத நிலையிலோ கூட வரும். குரு சிஷ்ய பகை வளர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கும் பிறவிகள் தோறும். பொதுவாக குரு சாபத்தையும் குரு தோஷத்தையும் இது குறிக்கிறது. வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து குரு தலம் குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம். குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும் குரு தொடர்பான (ஆசிரியர் போன்ற கற்றுக் கொடுக்கும்) தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

சௌகந்திகா மலர்

பாண்டவ சகோதரர்கள் அவர்களின் மனைவி திரௌபதியும் வன வாசத்தின் போது பத்ரிகாஷ்ரமத்திற்கு வந்தனர். ஐவரில் பலசாலியான பீமனும் திரௌபதியும் புனிதமான இடமாகக் கருதப்படும் பத்ரிகாஷ்ரம வனத்தில் நடமாடும் போது ​​திரௌபதியின் பாதங்களுக்கு அருகில் விண்ணுலகப் பூவான சௌகந்திகா என்ற அழகிய மணம் மிக்க மலர் விழுந்தது. அதன் அழகு மற்றும் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட திரௌபதி அந்த மலரை இன்னும் அதிகமாக விரும்பினாள். இதனால் பீமன் மலரைத் தேடிப் புறப்பட்டார். காட்டு மிருகங்கள் மற்றும் அசுரர்களுடன் பல சாகச நிகழ்வுகளுக்குப் பிறகு பீமன் கந்தமாதன மலையை வந்தடைந்தார். அங்கு சௌகந்திகா மலர் நிறைந்த குளத்தைக் கண்டார். அந்த தோட்டமும் குளமும் செல்வத்தின் அதிபதியான குபேரனுடையது. இதை மணிமான் மற்றும் க்ரோதவாஷா என்ற அரக்கர்கள் பாதுகாத்தனர். கடுமையான போருக்குப் பிறகு பீமன் காவலர்களை வெற்றி பெற்று சௌகந்திகா மலருடன் திரௌபதியிடம் திரும்புகிறான்.

ஹம்பியில் உள்ள பீமனின் நுழைவாயிலின் அடிவாரத்தில் திரௌபதி விரும்பிய விண்ணுலகப் பூவான சௌகந்திகாவுடன் பீமன் திரும்பும் சிற்பம் உள்ளது.

ஆனேகுடே விநாயக கோவில்

அனேகுடே என்பது இந்தியாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தபுரா தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் கும்பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பியில் இருந்து குந்தாபுரா நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது. கும்பாசி என்ற பெயர் இங்கு கொல்லப்பட்ட கும்பாசுரனிடமிருந்து வந்ததாக வரலாறு உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான விநாயகர் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ஆனேகுடே கடலோர கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் (பரசுராம க்ஷேத்திரம்) ஒன்றாகும்.

முன் காலத்தில் இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட போது ​​​​அகஸ்திய முனிவர் பல முனிவர்களுடன் மழைக் கடவுள் வருணனை மகிழ்விக்க யாகம் செய்ய இங்கு வந்தார். அந்த நேரத்தில் கும்பாசுரன் என்ற அரக்கன் யாகம் செய்யும் முனிவர்களை தொந்தரவு செய்து யாகத்தை சீர்குலைக்க முயன்றான். முனிவர்கள் வன வாசத்தில் இருந்த பாண்டவர்களிடம் யாகத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாதவாறு காக்குமாறு பாண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். யாகத்திற்கு இடையூறு ஏதும் வராதவாறு காக்கிறோம் என்று பீமன் முன் வந்தான். வினாயகர் பீமனுக்கு வாள் கொட்டுத்து ஆசிர்வதித்தார். அந்த வாளைப் பயன்படுத்தி பீமன் அரக்கனைக் கொன்று யாகத்தை முடிக்க உதவினார். அரக்கன் இரந்த அந்த இடத்திற்கு இதற்கு கும்பாசி என்று பெயர் வந்தது. யானைத் தலை கடவுளான விநாயகத்தின் இருப்பிடமாக இருப்பதால் ஆனே (யானை) மற்றும் குட்டே (குன்று) என்பதிலிருந்து ஆனேகுடே என்ற பெயர் வந்தது.

இங்கு வினாயகர் சித்தி விநாயகா என்றும் சர்வ சித்தி பிரதாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சிவ வடிவம் – 20. திரிபுராந்தகமூர்த்தி

பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரி புரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம் திரிபுராந்தகமூர்த்தி (திரிபுர அந்தக மூர்த்தி) ஆகும்.

தாரகாசுரனின் மூன்று மகன்களும் பிரம்மாவை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். அவர்களின் தவத்தின் பயனாக பிரம்மா அவர்களுக்கு காட்சிக் கொடுத்தார். பிரம்மாவிடம் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்று கேட்டார்கள். பிரம்மா அது முடியாத காரியம். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே. மற்ற அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும் என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன் வெள்ளி இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த முப்புரம் எங்களையும் சிவபெருமான் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாதபடி வரத்தை கேட்டனர். பிரம்மாவும் அவர்கள் கேட்டமடி கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் அசுரத் தன்மையை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினார்கள். அவர்களது தொல்லை தாளாத தேவர்கள் சிவனை நோக்கி கடுமையான தவத்தை செய்தார்கள். அவர்களின் தவத்தின் பயனால் சிவபெருமான் போர் செய்வதற்கு தேர் முதலான போர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே போர் கருவிகள் தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும் சந்திர சூரியர் சக்கரமாகவும் நதிகள் தேர்க் கொடியாகவும் அஷ்ட பர்வதங்கள் தேரின் தூண்களாகவும் புண்ணிய நதிகள் சாமரம் வீசவும் தேவ கணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடப வாகனத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளான வினாயகரை வேண்ட தேர் பழைய படி சரியானது. பின் தேவ கணங்கள் படை சூழ முப்புரம் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அப்போது தேவர்கள் தாங்கள் செய்த தேரினால் தான் சிவபெருமான் இந்த யுத்தத்தில் வெற்றி பெருவார். நாம் இல்லாமல் இவரால் வெற்றி பெற முடியாது என்ற கர்வம் கொண்டார்கள். இதனை அறிந்த சிவபெருமான் யுத்த கருவிகளை கீழே வைத்துவிட்டு முப்புரங்களைபயும் பார்த்து சிரித்தார். உடனே முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. உடனே தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் மூவரும் சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்டு சரணடைந்தார்கள். அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர் துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபுராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது.

கடலூரில் உள்ள திருஅதிகையில் திரிபுராந்தக மூர்த்தி உள்ளார். இவருக்கு அதிகைநாதர் என்ற பெயரும் உள்ளது. இறைவியின் பெயர் திரிபுரசுந்தரியாகும். கூவம் திரிபுராந்தகர் கோயிலில் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. மாமல்லபுர சிற்பத்தில் வடக்குச் சுவர் மற்றும் கொடித் தூணிலும் காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பத்திலும் சோழர் கால கோயில்களின் தேவகோட்டங்களிலும் நாயக்கர் கால தூண்களிலும் தஞ்சைக் கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பமாகவும் சிதம்பரம் கோயில் கலைக் கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலத்திலும் கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சியையும் திரிபுராந்தக மூர்த்தியைக் காணலாம். திருநல்லம் கோணேரிராஜபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத் திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 583

கேள்வி: இருள் உலக ஆன்மாக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

தில யாகம். எதை செய்தாலும் இது இறைவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு இந்தப் புண்ணியத்தை இருள் உலக ஆத்மாக்களுக்கு பயன்படுத்துங்கள் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.