ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் மிகுந்த பதட்டத்துடன் இளைஞன் ஒருவன் வந்து என் மனத்தை எவ்வளவு அடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் கீழான ஆசைகளும் வெறுக்கத்தக்க உணர்ச்சிகளும் என் மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனால் நான் அமைதியை இழந்து தவிக்கிறேன் காமம் எப்படி விலகும்? என்று கேட்டன்.
அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்பா இறைக்காட்சி கிட்டாதவரை காமம் அடியோடு விலகுவதில்லை. அதன் பிறகும் உடல் இருக்கும் வரை அதன் சுவடு சிறிது இருக்கவே செய்யும். அதனால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. என்னிடமிருந்து முழுமையாகக் காமவாசனை போய்விட்டதென்றா நினைக்கிறாய்? காமத்தை வென்று விட்டதாக நான் ஒரு சமயம் நினைத்தேன். அதன் பிறகு ஒருநாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தபோது என்னைமீறிக் காம உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. என்னால் அடக்கவே முடியாது போல் தோன்றிற்று. நான் ஆடிப் போய்விட்டேன். உடனே தரையில் விழுந்து புழுதியில் முகத்தைத் தேய்த்துக் கொண்டு அழுத வண்ணம் அன்னை காளியிடம் அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன். காமத்தை வென்றதாக இனி எண்ணவே மாட்டேன் என்று முறையிட்டேன். அதன் பின்னரே அந்த உணர்ச்சி என்னை விட்டு நீங்கியது. நீயோ வாலிபன். அதனால்தான் உன்னால் அந்த வேகத்தை அடக்க இயலவில்லை. பெரு வெள்ளம் புரண்டு வரும்போது அது கரையைப் பற்றி கவலைப்படவா செய்யும். கரையோவஎதுவோ வழியிலுள்ள அனைத்தையும் உடைத்துக் கொண்டு அது முன்னேறுகிறது. வயல்களில் புகுந்து பெரும் உயரத்திற்குத் தேங்குகிறது.
கலியுகத்தில் மனத்தினால் அறியாமல் செய்கின்ற பாவம் பாவமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. ஏதோ ஒருமுறை கெட்ட எண்ணம் எழுந்து விட்டதற்காக ஏன் இப்படிப் படபடக்கிறாய்? உடலின் இயற்கைப் படி இந்த உணர்ச்சிகள் சில சமயம் வந்துபோகத்தான் செய்யும். இதையும் மலம் கழிப்பது போன்ற சாதாரண உணர்ச்சியாக எண்ணிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாராவது கன்னத்தில் கைவைத்து கொண்டு கவலைப்படுகிறார்களா? அதேபோன்று இத்தகைய உணர்ச்சிகளையும் இயல்பானவையாக அற்பமானவையாகக் கருது. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய். இறை நாமத்தை ஜெபி. அவரது பெருமையில் ஈடுபடு. கெட்ட எண்ணங்கள் வரட்டும் போகட்டும். அவற்றைக் கண்டு கொள்ளாதே. தாமாகவே அவை கட்டுக்குள் அடங்கி விடும் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
இறைவன் அருளால் ஒரு மனிதன் இதையெல்லாம் பெறலாம் இதையெல்லாம் பெறக்கூடாது என்று அவன் முந்தைய பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவி இறைவனால் வகுக்கப்படுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்ட பிறகு அது வேண்டும் என்று வினவுவது மனித ஆசையாக இருக்கலாம். தரக்கூடாது என்பது விதியாக இருக்கும் பட்சத்தில் அது சற்று கடினம்தான். இருந்தாலும் ஆசைப்பட்டதை பிரார்த்தனை மூலம் நல்ல தருமத்தின் மூலம் போராடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவையெல்லாம் எனக்கு வேண்டுமோ இறைவா அதை நீயே தந்துவிடு. எது கிடைத்தால் எனக்கு நலமோ அதை நீ எனக்கு தந்துவிடு. எதை இழந்தால் எனக்கு நலமோ அது என்னை விட்டுப் போகட்டும் என்று இறைவனிடம் பொதுவாக ஒரு பிரார்த்தனை செய்து விடுவதே சிறப்பு. வேண்டும் வேண்டும் வேண்டும் என்று வேண்டுவதை விட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற பிரார்த்தனையே உண்மையான பிரார்த்தனையாகும்.
மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா. அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஒன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன் மனைவியிடம் கொடுத்தார். ஐனகர் ராஜரிஷி. அந்த செய்தி அவர் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஓலையை வாங்கி வாசித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனை எத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்ற போது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேய, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள். சில ஆண்டுகளுக்கு பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண் மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை அயோத்தி வராமல் காட்டிற்குள்ளேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது. லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள். இதெல்லாம் முடிந்ததே இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை. ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள். சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா. இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாகத்தான் இனி வாழ வேண்டும்.
ராமனும் பரதனும் சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சி வசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள் தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம் எனப் புறப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி அயோத்தி மாநகரை வந்தடைந்தது. அயோத்தி வீதிகளில் மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன. மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்க வேண்டும். தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர். தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் குதிரைகள் பறந்தன. நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம். \
ராமனும் பரதனும் சத்ருக்கனனும் சரயு நதியின் கரையில் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன் சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத் தொடங்கியது. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டதை உணர்ந்த மக்கள் ராமா ராமா என கோசம் எழுப்பினார்கள். ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.
ராமர் நம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாரே இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே உங்களுக்கு வருத்தமாக இல்லையா? ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது. சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா? என அவள் ஏங்கினாள். மாண்டவி சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்க பேச ஆரம்பித்தார்.
மனித உடல் என்பது உறை. ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான். வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்து விட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம் என்றார்.
சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா? என்று கேட்டாள். அதற்கு ஐனகர் ஆமாம் ஒன்றை யோசி அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும் என்றார். அதற்கு சுனயனா இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா? என்று கேட்டாள்.
ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் என்று ஜனகர் ஒரு கட்டளை போல் கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கணத்தில் ஆதிசேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக மாறி திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.
ராமரைக் கண்ட மக்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ஜெய் ஸ்ரீராம் என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன. ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி ஊர்மிளை சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்று அறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ராம ராம என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
கேள்வி: தமிழ்நாட்டில் அஷ்ட பைரவர் கோவில் சீர்காழியைத் தவிர வேறு எங்கு உள்ளது? என்று சொல்லுங்கள்.
அப்படியானால் ஏக பைரவரை வணங்கினால் இந்த பலனும் வராது என்ற பொருளாகிவிடும். தாராளமாக அஷ்டபைரவரையும் வணங்கலாம். சதுர் கால பைரவரையும் வணங்கலாம். பஞ்ச பைரவரையும் வணங்கலாம். ஏக பைரவரையும் வணங்கலாம். பைரவரை வணங்காத பலரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அஷ்டபைரவர் வழிபாடு சதுர்கால பைரவர் வழிபாடு என்பதெல்லாம் குறிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பைரவரை எப்படி எந்த நாமத்தின் வணங்கினாலும் பைரவரின் அவதார நோக்கமே பாவ கர்மாவை குறைப்பதுதான். குறிப்பாக அறிந்தும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்ய நேரிடுகிறது என்று வருந்தக் கூடியவர்கள் ஒரு குடும்பத்திலே அகால மரணங்கள் அடிக்கடி நேரிடுகிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் கட்டாயம் அன்றாடம் குறைந்தபட்சம் ஐந்து ஐந்து முக நெய் தீபங்களாக பைரவர் முன்னால் ஏற்றி மானசீகமாக பைரவரின் அஷ்டோத்திரத்தையோ சகஸ்ர நாமத்தையோ பைரவர் அஷ்டகத்தையோ அல்லது அவன் அறிந்த மந்திரத்தையோ துதித்து வந்தால் கட்டாயம் இந்த தோஷம் நீங்கும். இது பக்தி வழி.
அதற்காக பைரவரை வணங்கி விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பைரவரின் வாகனம் (நாய்) வால் ஆட்டிக் கொண்டே வந்தால் அந்த பக்கம் போ வராதே என்று அதனை விரட்டினால் ஏற்றிய தீபம் வேண்டிய பிரார்த்தனை அத்தனையும் வீணாகிவிடும். எனவே உயிரினங்களையும் போற்ற வேண்டும். பைரவரையும் வணங்க வேண்டும். பல இடங்களிலேயே பைரவ வாகனத்தை வளர்த்து விட்டு தொல்லையாக இருக்கிறது என்று எங்காவது கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த பாவத்திற்கு பிரயாசித்தம் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொல்லை என்று தெரியும் அல்லவா? எதற்கு அதனை வளர்க்க வேண்டும்? எதற்கு அதனோடு போராட வேண்டும்? அதை போல் ஒரு மனிதனுக்கு பூர்வீக தோஷங்கள் கர்மங்கள் முன்னோர்கள் செய்த கடுமையான பாவங்கள் சாபங்கள் இருக்கிறதென்றால் கட்டாயம் அவன் வாழ்க்கையிலே பைரவர் வழிபாட்டை எல்லா வகையிலும் சிறப்பாக செய்ய வேண்டும். ராகு காலத்திலோ அல்லது அஷ்டமியிலோ தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அப்படி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் செய்யட்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ தாராளமாக செய்யட்டும். நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் தூய்மையான எள் எண்ணெய் தீபமும் ஏற்றலாம் குற்றம் ஏதுமில்லை. நல்ல மிளகினை அதிலே போட்டு ஏற்றலாமா? என்றால் தாராளமாக ஏற்றட்டும் தவறொன்றும் இல்லை. தீபம் மட்டும் ஏற்றினால் போதுமா அபிஷேகம் செய்ய வேண்டாமா? என்றால் தாராளமாக அபிஷேகம் செய்யலாம். அரளி பூதான் போட்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா வகையான நறுமண மலர்களையும் சாற்றலாம்.
எனவே பைரவர் வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பிதர் சாபத்தை, முன்னோர்கள் பெற்ற சாபத்தை, பாவத்தை, முன்னோர்களுக்கு இவர்கள் செய்ய தவறிய கடமையினால் ஏற்படக்கூடிய பாவத்தை, சாபத்தை நீக்கக்கூடிய மிக முக்கியமான வழிபாடு. அந்தந்த சிறப்பான ஸ்தலங்களுக்கு சென்று தான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவர்களின் இல்லத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செய்யலாம். அந்த வசதியும் இல்லாதவர்கள் சிவபெருமானின் அம்சம் தான் பைரவர் என்பதால் பைரவரின் ரூபம் கிடைக்காதவர்கள் சிவபெருமானின் ரூபத்தை வைத்துக்கூட பைரவ வழிபாட்டை இல்லத்தில் உள்ள சுத்தி உடல் சுத்தியோடு தாராளமாக செய்யலாம்.
கேள்வி: பாவ கர்மாக்களை குறைக்க உடலோடு இருக்கும் பொழுது மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அல்லது உடலை உகுத்த பிறகும் அந்த ஆன்மா பிரார்த்தனை செய்து கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள முடியுமா?
பூர்வ புண்ணியம் அதிகமாக இருந்தால் விலங்கு நிலையில் இருந்தால் கூட இறைவனை வணங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு திருவானைக்காவல் திருவெறும்பூர் உதாரணம். எனவே அப்படி பூர்வ புண்ணியம் அதிகமாக பெற்றவர்கள் தேகத்தை இழந்த பிறகும் சூட்சும சாரீரத்தில் அலைந்து கொண்டே கூட இறை நாமத்தை ஜெபிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் லகரத்தில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஏனையோர்க்கு எல்லாம் குழப்பத்திலும் பயத்திலும் தான் இறந்து விட்டோம் என்று கூட தெரியாத நிலையில் எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பார்கள். இது போல் நிலையிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உடலோடு இருந்தாலும் வாழ இயலும். உடலை விட்டாலும் நன்றாக வாழ இயலும்.
கேள்வி: மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொண்டால் பாவ கர்மங்களின் அளவு குறைக்கப்படுகின்றதா?
இறைவனின் அருளால் ஒரு ஏழை சிறு அளவு தனத்தை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அன்றாடம் வாழ்க்கையில் போராட்டத்தையே காண்கிறான். வறுமையின் உச்சத்தில் இருக்கிறான். அவனைப் போன்ற மனிதர்கள் ஆலயம் சென்று வெறும் உடல் ரீதியான தொண்டை செய்துவிட்டு எதை வேண்டினாலும் ஒருவேளை இறைவன் அருளால் கிடைக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மோட்ச தீபத்திலோ வேறு வழிபாடுகளிலோ கலந்து கொண்டு வணங்கி விட்டு வந்தால் மட்டும் பலன் கிட்டாது. அந்த தொண்டிற்கு உண்டான செலவினங்களை தாராளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கிறது நான் மிகவும் போராடி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் ஏன் தர வேண்டும்? என் அந்திம (இறுதி) காலத்திற்கு நான் யாரிடம் கையேந்துவது? என்ற சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மிகவும் சிக்கனமாக சாமர்த்தியமாக நடந்து கொண்டால் ஒரு பலனும் அவர்களுக்கு கிட்டாது.
கேள்வி: தீபத்தை புதிதாக தான் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் எண்ணையை ஊற்றி தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி விளக்குங்கள்:
இறைவன் அருளால் பரிகாரம் கோரிக்கை பாவங்கள் குறைய வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படும் பூஜைகளிலே புதிய விளக்குகளை ஏற்றுவதும் புதியதாக அனைத்தையும் பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் சாதாரணமாக ஒரு ஆலயத்துக்கு செல்கிறான் ஒரு மனிதன். அங்கு ஒரு தீபம் அணையும் நிலையில் இருக்கிறது. அதனை தூண்டிவிட்டு சுடர்விட செய்யலாம். அதில் ஒன்றும் தோஷம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொண்டாக செய்யும் பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றுவது தவறில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்று வரும்பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றக்கூடாது. சாப்பிட்ட இலையில் சாப்பிடுவாய் என்றால் ஏற்றிய தீபத்தில் ஏற்றலாம்.