கற்பக விருட்சத்தை அருளிய விநாயகர்

தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில் விப்ரதன் என்று ஒரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். எந்த உயிர்களுக்கும் தீங்கிழைக்காமல் தர்மப்படி இறை நம்பிக்கையுடன் வாழ்ந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தான். நாட்டில் மழை இல்லாமல் வறட்சி வந்தது. காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் பட்டுப் போய் பாலைவனம் போல் காட்சி அளித்தது. தனது குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி வழிப்பறிக் கொள்ளையில் இறங்க முடிவு செய்தான். தர்மப்படி வாழந்து வந்த அவனை தடுத்தாட்கொள்ள இறைவன் எண்ணினார். தனது குடும்பத்தின் பசியை போக்கவே வழிப்பறியில் ஈடுபடுகிறேன் என்று இறைவனை வேண்டிக் கொண்டு முதல் நாள் வீட்டை விட்டு கிளம்பினான். இறைவன் தங்க ஆபரணங்களை அணிந்து ஒரு அந்தணன் வேடத்தில் அவன் முன்பு தோன்றினார். அவரை பின் தொடர்ந்தான் விப்ரதன். உடனே அந்தணன் ஓடினார். அவரைத் துரத்திக் கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து மறைந்தார் இறைவன்.

விநாயகர் கோயிலும் அருகில் இருந்த தெய்விகக் குளமும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அந்த இடத்தில் ஈர்க்கப்பட்ட அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும் ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது அங்கு முனிவர் ஒருவர் வந்தார். அவரை வழிமறித்து கூரிய கத்தியை காட்டி இருப்பதை கொடுங்கள் என்றான் விப்ரதன். முனிவரோ சற்றும் பதறாமல் கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்த்தார். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல் அந்தக் கருணைக்குக் கட்டுண்டு கத்தியை கீழே போட்டு அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி சரணடைந்தான். தன் கமண்டல நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர் அவனது புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்தார். என் பாபங்களைப் போக்கி அருளுங்கள் என வேண்டினான் விப்ரதன். உடனே முனிவர் அருகில் கிடந்த காய்ந்த மரக் கிளையை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

இந்த மரக்கிளையை இந்தத் தடாகத்தின் கரையில் நட்டு நான் உனக்கு மகா கணபதி காயதரீ மந்திரத்தை உபதேசிக்கிறேன். அந்த மகா கணபதி காயத்திரி மந்திரத்தை இந்த மரக்கிளை துளிர்விடும் வரை தொடர்ந்து ஜபித்து வா. இது துளிர்க்கும்போது உன் பாவம் நீங்கி புனிதனாவாய் தேவர்களைப்போல் உயர்ந்தவனாய் என அருளி மந்திரத்தை உபதேசித்தார் முனிவர். முனிவர் சொன்னபடி ஜபம் செய்ய ஆரம்பித்தான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி அவன் செய்த தவத்துக்குப் பலனாக காய்ந்த அந்த மரக்கிளை துளிர்க்கத் துவங்கியது. கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன் முன் தோன்றிய விநாயகர் விப்ரத பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால் நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால் நீ புருசுண்டி என அழைக்கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம் கற்பக விருட்சமாகி விட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும் அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும் கேள் என அருளினார். இதில் சிலிர்த்தவன் தங்களின் திருவடியைச் சரணடையும் பாக்கியம் மட்டும் போதும் என்றான். தொடர்ந்து மக்களுக்கு நன்மை செய்து ஜபத்தை செய்து கொண்டிரு. உரிய காலம் வரும் போது எம்மை அடைவாய் என்று அருளி மறைந்தார் மகா கணபதி. யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாதபடி மக்களுக்கு தேவையானதை கற்பக மரத்தின் மூலம் பெற்று அனைவருக்கும் கொடுத்து ஜபத்தை தொடர்ந்தார் புருசுண்டி.

புருசுண்டியை ஆட்கொள்ள நினைத்த விநாயகர் அவரை சோதிக்க தேவேந்திரனை அனுப்பினார். தேவேந்திரன் புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம் கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத புருசுண்டி கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் கொடுத்தார். விநாயகர் தந்ததையே மனதார தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில் அங்கு தோன்றிய மகா கணபதி புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொண்டு அவருக்குப் பிறவா நிலையை அருளினார்.

இன்று விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் நாமத்தை துதித்து வேண்டியவர்களுக்கு வேண்டியதை தந்து விநாயகரின் அருளை பெற்று அவரின் பாதம் சரணடைவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.