சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.
திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். திருநாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர் பொய் களவு காமம் கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர். இத்தகைய அருந்தவத்தினரான அப்பூதி அடிகள் அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும் எம்பெருமானின் திருவருட் கருணையையும் கேள்வியுற்று அவர்மீது எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தாம் பெற்ற செல்வங்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் அனைத்திற்கும் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். திருநாவுக்கரசரை நேரில் பார்க்காமலேயே அவர் தம் திருவடிகளை போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார். ஒருநாள் திங்களூர் வந்த திருநாவுக்கரசர் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அங்கிருந்தவருள் ஒருவர் இப்பந்தலுக்கு இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர் தான். அவர் தான் இதை அமைத்து மக்களுக்கும் அடியார்களுக்கும் நற்பணியாற்றுகிறார். அதுமட்டுமல்ல அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் இந்தப் பெயரையே சூட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார். திருநாவுக்கரசருக்கு இவற்றையெல்லாம் கேட்டு மீண்டும் அவர்களிடம் அப்பூதி அடிகள் யார்? அவர் எங்குள்ளார் என்று கேட்டார். அவர்கள் அப்பரடிகளை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு புறப்பட்டனர்.
சிவநாம சிந்தையுடன் இல்லத்தில் அமர்ந்து இருந்த அப்பூதி அடிகள் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கும் அடியவர்களின் திருக்கூட்டத்தைக் கண்டார். சிவனடியார் எவரோ தமது இல்லத்திற்கு எழுந்தருளிகின்றார் என்பதறிந்து அப்பூதி அடிகள் வாயிலுக்கு ஓடிவந்தார். இரு கரங்கூப்பி வணங்கினார். திருநாவுக்கரசரும் அவர் வணங்கும் முன் அவரை வணங்கினார். அடியார்களை வழிபடும் முறையை உணர்ந்திருந்த அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசரை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்தார்.சுவாமி தாங்கள் இந்த எளியோன் இல்லத்திற்கு எழுந்தருளியது எமது தவப்பயனே அருள் வடிவமான் அண்ணலே அடியார்க்கு யாம் ஏதாவது பணி செய்தல் வேண்டுமோ? என்று உளம் உருக வினவினார். திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்தேன். வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன் அங்கு சிறிது நேரம் இளைப்பாறினேன். பின்னர் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தாங்கள் அறத்தில் சிறந்தவர். அடியாரைப் போற்றும் திறத்தில் மேம்பட்டவர். சிறந்த பல தர்மச் செயல்களைச் செய்து வருபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். உடனே தங்களைப் பார்த்துப் போகலாம் என்று வந்தேன். தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களுக்கும் சாலைகளுக்கும் குளங்களுக்கும் தங்கள் பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து யாது என்பதனை யாம் அறிந்து கொள்ளலாமா என்று கேட்டார்.
திருநாவுக்கரசர் பெயரை மற்றொருவர் பெயர் என்று அடியார் சொன்னதைக் கேட்டு மனம் கலங்கினார் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை மொழிந்து விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும் துக்கமும் கலந்து தோன்றின. வாய் நின்றும் வார்த்தைகள் சற்று கடுமையாகவே வெளிப்பட்டன. அருமையான சைவத்திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? சமணத்தின் நாசவலையிலே நெறி இழந்த மன்னனுக்கு அறிவொளி புகட்டியவர். சைவத்தின் சன்மார்க்க நெறியை உலகோர்க்கு உணர்த்தியவர். இறைவன் திருவடியின் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற உண்மை நிலையை மெய்ப்பித்து அருளிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர். அப்பெருமானின் திருப்பெயரைத்தான் யாம் எங்கும் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே. கொந்தளி்க்கும் ஆழ்கடல் அவருடன் கல்லைக் கட்டிப் போட்ட போது கல்லே தெப்பமாக மாறி அவரை கரை ஏற்றின. கருணை வடிவானவரின் பெருமையை அறியாதவர் இந்திருவுலகில் யாருமேயிருக்க நியாயமில்லையே எம்பெருமானே இப்படியொரு சந்தேகத்தை இன்று கேட்க எம் காதுகள் என்ன பாவம் செய்தனவோ? என் தேவருக்கு இப்படியொரு நிலை தங்களைப் போன்ற அடியார்களாலேயே ஏற்படலாமா? என்றெல்லாம் பலவாறு சொல்லி வருந்தினார் அப்பூதி அடிகளார். அடிகளார் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும் அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து இறைவன் அருளிய சூலை நோய் ஆட்கொள்ள சமணத்திலிருந்து மீண்டு சைவத்திற்கு வந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய திருநாவுக்கரசன் யானே என்றார்.
திருநாவுக்கரசன் சொன்னதை கேட்டு அப்பூதியடிகள் மெய் மறந்தார். அவர் கையிரண்டும் தானாகவே அவரை வணங்கின. கண்கள் குளமாகி அருவியாகி ஆறாகி ஓடின. உரை குழறியது. மெய் சிலிர்த்தது. கண்ணற்றவன் கண் பெற்றதுபோல் பெருமகிழ்ச்சி கொண்ட அப்பூதியடிகள் அன்பின் பெருக்கால் திருநாவுக்கரசரின் மலர் அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும் அப்பூதியடிகளை வணங்கி ஆலிங்கனம் செய்து கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதியடிகளாரின் இல்லததில் கூடியிருந்த அன்பர்கள் திருநாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும் பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர். கைலாச வாசனே நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதியடிகள் சற்று முன்னால் தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும் படி திருநாவுக்கரசரிடம் கேட்டார். அப்பூதியார் உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடினார். மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும் சேர்ந்து நாவுக்கரசரின் மலரடியைப் பன்முறை வணங்கினர். திருநாவுக்கரசரை வழிபாட்டிற்கு அழைத்து வந்து பாத கமலங்களைத் தூய நீரால் கழுவிப் புத்தம் புது நறுமலரைக் கொட்டிக் குவித்து அவ்வடிகளை வணங்கினார். அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம் மீதும் தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். தானும் பருகினார். திருநாவுக்கரசர் அவ்வடிகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகையே மறந்தார். பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும் அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும் அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும் மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டார். அடிகள் திருநாவுக்கரசரிடம் ஐயனே எமது இல்லத்தில் உணவு அருந்தி எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அங்ஙனமே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் சம்மதிக்கவே அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் அகமகிழ்ந்தார்கள். அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது. அப்பூதி அடிகளாரின் மனைவியார் பெரிய திருநாவுக்கரசிடம் வாழை இலை அரிந்து வருமாறு பணித்தாள். அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு இலை எடுத்து வரத் தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழை மரத்திலிருந்து குருத்தை அரியத் தொடங்கினான். அப்பொழுது வாழை மரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது. பயங்கரமாக அலறினான். இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான். பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும் விஷம் உடலெங்கும் பரவி பாலகன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. பெற்றோர்கள் ஒருகணம் துணுக்குற்றார்கள். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடம்பைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைபதைத்துப் போயினர். அவர்களுக்கு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. துக்கத்தை அடக்கிக் கொண்டனர். மகனின் உயிரைவிடத் தொண்டரை வழிபட வேண்டியது தான் தங்களது முக்கியமான கடமை என்று மனதில் கொண்டனர். வந்திருக்கும் தொண்டருக்குத் தெரியாதவாறு மூத்த திருநாவுக்கரசரின் உடலைப் பாயால் சுற்றி ஒரு சூலையில் ஒதுக்கமாக வைத்தனர். சோகத்தை அகத்திலே தேக்கி முகத்திலே சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர். தடுமாற்றம் சற்றுமின்றி முகம் மலர அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்தார். அவர் தம் மலரடிகளைத் தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார்.
ஆசனத்தில் அமர்ந்து அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிக்கும் போது மூத்த திருநாவுக்கரசரைக் காணாது எங்கே உங்கள் மூத்த புதல்வன் என்று கேட்டார். அப்பூதி அடிகள் என்ன சொல்வது என்பது புரியாது தவித்தார். கண் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் எம்பெருமானின் திருவருட் செயலால் இனந்தெரியாத தடுமாற்றம் ஏற்பட்டது. மூத்த மகனைப் பற்றி்க் கேட்டதும் அடிகளார் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக்கண்ட திருநாவுக்கரசர் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பால் உணர்ந்து கொண்டார். மீண்டும் மூத்த மகன் எங்கே? என்று கேட்டார். அப்பூதி அடிகளால் உண்மையை மறைக்க முடியவில்லை. நடந்த எல்லா விவரத்தையும் விளக்கமாகக் கூறினார். செய்தியை கேட்டு மனம் வருந்திய அப்பரடிகள் என்ன காரியம் செய்தீர்கள் என்று அப்பூதி அடிகளை கடிந்து கொண்டே மூத்த திருநாவுக்கரசின பிணத்தைப் பார்க்க உள்ளே சென்றார். பார்த்தார் திடுக்கிட்டார் மனம் வெதும்பினார். உடனே இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வாருங்கள் என்று கூறியவாறு கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்டனர். திங்களூர் பெருமானை திருநாவுக்கரசர் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை திருநாவுக்கரசர் மெய்யுருகி பாடினார். திருநாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது. மூத்த திருநாவுக்கரசு துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார். அவரது பக்திக்கும் அருளுக்கும் அன்பிற்கும் தலை வணங்கி நின்றனர். ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் திருநாவுக்கரசரை கொண்டாடி போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே அமர்ந்து திருநாவுக்கரசரோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் பொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.
குருபூஜை: அப்பூதியடிகள் நாயனாரின் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருசிற்றம்பலம்,
மிக மிக அருமை. பதிவுகள் பல தொடரட்டும்.
நன்றிகள்.