திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூருக்கு அருகில் அமைந்துள்ள ஓரூர் திருத்தலையூர். வேதியர் மரபில் தோன்றிய அருளாளர் உருத்திர பசுபதி. சிவபெருமனின் மீது அளவில்லாத அன்பு கொண்டிருந்தார். வேதத்தின் கண் மலர் என போற்றப்படும் உருத்திர மந்திரத்தை தினந்தோறும் ஓத வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். தினந்தோறும் ஊரில் உள்ள திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் காலையில் தொடங்கி மாலை வரையிலும் கழுத்தளவு தண்ணீரில் நின்று கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கூப்பி உருத்திர மந்திரத்தை நியதிப்படி சிவனை எண்ணியபடியே செபித்து வந்தார். பின்பு மாலைப் பொழுதிற்கு மேல் உருத்திர மந்திரத்தை பாராயணம் செய்து வந்தார். பல காலம் உருத்திர மந்திரத்தை மனதை ஒருமைப்படுத்தி செபித்து வந்த நிலையில் வேத நாயகனான சிவபெருமான் மிகவும் மகிழ்ந்து சிவபதம் அளித்தருளினார்.
குருபூஜை: நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.