தேவேந்திரன் ஆட்சி செய்யும் தேவலோகத்தில் இருக்கும் சிறப்புமிக்க மலர்களில் ஒன்று பாரிஜாதம். இதனை பவளமல்லி என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தில் இருந்து கிடைத்த ஒரு மலரை நாரதர் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்கு வந்தார். அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரிடம் தான் கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கொடுத்தார் நாரதர். அதனை பெற்றுக் கொண்ட கிருஷ்ணர் அந்த மலரை தன்னுடைய மனைவியரில் ஒருவரான சத்தியபாமா கேட்டுக் கொண்டதினால் அவரிடம் அளித்தார். இதைக் கண்ட நாரதர் உடனடியாக அரண்மனையின் மற்றொரு பாகத்தில் இருந்த ருக்மணியிடம் சென்று சத்தியபாமாவிற்கு தேவலோக மலரான பாரிஜாதத்தை கிருஷ்ணர் கொடுத்த விவரத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட ருக்மணி அரண்மனை காவலர்கள் மூலமாக தன்னை வந்து சந்திக்கும்படி கிருஷ்ணருக்கு தகவல் அனுப்பினார். ருக்மணி இருக்கும் இடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் ருக்மணி.
நாரதர் கொண்டு வந்த பாரிஜாத மலரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி வருந்தினார். கிருஷ்ணர். அவர் எவ்வளவு சமாதானம் செய்தும் ருக்மணி கோபம் குறைய வில்லை. சத்தியபாமாவிற்கு பாரிஜாத மலரைக் கொடுத்தீர்கள். எனக்கு அந்த மரமே வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து பாரிஜாத மரத்தை கிருஷ்ணர் இந்திரனிடம் கேட்டார். ஆனால் இந்திரன் தரவில்லை. இதனால் போர் புரிந்து பாரிஜாத மரத்தை துவாரகைக்கு கொண்டு வந்தார் கிருஷ்ணர். பின்னர் அந்த மரத்தை ருக்மணியின் இல்லத்தின் நட்டுவைத்தார். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் அருகில் இருந்த சத்தியபாமாவின் வீட்டிற்குள்தான் உதிர்ந்து விழுந்தன. இதனைக் கண்ட ருக்மணி கிருஷ்ணரிடம் பூ ஏன் இங்கு விழவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் நீ கேட்டது பாரிஜாத மரத்தைத்தான். பூக்களை அல்ல. சத்தியபாமா கேட்டது பூ மட்டும் தான். பூ கேட்ட அவளுக்கு பூவும் மரம் கேட்ட உனக்கு மரமும் கிடைத்தது என்றார்.
பாரிஜாத மரத்தின் கீழ் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு சிற்பம் தாய்லாந்தில் உள்ள சத்திய சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.