ராமரும் லட்சுமணனும் ரிச்யமுக மலைக்கு வந்து சுக்ரீவனை தேடினார்கள். இதனை கண்ட சுக்ரீவனின் ஒற்றர்கள் வில்லும் அம்பும் வைத்துக்கொண்டு இருவர் வனத்தில் யாரையோ தேடுகின்றார்கள் என்று சுக்ரீவனிடம் செய்தி சொன்னார்கள். இதனை கேட்ட சுக்ரீவனுக்கும் அவனது படைகளுக்கும் பயம் பிடித்துக் கொண்டது. ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்ட நாம் வாலியால் கண்டு பிடிக்க முடியாத மலைப்பிரதேசத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இங்கு நம்மை தேடி வாலி மாறு வேடத்தில் வந்திருப்பானோ அல்லது வாலியின் நண்பர்கள் நம்மை அழிக்க இங்கு வந்திருக்கின்றார்களோ என்று சுக்ரீவன் பயந்தான். அவனது படைகள் பயந்து அங்கும் இங்கும் ஓடி ஒளிய இடம் தேடினார்கள். அனுமன் சுக்ரீவனுடைய முதல் மந்திரி அவர் சுக்ரீவனுக்கு தைரியம் சொன்னார். வந்திருக்கும் இருவரை பற்றிய செய்தியை கேட்டால் அவர்கள் வாலியோ அவனது நண்பர்களோ இல்லை என்று எண்ணுகிறேன். அதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை. நான் சென்று அவர்களை பற்றிய தகவல்களை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார். அனுமனிடமிருந்து வாலி வரவில்லை என்ற வார்த்தையை கேட்ட சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். மிகவும் சாமர்தியமாக அவர்களை பற்றிய உண்மையை அறிந்து கொண்டு வா. அவர்கள் அங்கும் இங்கும் அழைந்து தேடுவதைப் பார்த்தால் சிறிது பயமாக இருக்கிறது. ஜாக்கிரதையாகப சென்று வா என்று அனுப்பி வைத்தார்.
ராமர் இருக்கும் இடத்திற்கு அனுமன் ஒரு பிராமண வடிவமெடுத்து சென்றார். தூரத்தில் ராமரைக் கண்டதும் அனுமனின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகியது. ராமரின் அருகில் வந்து அவரின் முகத்தைப் பார்த்ததும் அனுமன் பரவச நிலையை அடைந்தான். ராமரிடம் உள்ளது உள்ளபடி உண்மையை பேச ஆரம்பித்தார். இக்காட்டில் சுக்ரீவன் என்கின்ற வனராஜா தன் அண்ணனால் துரத்தப்பட்டு மறைந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மந்திரி நான் எனது பெயர் அனுமன் நான் வாயுவின் புத்திரன். எனது அரசரின் உத்தரவின் படி தங்களை பற்றி தெரிந்து கொள்ள மாறுவேடமிட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் இந்த வனத்திற்கு தவம் செய்ய வந்த தவஸ்விகள் போல் மரஉரி தரித்து வேடமணிந்து வந்திருக்கின்றீர்கள். மனதைக் கவரும் ரூபம் கொண்ட நீங்கள் தேவ ரிஷிகளைப் போல் கம்பீரமாக உள்ளீர்கள். நீங்கள் இந்த வனத்திற்கு வந்ததும் முன்பை விட இந்த வனம் மிகவும் அழகாக இருக்கின்றது. பெரிய ராஜ்யத்தை ஆட்சி செய்ய பிறத்தவர் போலவே இருக்கின்றீர்கள். உங்களுடைய பராக்கிரமத்தை பார்த்து இந்த காட்டில் இருக்கும் பல ஜீவன்கள் பயப்படுகின்றது. நீங்கள் யார் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று அனுமன் இருவரிடமும் கேட்டு தன் சுயஉருவை எடுத்துக்கொண்டார்.
ராமர் அனுமனின் பேச்சை ரசித்தார். அனுமனின் பணிவான வார்த்தைகளை கேட்ட ராமர் லட்சுமணனிடம் இவர் பேசிய பேச்சின் அழகை பார்த்தாயா எவ்வளவு சரியான படி வார்த்தையை உபயோகித்து இலக்கணப்படி பேசுகிறார். வேதங்களை முறையாக கற்றவர் போல் பேசுகிறார். இவரின் பேச்சால் எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. தூதர் என்பவர் இவரைப்போல் இருக்க வேண்டும். இவரை தூதராக கொண்ட சுக்ரீவனுக்கு எந்த காலத்திலும் குறை இருக்காது. நாம் சுக்ரீவனை தேடி வந்திருக்கின்றோம் அவரே நம்மை தேடி தூதரை அனுப்பியிருக்கிறார். இவரிடம் நாம் யார் என்பதையும் சுக்ரீவனிடம் நட்பு தேடி வந்திருக்கின்றோம் என்பதையும் சொல்லி அவர் இருக்குமிடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல அனுமதி பெற்றுக்கொள். நாம் விரைவில் அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.