ராமர் தாரையிடம் பேச ஆரம்பித்தார். இறப்பு பற்றி இது போன்ற தவறான எண்ணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். பிரம்மா தான் இவ்வுலகை படைத்து இங்குள்ள அனைத்து சுக துக்கங்களையும் கொடுக்கிறார். மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பிரம்மாவின் விதியை மீறிச் செயல்படுவதில்லை. ஏனென்றால் எல்லோரும் அவர் வசத்தில் உள்ளார்கள். இனி வரும் காலத்தில் உனது மகன் இளவரசனாக பட்டம் சூட்டப்படுவான். நீ முன்பு இருந்தது போல் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பாய். உனது விதி பிரம்மாவினால் இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்கிறது. மகாவீரனுடைய மனைவிகள் இவ்வாறு வேதனைப் படக்கூடாது வருந்தாதீர்கள் என்று தாரையிடம் ராமர் சொல்லி முடித்தார். நடப்பவற்றை முன்பே அறியும் திறன் கொண்ட தாரைக்கு வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்து கொண்டு ராமரை வணங்கினாள். ராமரின் பேச்சு தாரைக்கு ஆறுதலை தந்தது. தனது அழுகையை விட்டு மௌனமானாள். வாலியின் மார்பில் இருந்த அம்பினை மந்திரி நீலன் பிடுங்கி எடுத்தான். அம்பு வெளியே வந்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அவன் உயிரும் அவனை விட்டு விடைபெற்றது. தாரை உயிரற்ற அவன் உடல் மீது விழுந்து புரண்டு அழுதாள். சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் என்னைக் கொல்லாமல் ஓடிப்போ உயிர் பிழைத்துக்கொள் என்று என்னை என் அண்ணன் துரத்தினான். சாகும் தருவாயில் கூட ராஜ்யத்தை எடுத்துக்கொள் என்று எனக்கு தந்தானே. அவனை சதி செய்து கொன்று விட்டேன். என்னை போன்ற பாதகன் உலகத்தில் யாரும் இல்லை. நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லையே என்று தனது பெரும் குற்றத்தை எண்ணி அழுதான்.
ராமர் பேச ஆரம்பித்தார். சோகத்தில் அனைவரும் மூழ்கி இருப்பதால் இறந்தவருக்கு எந்த நன்மையும் ஏற்படாது. காலம் கடந்து செய்யும் எந்த செயல்களும் பயன் தராது. வாலிக்கு உடனடியாக செய்ய வேண்டிய கர்மங்களை செய்யுங்கள் என்றார். இதனைக் கேட்ட லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் அங்கதனுடன் கலந்தாலோசித்து விரைவில் வாலிக்கான ஈமச் சடங்குகளை செய்து முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அனைவரும் தங்களுக்குள் உள்ள சோகத்தை தள்ளி வைத்தனர். அரசனுக்குரிய மரியாதையுடன் வாலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ராமர் இருக்குமிடம் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். அனுமன் ராமரிடன் பேச ஆரம்பித்தார். தங்கள் பேருதவியால் சுக்ரீவன் வானர பேரரசை பெற்றுள்ளார். இப்போது தாங்கள் கிஷ்கிந்தைக்கு வந்து சுக்ரீவன் அரசனாகவும் அங்கதன் இளவரசனாகவும் முடிசூட்ட வேண்டும். பின்பு எங்கள் அரசன் தங்களை கௌரவித்து தங்களுக்கு கொடுத்த வாக்குப்படி சீதையை தேடுவதற்கான உத்தரவை வானரங்களுக்கு பிறப்பிப்பார் என்று சொல்லி முடித்தார் அனுமன். ராமர் அனுமனை நோக்கி தந்தையின் சத்தியத்தை நான் காப்பாற்ற வேண்டும். அதனால் பதினான்கு ஆண்டு காலம் எந்த கிராமம் மற்றும் நகரத்திற்குள்ளும் வர மாட்டேன். நீங்கள் மட்டும் சென்று உங்கள் மரபுப்படி சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள் என்றார். சுரீவனுக்கும் அங்கதனுக்கும் வானரங்களின் மரபுப்படி பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமரிடம் சென்ற சுக்ரீவன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். அப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. மழையால் வெள்ளம் காட்டிற்குள் பெருக்கெடுத்து ஓடியது. செல்லும் பாதைகள் எல்லாம் தடைபட்டுக் கிடந்தது. இதனால் சீதையே தேடும் பணி மேலும் சிறிது நாட்கள் தள்ளிச் சென்றது. ராமர் இதனால் சிறிது வருத்தப்பட்டார். மழைக் காலத்தில் இப்போது சீதையை தேட சென்றால் அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே மழைக்காலம் முடிந்ததும் தேட ஆரம்பிக்கலாம். அதுவரை நாங்கள் காட்டிலேயே இருக்கின்றோம் என்று சொல்லி சுக்ரீவனை ராமர் அனுப்பினார்.