ராமரும் லட்சுமணனும் மழைக் காலத்தில் பாதுகாப்பாக குகைக்குள்ளே இருந்தார்கள். சீதையை தேடுவதற்கான காலம் விரைவில் வரும் என்று லட்சுமணன் வருத்தத்துடன் இருந்த ராமருக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான். நான்கு மாத மழைக்காலம் முடிவுக்கு வந்தது. பறவைகளும் மிருகங்களும் வெளியில் திரிந்து விளையாட ஆரம்பித்து விட்டன. கிஷ்கிந்தையில் வாலி இறந்த துக்கத்தை மறந்து சுக்ரீவன் தாரை உட்பட வானரங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ராமருடைய காரியத்தை அனுமன் மட்டும் மறக்காமல் மிகவும் கவலைப்பட்டான். ராமருக்கு கொடுத்த வாக்கை பற்றி சுக்ரீவனிடம் மெதுவாக பேசுவதற்கு தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜ காரியங்கள் அனைத்தையும் மந்திரிகளுடன் ஒப்படைத்து விட்டு போகத்தில் மூழ்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அனுமன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
ராமர் உங்களுடைய எதிரியை அழித்ததை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய அபாயத்தை கருதாமல் தங்களுக்கு வாக்களித்தபடி வாலியை உடனடியாக கொன்று விட்டார் ராமர். இதன் காரணமாக முன்னோர்கள் அனுபவித்த ராஜ்யத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள். பேரும் புகழும் பெற்று விட்டீர்கள். உங்களுடைய அதிகாரம் நிரந்தரமாகி விட்டது. இப்போது ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அவருடைய நட்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். இப்போது அதைச் செய்தால் உங்கள் புகழ் மேலும் பெருகும். ராஜ்யமும் பலப்படும். ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செய்து முடிப்பது சிறப்பானதாகும். கால தாமதம் செய்யாமலாவது செய்து முடிக்க வேண்டும். கால தாமதத்துடன் செய்யும் காரியமானது பயன் தராது. ராமர் நமக்கு செய்த உதவியை நாம் நினைத்து அவருக்கு செய்ய வேண்டியதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மழை காலம் முடிந்து விட்டது. இனி தாமதம் சொல்வதற்கு காரணமில்லை. சீதையை தேட வேண்டிய பெரும் காரியத்தை உடனே துவக்க வேண்டும். இவ்விசயத்தில் ராமர் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறார். அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அவரது கோபத்தை நம்மால் தாங்க இயலாது. இனி சிறிதும் கால தாமதம் வேண்டாம் என்று நீதி முறைகளை சுக்ரீவனுக்கு சொல்லி முடித்தார் அனுமன். அதற்கு சுக்ரீவன் பூமி முழுவதும் சுற்றி தேடிப் பார்த்து சீதையை கண்டுபிடிக்க வேண்டிய திறமை வாய்ந்த ஒற்றர் வானரங்களை உடனே இங்கு வந்து சேர வேண்டும் என்றும் வந்து சேராதவர்களுக்கு விசாரணை இன்றி தண்டனை வழங்கப்படும் இது அரசனுடைய உத்தரவு இவ்வாறு உத்தரவிடுவாய் என்று அனுமனிடம் சொல்லி விட்டு சுக்ரீவன் தன் அந்தப்புரத்திற்கு சென்று விட்டான்.
ராமரும் லட்சுமணனும் மழைக்காலம் முடிந்து விட்டது இனி சுக்ரீவன் விரைந்து வருவான் என்று காத்திருந்தார்கள். சுக்ரீவன் வரவில்லை. ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். இந்த மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் சென்று விட்டது. இந்த நான்கு மாதமும் எனக்கு நான்கு யுகம் போல் இருந்தது. இந்த உலகம் சௌந்தரியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீதை எங்கோ தவித்துக் கொண்டிருக்கிறாள் நான் இங்கே துக்கத்தில் வானர அரசனான சுக்ரீவன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றேன். கிஷ்கிந்தைக்கு அரசனானதும் சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்து அரச சுக போகங்களில் மூழ்கி கிடக்கின்றான். உடனடியாக கிஷ்கிந்தை சென்று சுக்கிரனை சந்தித்து நான் சொல்லும் செய்தியைச் சொல்லி விடு என்று சொல்ல ஆரம்பித்தார்.