ஹிமவான் சொன்ன வார்த்தைகளை கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களை தள்ளியும் அரண்மனை கோட்டையை இடித்தும் வானரத்தின் அரசனே வாலியே வெளியே வா என்னுடன் யுத்தம் செய் என்று வாலியை சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடன் உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாக பேசியதை கேட்ட துந்துபி கோபமாக உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டு புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் என்றான் துந்துபி.
வாலி துந்துபியின் வார்த்தைகளை கேட்டு சிரிந்தான். நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா என்று அசுரனை பிடித்து தூக்கி தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கனத்தில் அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கனங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்த துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனை கண்ட முனிவர் இதனை செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியை சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான் என்று இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
வாலி அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் கடல்களுக்கு தாவி சென்று சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். ஒரு திசை கடலில் இருந்து அடுத்த திசை கடலுக்கு ஒரே தாவலில் சென்று விடுவான். தன்னுடைய உடல் பலத்தை காட்டும் வகையில் மலைப் பாறைகளை பந்து போல் மேலே எறிந்து விளையாடுவான். பெரிய மரங்களை புல்லை பிடுங்குவது போல் பிடுங்கி விளையாடுவான். இங்கிருக்கும் ஆச்சா மரங்களை பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. வாலி இந்த மரத்தினை ஒரே கையில் பிய்த்து விடுவான். மரத்தை லேசாக அசைத்தால் மரத்திலுல்ல இலைகள் எல்லாம் அதிர்ந்து விழுந்து விடும் என்று வாலியின் பராக்கிரமத்தை சொல்லி முடித்தான் சுக்ரீவன்.
லட்சுமணனுக்கு சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து மிகவும் பயப்படுகின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சந்தேகம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டான். சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவனை நினைக்கும் போதேல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.