ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை மூதேவி அலட்சுமி, சேட்டை, காக்கைக் கொடியோள் பழையோள் கரியசேட்டை கேட்டை மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. இவள் 14 பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள். சைவ வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. தவ்வையின் காக்கையை தனது கொடியாக கொண்டிருக்கிறாள். வாகனம் கழுதை. அவளின் கையில் துடைப்பம் உள்ளது. தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பல காலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை திகழ்கிறாள்.
பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்
கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே
திருமால் இருக்க சேட்டை என்று அழைக்கபடுகின்ற தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே என்று இகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் இருந்து தவ்வையிடமே அக்காலத்தில் செல்வத்தை வேண்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள் எதற்கும் உதவாதவள் சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருள்பட ஒரு தவறான கருத்து இருக்கிறது. பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவு சார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து தவ்வையை அமங்கலத்தின் அடையாளமாகவும் இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற தவறான எண்ணத்தில் உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்து விட்டனர். இப்படி அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாக இருந்திருக்கிறாள். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டிருக்கிறாள்.
இயற்கையிலிருந்து நமது வழிபாடு தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு கந்தழி என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்த களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள் தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரி தெய்வமாக மழையையும் நீர் மகளிராக நதிகளையும் தாய் தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது மரபு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. தவ்வை என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். நம் முது தந்தையரை எப்படி மூதாதையர் என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்த தேவிக்கு மூதேவி என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான அக்கை என்கிற வார்த்தை எப்படி தமக்கை ஆனதோ அதேபோல் அவ்வை என்ற வார்த்தை தவ்வை ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு. நெற்கதிர்களின் அடையாளம் திருமகள். நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரத்தின் அடையாளமாக உரமாக திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.
தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல் தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன் சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கியதாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. சேட்டை மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர் தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 ஆம் ஆண்டு பழநியில் கண்டு பிடிக்கப்பட்டது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம் சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும் பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. அழுக்கு நாற்றம் துன்பம் புலம்பல் அடிக்கடி கொட்டாவி விடுதல் தலைவிரித்து போடுதல் எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் அலங்கோலமாக இருத்தல் எதிர்மறையான எண்ணங்கள் தீராத மனக்கஷ்டம் இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். தவ்வை என்னும் ஜேஷ்டாதேவியை வழிபட்டால் இவை அனைத்தும் நீங்கி விடும்.
வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல் வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள். தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும் கோயில்களும் உள்ளன. தவ்வைக்கு வாராணாசியிலும் அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது. மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்ததேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர். திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதையாக அருள்பாலிக்கிறார்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும் வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில் கடலூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் கோயிலுக்கு வெளியே பிள்ளையார் நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.
வந்தவாசி அருகே பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஜ்யேஷ்டா தேவிக்கு தனி சன்னதி உள்ளது
உபயோகமான ஆன்மீக கருத்துக்கள்
AR.Suriamoorthy