தியானத் தோட்டத்தில் வினாயகர்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

ஸ்ரீசக்ராத்தில் அனுமான்

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள யந்த்ரோதரகா அனுமான் கோவிலில் கிரானைட் பாறையில் கட்டப்பட்ட ஸ்ரீசக்ராவின் மையத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனுமான்.

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.

அவதாரத்ரய அனுமான்

மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார். மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய அனுமான். அனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.

நரசிம்ம அவதாரம்

விஷ்ணுவின் நான்காம் அவதாரமான சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் சிற்பக்காட்சி. இடம் பக்தபூர்தர்பார் சதுக்கம் நேபாளம்.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போது ஆபரணங்கள் தலையில் கீரிடத்துடன் உடன் வயிற்றில் சிறிது தொந்தியுடன் முதல் சிற்பத்தில் இருக்கிறார். இறைவனின் திருவடி தீட்சை பெற்று சிவனடியார் ஆன பின்பு ருத்திராட்ச மாலையுடன் தொந்தி இல்லாமல் கைகள் கட்டிக் கொண்டு பணிவுடன் 2 வது சிற்பத்தில் இருக்கிறார். இடம் ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோவில் திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டம்.