விஷ்ணுவின் வராஹ அவதார சிற்பம் விதிஷாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 11 மற்றும் 12 நூற்றாண்டு காலச் சிற்பம். இப்போது குவாலியரின் குஜாரி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தோமர் ராஜ்புத் ஆட்சியாளர் மான் சிங் தோமர் தனது மனைவி மிருக்னயனிக்காகக் கட்டப்பட்டது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
பெருமாள்
வைகுந்த நாராயணன்
உத்குடி ஆசனத்தில் அமர்ந்து சேவை செய்து அருள்பாலிக்கும் வைகுந்தநாராயணன். இடம் நரசிம்மர் குடைவரை கோவில் நாமக்கல்.
வீர சுதர்சன ஆஞ்சநேயர்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது ஆதனூர். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசத்தில் 11 ஆவதாக இருக்கும் ஆண்டளக்கும் ஐயன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் 20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் சனனதி உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. கருவறையில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயரத்தில் கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி கொடுகிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சுதர்சன சக்கரம் அமைந்திருக்கின்றது. அவரது தலையின் மேல் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் ரக்கொடி எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அனுமன்
மகாராஷ்டிரா விசாம்பூர் கோட்டையில் அமைந்துள்ள ஒரு பாறையில் செதுக்கப்பட்ட அனுமன்.
வராஹ மூர்த்தி
ஸ்ரீ வராஹ மூர்த்தி நான்கு வேதங்களை மூக்கில் தாங்கி ஸ்ரீ பூதேவியை இரண்டு கைகளால் தாங்கி நிற்கிறார். இடம் நரசிம்மர் கோயில் நாமக்கல்.
நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண காசியப முனிவர் நாரதர் வருணன் சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டார்கள். இதற்காக அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடிப்பின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். திருமால் இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இத்தலம் சுமார் 1100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கும் என்றும் பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபமாக மாறி விட்டார் என்றும் வரலாற்று செய்தி இருக்கிறது. இடம் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ள கீழப்பாவூர் உள்ளது.
கூர்ம அவதாரம்
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி என்னும் ஊரிலுள்ள ராணிஜி கி பௌரி கிணற்றில் இறங்குவதற்கு மேலே உள்ள சுவரில் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதார சிற்பம் உள்ளது.
கஜேந்திர மோட்சம்
கஜேந்திர மோட்சத்தை விளக்கும் சிற்பம். எந்த நேரத்திலும் விஷ்ணு பகவானையும் தாயார் லட்சுமி தேவியையும் தாங்கி பறப்பதற்கு தயாராக இருக்கும் பெரிய திருவடி கருடாழ்வார். அவருக்கு கீழே கஜேந்திரனையும் (யானை) அவருக்கும் கீழே முதலையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். இந்த அரிய சிற்பம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தின் பெண்ணா நதிக்கரையில் உள்ள தக்குதேவாலயம் என்னும் விஷ்ணு கோவிலில் அமைந்துள்ளது.
பாலகிருஷ்ணர்
விஸ்வகர்மாவால் குழந்தை கிருஷ்ணரின் திருவுரும் செய்யப்பட்டு துவாரகையில் இந்த சிலையை மனைவி ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து. மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த பாலகிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் உள்ளது. இவரை சுவரில் உள்ள ஜன்னல் வழியாகத்தான் பார்க்க வேண்டும். இடம் கர்நாடகா உடுப்பி.
மூன்று அடி மண் கேட்ட வாமன அவதாரம்
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆட்சி செய்து வந்தார். தானம் தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்தார் திருமால். மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி மகாராஜா. அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் உள்ள இடம் ஜகன்னாதர் கோவில். கிதிர்பூர் கொல்கத்தா மாநிலம்.