சுலோகம் -40

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #40

ஒரு குலம் அழியும் போது அந்த குலத்தின் பழமையான நெறிமுறைகளும் அழிந்து விடுகின்றது. அந்த குலத்தின் நெறிகள் அழியும் போது அந்த குலத்தை அதர்மம் சூழ்ந்து கொள்கிறது.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலத்தின் நெறிமுறைகள் என்றால் என்ன?

ஒரு குலத்தில் தலை முறை தலைமுறையாக தர்மத்தின்படி பல நல்ல ஒழுக்க முறைகளை பாரம்பரியமாக கட்டுப் பாடுகளுடன் கடைபிடித்து வருவார்கள். இந்தக் கட்டுப்பாடுகளினால் அந்த குலம் நல்ல பெயருடன் தலைமுறை தலைமுறையாக பலகாலம் தொடந்து வாழ்ந்து வரும்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: குலத்தின் நெறிகள் அழியும் போது அதர்மம் எப்படி அந்த குலத்தை சூழ்ந்து கொள்கிறது?

ஒரு குலம் அதர்மத்தில் இருந்து தப்புவதற்கான காரணங்கள் அந்த குலத்தில் உள்ளவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபடுவது மற்றும் ஆகமங்களையும் நியமங்களையும் சரியாக கடைபிடித்தல் ஆகியவை ஆகும். இவற்றை அறிந்த பெரியோர்கள் யுத்தத்தில் அழியும் போது அவர்களுக்குப் பின் வரும் வாரிசுகளின் சிறுவயது முதலே குலத்தின் நெறிமுறைகளையும் தர்மத்தையும் கற்றுக் கொடுக்க யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. வாரிசுகள் தர்மத்துக்காக கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் தெரியாததால் அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். இதில் யாரேனும் தவறு செய்தால் அதன் பலனாக அவர்களை அதர்மம் சூழ்ந்து கொள்வது மட்டுமின்றி அவர்களது மரபாகத் தொடர்ந்து வரும் தலைமுறையையும் அதர்மம் சூழ்ந்து கொள்ளும்.

சுலோகம் -39

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #39

ஜனார்த்தனா குலநாசத்தினால் ஏற்படும் குற்றத்தை நன்கு உணர்கின்ற நாம் இந்த பாவச்செயலிலிருந்து விலகுவது பற்றி ஏன் ஆலோசிக்காமல் இருக்க வேண்டும்? (ஆலோசிப்போம்)

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை ஜனார்த்தனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

சுலோகம் – 36 இல் ஜனார்த்தனன் என்ற பெயருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டாலும் இந்த சுலோகத்தில் வேறு வகையான அர்த்தத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரை ஜனார்த்தனன் என்று அழைக்கிறான். ஜனார்த்தனன் என்ற சொல்லுக்கு மக்களின் மனதில் மாயையாக இருப்பவன் என்ற அர்த்தமும் உண்டு. எதிரணியில் இருப்பவர்கள் தான் மாயையில் சிக்கி ராஜ்யத்திற்கும் சுக போகத்திற்கும் ஆசைப்பட்டு இதனால் வரும் பாவங்களை பற்றி சிந்திக்காமல் யுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். நான் மாயையில் சிக்காமல் வரும் பாவங்களைப் பற்றி அறிந்து தெளிவாக இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் சுட்டிக்காட்ட ஜனார்த்தனா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கௌரவ சகோதரர்கள் அரச பதவி மீது உள்ள பேராசையினால் அறிவிழந்த நிலையில் குலநாசத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உணராமல் இந்த யுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். நமக்கு தான் பதவி ஆசை இல்லையே மேலும் நடக்கப்போகும் பாதிப்புகளும் வரப்போகும் பாவங்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம் ஆகையால் நாம் யுத்தம் செய்யாமல் இருப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறிகின்றான்.

சுலோகம் -37 # 38

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #37

ஆகவே மாதவா உறவினர்களான திருதராஷ்டிர கூட்டத்தாரை கொல்வது நமக்குத் தகாது. நம் குடும்பத்தினரைக் கொன்று நாம் எப்படி சுகமுள்ளவர்களாக இருப்போம்?

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மாதவா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கிருஷ்ணர் 1000 ஆண்டுகள் தவம் செய்ததினால் மாதவன் என்ற பெயரைப் பெற்றார். இந்த யுத்தம் வேண்டாம். இந்த யுத்தத்தினால் கிடைக்கும் ராஜ்யம் செல்வம் சுகபோகங்கள் அனைத்தும் வேண்டாம். அனைத்தையும் உதறி விட்டு தபஸ்வி போல் கானகத்திற்கு சென்று தவம் செய்யப் போகிறேன் என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் தெரிவிக்க மாதவா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #38

அரச பதவி மீது உள்ள பேராசையினால் அறிவிழந்த இவர்களின் மனம் பகுத்தறியும் தன்மையை இழந்து விட்டது. இதனால் தமது குலம் அழிந்து விடும் என்பதையோ நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கெடுதல் செய்வதினால் உண்டாகும் பாவத்தையோ இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

இந்த சுலோகம் சொல்லும் கருத்து என்ன?

பேராசை வந்தால் மனம் அறிவிழந்து பகுத்தறியும் தன்மையையும் இழந்து விடும்.

பகவத் கீதை – சமஸ்கிருத ஒலி இசை

பகவத் கீதையின் சமஸ்கிருத ஸ்லோகங்களை அழகாகக் பாடி இசை அமைத்து வழங்கியுள்ள திரு. வித்யபூஷன் ஐயா அவர்களுக்கு நன்றி கூறி சுலோகங்களின் தொகுப்பை இங்கே கொடுத்துள்ளோம்.

தொகுப்பு: பகவத் கீதை – சமஸ்கிருத ஒலி இசை
பாடியவர்: திரு. வித்யபூஷன்
இசைத்தவர்: திரு. வித்யபூஷன்
வெளியீடு: எடர்னல் ரிலீஜியன்

பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் இருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரை அனைத்து சுலோகங்களும்:

பகவத் கீதை சமஸ்கிருத சுலோகங்கள் அனைத்தும் தனித்தனியாக:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 1:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 2:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 3:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 4:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 5:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 6:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 7:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 8:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 9:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 10:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 11:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 12:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 13:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 14:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 15:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 16:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 17:

பகவத் கீதை சமஸ்கிருத ஒலி இசை – அத்தியாயம் 18:

சுலோகம் -36

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #36

ஜனார்த்தனா திருதராஷ்டிர குமாரர்களை கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது? இந்தப் படுபாவிகளை கொன்றால் நமக்கு பாவம்தான் வந்தடையும்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரை ஜனார்த்தனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவித்ததினால் கிருஷ்ணர் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறார். யுத்தத்தில் கிருஷ்ணர் அர்ஜூனனுடன் இருக்கிறார். தீயவற்றை செய்யும் திருதராஷ்டிர குமாரர்களை கொன்றால் பாவம் ஏற்படும் என்பதை சொல்லும் அர்ஜூனன் யுத்தத்தில் நீ அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாவமே வந்து சேரும் இதில் நமக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது ஆகையால் எனக்கு யுத்தம் செய்வதில் விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் தெரிவிக்க ஜனார்த்தனா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: திருதராஷ்டிரரை தனது தந்தைக்கு சமமானவர் என்றும் பெரியப்பா என்றும் மரியாதையுடன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள அர்ஜூனன் இந்த சுலோகத்தில் திருதராஷ்டிரர் என்று ஏன் பெயர் சொல்லி அழைக்கிறான்?

அரசராக இருக்கும் திருதராஷ்டிரர் துரியோதனனுக்கு தந்தை என்ற நிலையிலிருந்தோ அல்லது நாட்டின் அரசர் என்ற நிலையிலிருந்தோ ஆரம்பத்திலிருந்தே அவனை கண்டித்து அவனை தவறு செய்ய விடாமல் தடுத்திருந்தால் இந்த யுத்தம் வந்திருக்காது. திருதராஷ்டிர குமாரர்களை படுபாவிகள் என்று குறிப்பிடும் அர்ஜூனன் அவர்கள் செய்யும் பாவத்திற்கு முதன்மை காரணமாக திருதராஷ்டிரரை எண்ணுகிறான். ஆகையால் தந்தைக்கு சமமானவரான திருதராஷ்டிரரை பெயர் சொல்லி அழைக்கிறான்.

சுலோகம் -35

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #35

மதுசூதனா இவர்கள் என்னைக் கொல்வதற்கு விருப்பம் கொண்டாலும் எனக்கு இவர்களை கொல்ல விருப்பம் இல்லை. மூன்று உலகங்களை ஆளும் பதவியை கொடுத்தாலும் இவர்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இப்படி இருக்கும் போது இந்த ராஜ்யத்திற்காகவா இவர்களை நான் கொல்வேன்?

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மதுசூதனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர் பெற்றார். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு சொல்லப்பட்ட விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 73 வதாக மதுசூதனன் பெயர் வரும். தவறு செய்த அரக்கனை அழித்து மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கிருஷ்ணரிடம் தவறு செய்து கொண்டிருக்கும் கௌரவர்களை கொல்ல நான் விரும்பவில்லை என்று சொல்வதற்காக மதுசூததன் என்ற வார்த்தையை அர்ஜூனன் பயன்படுத்தினான்.

சுலோகம் -33 # 34

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #33

நாம் யாருக்காக ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களையும் விரும்பினோமோ அவர்களே செல்வத்தையும் உயிர் மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #34

குருமார்கள் பெரியப்பா சித்தப்பாக்கள் மகன்கள் அவ்விதமே பாட்டனார்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் பேரன்கள் மைத்துனர்கள் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சுலோகத்திலும் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

ராஜ்யம் போகம் இன்பம் செல்வம் அனைத்திலும் நிலையான ஆனந்தம் கிடையாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்காகத்தான் அனைத்தையும் விரும்பி இருந்தான். ஆனால் அவர்களே போரில் தங்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் ராஜ்யம் போகம் இன்பம் இதெல்லாம் யாருக்காக? ஆகவே யுத்தம் செய்வது சரியில்லை என்ற கருத்தில் அர்ஜூனன் அவ்வாறு கூறினான். சுலோகம் – 34 இல் சொல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் யார் யார் என்று சுலோகம் – 26 இல் சொல்லப்பட்டுள்ளது.

சுலோகம் -32

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #32

கிருஷ்ணா நான் இந்த வெற்றியை விரும்பவில்லை ராஜ்யத்தையும் விரும்பவில்லை சுகங்களையும் விரும்பவில்லை கோவிந்தா நமக்கு இத்தகைய ராஜ்யங்களால் என்ன பயன்? இத்தனை சுகபோகங்களோடு உயிரோடு வாழ்வதில் என்ன பயன்?

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் உயிரோடு இருந்து பெறும் வெற்றியையும் ராஜ்யத்தையும் ஏன் விரும்பவில்லை?

வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் ராஜ்யத்தையும் சுகபோகங்களையும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக அனுபவிக்கும் போது இன்பம் இருக்காது துயரம் மட்டுமே இருக்கும். இந்த துயரம் இறுதிக் காலத்திற்கு பிறகு மேலுலகம் சென்றாலும் தொடரும் என்று அர்ஜூனன் நினைக்கின்றான். அதனால் உயிரோடு இருக்கும் போது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாத வெற்றியும் ராஜ்யமும் சுகபோகங்களும் இருந்தும் பயனில்லாத காரணத்தினால் அர்ஜூனன் இவற்றை விரும்பவில்லை.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கோவிந்தா என்ற சொல்லுக்கு இந்திரியங்களை அடக்கி ஆளுகின்றவன் என்று பொருள். அர்ஜூனன் மன குழப்பத்தில் இருக்கும் போது அவனது இந்திரியங்கள் அடங்காமல் இருக்கிறது. கிருஷ்ணர் குழப்பம் இல்லாமல் தன் இந்திரியங்களை அடக்கி அமைதியாக இருப்பதால் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

சுலோகம் -31

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #31

கேசவா கெடுதல்களை விளைவிக்கக் கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன். போரில் நம் உறவினர்களை கொல்வதால் எந்த நன்மையையும் நான் காணவில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கேசவன் என்றால் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீராக இருக்கும் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள். அர்ஜூனனுக்கு சுலோகம் # 29 இல் உள்ளபடி பயத்தில் அவனது ரோமங்கள் சிலிர்த்து அவனுடைய கூந்தல் சீரில்லாமல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணருடைய கூந்தல் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீரான அழகுடன் இருந்ததால் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே அர்ஜூனனுக்கு உடல் நடுக்கம் மற்றும் தன் உடலில் ஏற்பட்ட சில மாறுதல்களை கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் குறிப்பிடுகின்றான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: உறவினர்களை கொல்வதால் நன்மை இல்லை என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்ற பிறகு முதலில் தவறு செய்து விட்டோமோ என்று மனம் கலங்கும் பின்பு உறவினர்களும் நண்பர்களும் நம்முடன் இல்லையே என்ற கவலை வாழ்நாள் முழுவதும் தொடரும். மேலும் உயிர் கொலை செய்வதால் பாவம் உண்டாகும். ஆகவே இந்த யுத்தம் நடந்தால் துயரம் மட்டுமே இருக்கும். நன்மைகள் ஒன்றும் இருப்பதாக அர்ஜூனனுக்கு தெரியவில்லை. இதனையே அர்ஜூனன் இங்கு குறிப்பிடுகின்றான்.

சுலோகம் -29 # 30

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #29

என் உடல் அங்கங்கள் சோர்வடைகின்றன. என் நாக்கு உலர்கின்றது. என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. என் ரோமங்கள் சிலிர்க்கிறது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #30

எனது கையிலிருந்து காண்டீபம் நழுவி விழுகிறது. என் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் உள்ளது. என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. எனது மனது அலைபாய்கிறது.

இந்த இரண்டு சுலோகத்திலிருந்தும் ஒரு கேள்வி: அர்ஜூனனின் உடலில் ஏன் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகிறது?

இந்தப் போர் நடந்தால் அதன் விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். அனைத்து உறவினர்களும் நண்பர்களும் மரணத்தின் நுழைவு வாயிலில் நிற்பதைப் போல் அர்ஜூனன் எண்ணுகிறான். இந்த எண்ணம் அர்ஜூனனின் மனதில் பயத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தி அவனின் உடலில் இத்தனை மாற்றங்ளை உண்டாக்குகிறது.