வெண்கல வினாயகர்

உலகின் மிக உயரமான விநாயகர் சிலை தாய்லாந்தின் க்லோங் குவானில் உள்ளது. 39 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் ஆன விநாயகர் இவர். இவர் கையில் 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் பலாப்பழம் மேல் இடது கையில் கரும்பு கீழ் வலது கையில் வாழைப்பழம் கீழ் இடது கையில் மாம்பழம் வைத்திருக்கிறார்.

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.

கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் விநாயகர்

திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரச மரத்தடியில் இந்த வினாயகரை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தொடங்கும் போது இவரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து கருப்பு நிறத்தை அடைவார். தை மாதம் தொடங்கும் போது மெல்ல மெல்ல வெண்மையாகத் தொடங்கும். தை முதல் ஆனி வரை உள்ள 6 மாதம் வெள்ளை நிறமாகவும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். விநாயகரின் நிறம் மாறும் போது இவர் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம் மாறுகிறது. இங்கு ஒரு கிணறும் உள்ளது. இந்த விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.

விநாயகி

யானையின் தலையைக் கொண்ட பெண் தெய்வம் ஆவார். இவரைப் பற்றிய வரலாறு புராணங்ககளில் தெளிவாக சொல்லப்படவில்லை. விநாயகி தெய்வத்தின் உருவங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இவரது யானை உருவ அம்சங்கள் காரணமாக இத்தெய்வம் யானைத் தலையை உடைய ஞான கடவுளான விநாயகருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இவருக்கு நிலையான பெயர் இல்லாததால் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். ஸ்திரீ கணேசா விநாயகி விக்னேசுவரி மற்றும் கணேசனி போன்றவை இவரது பெயர்களாக உள்ளது. இந்தப் பெயர்கள் அனைத்தும் விநாயகர் கஜானனா விக்னேசுவரா மற்றும் விநாயகர் ஆகியோரின் பெண்ணிய வடிவங்கள் ஆகும். விநாயகி சில சமயங்களில் அறுபத்து நான்கு யோகினிகள் அல்லது சப்தகன்னியர் தெய்வங்களின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறார்.

வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன. தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில் பெண் உருவில் காட்சி தரும் விநாயகியைக் காணலாம். நாகர்கோயில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள தூண் ஒன்றில் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசிக்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் வலப்புறமுள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு மண்டபத் தூணில் விநாயகத் தாரணி எனப்படும் விநாயகியைக் காணலாம். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது. எனவே இவருக்கு வியாக்ர பாத விநாயகி என்று பெயர். கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம் பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம். இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள் மழு கதை கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயம் மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அம்மன் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் விநாயகி திருஉருவத்தைத் தரிசிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக்கு முந்தைய விநாயகியின் கல் சிற்பம் ஒன்று இந்திய தொல்லியல் துறை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும்.

சமண மற்றும் பௌத்த மரபுகளில் விநாயகி ஒரு சுதந்திர தெய்வமாக போற்றப்படுகிறார். பௌத்த படைப்புகளில் இவர் கணபதி ஹிருதயா (விநாயகரின் இதயம்) என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் அறியப்பட்ட யானைத் தலையுடன் கூடிய விநாயகியின் தெய்வ உருவம் ராஜஸ்தானின் ரைரில் காணப்படுகிறது. இந்த உருவம் முதல் நூற்றாண்டை சார்ந்ததாக உள்ளது. இத்தெய்வத்தின் யானை முகத்தில் இருக்கும் தும்பிக்கை வலதுபுறம் திரும்பியுள்ளது. மேலும் இரண்டு கைகளைக் கொண்டுள்ளது. இதன் கைகளில் உள்ள சின்னங்களும் பிற அம்சங்களும் அழிந்துள்ளதால் தெய்வத்தை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தெய்வத்தின் மற்ற சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன. விநாயகியின் மிகவும் பிரபலமான சிற்பங்களில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் பெடகாட் நகரத்திலுள்ள சௌசத் யோகினி கோயிலில் நாற்பத்தியொன்றாவது யோகினியாக காணப்படுகிறது. இந்த தெய்வம் இங்கே ஸ்ரீஐங்கினி என்று அழைக்கப்படுகிறது. இங்கே விநாயகியின் வளைந்த இடது காலை யானை தலை கொண்ட விநாயகர் ஆதரிப்பது போல காணப்படுகிறது.

விநாயகியின் ஒரு அரிய உலோக சிற்பம் ஷிராலியின் சித்ராபூர் மடத்தில் காணப்படுகிறது. இங்கு இவர் விநாயகரைப் போல் இல்லாமல் மெல்லிய தோற்றத்தில் காணப்படுகிறார். இவரது மார்பின் குறுக்கே பூணூல் எனப்படும் புனித நூல் காணப்படுகிறது. மேலும் கழுத்தில் இரண்டு ஆபரணங்களை அணிந்துள்ளார். இவருடைய இரண்டு முன் கைகள் அபயம் மற்றும் வரம் கொடுக்கும் முத்திரைகளில் உள்ளது. இவருடைய இரண்டு பின்புற கைகளில் ஒரு வாள் மற்றும் ஒரு கயிறு காணப்படுகிறது. இவருடைய தும்பிக்கை இடது பக்கம் திரும்பியுள்ளது.

வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்

சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார். உயிர்களின் பிரார்த்தனைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவரும் நல்ல புத்தியைக் கொடுப்பவரும் சித்தி புத்தி வினாயகர் ஆவார்.

விநாயகர்

நமது மூளை வலப்பகுதி இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மூளையின் இடது வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனை இன்றைய விஞ்ஞானம் ஆமோதிக்கின்றது. இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. வலது பக்க மூளை இயங்கும் பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் பெயர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. வலது நாசிக் காற்று (சூரிய கலை) உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்றது. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடல் சுறுசுறுப்படையும் சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை) உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து உடல் குளிர்ச்சியடையும். பரபரப்புத் தன்மை குறைந்து மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து நிதானமான மனநிலை நிலவும். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் அவரை முதலில் வணங்க வேண்டும்.

கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனித்து விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் வலது நாசியிலும் இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் அளிக்கும் செய்தி இது. விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய ரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

ஞானப்பழம்

இறைத்தேடலில் ஞானத்தை தேடி இருந்த இடத்திலேயே பிரம்மச்சரியம் கடைபிடித்து யோக வழியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது பிள்ளையார் வழி.

இறைத்தேடலில் ஞானத்தை தேடி உலகத்தை சுற்றி பலரிடம் கிடைக்கும் என்று அலைந்து அலைந்து யாரிடமும் கிடைக்காமல் கோபத்தில் நானே தேடிக்கொள்கிறேன் என்று இறுதியில் தனக்குள்ளேயே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து தனியாக அமர்ந்து இறுதியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது முருகர் வழி.