வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.





