கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது ஆதனூர். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசத்தில் 11 ஆவதாக இருக்கும் ஆண்டளக்கும் ஐயன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் 20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் சனனதி உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. கருவறையில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயரத்தில் கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி கொடுகிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சுதர்சன சக்கரம் அமைந்திருக்கின்றது. அவரது தலையின் மேல் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் ரக்கொடி எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.