மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -13

அர்ஜுனனின் குரு என்பதை துரோணர் போர்களத்தில் நிரூபித்து கொண்டிருந்தார். எதிர்த்து வரும் அனைவரையும் மண்ணோடு சாய்த்தார். பாண்டவ படைகள் தடுமாறியது. அஸ்திரங்கள் அவர் வில்லில் இருந்து புறப்படும் சத்தம் அனைவரையும் நடுங்க செய்தது. துரியோதனா அர்ஜுனனை என்னை நெருங்க விடாமல் பார்த்துக்கொள். என் ஆற்றலை தடுக்கும் சக்தி அவனிடம் மட்டுமே உள்ளது என்றார் துரோணர். துரியோதனனும் அர்ஜுனன் மீது பல படைகளை ஏவி அவனை தடுத்து கொண்டே இருந்தான். துரோணர் தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தர்களான தேறேஷ்டகா மற்றும் தேரேஷ்டாரா ஆகியோரை கொன்றார். அர்ஜுனனை தொடர்ந்து பாண்டவர்கள் தளபதி திருஷ்டத்துய்ம்னனும் புத்திர சோகத்தை சந்தித்தான்.

போர்களத்தின் மற்றொரு திசையில் பீமன் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும், துஷ்கர்ணனையும் கொன்றான். இரு தரப்புகளுக்கும் அதிகமான இழப்பு என்ற நிலையில் போர் சென்று கொண்டிருந்தது. பீமனின் மகன் கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். பல ஆயிரம் வீரர்களை ஒருவனாக நின்று கொன்று குவித்தான். ஒரு கட்டத்தில் இவனின் ஆற்றலை கண்டு கௌரவர்களின் படை பின் வாங்கியது. கடோத்கஜன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். அஸ்வதாமனின் தாக்குதல்களை நேர்த்தியாக சமாளித்தான் அஞ்சனபர்வா. நீண்ட நேரம் நடந்த போருக்கு பின் அஞ்சனபர்வா அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில் அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. இறுதியில் அஸ்வத்தாமன் நிலை தடுமாறி விழுந்தான். மயங்கினான். மயக்கத்தில் இருந்த அஸ்வதாமனை விட்டு விட்டு அங்கிருந்து சென்றான் கடோத்கஜன்.

நள்ளிரவு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கர்ணனும் கிருபாச்சாரியார் இருவருக்குள்ளும் ஒரு வாய்ச் சண்டை ஏற்பட்டது. கர்ணன் அர்ஜுனனை கொல்ல தீர்மானம் செய்து இருக்கிறேன் என்றான். அதற்கு கிருபாச்சாரியார் நீ வெறும் வாய்ப்பேச்சு வீரன் செயலில் ஒன்றும் இல்லை அர்ஜுனனை கிருஷ்ணன் பாதுகாத்து வருகின்றான் ஆகையால் நீ அவனை கொல்ல இயலாது என்றார். உடனே கர்ணன் கோபமடைந்தான் நீங்கள் கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் நாவை துண்டித்து விடுவேன் என்றான். அசுவத்தாமன் இடையில் நுழைந்து கிருபாச்சாரியார் கூறியது முற்றிலும் உண்மை நீ வெறும் வீராப்புகாரன் மட்டுமே கிருபாச்சாரியாரிடம் மரியாதையாக நடந்து கொள் என்று கூறினான். அனைத்தையும் கவனித்த துரியோதனன் தன்னோடு கூடியிருந்த அனைவரும் முழுமனதுடன் தமக்காக போர் புரியவில்லை என்று கருதினான். மூவரிடமும் சென்று தங்களுக்குள் வாக்குவாதம் வேண்டாம் என்றும் இதனால் சேனைக்குள் குழப்பம் ஏற்படும் என்றும் எதிரியை தோற்கடிப்பதில் கவனம் முழுவதும் செலுத்துங்கள் என்றும் அவர்களை வேண்டிக்கொண்டான்.

கர்ணனை எதிர்த்து போர் புரியலாம் என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் கிருஷ்ணர் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. அவர்களுக்கிடையில் இரவு நேரத்தில் யுத்தம் வேண்டாம் என்றும் பகல் நேரத்தில் கர்ணனிடம் யுத்தம் வைத்துக்கொள்ளலாம் என்றும் கிருஷ்ணர் தெரிவித்தார். எனவே அர்ஜுனனுக்கு பதிலாக போரை நிகழ்த்த கடோத்கஜன் கர்ணனிடம் அனுப்பப்பட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.