ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 24

சீதை லட்சுமணனிடம் பேசினாள். அண்ணனின் ஆணை என்று சமாதானம் சொல்லி அண்ணன் கதறினாலும் போக மறுக்கிறாய். அவரும் நானும் உன்னை நம்பி மோசம் போனோம். ராமருக்கு பகைவனாய் வந்த துஷ்டனே இது பரதனின் சூழ்ச்சியா? பரதன் சொல்லிக் கொடுத்து இது போல் செய்கிறாயா? ராமரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அழித்து ராஜ்யத்தை அடைய நினைக்கின்றார்களா? ராஜ்யத்தையும் என்னையும் நீ அடைய நினைத்து இது போல் செய்கிறாய் என்பதை தெரிந்து கொண்டேன். உன் எண்ணம் நிறைவேறாது. உன் அண்ணன் இல்லை என்று தெரிந்த அடுத்த கனம் நானும் இறந்து விடுவேன். இப்பொது நீ சென்று அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றா விட்டால் அதோ பார் உலர்ந்த கட்டைகள் இருக்கின்றன. இப்போது இங்கேயே அதில் தீ மூட்டி குதித்து என் உயிரை விடுவேன். மலையின் உச்சிக்கு சென்று குதித்து விடுவேன். விஷத்தை அருந்தி விடுவேன். இல்லையென்றால் இதோ பார் உன் முன்பே இப்போதே இந்த ஆற்றில் குதித்து உயிர் துறப்பேன் என்று சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டே சீதை ஆற்றை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

லட்சுமணன் சீதையை பார்த்து நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் என் காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. உங்களின் சொல்லையும் செயலையும் பார்த்து நான் பயப்படுகிறேன். உங்களுடைய வார்த்தைகளால் உங்களுக்கு வரும் கேட்டிற்கு நீங்களே வழி வகுத்து கொடுத்து விட்டீர்கள். தேவர்களின் சாட்சியாக சொல்கிறேன். நான் உங்களை கண்டு இரக்கப்படுகின்றேன். இன்று உங்களிடம் குணக் குறைவை காண்கிறேன். எனக்கு பாப எண்ணம் இருப்பது போல் பேசிவிட்டீர்கள். இது என்னுடைய கெட்ட காலம் என்று எண்ணுகிறேன். எந்த விதியாக இருந்தாலும் என்னுடைய வில்லால் வென்று விடலாம் என்று கர்வம் கொண்டிருந்தேன். இன்று அந்த கர்வம் அடங்கி விதி என்னை வென்று விட்டது.

நீங்கள் சொல்வது போல் அண்ணனின் ஆணையை மீறி உங்களை தனியாக விட்டு செல்கிறேன். நீங்கள் இங்கிருந்து காணாமல் போகப் போகின்றீர்கள். அதற்குண்டான கெட்ட அபசகுனங்களை இங்கு காண்கிறேன். அண்ணனுடன் சேர்ந்து வந்து உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று தெரியவில்லை சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இதோ தங்களுடைய கடுமையான வார்த்தைக்காக போகிறேன் என்று குடிலை சுற்றி ஒரு கோடு வரைந்தான் லட்சுமணன். தயவு செய்து குடிலை சுற்றி இருக்கும் இந்த கோட்டை தாண்டி மட்டும் வெளியே வந்து விடாதீர்கள். உங்களை இங்கிருக்கும் வன தேவதைகள் காப்பார்களாக என்று சொல்லிவிட்டு திரும்பி திரும்பி பார்த்தபடி ராமர் சென்ற காட்டிற்குள் ஓடினான் லட்சுமணன். சீதை சொன்ன கோரமான வார்த்தைகள் அண்ணனுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். கோபம் வராத அண்ணனுக்கு கோபம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்று கோபமும் துயரமும் சேர்ந்து லட்சுமணனை மிகவும் வாட்டியது.

லட்சுமணன் செல்லும் நேரத்திற்காக காத்திருந்த ராவணன் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு காவி உடை அணிந்து தண்டமும் கமண்டலமும் தரித்து தபஸ்வி போல் சீதை இருக்கும் குடிலை நோக்கி சென்றான். அழுத முகத்துடன் இருந்த சீதையை பார்த்து யாரம்மா நீ? இந்த ராட்சசர்கள் வாழும் காட்டில் தனியாக இருக்கிறாய் எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? என்று சீதையிடம் கேட்டான் ராவணன்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 23

ராமர் விட்ட அம்பு மாரீசனை கொன்று விட்டது. மாரீசன் தன் குரலைப்போலவே எழுப்பிய சத்தத்தில் சீதை பயந்துவிடுவாளே என்று எண்ணிய ராமர் லட்சுமணன் அருகில் இருக்கின்றானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ராமரின் குரலைக் கேட்ட சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டது. ராமருக்கு உதவி தேவைப்படுகிறது என்று பதைபதைத்தாள். லட்சுமணனிடம் உனது அண்ணனின் அபயக் குரல் கேட்கிறது. உனக்கு கேட்கவில்லையா? நிற்காதே போ போ சீக்கிரம் ஓடிச் சென்று அண்ணனுக்கு உதவி செய் என்று கதற ஆரம்பித்தாள். ராமர் சீதைக்கு துணையாக இங்கேயே இரு. எச்சரிக்கையுடன் சீதையை பார்த்துக்கொள் என்ற அண்ணனின் ஆணையை ஏற்று லட்சுமணன் அசையாமல் நின்றான். சீதை மீண்டும் லட்சுமணனை பார்த்து கத்த ஆரம்பித்தாள். ராட்சசனிடம் உன் அண்ணன் அகப்பட்டு அபயக் குரலில் கதறுகிறார். ஒரே பாய்ச்சலில் சென்று அவரை நீ காப்பாற்ற வேண்டாமா? மரம் போல் அசையாமல் நின்கின்றாயே ஓடு ஓடு என்று விரட்டினாள். அப்போதும் அசையாமல் நின்றான் லட்சுமணன். சீதைக்கு லட்சுமணனின் மேல் கோபம் அதிகரித்தது. ராமரின் மேல் உள்ள அன்பும் ஆபத்தில் இருக்கும் ராமருக்கு உதவி செய்ய செல்லாமல் அசையாமல் நின்ற லட்சுமணனின் மேல் உள்ள கோபமும் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் தன் சுய புத்தியை இழந்த சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

சுமத்ரையின் மகனே நீ இப்போது ராமருக்கு எதிரியாகி விட்டாய். இவ்வளவு நாளும் நல்லவன் போல் வேடமணிந்து எங்களுடன் இருந்திருக்கிறாய். ராமரின் மரணத்திற்கான இவ்வளவு நாள் காத்திருந்தாயா? அவர் இறந்தால் அதன் பிறகு என்னை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாயா? துஷ்டனே ராமர் அபயக் குரலில் கதறி அழைத்தும் போகாமல் இங்கேயே நிற்கின்றாயே அண்ணனிடம் நீ காட்டிய அன்பெல்லாம் வெறும் நடிப்பா சூழ்ச்சிக்காரனே நயவஞ்சகனே என்று திட்டிக்கொண்டே தன் இரு கைகளாலும் தன்னையே அடித்துக் கொண்டு கதறி அழுதாள். லட்சுமணன் தன் கண்ணில் நீர் தனது வழிய காதுகளை மூடிக்கொண்டான்.

லட்சுமணன் மெதுவாக சீதையிடம் பேச ஆரம்பித்தான். சிறு வயதில் இருந்து அண்ணனுடன் பல யுத்தங்களை பார்த்திருக்கின்றேன். அண்ணனின் பலம் எனக்கு தெரியும். அவரை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. காட்டில் நம்மை எதிர்த்த ஆயிரக்கணக்கான ராட்சசர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று யுத்தம் செய்து அனைவரையும் அழித்தார். அவரின் பராக்ரமத்தை தாங்களும் பார்த்தீர்கள். தேவர்கள் கந்தர்வர்கள் அசுரர்கள் ராட்சசர்கள் அரசர்கள் மானுடர்கள் மிருகங்கள் என அண்ணனை எவர் எதிர்த்தாலும் அவர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று அனைவரையும் அழித்து விடுவார். அந்த வல்லமை அவருக்கு உண்டு. இது நிச்சயமான உண்மை பயப்படாதீர்கள். உங்கள் மனைதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மான் உருவில் வந்த ராட்சசனை அழித்து விட்டு தாங்கள் விரும்பிய மான் உடலுடன் அண்ணன் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் புத்தியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சீதையிடம் லட்சுமணன் கூறினான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 22

ராமரும் லட்சுமணனும் சீதையின் குரலைக் கேட்டு விரைந்து வந்து பொன் மானைப் பார்த்து வியந்தார்கள். லட்சுமணன் மானின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்தான். மான் வடிவில் வந்திருப்பது ராட்சசன் மாரீசன் என்பதை லட்சுமணன் புரிந்து கொண்டான். ராமரை பார்த்து இந்த அழகிய கற்கள் பதிக்கப்பட்ட பொன் மான் வடிவில் இருப்பது மாரீசன் என்ற ராட்சசன் ஆவான். இயற்கையில் இப்படி ஒரு மிருகம் கிடையாது. நம்மை ஏமாற்ற ஏதோ தந்திரம் செய்து நம்மை தாக்க இங்கே வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன் என்றான். லட்சுமணன் சொன்னதை கேட்டதும் மானின் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் இந்த மான் தங்க நிறத்தில் நவரத்ன கற்களும் ஜொலிக்க அழகாக இருக்கிறது. இதனுடன் நான் விளையாட ஆசைப்படுகின்றேன். நாம் இக்காட்டை விட்டு அரண்மனைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. இங்கிருந்து செல்லும் போது இந்த மானையும் தூக்கிச்சென்று விடலாம். நமது அரண்மனை தோட்டத்தில் இதனுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க ஆசைப்படுகின்றேன். இந்த மானைப் பார்த்தால் பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். இந்த மானை பரதனுக்கு பரிசாக கொடுக்கலாம். இந்த மானை பிடித்து எனக்கு தாருங்கள். நமது குடிலில் இந்த மானை கட்டி வளர்க்கலாம் என்று விடாமல் ராமரிடம் மானை பிடித்து கொடுக்க சொல்லி பேசிக்கொண்டே இருந்தாள்.

ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். சீதையின் பேச்சைப் பார் லட்சுமணா. அவளின் பேச்சில் இருந்து அந்த மான் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது எனது கடமை. அந்த மான் ராட்சசனாக இருந்தால் இக்காட்டில் இருக்கும் முனிவர்களுக்கு நாம் கொடுத்த வாக்கின்படி அதனை அழிப்பது நமது கடமை. வந்திருப்பது ராட்சசனா என்று நமக்கு தெரியாது. ஆகையால் நீ வில் அம்புடன் கவனத்துடன் சீதைக்கு பாதுகாப்பாக இரு. எந்த சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எச்சரைக்கையுடன் இரு. நான் அந்த மானை உயிருடனோ அல்லது ராட்சசனாக இருக்கும் பட்சத்தில் கொன்றோ கொண்டு வருகிறேன் என்று வில் அம்புடன் கிளம்பினார். லட்சுமணன் யுத்தத்திற்கு தயாராக இருப்பது போல் வில் அம்புடன் சீதைக்கு காவலாக இருந்தான்.

ராமர் மானை பின் தொடருந்து ஓடினார். ராமர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றாரா என்று மான் திரும்பி திரும்பி பார்த்து காட்டிற்குள் ஓடியது. மானை ராமரால் பிடிக்க முடியவில்லை. ராமரை காட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு இழுந்து வந்தது மான். ராமர் தனது வில்லை எடுத்தார். இதனை கண்ட மான் உருவில் இருந்த மாரீசனுக்கு தான் ராமரின் கையால் இறக்கப் போகின்றோம் என்று தெரிந்துவிட்டது. ராமரின் கண்ணில் படாமல் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி மான் இருக்கும் திசையை நோக்கி செலுத்தினார். அம்பு மானை குத்தியது. மான் உருவத்தில் இருந்த மாரீசன் தனது சுய உருவத்தை அடைந்தான். ராவணன் சொன்னபடி சீதை லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்தியபடி கீழே விழுந்து இறந்தான் மாரீசன்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 21

ராமரைப்பற்றி மாரீசன் நீண்ட நேரம் பேசி ராவணனுக்கு புத்தி கூறினான். மாரீசன் பேசியது எதுவும் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணன் பேச ஆரம்பித்தான். மாரீசா நீ சொல்வது எதுவும் சரியில்லை. நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ராட்சச அரசன் நான். இதனை நீ மனதில் வைத்துக் கொள். உன்னிடம் சீதை தூக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று உனது கருத்தை கேட்க நான் இங்கு வரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு சீதை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டே இங்கு வந்திருக்கின்றேன். என் முடிவில் இனி மாற்றம் இல்லை. ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்யத்தை இழந்து ஊரில் இருந்து துரத்தப்பட்டவன் அந்த ராமன். ராட்சச அரசனன நான் இந்த சாதாரண மனிதனுடன் சமமாக நின்று யுத்தம் செய்ய மாட்டேன். சீதையை தூக்கி சென்று ராமனை அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இதற்கு நான் கேட்கும் உதவியை நீ செய்ய வேண்டும் என்று அரசனாக உனக்கு உத்தரவிடுகின்றேன். நீ என்னுடைய உத்தரவை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை நான் இங்கு இப்போதே கொன்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.

ராமனின் பகையை சம்பாதித்து விரைவில் நீ யமனிடம் செல்ல ஆசைப்படுகின்றாய். இலங்கை எரிந்து அழிந்து போவது. நீயும் உனது சகோதரர்கள் உட்பட உனது ராட்சச படைகள் அனைத்தும் ராமனால் அழிக்கப்படுவது இப்பொதே என் கண்களுக்கு தெரிகிறது. உன் உத்தரவை செயல் படுத்தாமல் உனது கையால் மரணிப்பதை விட ராமரின் கையால் நான் மரணமடைவது மேல் என்று எண்ணுகின்றேன். தண்டகாருண்யம் காட்டிற்கு செல்லலாம் வா என்று கிளம்பினான் மாரீசன். பழைய மாரீசனை கண்டுவிட்டேன் என்று ராவணன் மாரீசனை கட்டி அணைத்து செய்ய வேண்டிய காரியத்தை சொல்ல ஆரம்பித்தான் ராவணன். ஏற்கனவே சொன்னபடி மான் உருவம் எடுத்து நீ ராமரை தூரமான இடத்திற்கு அழைத்துச் செல். பின்பு லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்து. லட்சுமணன் சீதையை தனியாக விட்டு வருவான் அந்த நேரம் நான் சீதையை தூக்கிச்சென்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.

தண்டகாரண்ய காட்டில் ராமனுடைய குடிலுக்கு அருகில் இருவரும் வந்து சேர்ந்தார்கள். குடிலின் தூரத்தில் நின்ற மாரீசனின் கையை பிடித்த ராவணன் அதோ பார் ராமனின் குடில் உள்ளது. என் திட்டப்படி அனைத்தையும் சிறப்பாக செய்து முடி என்று அனுப்பினான் ராவணன். மாரீசன் அழகிய பொன் மான் வேடத்திற்கு உருமாறினான். மானின் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகில் வைர வைடூரியங்கள் ரத்ன கற்கள் பதித்த தங்க மான் போல் ஒளி வீசியது. மான் குடிலை சுற்றி சுற்றி வந்தது. மற்ற மான்கள் இதன் அருகில் வந்ததும் தன் இனம் இல்லை என்று சந்தேகத்துடன் விலகி சென்றது.

சீதை குடிலுக்கு அருகே பூக்களை பறித்துக்கொண்டிருந்தாள். மான் சீதைக்கு முன்பாக ஓடி துள்ளிக் குதித்தது. சீதை மானின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த பூக்களுக்கு நடுவில் ஓடிய மான் காட்டிற்கே புது அழகு தந்தது. ராமரும் லட்சுமணனும் இந்த அழகை காண வேண்டும் என்று எண்ணிய சீதை ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள் இந்த அழகிய மானை பாருங்கள் என்று கத்த ஆரம்பித்தாள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 20

ராமருடைய பராக்ரமத்தை அறிந்திருந்த மாரீசன் ராவணனுடைய தீர்மானத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். சீதையை தூக்கிச் செல்வதிலேயே ராவணன் குறியாக இருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டான். விதி ராவணனை கயிறு கட்டி இழுக்கின்றது. ராவணன் தன் புத்தியை இழந்து விட்டான். இனி ராவணனின் அழிவை தடுக்க முடியாது என்று உணர ஆரம்பித்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான் மாரீசன். ராட்சச அரசரே நீங்கள் சொல்வதை கேட்டதும் எனக்கு எல்லையற்ற துக்கம் உண்டாகிவிட்டது. ஒருவரின் கருத்துக்கு ஆதரவான கருத்தை மற்றவர் சொல்லும் போது அதனை கேட்பவருக்கு இனிமையாக இருக்கும். ஆனால் எதிரான கருத்தை சொல்லும் போது அதனை கேட்க முன் வர மாட்டார்கள். ஆனாலும் உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லி உங்களுக்கு நன்மையை சொல்ல விரும்புகின்றேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப இனிமையாக பேசி உங்களை திருப்தி செய்து உங்களை அபாயத்தில் தள்ளி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

ராமரை பற்றி ஏற்கனவே நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். உங்களிடம் சொல்லியவர்கள் ராமரை பற்றிய உண்மையை சரியாக சொல்லவில்லை. ராமரை பற்றி அறியாத அவர்களின் பேச்சை கேட்டு ஏமாந்து போகாதீர்கள். ராமர் உத்தம குணங்கள் நிறைந்த மாவீரன். அவருடைய கோபத்தை சம்பாதித்து இலங்கையின் அழிவுக்கு நீயே காரணமாகி விடாதே. நீ ராமரை பற்றி சொன்னதில் உண்மை எதுவும் இல்லை. தசரதர் ராமரிடம் குற்றம் கண்டு தண்டனை கொடுப்பதற்காக அவரை காட்டிற்கு அனுப்பவில்லை. ராமர் தனது தந்தை தாயிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக காட்டிற்கு வனவாசம் செய்ய வந்திருக்கிறார். தனது ராஜ்யத்தையும் அதிலுள்ள சுகங்கள் அனைத்தையும் துறந்து காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தவஸ்வியை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேவர்களில் முதன்மையானவன் இந்திரன் அது போல் இந்த மானிட உலகத்தில் முதன்மையானவர் ராமர். அவரின் மனைவியை நீ அபகரிக்க நினைக்கிறாய். சூரியனைப் போன்ற ராமரை ஏமாற்றி சூரியனுடைய ஒளியை போல் இருக்கும் சீதையை நீ திருட முடியாது. தந்திரமாக ஏதேனும் செய்து சீதையை நீ அபகரித்து சென்று அவளை தீண்டினால் நீ எரிந்து போவாய். ஒன்று ராமனின் அம்பால் அழிந்து போவாய். இல்லையென்றால் சீதையின் தொட்ட அடுத்த கணம் அழிந்து போவாய். உன்னுடைய சர்வ நாசத்துக்கும் நீயே வழி தேடிக்கொள்ளாதே.

ராமர் சிறு வயதில் யுத்தம் செய்யும் போதே நான் பார்த்திருக்கின்றேன். பல காலங்களுக்கு முன்பு என்னுடைய உடல் பலத்தின் மீது இருந்த அகங்காரத்தினால் முனிவர்கள் ரிஷிகள் செய்த வேள்விகளை தடுத்து அவர்களை கொன்று தின்று அழித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை விஸ்வாமித்ரர் செய்த வேள்வியை தடுத்து அழிக்க சென்றிருந்தேன். விஸ்வாமித்ரர் தன் வேள்வியை காக்க தசரதரிடம் அனுமதி பெற்று ராமரை அழைத்து வந்திருந்தார். நான் வேள்வியை அழிக்க அங்கு சென்ற போது ராமர் விட்ட அம்பு என்னை அங்கிருந்து பல காததூரம் தள்ளி கொண்டு போய் கடற்கரையில் போட்டது. நீண்ட நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். மீண்டும் எழுந்து ராமரை கொல்லும் நோக்கத்தில் சென்றேன். ராமர் என்னை நோக்கி மூன்று அம்புகளை ஒரே நேரத்தில் விடுத்தார். அந்த மூன்று மகா பயங்கராமான அம்புகளிடமும் நான் பெரும் துன்பத்தை அனுபவித்தேன். எப்படியோ தப்பித்து நல்லொழுக்கம் கொண்டவனாக தவம் செய்து தவஸ்விகளை போல் தவவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று மாரீசன் ராவணனிடம் தொடர்ந்து பேசினான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 19

மாரீசனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த ராவணனை தவ வாழ்க்கை வாழும் மாரீசன் முறைப்படி வரவேற்றான். இப்போது சில நாட்கள் முன்பு தானே வந்தீர்கள். மீண்டும் வந்திருக்கின்றீர்கள் என்றால் முக்கியமான செய்தியோடு வந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். ராவணன் மாரீசனிடம் பேச ஆரம்பித்தான். என் சகோதரர்கள் கரனும் தூஷனனும் என் ஆளுகைக்கு உட்பட்ட தண்டகாருண்ய காட்டில் ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். இது உனக்கு தெரியும். எனது சகோதரர்களையும் பதினான்காயிரம் படை வீர்களையும் ராமன் என்ற ஒருவன் தேர் இல்லாமல் பயங்கரமான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் கீழே நின்று கொண்டே வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக அனைவரையும் கொன்று விட்டான். இப்போது தண்டகாருண்ய காட்டில் ராட்சசர்கள் யாரும் இல்லை. ராட்சர்கள் என்கின்ற பயம் என்பதும் துளியும் இல்லை.

ரிஷிகளும் முனிவர்களும் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். ராமன் என்பவன் தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்ட ஒரு நாடோடி. தன் மனைவி சீதையுடன் காடு காடாக சுற்றிக்கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தவஸ்வியைப் போல் வேடம் அணிந்து கொண்டு இந்திரனைப் போல் தன்னை எண்ணிக் கொண்டிருக்கின்றான். எந்த காரணமும் இல்லாமல் தன் பலத்தால் என் சகோதரியின் காதுகளையும் மூக்கையும் அறுத்து என் குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். என் தங்கை என்னிடம் அழுது புலம்புகின்றாள். அரசன் என்கின்ற முறையிலும் தங்கைக்கு அண்ணன் என்ற முறையிலும் நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தால் நான் ராட்சசர்களின் அரசன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இதனால் நான் பெரும் துயரத்தில் சிக்கி துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இத்துயரத்தை உன்னால் தான் போக்க முடியும் அதனால் உன்னை தஞ்சமடைந்திருக்கிறேன்.

ராமனின் மனைவி சீதையை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராமனை தண்டித்து அவமானப்படுத்துவது எனது குலத்திற்கு செய்யும் கடமையாக நினைக்கின்றேன். நீயும் எனது சகோதரர்கள் விபிஷணன் கும்பகர்ணன் இருக்க எனக்கு என்ன பயம். ஆகவே துணிந்து முடிவெடுத்து விட்டேன். அதற்கு உனது உதவி வேண்டும். உன்னுடைய யுக்தியும் உருவம் மாறும் திறமையும் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. அதனால் உன்னிடம் வந்திருக்கின்றேன். நான் சொல்லும் தந்திரத்தை நீ ஆமோதித்து செய்ய வேண்டும் மறுக்க கூடாது. நான் சொல்வதை கேள். தங்க புள்ளிகளும் வெள்ளி புள்ளிகளும் கலந்த பொன் மானாக உருவம் எடுத்து ராமர் வாழும் காட்டிற்கு சென்று சீதையின் முன்பாக நிற்க வேண்டும். பெண்களின் சுபாப்படி அழகானவற்றை பார்த்ததும் அதனை அடைய வேண்டும் என்று எண்ணம் கொள்வார்கள். ராமரிடமும் லட்சுமணனிடமும் அந்த மானை பிடித்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாள். உன்னை பிடிக்க அவர்கள் வரும் போது மான் உருவத்தில் இருக்கும் நீ காட்டிற்குள் ஓட வேண்டும். உன்னை பின் தொடர்ந்து வருவார்கள். அப்போது சீதை தனியாக இருப்பாள். அவளை சுலபமாக நான் தூக்கிச் சென்று விடுவேன். சீதையை இழந்த ராமன் மனம் உடைந்து பலவீனமடைவான். அப்போது ராமனை தாக்கி பழிவாங்கி திருப்தி அடைவேன் என்று மாரீசனிடம் ராவணன் சொல்லி முடித்தான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 18

ராமன் தண்டகாருண்ய காட்டின் அரசனான கரனையும் சேனாதிபதியான தூஷணனையும் சில கணங்களில் கொன்றுவிட்டான் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த சூர்ப்பனகை இப்போது ராவணனிடம் சாந்தமாக பேச ஆரம்பித்தாள். ராமனுக்கு சீதை என்ற மனைவி இருக்கிறாள். ராமனோடு தனியாக இருக்கிறாள். அவளின் அழகை என்னவென்று சொல்வேன். தேவர்கள் கந்தர்வர்கள் உலகங்கள் உட்பட ஈரேழு பதினான்கு உலகங்கள் முழுவதும் தேடினாலும் அவளைப் போன்ற அழகியை நீ பார்க்க முடியாது. அவளைக் கண்டதும் அவள் உனக்குரியவள் உன்னிடம் இருக்க வேண்டியவள் என்று நினைத்தேன் அதற்கான செயலிலும் இறங்கி உனக்காக அவளை தூக்கி வர முயற்சி செய்தேன். அப்போது ராமனின் தம்பி லட்சுமணன் தடுத்து ராட்சசியாக இருந்தாலும் பெண் என்பதால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்று சொல்லி என் காது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக செயல்படப் போய் நான் இந்த கோரமான முகத்தையும் அவமானத்தையும் பெற்றுவிட்டேன். இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும். இப்பழியை தீர்த்து உன் குலத்தின் மானத்தைக் காப்பாற்ற உனக்கு ஆசையிருந்தால் உடனே தண்டகாருண்ய காட்டிற்கு புறப்படு.

சீதை போன்ற பேரழகி ராட்சச குலத்தின் அரசனான உன் அருகில் தான் இருக்க வேண்டும். சாதரண மானிதனுடன் காட்டில் இருக்கக் கூடாது. அவளை தூக்கி வந்து உனக்கு அருகில் வைத்துக்கொள். உன் சகோதரியாகிய எனக்கு கிடைத்த அவமானம் உனக்கு கிடைத்த அவமானம் ஆகும். ராமனை வெற்றி கொண்டோ அல்லது தந்திரமாகவோ சீதையை நீ தூக்கி வந்து ராமனை நீ அவமானப்படுத்தினால் போர்க்களத்தில் ராமனால் இறந்த உனது வீரர்கள் திருப்தி அடைவார்கள். நமது குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் தீர்க்கப்படும். இதனை மனதில் வைத்து சீக்கிரம் உனது குலத்தின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள் என்று ராவணனுக்கு சீதை மீது ஆசை ஏற்படும்படியும் ராமரின் மேல் கோபம் வரும் படியும் தூண்டிவிட்டு தனது பேச்சை முடித்தாள் சூர்ப்பனகை.

சீதையின் அழகை பற்றிய பேச்சில் மயங்கிய ராவணன் மந்திரிகளிடம் சபை முடிந்தது அனைவரும் செல்லலாம் என்று சபையை முடித்து அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். சீதையை தூக்கிவர வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் மாரீசன் ராமரைப்பற்றி சொல்லிய எச்சரிக்கை அவனது மனதில் தோன்றியது. சூர்ப்பனகையிடம் ராமன் என்பவன் யார்? அவன் எதற்காக தண்டகாருண்ய காட்டிற்கு வந்திருக்கின்றான்? அவனது உருவம் எப்படிப்பட்டது? ராமன் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன? அவன் தனியாக என்னென்ன போர் தந்திரங்களை கையாண்டு நமது குலத்தவர்களை அழித்தான் என்று ராமரைப்பற்றிய அனைத்தையும் சொல் என்று கேட்டுக்கொண்டான். சூர்ப்பனகை ராமர் அயோத்தியை சேர்ந்த ராஜகுமரன் என்று ஆரம்பித்து காட்டில் யுத்தம் முடிந்தது வரை ராமரைப் பற்றி தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அனைத்தையும் கேட்ட ராவணன் நீண்ட யோசனைக்குப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தான். தனது பறக்கும் ரதத்தில் ஏறி மாரீசனை காணச் சென்றான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 17

மாரீசன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் யுத்தத்தில் மத யானைக்கு ஒப்பானவர். சீதையை அபகரிக்கும் இந்த யோசனையை எனக்கு யார் சொன்னது ராவணா? இதனை செயல்படுத்துவது என்பது கொடிய விஷ பாம்பின் வாயில் கைவிட்டு அதன் பல்லை பிடுங்கி மரணிப்பது போல் ஆகும். எவனோ உன் பகைவன் உனக்கும் உனது ராட்சச குலத்திற்கும் சர்வநாசம் உண்டாக வேண்டும் என்று உன்னுடைய நண்பன் போல் பாசாங்கு செய்து இந்த திட்டத்தை உனக்கு சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே. ராமருடைய கோபத்தை தூண்டினால் உன் குலம் அழிந்து போகும். ராமர் யுத்தம் செய்யும் போது பாதாளத்தை அடித்தளமாக கொண்ட கடல் போன்று காட்சி அளிப்பார். அவரின் வில்லில் இருந்து வரும் அம்புகள் கடல் அலைகள் போல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அக்காட்சியை கண் கொண்டு பார்க்க இயலாது அப்படி இருக்கும் போது யுத்தம் செய்வது எப்படி சாத்தியமாகும். அரக்கர்களின் தலைவனான ராவணா நீங்கள் சீதையை ராமருக்கு தெரியாமல் நீங்கள் கவர்ந்து செல்வது உங்களுக்கு நன்மையானது அல்ல. நான் சொல்வதை கேளுங்கள். மனம் அமைதி அடைந்து இலங்கைக்கு திரும்பி சென்று உங்களது மனைவிமார்களுடன் மகிழ்ச்சியுடன்
இன்பத்தை அனுபவியுங்கள். ராமர் தன் மனைவியுடன் காட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மாரீசன் ராவணனிடம் புத்தி கூறினார். இதனைக்கேட்ட ராவணன் அனுபவசாலியான மாரீசன் கூறினாள் சரியாக இருக்கும் என்று தன் திட்டத்தை கைவிட்டு இலங்கைக்கு திரும்பிச்சென்றான்.

இலங்கையில் ராவணன் தனது அரசவையில் இந்திரன் போல் ஜொலித்துக்கொண்டு மந்திரிகள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது சபையில் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் ராவணனின் உடன் பிறந்த சகோதரி சூர்ப்பனகை காது மூக்கு அறுந்த நிலையில் மிகவும் கொடூரமான உருவத்துடன் அரசவைக்குள் நுழைந்து ராவணனிடம் கடுமையான வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்தாள். ராட்சச அரசனை நீ அரச சுகங்களை அனுபவிப்பதில் மதிமயங்கி கிடக்கின்றாய். மிக பெரிய ஆபத்து ஒன்று பின்னாளில் வரப்போகிறது என்று நான் சொல்வதற்கு முன்பாகவே ஒற்றர்கள் வழியாக உனக்கு செய்தி வந்திருக்கும். அதனை தெரிந்தும் தெரியாதது போல் சிறுபிள்ளைதனமாக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்.

உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட உனது இடத்தை ஒருவன் ஆக்ரமிப்பு செய்து உன் குலத்தை சேர்ந்த உன்னை நம்பி தண்டகாருண்ய காட்டை ஆட்சி செய்தவர்கள் அழிந்து விட்டார்கள். பதினான்காயிரம் வீரர்களையும் அரசன் சேனாதிபதி என அனைவரையும் முனிவர்களின் சார்பாக ஒருவன் அழித்திருக்கிறான். உன்னுடைய படைகளை கண்டு நடுநடுங்கிய எதிரிகள் இதனைப்பார்த்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அறிந்தும் அறியாதவன் போல் அறிவிழந்து கிடக்கிறாய். மரண பயமில்லாமல் நீ இருந்தால் மட்டும் போதுமா அரசன் செய்ய வேண்டிய காரியத்தை நீ செய்ய வேண்டாமா? நீ எப்போது அழிவாய் என்று உனது பகைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீ இங்கு சுகமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாய். உனக்கு அவமானமாக இல்லையா? உன்னை கண்டு நடுங்கிய முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ராமர் இப்போது அபயம் அளித்து விட்டான். உன்னை பாராட்டி கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்திப்பட்டு கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. இலங்கைக்கு இந்த நிலை வந்தால் உன் குடி மக்கள் கூட உன்னை மதிக்க மாட்டார்கள். உனக்கு கோவம் வரவில்லையா கோபம் இல்லாத அரசன் எதற்கும் உதவ மாட்டான் என்று சூர்ப்பனகை ராவணனின் கோபத்தை தூண்டி விட்டாள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமர் மிகவும் பராக்கிரமசாலி. உலகில் உள்ள வில்லாளிகளில் தலை சிறந்தவற் போல் காணப்படுகிறார். தெய்வீக அஸ்திரங்களை செலுத்தும் திறமை பெற்றிருக்கிறார். அவரது வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள் ஐந்து தலை பாம்புகள் போல் ராட்சசர்களை ஓட ஓட துரத்தியது. ராட்சசர்கள் எங்கே ஒளிந்தாலும் தேடிப்போய் அவர்களை கொன்றது என்று ராமர் தனது வில்லில் இருந்து செலுத்திய அம்பின் வேகத்தையும் அபார திறமையையும் விவரித்துச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ராவணன் அந்த இரண்டு மனித பூச்சிகளை இப்போதே கொன்று விட்டு திரும்புகின்றேன் என்று கர்ஜனையுடன் ராவணன் எழுந்தான். அகம்பனன் ராவணனை தடுத்து நிறுத்தினான்.

ராமரின் பாராக்ரமத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் கேளுங்கள் என்று அகம்பனன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். நான் சொல்வதை கேளுங்கள். ராமர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள ராட்சசர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ராமரை எதிர்த்து யுத்தம் செய்தாலும் அவரை வெற்றி பெற முடியாது. அவரை கொல்ல எனக்கு தெரிந்த ஓர் உபாயத்தை சொல்கின்றேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் செயல் படுத்துங்கள் என்றான் அகம்பனன். உனது உபாயத்தை கூறு என்று ராவணன் அகம்பனனுக்கு கட்டளையிட்டான்.

ராமருடைய மனைவி சீதை இருக்கிறாள். பெண்களில் ரத்தினம் போன்ற பேரழகுடையவள். மூவுலகத்தில் தேடினாலும் அவளின் அழகுக்கு இணையாக யாரையும் பார்க்க முடியாது. அந்த பெரிய காட்டில் ராமரின் பாதுகாப்பில் இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் வஞ்சகமான உபாயத்தை கையாண்டு கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். மனைவியின் மேல் பேரன்பு வைத்திருக்கும் ராமர் அவளின் பிரிவைத் தாங்காமல் உயிரை விட்டுவிடுவார் என்று சொல்லி முடித்தான். ராவணன் நீண்ட நேரம் யோசித்து அகம்பனனுடைய யோசனை சரியானதாக இருக்கின்றது என்று அத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அடுத்த நாள் காலையில் தனது தேரோட்டியுடன் தான் மட்டும் தனியாக பறக்கும் தேரில் கிளம்பி தாடகையின் புதல்வனான மாரீசனின் ஆசிரமம் சென்று சேர்ந்தான் ராவணன்.

மாரீசன் பல வகையான உபசரணைகள் செய்து ராவணனை வரவேற்று பின்பு பேச ஆரம்பித்தான். ராட்சசர்களின் தலைவரே தங்கள் நாட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா நீங்கள் விரைவாக வந்திருப்பதை பார்த்தால் மனம் வருந்தும்படி ஏதோ தங்களுக்கு நடந்திருக்கின்றது என்று எண்ணுகின்றேன். என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். எனது ராஜ்யத்திற்கு உட்பட்ட காட்டில் உள்ள எனது அழிக்க முடியாத படைகள் அனைத்தையும் தசரதரின் புதல்வன் ராமன் அழித்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டான். இந்த அவமானம் போக அவனது மனைவி சீதையை கவர்ந்து செல்லவேண்டும் என்று முடிவு செய்து திட்டம் திட்டி இருக்கின்றேன். அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ராவணன் மாரீசனிடம் சொன்னான்.