ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 54

கேள்வி: உயிர்பலி குறித்து

மிக மிக கொடிய பாவம். இந்த பாவத்திற்கு பிராய்ச்சித்தம் என்பதே கிடையாது. அறியாமை மக்கள் செய்யலாம். அறிந்த பிறகு இதனை விட்டுவிட வேண்டும். ஒரு மனிதன் தன்னை விட தாழ்ந்த உயிரை இவ்வாறு துன்பப்படுத்துவதை இறைவன் ஒரு பொழுதும் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை செல்வத்திலும் பதவியிலும் சக்தி வாய்ந்த மனிதனைப் பார்த்து இன்னொரு மனிதன் நீ ஒரு 100 குழந்தைகளை பலியிட்டால் பதவி நிலைக்கும் என்று கூறுவதாகக் கொள்வோம். தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஊரிலே உள்ள 100 குழந்தைகளை கடத்தி சென்று அவன் பலி கொடுத்தால் அதை இந்த சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? ஒத்துக் கொள்ளாது அல்லவா? தங்கள் குழந்தைகளை இழக்க எந்த பெற்றொரும் விரும்பாதது போல இறைவனும் தான் படைத்த உயிர்களை தான் படைத்த இன்னொரு உயிர் துன்புறுத்துவதை ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள மாட்டார். இறைவனின் கடுமையான சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். அறியாமையால் கால காலம் இந்த தவறை மனிதர்கள் செய்கிறார்கள்.

கேள்வி: ஐயா நீங்கள் உயரம் குறைவு என எல்லோரும் கூறுகிறார்களே?

நான் ஆறடி உயரமப்பா அது அந்த நடிகனால் வந்த வினையப்பா

சுலோகம் -27 # 28

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #27

கூடியிருந்த அனைத்து உறவினர்களையும் நன்கு பார்த்த குந்தியின் மகனான அர்ஜூனன் மிகுந்த இரக்கம் கொண்டவனாக துயரத்துடன் பேச ஆரம்பித்தான்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தம் ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜூனனுக்கு இரக்கம் வர காரணம் என்ன?

யுத்தம் ஆரம்பித்தால் நான்கு பக்கமும் சூழ்ந்திருக்கின்ற உறவினர்கள் பலர் இந்த யுத்தத்தின் மூலமாக கொல்லப்படுவார்கள். உறவினர்கள் நண்பர்கள் மீது அர்ஜூனன் வைத்திருந்த பலவீனமான பற்று மற்றும் பாசம் காரணமாக அவனுக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #28

கிருஷ்ணா போர் புரிவதற்காக எனது உறவினர்கள் எனது முன்பாக ஒன்று கூடி நிற்பதைப் பார்க்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 53

அகத்திய மாமுனிவர்(குருநாதர்) கூறும் சூட்சுமம்

ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு பிறருக்கு சேவையும் பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்சுமம். நாங்கள் கூறுகின்ற இந்த சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை.

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க வழி சொல்லுங்கள்?

இறைவன் அருளால் இன்னும் ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் (முட்டாள்கள்) வரக்கூடிய துன்பங்கள்தான் இந்த உலகிலே அதிகம். தன் முனைப்பு ஆணவம் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் (இராஜ்ஜியம்) என்றுமே அறியா சனங்களால் (அறியாமையில் உள்ள மக்கள்) தீர்மானிக்கப் படுவதால் இந்த அறியாசனங்கள் அரியாசனங்களை சரியாக வைத்துக் கொள்ள தெரிவதில்லை. அறியாசனங்களின் இந்த அறியாசனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படிதான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறுவிதமாகக் கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒருவன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான் யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரெங்கும் அவனைப் பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதை செய்யும் பொழுது கண்டு கொள்ளாத சமுதாயம்\, தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால்தான் நாட்டில் சுபீட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

சுலோகம் -26

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #26

கூடியிருந்த இரண்டு படைகளிலும் நிற்கின்ற குருநாதர்கள் முப்பாட்டர் பாட்டனார்கள் பெரியப்பாக்கள் சித்தப்பாக்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் சகோதரர்கள் புதல்வர்கள் பேரன்கள் மற்றும் நண்பர்களும் அன்பர்களும் நிற்பதை அர்ஜூனன் கண்டான்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: இந்த சுலோகத்தில் இரண்டு படைகளிலும் உறவு முறையில் சொல்லப்பட்டவர்கள் யார் யார்?

குருநாதர்கள் – கிருபாச்சாரியாரும் துரோணாச்சாரியாரும்

முப்பாட்டர் – பாஹ்லீகர்

பாட்டனார்கள் – பீஷ்மரும் பாஹ்லீகரின் மகன் சோமதத்தரும்

பெரிப்பா மற்றும் சித்தப்பா – தந்தையைப் போல் மதிக்கத்தக்க சோமதத்தரின் மகன் பூரிச்ரவஸ் போன்ற தந்தையின் சகோதரர்கள்

தாய்மாமன்கள் – சல்லியனும் புருஜித்தும் குந்திபோஜனும்

சகோதரர்கள் – தன்னுடைய சகோதரர்கள் 4 பேரும் கௌரவர்கள் நூறு பேரும்

புதல்வர்கள் – அர்ஜூனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யுவும் இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த கடோத்கஜனும் உப பாண்டவர்களான யுதிஷ்டிரனுக்கு பிறந்த பிரதிவிந்த்யனும் பீமனுக்கு பிறந்த சுதசோமனும் அர்ஜூனனுக்கு பிறந்த சுருதகீர்த்தியும் நகுலனுக்கு பிறந்த சதாநீகனும் சகாதேவனுக்கு பிறந்த சுருதகர்மாவும்

பேரன் – தங்களுடைய புதல்வர்களின் மகன்கள் வயதை ஒத்தவர்கள்.

நண்பர்கள் – சிறு வயதில் குருகுலத்தில் உடன் விளையாடிய நண்பர்கள்

மாமனார்கள் – துருபதன் சைப்யன்

அன்பர்கள் – பிரதி உபகாரத்தை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வந்திருக்கும் மன்னர்கள் பலர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 52

கேள்வி: ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் சுலபமாகத் தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?

பரிபூரண சரணாகதியோடு இறைவனை வணங்குவது. கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது. நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுமாறு செய்வது. அன்றாடம் எதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தொண்டை செய்வது இது போதுமப்பா.

கேள்வி: ஸ்டான்லி மருத்துவமனையில் (சென்னை) ஜீவசமாதி கொண்டுள்ள இஸ்லாமிய மகானைப் பற்றி

இறைவனின் அருளால் மருத்துவமனையிலே அடங்கியுள்ள பிறை வர்க்க (இஸ்லாம்) மாந்தனைக் குறித்துக் கேட்டாய். வர்க்கம் தாண்டி இறையை நோக்கி தவம் செய்தவர்களில் அவனும் ஒருவன். சித்த பிரமை பிடித்தவர்களும் மனநிலையில் குழப்பம் உள்ளவர்களும் மனோரீதியாக முடிவெடுக்க முடியாதவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை தோறும் அங்கு சென்று பிராத்தனை செய்யலாம். நல்ல பலன் உண்டு. பிராத்தனை செய்கின்ற ஆத்மாக்களின் தன்மைகேற்ப அன்னவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டு அவர்களின் குறைகளைத் தீர்ப்பான் என்பது இன்றளவும் திண்ணம்.

சுலோகம் -25

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #25

பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரின் ரதங்களுக்கு முன்பாக தேரை கொண்டு சென்று நிறுத்திய கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பார்த்தனே யுத்தத்திற்காக ஒன்றாக கூடியிருக்கும் கௌரவர்களைப் பார் என்றார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனனை பார்த்தனே என்ற பெயரில் கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?

அர்ஜூனனின் தாய் குந்தியின் இயற்பெயர் பிருதை (சிறந்த அழகி என பொருள்) இவளது பெயரை வைத்து பிருதையின் மகனே என்ற பொருளுக்கு பார்த்தனே என்று கிருஷ்ணர் அர்ஜூனனை அழைத்தார். (இந்தப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்கள் ஆகையால் சமஸ்கிருதத்தில் மட்டுமே பொருள் புரிந்து கொள்ள முடியும்.)

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுத்தத்திற்காக ஒன்றாக கூடியிருக்கும் கௌரவர்களைப் பார் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் ஏன் கூறினார்?

கௌரவர்களை நன்றாகப் பார் என்ற சொல்லை சொல்லி அவர்கள் அனைவரும் உன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் என்று அர்ஜூனனுடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் பலவீனமான பந்த பாசத்தை தட்டி எழுப்பி விடுகிறார் கிருஷ்ணர். இந்த வார்த்தை அர்ஜூனனின் உள்ளத்தில் வேரூன்றி நின்று அவனை யுத்தம் செய்ய மறுக்கும் படி செய்கிறது. இதன் விளைவாக வேதத்தின் சுருக்கமான பகவத் கீதையை கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசித்து அதனை இந்த உலகத்திற்கு சொல்வதற்காக கௌரவர்களைப் பார் என்றார் கிருஷ்ணர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 51

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு

இறையின் அனுக்ரகம் மழை என்று வைத்துக் கொள்வோம். அதை ஒவ்வொரு மனித பாத்திரமும் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறையின் அருள் பிரசாதத்தை ஏன் பல்வேறு மனிதர்களும் உணர்வதில்லை? ஏனென்றால் மழை நீரை ஏந்தும் பாத்திரமானது தூய்மையானதாகவும் சாளரங்கள் (ஓட்டைகள்) இல்லாமலும் இருக்க வேண்டும். திறந்த மனம் இல்லாமலும் பெருந்தன்மை இல்லாமலும் சுயநலமும் புலனாசையும் இச்சையும் நிரம்பிய மனிதனால் இறையருளைப் பெற இயலாது. இறையருளைப் பெறுவதற்கு ஏற்ப மனிதன் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும் பயிற்சியும் வேண்டும். தோற்று தோற்றுத்தான் ஆன்மீகத்தில் மேலேற வேண்டும். இது கலிகாலத்தில் எப்படி சாத்தியம்? சித்தர்களுக்கு என்ன? குடும்ப வாழ்க்கை ஏதும் இல்லை ஆசா பாசங்கள் இல்லை மனிதர்களால் அவ்வாறு ஏகந்தமாய் இருக்க முடியுமா? (என்று கூட கேட்கலாம்). ஆனால் ஆத்ம பலம் பெருகிவிட்டால் மனித வாழ்வின் சிக்கல்கள் எல்லாம் சிக்கலே அல்ல. மனிதன் புலன் ஆசைகளை விட்டு வெளியே வந்து தன்னை மூன்றாவது மனிதன் போல் பார்த்து தேகத்தையும் ஆத்மாவையும் தனித்தனியாகப் பார்க்க பழகி தியானம் யோகம் ஸ்தல யாத்திரை யாகம் அபிஷேகங்கள் அறங்கள் போன்றவற்றை அவன் செய்ய செய்ய அவனுக்குள் உள்ள ஆத்ம பலம் பெருகும்.

சுலோகம் -24

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #24

சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். பாரத நாட்டின் அரசே குடாகேசன் (அர்ஜூனன்) கூறியதை கேட்ட கிருஷ்ணர் உயர்ந்த தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் கொண்டு சென்றார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனனை சஞ்ஜயன் ஏன் குடாகேசன் என்ற பெயரில் கூறினார்?

குடகா என்றால் தூக்கம் குடாகேசன் என்றால் தூக்கத்தின் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டுபவன் என்று பொருள். அர்ஜூனன் தூக்கத்தை வென்றவன். அவன் எப்போதும் உடல் அசதிக்கு ஆட்படுவதில்லை எப்போதும் கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பவன். இந்த பெயரை சொல்லி அழைப்பதன் மூலமாக அர்ஜூனனை கௌரவர்கள் வெற்றி கொள்வது கடினம் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்கிறார் சஞ்ஜயன்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணர் இருக்கும் தேர் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுவதற்கான காரணம் சுலோகம் 14 இல் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 50

கேள்வி: தீபம் ஏற்றுவதின் பலன்

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும் பாவமும் ஆகும். ஔி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி மாந்தனின் (மனிதனின்) மனதிலே உள்ள இருள் அகற்றி சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஔி வளரட்டும் ஔி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும். இருந்தாலும் கூட உயர் தரமான நெய்யினை கொண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பொழுது அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும் ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு வெறும் எந்திரம் போல் தீபம் ஏற்றாமல் ஆத்மார்த்தமான பிராத்தனை செய்து கொண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற ஏற்றுபவனுக்கு ஏற்றப்படும் இடத்தில் அதிலே சுற்றி இருந்து பங்கு பெறும் மனிதனுக்கு பாவ வினைகள் படிப்படியாக குறைந்து நல் வினைகள் கூடி அவன் எதிர்பார்க்கக்கூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.

கோவில்களில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனின் அன்றாட கலிகால வாழ்க்கையில் நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும் சூழலும் இட வசதியும் இருந்தால் எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம் அதில் பலன் உண்டு. இறையருளும் உண்டு. ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும் போது பஞ்சாட்சரம் ஓதித்தான் அதை கையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: ஐயா என்னை சுற்றி உள்ள எல்லோரும் நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தார் எல்லோரும் இப்படி பணத்தை இறைத்துக் கொண்டு கோவிலை சுற்றிக் கொண்டு இருக்கிறாயே என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்கிறாயே என்று கேலி செய்கிறார்களே ஐயா?

மிகவும் நல்ல விஷயமப்பா உன் கடனை தானே முன்வந்து அவன் அடைக்க ஒப்புக் கொண்டு உனக்கு உண்மையில் உதவுகிறானப்பா.

சுலோகம் -23

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #23

மிகவும் தீய புத்தியுடைய துரியோதனனின் நலனை விரும்பி எந்தெந்த அரசர்கள் இந்தப் படையில் போர் புரிய வந்திருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் துரியோதனனை ஏன் தீய புத்தியுடையவன் என்று கூறினான்?

ஆதிபர்வத்தில் அரக்கு மாளிகை கட்டி பாண்டவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு எரிக்க முயன்றது மற்றும் சூதாட்டத்திற்கு பின்பு திரெளபதியை சபையில் இருக்கும் அனைவருக்கும் முன்பாக துகிலுரிக்கச் செய்தது அதன் பிறகு செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட காலம் அஞ்ஞாத வாசமும் இருந்த பிறகும் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்க மறுத்தது மற்றும் தங்களுக்கு உதவி செய்ய வந்த மாமா சல்லியனையும் வஞ்சகமாக அவனது பக்கம் சேர்த்துக் கொண்டது இவை அனைத்தையும் செய்த துரியோதனனை அர்ஜூனன் தீய புத்தி உடையவன் என்று கூறினான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரியோதனனின் நலனை விரும்பி அவனுடன் யுத்தம் செய்ய வந்த அரசர்களை பார்க்கிறேன் என்று அர்ஜூனன் ஏன் கூறினான்?

தீய புத்தியுடைய துரியோதனனின் செயல்களை உலகத்திலுள்ள அனைவரும் அறிவார்கள். அவன் செய்யும் தீய செயல்களை அறிந்தும் அதை தடுக்கவோ அல்லது புத்தி சொல்லவோ இயலாமல் அவனுக்கு உதவி செய்ய பல அரசர்கள் வந்திருக்கிறார்கள். தீய செயல்களை செய்பவனுக்கு புத்தி சொல்லி திருத்துவதை விட்டு விட்டு இவர்களும் அவன் செய்யும் தவறுக்கு துணை போகிறார்கள். வந்திருப்பவர்கள் யார் யார் என்று தெரிந்து கொண்டு அதர்மத்திற்கு துணை போகின்றவர்களுக்கு அதன் விளைவை யுத்த களத்தில் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அரசர்களை பார்க்க அர்ஜூனன் விரும்பினான்.