ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 184

கேள்வி: நீதிக் கதைகளை (பக்தி கதைகளை) எங்களுக்கு சொல்ல வேண்டும்:

இறைவன் அருளால் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். சதாசர்வகாலமும் நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணினால் இறைவன் அனைத்துக்கும் பொறுப்பாகி விடுகிறார். எனவே இதை எத்தனை வாய் மொழியாக கூறினாலும் மனிதனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஆங்கோர் தேசத்தில் (நாட்டில்) பலகாலம் முன்பு நடந்தது அப்பா. இதை எல்லாம் வெறும் கதை என்றும் மூட நம்பிக்கை என்றும் பலர் எண்ணுகிறார்கள். ஆங்கே மிகப்பெரிய ஏழை ஒருவன். சிறு தொழில் செய்து வாழ்ந்து வந்தான். சதாசர்வகாலம் பரம்பொருளை சிவ வடிவிலே உணர்ந்து நமசிவாயம் நமசிவாயம் என்று கூறிக் கொண்டு இருந்தான். யாராவது எதாவது வந்து கேட்டால் நமசிவாயம் அருள் இருந்தால் தருகிறேன் என்பான். அப்பா இந்த வேலையை செய்து தருகிறாயா? என்றால் நமசிவாயம் செய்யச் சொன்னால் செய்கிறேன் என்பான். அப்பா எனக்கு இது வேண்டும். தருகிறாயா? என்றால் நமசிவாயம் தரச் சொன்னால் தருகிறேன் என்பான். இப்படி சதாசர்வ காலமும் பார்ப்பதெல்லாம் அவனுக்கு நமசிவாயமாகவே பட்டது. மிகப் பெரிய வித்தை கற்காமலோ ஞான உபதேசம் இல்லாமலோ வெறும் பிறவியில் இருந்து அன்னவனுக்கு சிவன் மீது மிகப்பெரிய பற்றுதல் வந்துவிட்டது. சிறு தொழில் மூலம் கிடைத்த சிறிய வருமானத்தில் அவனும் அவன் குடும்பமும் திருப்தியாக வாழ்ந்து வந்தது. அப்பொழுது அனல் காலம் என்பதால் அவன் ஒரு நாள் காற்றை நாடி இல்லத்தின் வாயிலிலே கண் அயர்ந்து கொண்டிருந்தான்.

நமசிவாயம் அருள் இருந்தால் எனக்கு உறக்கம் வரட்டும். நமசிவாயம் எண்ணினால் இன்று தென்றல் வீசட்டும். நமச்சிவாயம் எண்ணினால் நான் நன்றாகத் தூங்குவேன் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் கள்வர்கள் (திருடர்கள்) சிலர் அரண்மனையில் இருந்து சில பொருள்களை திருடிக் கொண்டு ஓட காவலர்கள் துரத்த இங்கே இவன் இருப்பதை அறியாமல் இவன் மீது விழுந்தடித்துக் கொண்டு இவன் இல்லத்திற்குள் ஓடி ஔிந்து கொள்ள அப்பொழுது அந்த காவலர்கள் பின் தொடர்ந்து வந்து அந்த கள்வர்களை எல்லாம் பிடித்துக் கொண்டு இவனையும் பிடித்துக் கொண்டு சென்றார்கள். அனைவரையும் அரசன் முன் நிறுத்தி இந்த கள்வர்கள் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார்கள். இதோ இந்த மனிதன் வீட்டில்தான் ஔிந்து இருந்தார்கள். இவன்தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று கூற அரசன் அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

அரசன்: நீ என்னப்பா கூறுகிறாய்?

நமசிவாயம் அருளாலே நான் இரவு உணவை முடித்து விட்டு நமசிவாயம் அருளாலே காற்றில்லை என்பதால் நான் நமசிவாயம் அருளாலே இல்லத்தின் வெளியே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருளாலே நான் கட்டிலிலே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் தென்றல் வரட்டும் என்று இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் உறக்கம் வரட்டும் என்று படுத்து இருந்தேன். ஆனால் நமசிவாயம் என்னவோ கள்வர்களை (திருடர்களை) அனுப்பி வைத்து இருக்கிறது. நமசிவாயமே கள்வர்களை அனுப்பி இருக்கிறார். நமசிவாயம் அருளால் தான் கள்வர்கள் உங்கள் அரண்மனையில் இருந்து பொருள்களை எடுத்து இருக்கிறார்கள். நமசிவாயம் அருள்தான் கள்வர்களை என் இல்லத்திற்குள் புக வைத்தது. அந்த நமசிவாயம் அருள்தான் உங்கள் கள்வர்களையும் என் இல்லத்திற்கு வரவழைத்தது. அதே நமசிவாயத்தின் அருள்தான் காவலர்களிடம் கள்வர்கள் பிடிபட்டார்கள். அதே நமசிவாயத்தின் அருளால்தான் நானும் பிடிபட்டிருக்கிறேன். நமசிவாயம் அருளால் அரசே நீங்கள் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமசிவாயத்தின் அருளால்தான் நான் கூறிக் கொண்டு இருக்கிறேன். எனவே நமசிவாயத்தின் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்று இன்னவன் கூற

செய்வதை எல்லாம் செய்துவிட்டு இறைவன் மீது நீ பழி போடுகிறாயே? என்று எல்லோரும் சொல்ல நமசிவாயம் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நமசிவாயம் எண்ணம். நீங்கள் எல்லாம் என்னை கடுமையாக வசை பாட வேண்டும் என்று இருக்கிறது. நமசிவாயத்தின் எண்ணம் அப்படி இருந்தால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டுமே என்று இன்னவன் கூற நமசிவாயம் அருள் என்று கூறுகிறாயே இப்பொழுது நமசிவாயம் உன்னை தூக்கில் போட எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார். உன்னை தூக்கில் போடப் போகிறேன். உன் உயிரை எடுக்கப் போகிறேன் என்று அரசன் கூற ஆஹா நமசிவாயத்தின் கருணையே கருணை. நமசிவாயத்தின் அருளால்தான் இந்த சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கிறது. இந்ந உடல் பாரமானது. இந்த உடலுக்குள் இந்த ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்மாவை விடுதலை செய்ய என் அப்பன் முடிவு செய்து விட்டார் போலும். நமசிவாயம் உங்கள் உடலில் புகுந்து கொண்டு அரசே இப்படியொரு அருமையான கட்டளையைப் போட்டிருக்கிறார். எனவே நமசிவாயம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டுப் போகட்டும். நமசிவாயம் எண்ணப்படி நான் சித்தமாக இருக்கிறேன். நமசிவாயத்தின் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு அடிபணிய நான் காத்திருக்கிறேன். எனவே நமசிவாயமே அனைத்துக்கும் பொறுப்பு என்று இவன் கூற அரசன் அவனின் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்து மற்ற கள்வர்களை (திருடர்களை) சிறைக்கு அனுப்பிவிட்டு இவனை அனுப்பி வைத்துவிட்டார்.

எனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு கதை போல் தோன்றினாலும் அப்படியொரு தீர்க்கமான அழுத்தந்திருத்தமான பக்தி இறை மீது இருந்தால் என்றும் அனைத்தையும் அனைவரும் சாதிக்கலாம் என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.

துளசி

அதிகாலையில் தினமும் எழுந்து ஏழை ஒருவன் தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து அதைச் சந்தையில் விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிலில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான். ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான். கீரைகளைப் பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது. உடனே நம்மால் தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை. இந்த துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி. முனிவர் ஏழையைப் பார்த்தார். அதேசமயம் அவன் பின்னே அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். தன் கண்ணை மூடி ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அம்சத்தில் ஒருவரான ராகு பகவான் என்பது தெரிந்தது. முனிவர் உடனே ஏழையிடம் உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம். இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு குடிலின் பின் பக்கம் சென்று ராகு பகவானின் மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். ஏழையின் பின்னால் இருந்த ராகு பகவானும் குடிலின் பின்னே இருந்த முனிவரின் முன்பாக வந்து நின்று வணங்கி சுவாமி என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். முனிவரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா? என்று கேட்டார். அதற்கு ராகு சுவாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டி விட்டு என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.

முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினார். ராகுவே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்றார். ராகுவோ சுவாமி இத்தனைக் காலம் நீங்கள் இறைவனை பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான். அதனால் நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன் என்றார். முனிவரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை நான் செய்த பூஜை பலன்கள் முழுவதையும் அந்த ஏழைக்கு கொடுக்கிறேன் என்று கூறி ஏழைக்குத் தன் பூஜை பலனை கொடுக்க ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது. முனிவர் அந்த ஏழையிடம் வந்து இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா? என்றார். ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 183

தருமத்தைப் பற்றி குருநாதரின் தத்துவ விளக்கம்:

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

தருமமோ தர்மம் – தர்மத்தில் தருமம்.
தருமமோ தர்மம் – அதர்மமில்லா தருமம்.
தருமமோ தர்மம் – தர்மமே தருமம்.
தருமமோ தர்மம் – தருவதே தருமம்.
தருமமோ யார் தருகிறார் யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா.
தருமமோ தர்மம் – தன்னிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மம் செய்கின்றோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பேதங்கள் நோக்காது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – உறவு நட்பு பகை பாராது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனே தர்மம் அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனுக்கு அப்பனே தருமம் அன்னைக்கு அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தருமம்.
தருமமோ தர்மம் – அகத்தில் சாந்தம் பொங்க வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அதனை உணர்ந்து உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் தர்மத்தை தடுக்காதிருப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – பற்றில்லா செய்வதே தருமம். அறப்பண்போடு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நலம் விட்டும் பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம்.
தருமமோ தர்மம் – தன் இனமில்லா பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னையறிந்து தனக்குள்ள இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நட்டம் (நஷ்டம்) தவிர்ப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தருமம்.
தருமமோ தர்மம் – இலகுவாக வாழ்வை மாற்றித் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலை தாண்டி மேல் உயர வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தருமம். தன்னையறிய உதவும் தருமம்.
தருமமோ தர்மம் – தன்னலமில்லா போது நலத்தை வளர்ப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டும் தருமம்.
தருமமோ தர்மம் – உறவு தாண்டி செய்வதே தருமம். உயிர் காக்க உதவுவது தருமம்.
தருமமோ தர்மம் – உள்ளன்போடு செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை உனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இது போல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம் (கர்மம்).
தருமமோ தர்மம் – இதனை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தினம் நாளும் செய்வதை வகுத்து வகுத்து பிரித்துப் பார்த்து அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை

பெருமாள் சனிக்கிழமை உகந்த நாளாக வைத்து வழிபடப்படுகிறார். இதற்கான காரணம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும் யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணன் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து சகோதரியே உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை அமங்களமானவன் என்று கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அங்கே வந்த நாரதர் சனீஸ்வரா யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய் என்று கூறினார்.

கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர் ஹோலிகா என்று இரண்யனுக்கொரு சகோதரி இருந்தாள். அவள் தீயால் தன் உடம்பு சுடப்படாமல் இருக்கும் விசேஷ வரத்தை வைத்திருக்கிறாள். பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரண்யன் ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா தானும் தீக்குள் இறங்கி அவனை வெளியே வர முடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார். ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரண்யனைக் கொன்ற நரசிம்மராக வந்த திருமாலை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள்.

கண்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள் ஹோலிகா. சனீஸ்வரா நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கி விட்டால் கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம் என்றார். அடுத்த நாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்து விட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிப்பார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீஸ்வரனைக் கண்ணனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன் சனீஸ்வரா நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28 வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன் என்று வரமளித்தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 182

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

இஃதொப்ப அறம் வருகை அதைத் தொடர்ந்து இறை வருகை.
இயம்புங்கால் சத்தியம் வருகை பின்னாலே பரம்பொருள் வருகை.
இயம்பிடுவோம் நல் உறவு வருகை அவற்றால் நல் உரிமை வருகை.
நன்றில்லா சூழல் வருகை. என்றால் அதோடு தீ கர்மா வருகை.
நலமான பிராத்தனை வருகை. தொடர நன்றில்லா சூழல் வருகையாகா.
திருப்தி வருகை. பெருங்கால் அமைதி வருகை.
அழகு வருகை. பெருங்கால் உடன் அவதி வருகை.
யுவதி (பெண்) வருகை. பெருங்கால் உடன் சலனம் வருகை.
பக்தி வருகை. அவற்றாலே புண்ணியம் வருகை.
பொன் வருகை. நல்கிடும் தேவையற்ற பொறாமை வருகை.
நன் வருகை. உள்ளத்தில் எழ பரப்பிடும் நல்மதிப்பு வருகை.
உயர் சொல் வருகை. வரத்தான் பல் வருகை வருமே.
அதிக நெல் வருகை. கிருடி தசத்தோனுக்குத் தருமே மகிழ்வு வருகை.
எவ்வருகை ஆனாலும் எதிர்பார்ப்பு வருகை இல்லாதிருக்க என்றும் தொடரும் சாந்தி வருகை.
பிழை வருகை தொடர அழும் வருகை தொடரும்.
பீடு வருகை. வேண்டுமென்றால் வாயை மூடும் வருகை வேண்டும்.
உள்ளுக்குள் இறைவனைத் தேடும் வருகை. அவற்றை நாளும் தேடு வருகை.
நாடி நாடி அயர்ந்து போகாமல் புத்துணர்வில் சிலிர்க்கும் வருகை.
மயக்க வருகையால் வரும் தயக்க வருகை. உள்ளம் சோர்வு வருகை.
தொடரும் எண்ண வருகை. நல் எண்ண வருகை சோரா வருகையாகும்.
பொன் வருகை விட்டு புகழ் வருகை விட்டு பற்றற்ற வருகை.
நிதி வருகை விட்டு நீதி வருகை. அதுவே புண்ணிய நதி வருகையாகும்.
காலம் காலமாக நல் இசை வருகை. மனதிற்கு நல் சுவை வருகை.
கடந்த கால அசை வருகை. சோகம் தரா சுகம் தர எதிர்கால நிலை வருகை.
எதுவானாலும் இறை வருகை இருக்கும் வண்ணம் சுகம் வருகை.
தொடரும் நேரம் வருகை. தொடரா தேகத்தில் பிணி வருகை கர்மத்தின் தனி வருகையாகும்.
இனி வருகை இதம் வருகையாக உள்ள உலைச்சல் வருகை விட்டுவிடும் வருகையாக
நித்தம் நித்தம் சித்தம் வருகையாக மனம் கொண்டாடு வருகையாக
தேகத்தில் அசதி வருகை வரா. ஆக்கையில் தளர் வருகை வரா.
என்றென்றும் அன்பு வருகை வர தேவையில்லா விமர்சன வருகை விட.
உள்ள ஆசனத்தில் இறை வருகை தன்னை அமர வைக்க.
இரை வருகை வாழ்வில்லை.
இறை வருகை வாழ்விருக்கும்.
இனி வருகை இனிய வருகை வாழ மற்றவரிடம் இருந்து தனி வருகை வாழ.
வாழ்க்கையில் நீடித்த இன்பக்கனி வருகை வாழ
பல முனி வருகை நல்லாசி தர முகத்தில் ஜோதி வருகை மிளிர
அசதி வருகை நீங்கி அயர்வு வருகை ஒழிந்து என்றென்றும் மகிழ்வு வருகை தொடர
இறை வருகை எண்ணி இனி இறையருளே செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக் கொள்ள அதுவே நல் வருகையாகும். ஆசிகள்.

வருகை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

இது போலவே அறம் தர்மத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அதைத் தொடர்ந்து இறைவனும் வருவான். சொல்லப் போனால் சத்தியத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அவர்களின் பின்னாலேயே பரம்பொருள் வருவான். சொல்லுவோம் நன்மையான உறவுகளை எவர் வளர்த்துக் கொள்கிறாரோ அவற்றால் அவருக்கு நல்ல உரிமைகளும் கிடைக்கும். நன்மை இல்லாத சுற்றுப் புறத்தை யார் வளர்த்துக் கொள்கிறாரோ அவருக்கு அந்த சுற்றுப் புறத்தோடு தீய கொடுமையான கர்மங்களும் வரும். நல்ல விதத்தில் அன்போடு செய்யப்படும் பிராத்தனை யார் செய்கிறார்களோ அவரைத் தொடர்ந்து நன்மை இல்லாத சுற்றுச் சூழல் எப்போதும் வராது. தம்மிடம் இருப்பதில் எவர் திருப்தியாக இருக்கின்றாரோ உண்மையான திருப்தி கிடைத்த பொழுதே மன அமைதியும் கிடைக்கும். வெறும் உடல் அழகை வளர்த்து வந்தால் அழகு கிடைத்த பொழுதே அதனுடன் சேர்ந்து துன்பமும் நோய்களும் வரும். இளம் பெண்ணை அடைய வேண்டும் என்று நினைத்தால் அப்பெண் கிடைத்த பொழுதே அவளுடன் சேர்ந்து மனதில் காம சலனங்களும் வரும். உண்மையான பக்தி ஒருவருக்கு வந்தால் அந்த பக்தியினாலே புண்ணியம் வரும். ஒருவருக்கு அதிகமாக செல்வம் வந்தால் அது கொடுக்கும் தேவை இல்லாத / வீணான பொறாமையும் வரும். நன்மைகள் உள்ளத்தில் வந்தால் அவருடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் எழுந்து அவரைச் சுற்றி நல்ல அதிர்வலைகளாக பரவி அதனால் பிறருக்கு அவர் மேல் நல்ல மரியாதை வரும்.

உயர்வான / கனிவான / இனிமையான வார்த்தைகள் ஒருவரிடமிருந்து வந்தால் அது வர வரவே அனைத்து பல்லும் தெரியும் படி ஆத்மார்த்தமான சிரிப்பும் பிறரிடமிருந்து வந்து கொண்டே இருக்குமே. அதிகமாக நெல் தானியங்கள் விளைந்து வந்தால் கஷ்டப்பட்டு விவசாயத்தில் இருக்கும் பத்து விதமான செயல்களையும் செய்து அறுவடை செய்தவனுக்கு அதுவே தரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும். எந்த விதமான நன்மை தீமைகள் வருவதாக இருந்தாலும் அதை எதிர்பார்த்து வருகின்ற உள்ளம் இல்லாமல் எவர் இருக்கிறாரோ அவருக்கு எப்போதும் தொடர்ச்சியாக அமைதி வரும். தவறானவை வரும் பொழுது அதைத் தொடர்ந்து துன்பத்தினால் அழுகை வருவதும் தொடரும். கெடுதல் வரும் பொழுது அதை அனைவருக்கும் சென்று சொல்லிக் கொண்டு இருக்காமல் வரும் கெடுதல்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் மன பலம் வர வேண்டும். உள்ளுக்குள் இறைவனை உண்மையான தேடுதல் வந்து விட்டால் அவற்றை தினமும் அவரைத் தேடி இறை ஞானமும் தன்னாலேயே வரும். இறைவனைத் தேடி தேடி சோர்ந்து போகாமல் புத்துணர்ச்சி பெற்று நடக்கும் அதிசயங்களால் சிலிர்த்து விடும் அளவிற்கு நன்மைகள் வரும். மாயையில் மயங்கி இருக்கின்றவர்கள் இறைவனுக்காக எதைச் செய்தாலும் அதில் ஒரு இனம் புரியாத தயக்கமே வந்தால் அவர்களின் உள்ளம் சோர்ந்து போகும். ஒருவருக்குத் தொடர்ச்சியாக நல்ல எண்ணங்கள் வந்து கொண்டே இருந்தால் அந்த நல்ல எண்ணங்களால் வரும் நல்ல அதிர்வலைகளால் எப்போதும் சோர்வு என்பதே வராமல் இருக்கும்.

செல்வம் வந்தால் அதை விட்டுவிட தர்மத்தை வளர்க்க வேண்டும். புகழ்ச்சி வந்தால் அதை விட்டுவிட பெருந்தன்மை வளர்க்க வேண்டும் அப்போது ஒருவருக்கு எதன் மேலும் பற்று இல்லாத நிலை வரும். செல்வம் வந்தால் அதை விட்டுவிட்டு தர்மத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே புண்ணியங்களை ஆறு போல அழைத்து வரும். காலம் காலமாக நன்றாக அமைக்கப்பட்ட இசை வந்தால் அதை கேட்கின்ற மனதிற்கு நன்மையான இனிமை வரும். கடந்த கால விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி அதில் நாம் செய்த தவறுகளை பார்த்து திருத்திக் கொண்டு இருந்தால் சோகம் இல்லாத சுகத்தை அது தருகின்ற அளவிற்கு எதிர் காலத்தில் நல்ல நிலை கிடைக்கும். எதுவானாலும் இறைவனை நமது எண்ணத்தில் வைத்து இருக்கும்படி செய்து கொண்டே இருந்தால் நல்ல இன்பத்தை கொடுக்கின்ற விஷயங்களும் நடக்கும். நன்மையைத் தொடர்ந்து செய்கின்ற காலங்களில் நன்மை வந்து கொண்டே இருக்கும். நன்மையை தொடர்ந்து செய்யாத உடலில் விதவிதமான நோய்கள் வருவது மட்டுமின்றி தீய கர்மங்களும் தனியாக வந்து சேரும். இனிமேல் எதிர்காலத்தில் வருகின்ற அனைத்தும் இதமான அனுபவத்தைக் கொடுக்கும் காலங்களாகவும் உள்ளத்தில் அமைதி இன்மை வந்து சேர்வதை விட்டு விடுகின்ற காலங்களாகவும் அமைய வேண்டும் என்றால் தினம் தினமும் எண்ணத்தில் இறைவனை வைத்து மனதில் இறைவனையே போற்றி வணங்கி வர வேண்டும் அப்படி செய்பவர்களின் உடலில் சோர்வு என்பதே வராது. அவர் உடலுக்கும் முதிர்ச்சியால் வரும் தளர்வும் வராது.

என்றென்றும் அனைவரிடத்திலும் அன்பு வர வேண்டும் மற்றவர்களிடம் தேவை இல்லாத வீண் விமர்சனங்கள் வருவதை விட்டுவிட வேண்டும். நம்மிடம் உள்ள இருக்கையில் / அமர்ந்து இருக்கின்ற விதத்தில் இறைவனை வரவழைத்து தம்மேடு அவனையும் அமர்ந்து இருக்கும் படி வைக்க வேண்டும் / தியானம் செய்து இறைவனை நமது மனதிற்குள் வீற்றிருக்கும் படி செய்ய வேண்டும். உணவு எப்போது கிடைக்கும் என்று அதற்காக அலைவது வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இறைவன் எப்போது கிடைப்பான் என்று அதற்காக முயற்சி செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். இனி எதிர்காலத்தில் வரும் அனைத்தும் இனியவையாகவே வர வேண்டும் என்று வாழ்வதற்கு மற்றவரிடம் இருந்து தனித்து இருக்கும் தியான வாழ்க்கையை வாழுங்கள். வாழ்க்கையில் நீடித்த இன்பங்கள் நல்ல பழங்களைப் போல சுவையுடன் வரும் வாழ்க்கையை முறைப்படி வாழ்பவர்களுக்கு. பல விதமான சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் இந்த உலகத்தில் வருவது நல்லாசி தர முகத்தில் ஜோதி வந்து பிரகாசிக்கவே சோர்வு வருவதை நீக்கி சோர்வு வருவதை ஒழித்து எப்போதும் மகிழ்வு வருவது தொடர்ந்து இருக்க இறைவனை உள்ளத்தில் வர வைத்து அவனையே எப்போதும் எண்ணிக் கொண்டு இனி இறையருளே நோக்கி செல்லும் விதத்தில் நமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டால் அதுவே நன்மையான பல இறை அருளைக் கொண்டு வரும் ஆசிகள்.

வினாயகர்

இந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலையின் உச்சியில் 700 வருடங்களாக இருக்கும் வினாயகர். யத்னயா கசடா என்ற திருவிழா பாரம்பரியமாக வருடத்தின் ஒரு சிறப்பு நாளில் தொடங்கி 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 181

சொல்லில் உள்ள சொல் தன்மை புரியும் வண்ணம் அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

சொல்லின் அச்சொல்லின் தன்மை புரிபடா போயின் சொன்ன சொல்லில் சொல்லின் வாக்கு வீண் போல் தோன்றினாலும் சொல்லில் உள்ள சொல்லின் தன்மை சொன்ன தன்மையும் எவனுக்கு சொல்லப்பட்டதோ அவன் மனதின் தன்மைக்கு ஏற்ப சொல்வது புரிந்து விட்டால் சொல்லில் உள்ள சொல்லின் தன்மை புரிந்ததால் சொல் சொன்னதின் பங்கு பூரணமாகும்.

சொல்லில் சொல்லின் தன்மை சொன்ன தன்மை சொல்லில் முழுவதும் புரிபடாமல் போகுங்கால் சொன்னதின் பயன்பாடு சொல்லில் சொன்ன சொல்லில் வெளிவராது போகுமப்பா.

சொல்லில் உள்ள சொல்லின் தன்மை சொன்ன பின் அச்சொல்லை ஆய்ந்து ஆய்ந்து சொல்லின் அச்சொல்லை சொல்லாகக் கொண்டு சொன்னதின் சொல்தன்மை புரிபட சொன்ன சொல்லின் அர்த்தமும் சொல்லில் உள்ள சொல்லின் அர்த்தமும் புரிபட சொன்ன சொல்லில் உள்ள தன்மை சொல்லின் தன்மை இரண்டு நோக்கமும் நிறைவேறும் ஆசிகள்.

சொல் என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 181

சொல்லில் உள்ள சொல் தன்மை புரியும் வண்ணம் அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

வாக்கு கொடுக்கும் போது அந்த வாக்கில் வழங்கப்படும் சில வார்த்தைகளின் உண்மை விளக்கம் புரியாமல் போய் விட்டால் கொடுத்த வாக்கில் இருக்கும் வார்த்தைகளில் சில வார்த்தைகள் மொத்த வாக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டது போல் தோன்றினாலும் கொடுத்த மொத்த வாக்கில் அந்த சில வார்த்தைகளின் உண்மை விளக்கமும் கொடுக்கப்பட்ட விதங்களும் எவனுக்கு சொல்லப்பட்டதோ அவன் மனதின் புரிதல் தன்மைக்கு ஏற்ற மாதிரியே கொடுக்கப்பட்டது அப்படியே அது புரிந்து விட்டால் கொடுக்கப்பட்ட வாக்கில் அனைத்து வார்த்தைகளின் உண்மை விளக்கம் புரிந்து விட்டால் வாக்கு கொடுத்ததின் அருளானது முழுமை அடையும்.

கொடுத்த வாக்கில் உள்ள வார்த்தைகளின் உண்மை விளக்கமும் கொடுக்கப்பட்ட விதமும் வாக்கில் முழுவதும் புரியாமல் போய் விடும் காலத்தில் வாக்கு கொடுத்ததின் அருளானது வாக்கில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் தெளிவாக பயன் கிடைக்காமல் போகுமப்பா.

கொடுக்கப்பட்ட வாக்கில் உள்ள வார்த்தைகளின் உண்மை விளக்கத்தை வாக்கு கொடுக்கப்பட்ட பிறகோ அல்லது அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகோ கொடுக்கப்பட்ட வாக்கில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் தினமும் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்து தன்னால் முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் கொடுத்த வாக்கில் உள்ள சில புரியாத வார்த்தைகளையே தமக்கு மிகவும் முக்கியமாகக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று எண்ணிக் கொண்டு வாக்கு கொடுக்கப்பட்டதின் வார்த்தை விளக்கங்களும் கொடுக்கப் பட்ட விதங்களும் நன்றாக புரிந்து கொள்ளும் படி கொடுத்த வாக்கில் உள்ள அனைத்து வார்த்தைகளின் உண்மையான விளக்கங்களும் வாக்கில் சில புரியாத வார்த்தைகளின் உண்மையான விளக்கங்களும் தாமாகவே புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்கில் முழு விளக்கங்களும் கொடுக்கப்பட்ட வாக்கின் விதங்களும் ஆகிய இரண்டையும் அருளிய காரணங்களும் நிறைவு பெறும் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 180

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

துதியாமை செய்வாய் ஆயினும் மதியாமை செய்யாய் இறையை உள்ளத்தில் வாழ்ந்தாய் நல் கதியாமை தொடராது. உணர்வாய். சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில் நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையால் மெய் புகழாமை அவனுக்கு வராது. எத்தனை அறியாமை தலை கனத்தால் பிறரை மதியாமை பொல்லாமை பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு வெறுப்பாமை தொடர கர்மாவை மறக்கிறான் மாந்தன். உண்மையை சொல்லாமை அறத்தை செய்யாமை சினத்தை விடாமை கடமையை தொடராமை காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள இவற்றால் உயராமை கொள்கிறான். பொறாமை விட்டு போதாமையிலும் பொல்லாமை கொள்ளாது உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை. பதவி நிலையாமை தனம் நிலையாமை அழகு நிலையாமை அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது தேகத்தை (உடலை) வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை தேவை. தேவையில்லா பொறாமை ஆற்றாமை அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து ஆத்மா உணராமை வாழாமை தொட்டதற்கு எல்லாம் வருத்தாமை வாழும் வழி தொடர புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை பரியாமை. தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை அணைந்து பரியாமை வளர்ந்து தெரியாமை எது குறித்தும் வாழாமை வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.

ஆமை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 180

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

போற்றி வணங்காமல் இருந்தீர்கள் என்றாலும் பரவாயில்லை மதிக்காது இருக்க வேண்டாம். இறையை உள்ளத்தில் வைத்து வணங்க வில்லை என்றால் முக்திக்கான வழிகள் தொடர்ந்து வராது. இதனை உணர்வாய். ஒருவருக்கொருவர் சதி வேலைகளை செய்யும் மனிதர்கள் பிறன் நலன் கருதாமல் இருப்பதை செய்து வாழ்ந்து வந்தால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து இவற்றை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் இதனை சரியான முறையில் கற்றுக் கொள்ளாமல் நல்லவற்றை கருத்தில் வைக்காததால் கோபம் வீண் புகழ்ச்சியை தேடி செல்லாத பிறரை நல்ல முறையில் புகழ்ந்து பேசாமல் வாழும் மனிதனின் நற்பண்பு அவனிடம் புகுந்து இருக்காததால் உண்மையானவற்றை புகழ்ந்து பேசுவது அவனுக்கு வராது. எத்தனை அறிந்து கொள்ளாமல் தலை கனத்தால் பிறரை மதித்து நடக்காமல் கோபமும் பொறாமை என்று உணர்வுகளுக்கு அடிமையாவதை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதே காரணம். சித்தன் வாக்கு நடக்காமல் போய் விடும் ஆனால் மட்டும் எம்மீது கோபம் என்கிற உணர்வை கொண்டு வெறுப்பு என்கிற உணர்வை தொடர கர்மாவை மறக்கிறான் மனிதன். உண்மையை சொல்லாமல் இருந்து அறத்தை செய்யாமல் இருந்து சினத்தை விட்டு விடாமல் இருந்து கடமையை தொடர்ந்து செய்யாமல் இருந்து காலத்தை சரியாக பயன் படுத்தாமல் இருந்து என்று பல விதமான உணர்வுகளால் கெட்ட குணங்களை மனிதன் கொள்ள இவற்றால் உயர்வை அடையாமல் இருந்து விடுகின்றான். பொறாமையை விட்டு விட்டு பெருந்தன்மையை வளர்க்காமல் போனாலும் கோபம் கொள்ளாது உள்ளத்தில் அன்பு உணர்வோடு நிற்க வேண்டும்.

மனமே என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைத்து நிற்காது என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலன்கள் எதுவும் இல்லை. பதவி நிலைத்து நிற்காத காரணத்தினாலும் செல்வம் நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அழகு நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அறமே எப்போதும் நிலைத்து நிற்கின்ற தர்மம் என்று உணர்ந்து வெறும் தூக்கத்தில் / மாயையில் மயங்கிக் கொண்டு துடிக்கின்ற காலத்தை சரியாகப் பயன்படுத்தி வேண்டியவற்றை கற்றுக் கொண்டு உள்ளத்திற்குள் உணர்ச்சிகளை அடக்கி மனதை அமைதியாக ஆக்கி வயது முதிர்ந்து தள்ளாடுகின்ற நிலையிலும் இனி எதுவும் செய்ய முடியாது என்று சோர்ந்து போய் உட்காருவதை செய்யாமல் உடலை மனதாலும் தியானத்தாலும் வலிமை பெற்றதாக ஆக்க தேவையற்றதை ஏற்றுக் கொள்ளாமல் உண்மையாக நல்லனவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை தவிர்த்து என்றும் எதிலும் எவர் மீதும் கோபம் கொள்ளாமல் இருப்பது தேவை. தேவையில்லா பொறாமை அங்கலாய்ப்பும் வெறுப்பும் அடிக்கடி உள்ளத்தை மாற்றி விடாத படிக்கு நல்ல செயலை தொடர்ந்து செய்யாமல் இருக்க வேண்டாம். இவ்வாறு இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை உண்மையான மனத்தோடு உணர்ந்து தேகம் நிலைத்து நிற்காது என்பதை உணர்ந்து ஆத்மா உணர்ந்து கொள்ளாமல் வெறும் உலக வாழ்க்கையை வாழ்வதை தவிர்த்து தொட்டதற்கு எல்லாம் வருத்தம் கொள்ளாமல் வாழும் வழி தொடர நமக்கு புரியாமல் நடக்கின்ற இறை செயல்கள் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாத விஷயங்கள் அனைத்தும் இனிமேல் நன்றாகப் புரிந்து நம்மோடு தொடர்ந்து வருவதை காணலாம். தொடர்ந்து கெட்ட குணங்களோடு பிறருக்கு தீமைகளை செய்வதை விட்டுவிட்டு எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்தால் உன் உள்ளத்தில் எரியாமல் அணைந்து போய் இருக்கின்ற இறைவனின் ஜோதியை நமக்கு தெரியாது. எது குறித்தும் வாழ்ந்து வீணடிக்காமல் வாழும் உண்மையை தெரிந்து கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.

காலபைரவர்

சிவன் ஆலயங்களில் மட்டுமே இருக்கும் பைரவர் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக இருக்கிறார். கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் போது இருக்கிறார் இந்த பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.

இவருக்கு வடை மாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக உள்ளது. சிறிய வடைகளை ஒன்றாக மாலை போல் கோர்க்காமல் மிகப்பெரிய ஒரு அளவில் ஒரே வடையாகத் தட்டி அதை பைரவரின் மேல் சாத்துகிறார்கள். இவருக்குத் தயிர் சாதம் நிவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும் மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார். மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள். பல வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருக்கிறது. இந்த பைரவரின் மூச்சு விடும் போது ஒரு தீபம் மட்டும் அசையும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைரவர் இருக்கும் திருக்குறுங்குடி கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.