தியானத் தோட்டம்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் சிவன் மற்றும் பிற இந்து தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 500

கேள்வி: சேஷபுரீஸ்வரர் கோவிலில் எங்கும் இல்லாதபடி அலைமகளும் கலைமகளும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோஷ்டத்தில் இருக்க வேண்டிய தட்சணாமூர்த்தி உள்ளே சனகாதி முனிவர்களோடு இருக்கிறார்:

இறைவன் கருணையால் சில நுட்பங்கள் இதிலே அடங்கியிருந்தாலும் கூட பொதுவாக இறையின் ஆற்றல் விதவிதமாக வெளிப்படுகிறது. எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதுதான் இதன் பொருள். அது ஒருபுறம் இருந்தாலும் அலைமகளும் கலைமகளும் ஒரு இடத்தில் இருப்பது சாத்தியமா? என்று சிந்தித்துப் பார். மாமியாரும் மருமகளும் ஓரிடத்தில் இருக்க இயலுமா? சிந்தித்து பாரப்பா. இருந்தாலும் ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அங்கு துவார பாலகர்கள் மாறியிருக்கிறார்கள் என்று வேறுவிதமான தத்துவ விளக்கமும் கொண்டிட வேண்டாம். இறையாற்றல் முன்பின்னாக இருந்தாலும் அதும் இறைதான் இதும் இறைதான் என்பதின் பொருள்தான் இது.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில்

திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இந்திரனின் வெண்கல சிலை

இந்திரன் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு அமைதியான தியானத் தோரணையில் அமர்ந்திருக்கிறார். தேவேந்திரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன் இந்து மதத்தில் தேவ லோகத்தின் தலைவனாகவும் பௌத்தத்தில் ஒரு பாதுகாவலராகவும் சமண மதத்தில் உயர்ந்த சொர்க்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இவர் ஜீயஸ் மற்றும் வியாழன் போன்ற மேற்கத்திய கடவுள்களுடன் ஒத்த சக்திகளையும் புராணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். புத்த புராணங்களில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார் இந்திரன். புத்தரின் பிறப்புடன் தொடர்புடையவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி நேபாளத்தில் ஒரு சுதந்திர தெய்வமாக வணங்கப்படுகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இந்த 16 ஆம் நூற்றாண்டு சிலை தற்போது சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 499

கேள்வி: அரசாங்கம் செய்ய வேண்டிய சேவைகளை தனியார் செய்து கொண்டிருக்கிறது. தனியார் செய்ய வேண்டிய வியாபாரத்தை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதுஅப்படியே மாறி விட்டது. உதாரணமாக கல்வி என்ற சேவையை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் அதை தனியார் செய்கிறார்கள். மது விற்பனை தனியார் செய்ய வேண்டும் அதனை அரசாங்கம் செய்கிறது. இது எப்போது மாறும். இதற்கு ஏதாவது வழி உண்டா?

இறைவனின் கருணையாலே இதுபோல் இயம்புவது யாது என்றால் யாங்கள் பலமுறை சிலருக்கு கூறியதை நினைவூட்டுகிறோம். ஒரு தீய பழக்கம் அது தப்பு மதிமயக்கும் பானத்தை அருந்துவது என்பது எக்காலத்திலும் சித்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கம்தான். ஆனால் இதே பழக்கத்தை வைத்திருக்கும் மேல் தேசத்தை மனிதர்கள் என்றாவது இதனால் பாதிக்கப்படுகிறார்களா? அங்கு யாராவது இந்த மதிமயக்கம் பானத்தின் அங்காடிகளை எல்லாம் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களா? அதற்காக அதனை யாங்கள் அங்கீகரிக்கவில்லை. எனவே எந்த ஒரு தீய பழக்க வழக்கமும் தனிமனித வாழ்க்கையை அந்த சமுதாயத்தை பாதிக்காத வண்ணம் கல்வியை அறிவை ஒழுக்கத்தை செயல்பாட்டை தொழிலை சமுதாயத்தை பாதிக்காத நிலையில் வைத்துக் கொண்டால் எல்லாவற்றையும் மனிதன் ஏற்றுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இல்லாமல் வெறும் மிருகக் குணம் கொண்டு வாழ்கின்ற மனிதர்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் கூட ஒரு சமுதாயம் என்பது ஒரு கனி என்று வைத்துக் கொள்வோம். முன்பே கூறியது போல அந்தக் கனி கெட்டு விட்டால் அதிலிருந்து எந்த ஒரு துண்டங்களை அறுத்தாலும் அந்த துண்டமும் கெட்டுப்போன துண்டங்களாகத்தான் இருக்கும். எனவே சமுதாயத்தில் இருந்து அந்த சமுதாயத்தை ஆள வருகின்ற மனிதன் சரியில்லை என்றால் அந்த ஒட்டுமொத்த சமுதாயம் சரியில்லை. இதிலே யாராவது ஒரு தனிமனிதனை மட்டும் குற்றம் கூறி எந்தவிதமான பலனும் இல்லை. இது அறிவு பூர்வமான சிந்தனை. கர்ம பார்வையிலே பார்க்கும் பொழுது ஒரு சமுதாயம் இந்த மாதிரியான ஒரு சூழலில் இருக்க வேண்டும் என்று விதி அமைப்பு இருக்குமானால் அப்படித்தான் அந்த சமுதாயம் இருக்கும் என்பது நிலையாகும். பரிபூரண பக்தியும் ஞானத் தெளிவும் வளர்த்துக்கொள்ள மனிதன் முயற்சி செய்தால் இன்னவன் கூறிய நிலை தன்னால் மாறிவிடும். ஒவ்வொரு மனிதனுமே இது தக்கது இது தகாதது. இதனை ஏற்கலாம் இதனை ஏற்க கூடாது என்று எந்த இடத்தில் அறிவை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அறிவை பயன்படுத்தி எந்த இடத்திலேயே உணர்வை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் உணர்வே பயன்படுத்தி சரியான முறையிலே நேர்மையான குணத்தோடு வாழ முயற்சி செய்தால் கட்டாயம் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும். ஏற்பட விரைவில் வாய்ப்பும் இருக்கிறது சற்று முயற்சி செய்தால் போதும். கல்வி என்ற பெயரில் அறிவை திணிப்பதை விட ஒழுக்கத்தை திணித்தால் தனிமனித கட்டுப்பாட்டை திணித்தால் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற போதனையை திணித்தால் எதிர்கால சமுதாயம் சிறப்பாக வளரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 498

கேள்வி: நேர்மையாக கடுமையாக எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து:

இறைவனின் கருணையால் பிறரின் நேர்மையான உழைப்பை உறிஞ்சி ஒரு பிறவியிலே வாழ்ந்தவர்கள் மற்ற பிறவியில் நேர்மையாக உழைத்து உழைத்து களைத்து போக வேண்டும் என்ற சாபத்தை பெற்று வருகிறார்கள். இந்த சாபத்தில் இருந்து வெளியே வருவதற்கு அன்றாடமோ அல்லது அனலி வாரம் என்று சொல்லப்படும் ஞாயிறு தோறுமோ அல்லது அவரவர்களின் ஜென்ம நட்சத்திரம் மாதம் தோறும் வருகின்ற தினத்தன்று 108 முறை நவகிரகங்களை வலம் வந்து அதுபோல் 108 எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து தன்னுடைய மனதில் உள்ள குற்றங்களை குறைத்துக் கொண்டால் கட்டாயம் எதிர் பார்த்த நற்பலன் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 497

கேள்வி: ஒன்றரை வயது குழந்தைக்கு ஆறு மாத குழந்தைக்கு உள்ள வளர்ச்சிதான் இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் கரு உருவாகும் பொழுதே சதைப் பிண்டம் எப்படி உருவாக வேண்டும்? என்று அதற்குள் நுழைய உள்ள ஆன்மாவின் கர்ம வினைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல்தான் உடல் உருவாக்கப்படுகிறது. பிறகு அந்த உடலில் மாற்றங்களும் சராசரிக்கு மாறுபட்ட நிலையும் ஒரு ஆரோக்ய நிலையும் ஆரோக்ய குறைபாடும் ஏற்பட்டு விடுகிறது. எனவே மீண்டும் கர்ம வினைக்குதான் வர வேண்டியிருக்கிறது. வழக்கம் போல் இறை வழிபாடு வழக்கம் போல் தர்மம் வழக்கம் போல் பிரார்த்தனை இது போன்ற குறைபாடுகளைக் குறைக்க உதவும். ஆனால் நீக்க உதவாது. ஏனென்றால் அப்படியொரு நிலையில்தான் அந்த ஆத்மா பிறவி எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் பட்சத்தில் அப்படியொரு பிறவிதான் அமையுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 496

கேள்வி: அரசண்ணாமலையின் தெய்வீக சிறப்புகள் பற்றி :

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் நல்விதமாய் ஒரு குறிப்பிட்ட மலை அல்லது குறிப்பிட்ட ஸ்தலம் மட்டுமே உயர்வல்ல. இருந்தாலும் கூட மனிதர்களின் ஆர்வம் மிகுதியாலும் சில பல காரணங்களாலும் இவ்வாறு கேட்பதால் நாங்கள் கூறுகிறோமே தவிர எல்லா ஸ்தலங்களும் சிறப்பே. எல்லா மலைகளும் சிறப்பே. இறை சாந்நித்யம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதை உணரக்கூடிய தன்மைதான் மனிதனிடம் இல்லை என்பதே உண்மையிலும் உண்மையாகும். இதுபோல் இன்று பாழ்பட்டு கிடக்கின்ற இன்னவன் கூறுகின்ற அரசகிரி ஒரு காலத்தில் சிறப்பாக இறையருளால் நல்விதமான பூஜைகளும் சாஸ்திர சம்பிரதாயமாக சடங்குகளும் நடந்த ஸ்தலம்தான். இங்கும் கிரிவலம் வருவது சிறப்பு. ஒரு ஸ்தலம் சிறப்பு உயர்வு என்று மனிதனுக்கு தெரிந்து விட்டால் அங்கு கூட்டமாக படையெடுப்பதும் எல்லாவிதமான பூஜைகள் செய்வதையும் தவறென்று கூற வரவில்லை.

இறைவனை வணங்குவதும் ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்திலே சென்று வணங்கினால்தான் இறைவன் அருள் கிட்டும் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் தீரும் என்று எண்ணுவதும் கூட தவறல்ல. ஆனால் அப்படி எண்ணிக் கொண்டே அந்த ஸ்தலத்தை அனாச்சாரம் செய்யாமல் இருந்தால் அது சிறப்பு. ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை நோக்கி பல மனிதர்களும் சென்று இறைவனுக்கு விருப்பமில்லாத செயல்களை அங்கு செய்தால் கட்டாயம் இறையருள் என்பது யாருக்கும் கிட்டாமல் போய்விடும். பலரும் கூட்டமாக ஒரு இடத்திற்கு செல்வதோ இறைவனை வணங்குவதோ சிறப்பிலும் சிறப்புதான். ஆனால் அந்த இடத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அந்த இடத்தை பரிசுத்தமாக வைத்திருக்கிறார்களா? அங்கு பரிபூரண அமைதியை காக்கிறார்களா? வியாபார விஷயமாக அங்கு எதுவும் நடவாமல் பார்த்துக் கொள்கிறார்களா? அமைதியான முறையில் இறை நாமத்தை ஜபம் செய்கிறார்களா? என்றெல்லாம் பார்த்தால் அது மிகவும் நடக்காத செயலாகத்தான் இருக்கிறது. மனிதர்களை பொருத்தவரை பல்வேறு இடங்களில் மன மகிழ்வு மன்றம் என்றெல்லாம் வைத்திருக்கிறார்களே? அதைப்போல வெறும் லோகாயரீதியான ஒரு மன மகிழ்வு மன்றமாகத்தான் ஆலயத்தை பார்க்கிறர்களே தவிர மெய்யாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்,

தன் மனதில் உள்ள குற்றங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும். இத்தனை தீய எண்ணங்களோடு வாழ்கிறோமே? இங்கு வந்து இறைவா இறைவா என்று கதறுகிறோமே இறைவன் ஏற்றுக்கொள்வாரா? என்று ஒரு கணமாவது மனிதன் சிந்திக்க வேண்டும். இறைவன் இருக்கின்ற இடம் புனிதமான இடம் என்று கூறிக்கொண்டே அந்த இடத்தை அனாச்சாரம் செய்வது இறைவனுக்கு ஏற்புடையதா? நம் மனசாட்சிக்கு ஏற்புடையதா? என்றெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இத்தனை இறை தத்துவங்கள் இல்லாத தேசத்தில் கூட பொது இடத்தை சுத்தமாகத்தான் மனிதன் வைத்திருக்கிறான். இத்தனை தத்துவங்களும் ஞானிகளும் மகான்களும் இருக்கின்ற இடத்தில்தான் இத்தனை அறியாமைக் கூட்டம் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். இதை எப்படி கூறுவது? என்றால் அற்புதமான தாமரை மலரில் மிகவும் உயர்வான தேன் இருக்கிறது. ஒவ்வொரு மலரிலும் இருப்பது தேன்தான். இருந்தாலும் ஒவ்வொரு மலரிலும் கிடைக்கின்ற தேனிற்கு தனித்தனி ஆற்றல்கள் உண்டு. தாமரை மலரில் உள்ள தேனுக்கு பல விதமான ஆற்றல்கள் இருக்கிறது. அதுகுறித்து பிறகு சிந்திப்போம். ஆனால் அந்த தாமரையை சுற்றியுள்ள சிறு சிறு உயிரினங்கள் அந்த தேனை உண்ணுவதுமில்லை. தேன் இருப்பதை புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற வண்டினங்கள் தேனீக்கள் தேடி வந்து தாமரைப் பூவில் உள்ள தேனை உண்கிறது. அதன் பெருமையை புரிந்து கொள்கிறது. இதைப் போலதான் மனிதர்கள் இங்கும் வாழ்கிறார்கள்.

எனவே ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமையை மனிதர்கள் புரிந்து கொண்டு தாமரைப் பூவில் இருக்கின்ற தேனைப் போல இது அற்புதமான ஸ்தலம் என்பதை புரிந்து கொண்டு மண்டூகங்களாக இல்லாமல் வண்டினமாக எல்லோரும் இருக்க நல்லாசிகளை கூறுகிறோம். எனவே இந்த ஸ்தலத்திலும் ஆத்மார்த்தமான பிரார்த்தனையும் குறிப்பாய் நல்விதமாய் முழுமதி தினமன்று மலை வலம் வருவதும் வலத்தோடு மனிதன் தன் மனதை வளப்படுத்தவும் உதவட்டும் என்று நல்லாசி கூறுகிறோம்.

அரசண்ணாமலை பெருந்துறை விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 495

கேள்வி: திருப்பனந்தாள் அருகில் திருலோக்கி என்ற ஸ்தலத்திலே வேறு எங்கும் இல்லாதபடி ரிஷபத்தின் மேல் ஸ்வாமியும் அம்பாளும் இருக்க வணங்கிய கோலத்தில் குருபகவானும் இருக்கிறார்கள்:

இறைவன் அருளால் இன்னவன் திருலோக்கி பற்றி கூறுகிறான். அங்கே ஒன்றை விட்டுவிட்டானே? அதுதானே மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். திருலோக்கி என்பது இல்லற சுகம் இல்லை என்று ஏங்கக்கூடிய மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களில் ஒன்று. அதுபோக இன்னவன் கூறியபடி அனைத்து வளங்களும் நலங்களும் தரக்கூடிய ஸ்தலம். ரதியும் மன்மதனும் அருள் புரியக்கூடிய இடம். அங்கு ரதி மன்மதனின் அருளை பெறக்கூடிய பிரார்த்தனைகளை தாராளமாக செய்யலாம். மனிதர்களுக்கு எல்லாம் வேண்டியிருக்கிறதே? இதுபோல் அரூபமாக அங்கு இன்றும் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இக்கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்