44. இசை வாது வென்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இசை வாது வென்ற படலம் நாற்பத்தி நான்காவது படலமாகும்.

வரகுண பாண்டியனின் காலத்திற்கு பின் அவரது மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தான். அப்போது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினை இசையோடு பாடி வந்தாள். இராசராசனின் மனைவி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான். ஒரு சமயம் இராராசபாண்டியனின் மனைவி பாணபத்திரரின் மனைவி இசை பாடுவதைக் கண்டு தன்னைவிட நன்றாகப் பாடுகிறாளே என்று பொறாமை கொண்டாள். எப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசை பாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள். பாண்டியனும் தன்னுடைய மனைவியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி இலங்கையிலிருந்து இசை பாடுபவள் ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான். பின் பாணபத்திரரின் மனைவியை அழைத்த இராசராசபாண்டியன் ஈழத்திலிருந்து இசை பாடுபவள் ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா? என்று ஆணவமாக பேசுகிறாள். சிவபக்தையான நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி அரசே சொக்கநாதரின் திருவருளால் நான் நாளை நடைபெறும் இசைப் போட்டியில் வெல்வேன் என்று கூறினாள். பின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடல் பாடுபவளிடம் வந்து நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடல்கள் பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன் என்று கூறினான். மறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து இசை பாடுபவள் மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.

சொக்கநாதரை வணங்கிவிட்டு பாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடல் பாடுபவள் அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள். பாணபத்திரரின் மனைவி நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை என்று கூறினாள். உடனே இராசராசபாண்டியன் பெண்களே நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள் என்று கூறி இசைப் போட்டியைத் தொடங்கி வைத்தான். இருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர். ஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று அறிவித்தான். இந்த முடிவிற்கு அறிஞர்களும் சான்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவேறு கருத்து வந்ததால் அடுத்த நாள் மீண்டும் இசைப் போட்டி நடைபெறும் என்று பாண்டியன் அறிவித்தான். பாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.

சொக்கநாதரை பாணபத்திரரின் மனைவி சரணடைந்தாள். மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று மனமுருகி வழிபட்டாள். அப்போது ஆகாயத்திலிருந்து பெண்ணே அஞ்ச வேண்டாம் நாளை இசை போட்டியின் முடிவில் அவளை வெற்றி பெற்றதாக அனைவரும் அறிவிப்பார்கள். அப்போது நீ கோவிலில் இப்போட்டியை வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் பாடுகிறோம். அங்கு நீங்கள் தெரிவிக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கோவிலில் போட்டியை நடத்தும் படி கேட்டுக் கொள். வேறு வழியின்றி அனைவரும் சம்மதிப்பார்கள். அதன்பிறகு உனக்கு வெற்றி கிடைக்கும். நீயே வெல்லும்படி அருளுவோம் என்று திருவாக்கு கேட்டது. மறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். அதற்கு முன்பாகவே சான்றோர்கள் அனைவரையும் அழைத்த அரசன் ஈழத்து பெண் வெற்றி பெற்றாள் என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இருவரும் போட்டியில் பாடினர். ஈழத்துப்பெண் வென்றாள் என்று பாண்டியன் கூறினான். பாண்டியன் சொன்னது போலவே அவையோரும் ஆமோதித்தனர். உடனே பாணபத்திரரின் மனைவி அரசே உங்கள் தீர்ப்பு ஓரம் சார்ந்து இருக்கிறது. உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆகையால் நாளை இடம் மாறி ஆடிய நடராஜரின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து நீர் என்ன தீர்ப்புக் கூறினாலும் அதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் எனச் சூளுரைத்தாள். அதற்கு அரசன் உட்பட அனைவரும் உடன்பட்டனர். மறுநாள் திருகோவிலில் இசைப் போட்டி ஆரம்பமானது.

சொக்கநாதர் இசைப் புலவராய் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து புலவர்களுடன் புலவராக அமர்ந்து கொண்டார். ஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள். பாடி முடித்ததும் தன்னை அறியாமல் மெய் மறந்து ஆஹா என்ன அற்புதம் எனக் கைதட்டினான். அதையே தீர்ப்பாகக் கொண்ட மக்கள் பாணபத்திரரின் மனைவி வெற்றி பெற்றதாக ஆமோதித்துக் கரவொலி செய்தனர். சொக்கநாதரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தார். அவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து இது அற்புதம் இது அற்புதம் என்று கூறி மறைந்தார். இராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப் புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான். பின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான். பாணபத்திரரின் மனைவிக்கும் ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான். அதன்பின் இராசராசபாண்டியன் சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவரின் சூழ்ச்சியும் இறைவனை சரணடைந்தவர்கள் முன்னால் எடுபடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 466

கேள்வி: இறந்தபின் செய்யும் கண் தானம் உடல் உறுப்பு தானம் பற்றி கூறுங்கள் :

இறைவன் அருளால் யாங்கள் முன்பே இதுகுறித்து கூறியிருக்கிறோம். பலர் அறிந்ததுதான். எல்லாவகையான தானங்களையும் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உடல் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். கண் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். ஒருமுறை கூறியிருக்கிறோம் ஒரு மனிதன் வாய்ப்பு இருக்கும் பட்சத்திலே இன்னொரு நல்ல மனிதனுக்கு விழி இருந்தால் அவனால் பலருக்கும் நன்மை எனும் பட்சத்தில் உயிருடன் இருக்கும் பொழுதே விழியைக் கூட தானமாக கொடுக்கலாம் தவறொன்றுமில்லை என்று கூறியிருக்கிறோம். இந்த இடத்திலே ததீசி முனிவரை நினைத்துக் கொள்ள வேண்டும். தன் உயிர் போனாலும் பலருக்கு நன்மை என்று தன் உடைமையையும் தன் முதுகு எலும்பையும் அவர் தந்திருக்கிறார். தான் இறந்த பிறகு உடல் தானம் கொடுக்கவே மனிதன் தயங்குகிறான். எம்மைப் பொறுத்தவரை உயிரோடு இருக்கும்போது கொடுத்தாலும் உயர்வுதான்.

43. பலகை இட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பலகை இட்ட படலம் நாற்பத்தி மூன்றாவது படலமாகும்.

பாணபத்திரரின் வறுமையைப் போக்க இறைவனான சொக்கநாதர் சேரமானுக்கு திருமுகத்தில் பாடல் எழுதி கொடுத்து சேரமானிடம் பொருள் பெற்றுத் தந்தார். அதன் பின்னர் பாணபத்திரர் பகலில் வழிபாடு நடத்தியதோடு இரவிலும் திருகோவிலுக்குச் சென்று இசைபாடி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டார். எந்த நிகழ்வுகள் நடந்தாலும் திருகோவிலுக்கு இரவில் சென்று வழிபடுவதை பாணபத்திரர் நிறுத்தவில்லை. இறைவனார் பாணபத்திரரின் இசை சேவையை உலகுக்கு எடுத்துக் காட்ட விரும்பினார். ஒரு நாள் பாணபத்திரர் இரவு நேர வழிபாட்டிற்கு செல்லும் நேரத்தில் புயல் காற்று வீசியது. இடி மின்னலுடன் கடுமையாக மழை பெய்தது. பாணபத்திரரோ கடும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு வழிபாட்டிற்கு திருகோவிலுக்குச் சென்றார். மழையில் நனைந்ததால் குளிரால் பாணபத்திரரின் உடல் நடுங்கியது. பாணபத்திரர் மழை இடி மின்னல் புயல் காற்று என எதனையும் பொருட்படுத்தாது யாழினை மீட்டி பாடத் துவங்கினார். அவரது பாடல் எலும்பினையும் உருக்கும் வண்ணம் இருந்தது. கடும் சூழலிலும் விடாது முயற்சி செய்து இசை பாடிய பாணபத்திரரின் இசையினால் கவரப்பட்ட இறைவனார் பாணபத்திரா இதோ இந்த பலகை உனக்கே உரியது. இதன் மேல் நின்று பாடுக என்று வானிலே திருவாக்கு அருளினார். வானத்திலிருந்து பொன்னலாகிய நவமணிகள் பதித்த பலகை ஒன்று பாணபத்திரரின் கையினை அடைந்தது. உடனே பாணபத்திரரும் இறைவனின் ஆணையின்படி பலகையின் மீது நின்று பாடினார். வழிபாட்டினை முடித்துக் கொண்டு அவர் பலகையுடன் வீட்டிற்கு திரும்பினார். பொழுது விடிந்ததும் இறைவனார் பாணபத்திரருக்கு பரிசளித்த பலகை பற்றி அறிந்த வரகுண பாண்டியன் மிக்க மிகழ்ச்சி கொண்டான். அவன் பாணபத்திரருக்கும் திருக்கோவிலுக்கும் பல பொருட்களை பரிசாகக் கொடுத்தான். அந்நாள் முதல் பாணபத்திரர் திருகோவிலுக்குச் சென்று நான்கு காலங்களிலும் பாடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். சிலகாலம் சென்ற பின் வரகுண பாண்டியன் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் இதனை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்ட பணிகளை எத்தகைய கடும் சூழலிலும் விடா முயற்சியுடன் நேர்த்தியாக செய்பவர்களுக்கு உண்டான பலனை இறைவன் உறுதியாக கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 465

கேள்வி: இறைவனிடம் என்ன வேண்டி கேட்க வேண்டும்?

இதற்கும்தான் மாணிக்கவாசகர் கூறியிருக்கிறாரே? இறைவன் அருளால் கூறவருவது என்னவென்றால் இறைவா ஒரு மனிதன் அல்லது ஒரு உயிர் எப்படி வாழ்ந்தால். எப்படி நடந்து கொண்டால். என்ன சிந்தித்தால். என்ன பேசினால். என்ன செய்தால் உனக்கு பிடிக்குமோ அப்படி என்னை மாற்றிவிடு என்று பிரார்த்தனை செய்வதே சிறப்பு.

42. திருமுகம் கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருமுகம் கொடுத்த படலம் நாற்பத்தி இரண்டாவது படலமாகும்.

சொக்கநாதர் முன்பு மற்றும் வரகுண பாண்டியனின் அவையிலும் பாடிக் கொண்டிருந்த பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளால் தற்பெருமை மிக்க ஏகநாதனை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். பின்பு சொக்கநாதர் முன்பு மட்டுமே யாழிசைத்து பாடி வந்தார். வேறு ஏதும் வேலை செய்யாததால் பாணபத்திரர் வருமானம் இன்றி உணவுக்கே மிகவும் வருந்தினார். சொக்கநாதர் பாணபத்திரரின் மீது இரக்கம் கொண்டு வரகுணபாண்டியனின் கருவூலத்திலிருந்து நாள்தோறும் பொற்காசு மணிகள் பொன்னாலான பொருள்கள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கவர்ந்து வந்து பாணபத்திரர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருக்கும் போது அவர் முன்பாக வைத்தது விடுவார். பாணபத்திரர் பாடி முடித்து கண் திறந்து பார்க்கும் போது அவர் முன் சில சமயம் பணம் இருக்கும். சில சமயம் பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஆபரணங்கள் இருக்கும். பாணபத்திரரும் அதனைப் பெற்று உருக்கி விற்று அதனைக் கொண்டு தன்னுடைய வறுமையைப் போக்கி மற்றவர்களுக்கும் உதவி வந்தார். சொக்கநாதர் பாணபத்திரரின் இறைபக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட திருவுள்ளம் கொண்டார். எனவே சொக்கநாதர் பாண்டியனின் கருவூலத்திலிருந்து எடுத்து பாணபத்திரருக்கு பரிசளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் பாணபத்திரர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். ஆனாலும் தினந்தோறும் இறைவனை துதித்து பாடுவதை நிறுத்தவில்லை.

சொக்கநாதர் மதிமலி புரிசை என்னும் தொடக்கத்தை உடைய திருமுகப்பாசுரம் ஒன்றை எழுதிக் பாணபத்திரர் தூங்கும் போது அவரருகில் வைத்துவிட்டு பாணபத்திரா உன்னுடைய வறுமையை நீக்குவதற்காக வரகுணனின் கருவூலத்திலிருந்து பொருட்களைக் கவர்ந்து உமக்குப் பரிசளித்தோம். களவு போனதை பாண்டியன் கண்டறிந்தால் இதனை காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆதலால் சேரமானுக்கு ஓலை ஒன்றினைத் தருகின்றோம். அவன் நம்மிடம் அன்பு பூண்டவன். நீ அதனை அவனிடம் அளித்து வேண்டும் பொருள் பெற்றுக் கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். தூக்கத்தில் இருந்து எழுந்த பாணபத்திரர் தன் கையில் இறைவன் கொடுத்த பாடல் எழுதியிருந்த திருமுகத்தைப் (திருமுகம் என்பது பட்டுத் துணியில் எழுதிய கடிதம் ஆகும்) பார்த்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். தான் பெற்ற பாசுரத்தை எடுத்துக் கொண்டு இறைவனை வணங்கி மலை நாட்டினை நோக்கிப் பயணித்தார். அங்கே திருவிஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தண்ணீர்ப் பந்தலில் தங்கினார்.

சொக்கநாதர் சேர மன்னான பெருமான் நாயனாரின் கனவில் தோன்றி மன்னனே நம் அடியவன் பாணபத்திரன் உன்னைக் கண்டு பாடி பரிசு பெறும் நோக்கில் நம்முடைய திருமுகம் பெற்று மலைநாட்டினை அடைந்துள்ளான். அவனுக்கு வேண்டும் பொருள் கொடுத்தனுப்புக என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனைக் கேட்டு கண்விழித்த சேரமன்னர் தன்னுடைய வீரர்களை நாலாபுறமும் பாணபத்திரரைத் தேடி அழைத்து வருமாறு அனுப்பினார். சிவனடியார்கள் யார் நாட்டிற்குள் புதிதாக வந்திருந்தாலும் எங்கு பார்த்தாலும் உடனடியாக அவர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான்.  ஒரு தண்ணீர் பந்தலருகில் வறுமைக் கோலத்தில் மெய் மறந்து பாடிக் கொண்டு நின்று கொண்டிருந்த பாணபத்திரனைப் பற்றி சேவகர் அரசரிடம் சொல்ல சேர மன்னன் விரைந்து பாணபத்திரன் இருக்குமிடம் வந்தான். 

சொக்கநாதரை கண்மூடி இசைத்து பாடிக் கொண்டிருந்த பாணபத்திரரிடம் சேர மன்னன் அடியவரே எங்கிருந்து வருகின்றீர்கள்? என கேட்டார். பாணபத்திரர் தன பாட்டை நிறுத்தி கண்விழித்துப் பார்த்தார். நான் மதுரையிலிருந்து வருகின்றேன். சிவபெருமான் கட்டளையின் பேரில் உங்களைக் காண வந்திருக்கின்றேன். இதைப் பாருங்கள் என்று கூறியபடி தன்னிடம் இறைவன் தனக்கு கொடுத்த திருமுகத்தை பாணபத்திரர் சேரமானிடம் கொடுத்தார். சேரமான் அதனை வாங்கிப் படித்தான். கனவில் சொக்கநாதர் காண்பித்த அதே பாடல் இருந்தது. சேரன் ஆனந்த பரவசனானான். திருமுகத்தை கண்களில் ஒற்றி தலைமேல் வைத்துக் கூத்தாடினார். பின்னர் பாணபத்திரரை யானையின் மீது அமரச் செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரண்மனையில் பலவித உபச்சாரங்கள் செய்து கருவூலத்தைத் திறந்து காட்டி எம் பெருமானுடைய தொண்டனே இப்பொருள்கள் யாவற்றையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். உடனே பாணபாத்திரர் சேரனை வணங்கி நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் போதும் என்று கூறினான். உடனே சேரமான் பொருளை வாரிவாரி வழங்கினார். பாணபத்திரர் அவற்றை ஏற்க மறுத்து தனக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார். சேரனை வணங்கி தன்நாட்டினை அடைந்து சொக்கநாதரை வணங்கினார். தான் கொண்டு வந்த பொருட்களை வறியவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் சுற்றத்தாரோடு இனிது வாழ்திருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தூய்மையான அன்பும் பக்தியும் கொண்ட பக்தர்களின் மகிமைகளையும் பெருமைகளையும் இறைவன் உலகிற்கு எடுத்துக் காட்டுவார் என்பதையும் இந்த உலக வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களுக்கு இறைவனே கொடுத்து அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 464

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 464

கேள்வி: குலதெய்வம் என்பது யாது ? அது தெரியாதவர்கள் அதை தெரிந்துகொள்வது எப்படி ?

இறைவன் அருளால் கூறுவது யாதென்றால் திருமணமான பல ஆண்களைக் கேட்டால் தெரியும் குலதெய்வம் யாரென்று? திருமணமான ஆண்களுக்கெல்லாம் குலதெய்வம் யாரென்றால் மனைவிதான். பல நல்ல குல மங்கைகளுக்கு குலதெய்வம் கணவன்தான். இப்படித்தான் ஆதிகாலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இக்காலத்திலும் இப்போதும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் பலமுறை கூறியதுதான் சுருக்கமாக கூறுகிறோம் அப்பா.

ஒரு பகுதியில் ஒரு ஊரில் ஒரு நகரத்தில் ஒரு கிராமத்தில் பொதுவான பிரச்சினை துன்பங்கள் இயற்கை சீற்றம் அல்லது கள்வர்களால் துன்பம் வரும்பொழுது அதை எதிர்த்து போராடி உயிரை விட்ட ஒரு சிலரை குலதெய்வமாக காலப்போக்கில் வழிபடுவது அல்லது போரில் கடுமையாக போராடி எதிரியிடம் இருந்து நாட்டை காத்து இறந்த சில வீரர்களையெல்லாம் நடுகல் நட்டு தெய்வமாக கும்பிடுவது ஒரு வழக்கம். இன்னொன்று அதிக அளவு சாத்வீகமாக இறை பக்தியோடும் சிந்தனையோடும் வாழ்ந்து எதிர்பாராமல் மரணமடைந்த சில ஆண்களையும் பெண்களையும்கூட குலதெய்வமாக கும்பிடுவது என்பதுகூட ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் மரபாக இருந்தது. இதுபோக சிறு சிறு தேவதைகளையும் குலதெய்வமாக இஷ்ட தெய்வமாக வழிபடும் பழக்கமும் இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட இறை நம்பிக்கை வேண்டும் பெரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது என்பது அதிகம் படித்தவர்களுக்கும் ஓரளவு ஞானம் அடைந்தவர்களுக்கும் அந்த காலத்தில் எளிதாக இருந்தது. எளிய மக்களுக்கு பெரிய ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு தடை போடப்பட்டிருந்த காலம். அவர்கள் இறைவனை வணங்க வேண்டுமே? அவர்களுக்கு தெரிந்த வகையில் பூஜை செய்து தெய்வத்தைக் கொண்டாடினார்கள். இதுதானப்பா குடும்ப தெய்வம். இதுதானப்பா குலதெய்வம். எந்த காரியத்தை துவங்கும் முன்பு இங்கு சென்று அனுமதி கேள். வீட்டிலே பெரியவர்கள் இருந்தால் உத்தரவு கேட்க மாட்டாயா? அதைப்போல் கேள் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு பாரம்பர்யமாக சொல்லிக் கொண்டே வந்ததால் இப்படியொரு வழிபாடு ஏற்பட்டு விட்டது. எல்லாம் கடந்து பரம்பொருள் ஒன்றுதான் என்று ஒருவன் பத்மாசனமிட்டு அமர்ந்து விட்டால் அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அந்த நிலை வரும் வரையில் இதுபோன்ற விதவிதமான வழிபாடுகளும் சடங்குகளும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. என்ன? அந்த சடங்கிலே பாவங்கள் சேராமல் மனிதன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவே.

41. விறகு விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விறகு விற்ற படலம் நாற்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். தன் பாட்டிற்கு எதிர்பாட்டுப் பாட பூலோகத்தில் இதுவரை ஒருவர் பிறந்ததுமில்லை இனி பிறக்கப் போகிறதுமில்லை என ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டு மார்தட்டி செருக்குடன் இருப்பவன். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான். வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏகநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாடும் வல்லமை இல்லை அப்படி யாராவது இருந்தால் எம்மோடு போட்டியிட்டு பாடசொல் என்றான். அதற்கு வரகுணன் நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு நாளை தெரிவிக்கிறேன் என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.

வரகுண பாண்டியனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார் என்று கூறினார். ஏகநாதனின் சீடர்கள் மதுரை நகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே. நான் எப்படிதான் இந்த இசைப் போட்டியில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். இறைவா நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மனமுருக‌ வேண்டினார். சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும் தலையில் இருக்கும் பிறைச் சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக் கையில் வைத்துக் கொண்டு தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார்.

சொக்கநாதரின் பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவர் போல் வந்த சொக்கநாதரிடம் வந்து நீ யார்? என்று கேட்டான். அதற்கு சொக்கநாதர் நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை என்றார். பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்த போது வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன் என்று கூறினார். ஏமநாதன் விறகுஉ விற்பவர் போல் வந்த இறைவரிடம் நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார். பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் இது சாதாரணப் பாட்டே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால் பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ? என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். இனி நாம் பாணபத்திரனோடு இசைப் போட்டியில் பாடி வெற்றி பெற முடியாது. ஆகையால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும் என்று எண்ணி தன் கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம் அஞ்சற்க என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ? என்று கூறி வழிபாடு நடத்தினார். காலையில் அரசவை கூடியதும் வரகுணன் ஏமநானை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்று மாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட அவர்கள் இந்த செய்தியை வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும் இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான். தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகள் முழுவதையும் அடியாருக்கும் ஆண்டவனுக்காகவுமே செலவிட்டு இன்புற்று வாழ்ந்தார் பாணபத்திரர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தனது திறமைக்கு நிகர் யாரும் இல்லை என்ற செருக்கும் தானே பெரியவன் என்ற ஆணவம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதனை கட்டாயம் இறைவனார் அடக்குவார். ஆகையால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது என்பதையும் இறைவனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 463

கேள்வி: பக்தி மார்க்கத்தின் வழியாக சென்றால் முக்தி. ஞான மார்க்கத்தின் வழியாக சென்றால் மறுபிறவி உண்டு என்பது பற்றி:

இறைவன் அருளால் இப்படியெல்லாம் யாங்கள் கூறவில்லையப்பா. எந்த வழிபாட்டில் எந்த வழிமுறையில் சென்றாலும் உள்ளம் பண்பட்டு பக்குவப்பட்டு உள்ளம் உறுதியோடு நோக்கம் சிதறாமல் இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான் நோக்கம் பிற விஷயங்கள் எனக்கு முக்கியமல்ல. என் கடமைகளை செய்வேன். என்னால் முடிந்த நன்மைகளை பிறருக்கு செய்வேன். பிறர் செய்கின்ற தீமைகளையெல்லாம் எனது பாவக்கழிவாக எண்ணுவேனே தவிர அவர்கள் மீது நான் சினம் கொள்ள மாட்டேன் என்று எவனொருவன் உறுதியோடு இருக்கிறானோ அவன் எந்த வழியில் வந்தாலும் அவனுடைய முக்தி நிலை என்பது உறுதியாகும்.

40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் நாற்பதாவது படலமாகும்.

வரகுணன் சீரும் சிறப்புமாக மதுரை நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து வந்தான். அதேநேரத்தில் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். இருள் சூழ்ந்த வேளையில் அவன் கனவட்டம் என்ற குதிரையின் மீது அமர்ந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் குதிரையின் காலடியில் சிக்கி இறந்தார். இதனை அறியாத வரகுணன் அரண்மனை திரும்பினான். காட்டில் இருந்த சிலர் இறந்த அந்தணரின் உடலை எடுத்துக் கொண்டு வரகுணனின் வாயிலில் இட்டு நடந்தவற்றை வரகுணனுக்கு கூறினர். தனது குதிரையின் காலடியில் சிக்கி அந்தணர் இறந்ததை அறிந்த வரகுணன் இறந்த அந்தணனைச் சார்ந்தவர்களை வரவழைத்து பொன் பொருள் உதவி செய்ததோடு அந்தணனுக்கு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தான். எனினும் வரகுணனை பிரம்மகத்தி என்னும் பாவம் (கொலைப் பாவம்) பற்றிக் கொண்டது. பிரம்மகத்தி பிடித்த வரகுணன் மிகவும் துன்பத்துக்கு ஆளானான். அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான். இறுதியில் பெரியோர்களின் சொல்படி நாள்தோறும் சொக்கநாதரைத் தரிசித்து 1008 முறை வலம் வந்தான். அப்போது ஒருநாள் இறைவனார் அசரீரியாக பாண்டியனே நீ அஞ்சாதே காவிரி நாட்டைச் சார்ந்த சோழன் உன்னுடன் போரிட வருவான். அப்போது நீ அவனை புறங்காட்டி ஓடச்செய்வாய். நீ சோழனைத் தொடர்ந்து சென்று அவனது எல்லையில் உள்ள திருவிடைமருதூரை அடைவாய். அங்கே உன்னுடைய பிரம்மகத்தியை யாம் நீக்குவோம். என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் அசிரிரீ வாக்கைக் கேட்ட வரகுணன் மகிழ்ந்து சோழனின் வருகைக்காக காத்திருந்தான். இறைவனாரின் கூற்றுப்படி சோழன் பாண்டியனின் மீது படையெடுத்து வந்தான். வரகுணனும் சோழனை எதிர்த்து போரிட்டு அவனை விரட்டிச் சென்றான். திருவிடைமருதூர் வந்ததும் மகாலிங்கத்தை வழிபடுவதற்காக வரகுணன் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக திருகோவிலுக்குச் சென்றான். வரகுணனைப் பிடித்திருந்த பிரம்மகத்தி கோவிலின் வெளியே தங்கியது. உள்ளே சென்ற வரகுணன் மகாலிங்கத்தை பலவாறு துதித்து வழிபாடு நடத்தினான். அப்போது இறைவனார் பாண்டியனே நீ மேற்கு வாயிலின் வழியாக வெளியேறு. கிழக்கு வாயிலில் பிரம்மகத்தி உன்னை பிடிப்பதற்காக காத்திருக்கிறது என்று திருவாய் அருளினார். வரகுணனும் இறைவனாரின் ஆணைப்படி மேற்கு வாயிலின் வழியே வெளியேறினான். மதுரைக்கு திரும்பிய வரகுணன் சொக்கநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தான்.

சிவராத்திரி நாளன்று வேதங்கள் ஆகமங்கள் உள்ளிட்ட நூல்களில் கூறியபடி உலகம் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகத்தைக் காணும் ஆசை வரகுணனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய விருப்பத்தை சொக்கநாதரிடம் தெரிவித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டான். வரகுணனின் விருப்பத்தை நிறைவேற்ற சொக்கநாதர் திருவுள்ளம் கொண்டார். திருநந்தி தேவரை அழைத்து வரகுணனுக்கு சிவலோகத்தை காட்ட ஆணையிட்டார். திருநந்தி தேவரும் சிவலோகத்தை மதுரைக்கு எழுந்தருளச் செய்து வரகுண பாண்டியனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி காட்டி அருளினார். இறைவன் இறைவியுடன் இருந்த காட்சியைக் கண்ட வரகுணன் பேரின்பக்கடலில் மூழ்கினான். ஹரி அயனால் அடிமுடி காணப்பெறாத சிவ ஜோதியே கண்டேன் பேறுபெற்றேன் பேறுபெற்றேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பாண்டியன் வணங்கித் துதி பாடுகையில் கைலாயம் மறைந்து விட்டது. மன்னன் ஆச்சரியமுற்று அருகில் இருப்பவரிடம் தான் கண்ட காட்சிகளைக் கூற அரசே நீரே பாக்கியவான் என அனைவரும் புகழ்ந்தனர். அன்று முதல் மதுரையம்பதி பூலோக சிவலோகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனார் தனது அடியவர்களுக்காக செயற்கரும் செயல்களைச் செய்து காட்டுவார் என்பதையும் பிரம்மகத்தி பாவம் பிடித்தவர்கள் தங்களின் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழிமுறையையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 462

கேள்வி: அனைத்து கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் சுவற்றின் மேல் கஜலட்சுமி தாயார் இருப்பதின் தாத்பர்யம்:

ஆதிகாலத்திலே இந்தப் பழக்கம் இல்லையப்பா. இறையருளால் கூறவருவது என்னவென்றால் பிற்காலத்திலே இது ஏற்பட்டது. மனிதர்களுக்கு எந்த நிலையில் சென்றாலும் பொருளாசை என்பது விடாது. பொருளுக்குரிய தெய்வம் அன்னை மகாலட்சுமி என்று தெரிந்து விட்டதால் எல்லா இடங்களிலும் மகாலட்சுமி சின்னத்தை வைத்தால் மங்களமாகவும் பொருள் வரவாக இருக்கட்டுமே? என்றும் அதுபோல் இறையை ஆராதிக்கின்ற பணியை செய்கின்ற எனக்கு பொருள் வரவேண்டும் என்பதற்காகவும் பிற்காலத்திலே ஆலயம் நன்றாக இயங்க அங்கு நிரந்தர பொருள் சேரவேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டது. அக்காலத்தில் சில இடங்களில் மகாலட்சுமிக்கு அனுதினமும் யாகமே நடந்ததுண்டு நிறைய பொன் பொருள் சேர்க்கை வேண்டும் நிறைய ஆடு மாடுகள் சேரவேண்டும் என்றெல்லாம். எனவே இவையனைத்தும் உலகியல் நோக்கத்திற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது.