குந்தி தேவியும் பாண்டவர்களும் காட்டிற்குள் நெடுந்தூரம் நடந்து சென்று இறுதியாக ஏகசக்கர நகரத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வசித்திருப்பதற்கு ஒரு பிராமணனுடைய இல்லத்தில் இடம் கிடைத்தது. துறவறம் வாழ்க்கை வேசத்திற்க்கு ஏற்றவாறு ஏகசக்ர நகரத்தில் பிட்சை எடுத்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எனினும் இயல்பாக அவர்களிடம் அமைந்திருந்த ராஜரீதியை மறைத்துக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அந்நகரத்தில் வசித்து இந்த அறிஞர்கள் அவர்களை சரியாக மதிப்பீட்டார்கள். இவர்கள் பேரியல்பு வாய்க்கப்பெற்ற பெருமக்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக துறவிகள் போன்று வேஷமிட்டு இருக்கின்றார்கள் என்பது அவர்களுடைய யூகமாக இருந்தது. ஒரு நாளைக்கு ஐந்து புதல்வர்கள் பிச்சை எடுத்து வந்த அன்னத்தை சரிபாதி பீமனிடம் கொடுத்துவிட்டு மறுபாதியை ஏனைய சகோதரர்களுக்கு குந்திதேவி பங்கிட்டுக் கொடுத்தாள். அப்படி இருந்தும் பீமனுக்கு அந்த உணவு போதவில்லை. ஓரளவு பட்டினியுடன் அவன் தாக்குப்பிடித்து வந்தான்.
ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் பிட்சை எடுக்க நகரத்திற்குள் சென்றனர். அப்போது குந்திதேவி வசித்துவந்த வீட்டின் உட்புறத்தில் அழுகை சத்தம் அவள் காதுக்கு எட்டியது. உள்ளே சென்று அவள் அந்த அழுகைக்கு காரணம் என்ன என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்கள் பகன் என்னும் அசுரன் ஒருவன் இந்நகரத்தின் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றான். அவன் இந்த ஊரில் நிகழ்த்திய உயிர்சேதம் வரம்பு கடந்து இருந்தது. ஆகையால் அந்த நஷ்டத்தை குறைத்துக் கொள்வதற்காக ஊரார் அந்த அரக்கனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி அந்த ஊருக்கு எந்த ஒரு தீங்கும் நிகழாதவாறு அந்த ஊரை காப்பாற்றுவது அரக்கனுடைய கடமையாகும். அதற்கு கைமாறாக அரக்கனுக்கு வாரத்தில் ஒரு வண்டி உணவும் இரண்டு காளைகளும் ஒரு மானுடனும் அவனுக்கு உணவாக அளிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் முறைப்படி ஒவ்வொரு குடும்பமும் உணவையும் மானுடன் ஒருவனையும் பலியாகக் கொடுத்து விடுதல் வேண்டும் என்பது ஊரின் உத்தரவு. அடுத்த நாள் காலையில் அவ்வாறு நரபலி தருகின்ற முறை எங்களது குடும்பத்திற்கு உரியது. குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மகளும் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் பொருட்டு நான் போகின்றேன் என்று முந்திக் கொண்டு இருக்கின்றோம். எங்களில் ஒருவரை இழக்கப்போகின்றோம் என்பதை முன்னிட்டு அழுகின்றோம் என்று கூறினார்கள்.
அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த சங்கடத்தை நிவர்த்தி பண்ணுவதாக குந்திதேவி உறுதி கூறினாள். தன்னுடைய புதல்வர்களை ஐவரில் ஒருவனை அன்றைக்கு உணவாக அனுப்பி வைக்கிறேன் என்று அவள் கூறினாள். அதற்கு அக்குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. விருந்தினர்களை பலி கொடுப்பது தர்மமாகாது. எப்படியும் விருந்தினர்களை காப்பாற்றுவதே எங்களுக்குரிய தர்மம் என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர்களிடம் குந்திதேவி ஒரு செய்தியை கூறினாள். எனது ஐந்து புதல்வர்களையும் தேவர்கள் சிலர் காப்பாற்றி வருகின்றார்கள். ஆகையால் அவர்கள் வழியாக இவ்வூருக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் என்று அவர்களுக்கு சமாதானம் கூறி அவர்களை சம்மதிக்க வைத்தாள். அவர்களும் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒத்துக்கொண்டனர்.