சோழநாட்டின் சிறிய நாடான கோனேட்டில் கொடும்பாளூர் என்னும் ஊரை இடங்கழி நாயனார் ஆண்டு வந்தார். சிவ வழிபாட்டினை போற்றி வந்தவர் இவர். இவரது காலத்தில் தான் சிவாலயங்கள் அதிகம் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னர் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும் பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் அடியவர்களுக்கு கணக்கற்ற உதவிகளைச் செய்து வந்தார். அவரது நாட்டில் அடியார்கள் பலரும் இவருடன் சேர்ந்து சிவனடியார்களுக்கு உணவளித்து அருந்தவப் பணிகளை செய்து கொண்டு வந்தனர்.
அந்த ஊரில் இருந்த சிவனடியார் ஒருவர் சிவனுக்காகவே தான் வாழ்வு என்று வாழ்ந்து வந்தார். அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தவிர வேறு எந்த பணிகளையும் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சிவ நாமம் சொல்லி வரும் அடியார்கள் அனைவரும் இறைவனே என்று எண்ணினார். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களுக்கு உணவு அளித்து வந்தார். சிவனின் மீது எவ்வளவு பக்தி இருந்தால் இத்தகைய பணி விடையை அவர் செய்வார் என்று மகிழ்ந்த சிவனடியார்கள் இவரது அன்பில் செல்லும் இடமெல்லாம் இவரது புகழை பரப்பினார்கள். இதனால் அந்த ஊருக்கு வரும் அனைத்து சிவனடியார்களும் இந்த அடியாரின் வீட்டில் உணவு உண்பதை பெரும்பேறாக கருதினார்கள். சிவனடியார்களின் வருகையால் மூட்டிய அடுப்பு அணையாமலேயே உணவுகள் தயாரித்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த செல்வம் சிறிது சிறிதாக கரைந்தது. ஆனாலும் மூட்டிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டார். செல்வம் முற்றிலும் கரைந்தது. அடியார்களுக்கு உணவு அளிப்பதை எக்காலத்திலும் நிறுத்தக்கூடாது அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த சிவனடியார் அந்நாட்டின் அரண்மனை கருவூலத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார். நெல்மணிகள் ஆபரணங்கள் தங்கக்காசுகள் என்று கையில் பட்டதை மூட்டை கட்டி எடுத்து வந்தார். அதனால் அன்னதானமும் குறைவின்றி தொடர்ந்து வந்தது. சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவருக்கு தன்னுடைய இலட்சியத்தில் குறையில்லாமல் அன்னதானம் நடக்கிறதே என்ற திருப்தி ஏற்பட்டது.
அரண்மனையில் பொக்கிஷங்களிலிருந்து பணமும் பொருளும் குறைகிறது என்று அரசர் இடங்கழியாரிடம் புகார் சென்றது. அரசர் காவலை பலப்படுத்தினார். ஒருநாள் பொருளை கொண்டு வரும்போது சிவனடியார் கையும் களவாக பிடிபட்டார். இடங்கழி நாயனாரிடம் அழைத்து சென்றார்கள். காவலர்கள் செய்தியை சொல்ல அடியவர் சிவக்கோலத்தில் நெற்றி நிறைய விபூதியுடன் தெய்வீக முகத்தை கண்ட இடங்கழி நாயனார் திகைத்தார். சிவக்கோலம் தாங்கியுள்ள நீங்கள் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் என்ன என்று கேட்டார். சோழப் பெருந்தகையே சிவனடியார்களுக்கு உணவு கொடுப்பதை பல வருடங்களாக தவறாமல் செய்து வந்தேன். இப்போது இந்த சிறந்த சிவப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் எடுத்து செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தேன் என்றார். அடியவர் சொன்னதை கேட்ட இடங்கழி நாயனார் அவரை காவலிலிருந்து விடுவித்தார். சிவனை வணங்கும் நான் கூட அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு செல்வம் என்னிடமிருந்து என்ன பயன். என்னிடமுள்ள அனைத்து செல்வங்களும் சிவபக்தரில் சிறந்தவரான உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்று தன்னிடமிருந்த செல்வத்தை அடியாருக்கு வழங்கி அவரை வணங்கினார். அத்துடன் தமது நாட்டிலுள்ள சிவனடியார்களுக்கு தேவையான நெற்குவியல்களை அவர்களே எடுத்துச் செல்லட்டும் என்று பறைசாற்றுங்கள் என்று கட்டளை இட்டு மன நிறைவு பெற்றார் இடங்கழி நாயனார். இடங்கழியாரின் வள்ளல் குணத்தைக் கண்ட சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார். அருள் வேந்தராகிய அரசர் நெடுங்காலம் அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.
குருபூஜை: இடங்கழியார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.