ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 358

சொல் அக விளக்கது சோதி உள்ளது. இதன் பொருள் என்ன?

அதிலேயேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா. அகத்திலே ஜோதியை பார்க்க வேண்டும். அதற்கு சொல் எனப்படும் சிவாய நம அல்லது நம சிவாய அல்லது நமோ நாராயணாய எனப்படும் அந்த மந்திர சொல்லை அகத்திலே இருந்து சொல்ல சொல்ல சொல் அகமே ஜோதி அகமாக ஆகி ஜோதி விளக்காக எரியுமப்பா ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 357

கேள்வி: இருப்பதிலேயே புனர்பூசம்தான் பெரிய நட்சத்திரமா?

பொதுவாக குருவைத் தேடி அலைபவர்கள் இந்த நட்சத்திரம் நடக்கின்ற காலத்தில் குரு தட்சிணாமூர்த்திக்கு 9 முக தீபம் ஏற்றி குரு தட்சிணாமூர்த்தியின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.

கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 356

கேள்வி: அன்பர்கள் அனைவரும் மனிதர்களை பார்க்காமல் செயலை மட்டும் பார்க்கும்படி அருள வேண்டும்:

ஓரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது இரசவாதத்தைவிட கடினமானதப்பா. செம்பை தங்கமாக்குவது இரும்பை தங்கமாக்குவது என்பதை இரசவாதம் என்கிறார்கள். ஆனால் மனிதனை மனிதனாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள். இயல்பாக ஒரு மனிதனிடம் பக்குவம் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் வார்த்தைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஒருவன் கோபப்பட்டாலோ மனம் தளர்ந்து போனாலோ அவனால் ஆன்மீகத்தில் எப்படி மேலேறி வரமுடியும்? என்பதை அவனவனேதான் சிந்தித்து உணர வேண்டும். அப்படி வருவதற்கு வேண்டிய பிரார்த்தனைகளை அனைவரும் செய்ய நன்மை உண்டு.

சிவபார்வதி

அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது பிரம்மதேவ்ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா என்ற இரண்டு சகோதரர்கள் ஹேமதபந்தி பாணியில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயரால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 355

கேள்வி: சஞ்சித கர்மா குருநாதரால்தான் தீர்க்கப்படும் என்பது குறித்து:

ஆகாமியம் பிராரப்தம் சஞ்சிதம் குறித்து தனியாகவே விளக்கங்கள் தர வேண்டும். எதுவாக இருந்தாலும் தர்மத்தில் அடிபட்டுப் போய் விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

(தர்மம் செய்ய செய்ய எந்த கர்மாவாக இருந்தாலும் அடிபட்டுப் போய் விடும்)

விஷ்ணு துர்க்கை

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.

இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 354

கேள்வி: யாகத்தில் அன்னை காட்சி தரவேண்டும்?

பிரகலாதனின் பக்தி வந்து விட்டால் இராவணனின் பக்தி வந்து விட்டால் (இதுபோல் அத்தனை அசுரர்களின் கதையை எடுத்துப் பார்) அந்த பக்தி வந்து விட்டால் நாயன்மார்களின் ஆழ்வார்களின் மன உறுதி மனத்தெளிவு வந்து விட்டால் சித்தர்களின் பற்றற்ற தன்மை வந்து விட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும். பல்வேறு வேலைகளில் இறைவனை வணங்குவது ஒரு வேலை என்றிருப்பது மனிதனின் இயல்பு. உலகியலுக்கு முக்கியத்துவம் தரும்வரை இறை இரண்டாம் பட்சமாகத்தான் மனிதனுக்கு இருக்கிறது. அடுத்து இந்த உலகியல் வாழ்வை நன்றாக வாழ வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்பதற்காக இறையை நோக்கி செல்லும்வரை இறை அதை வேண்டுமானாலும் தரலாம். இறை வேண்டும் என்று இது வரை யாரும் வேண்டவில்லை. அதுபோல் தின்மையும் உறுதியும் வரும் பொழுது கட்டாயம் இறை காட்சி கிட்டும்.