ஆமை எல்லாப் பக்கங்களில் இருந்தும் தனது உறுப்புகளை உள்ளிளுத்துக் கொள்வது போல மனிதன் புலன் நுகர் பொருட்களில் இருந்து புலன்களை உள்ளிழுத்துக் கொள்கிறோனோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஆமையானது ஆபத்துக் காலங்களில் தனது உடல் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையது. அது போல் மனிதனின் புலன்கள் ஆசைகளின் காரணமாக இந்த உலகப் பற்றுகளின் மீது செல்லும் போது புலன்களை தனக்குள் இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். எந்த மனிதன் இது போல் தன்னுடைய புலன்களை அடக்கிக் கொள்கிறானோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
சிவாலயங்களில் உள்ள நந்தி அமர்ந்த நிலையில் ஈசனை பார்த்தபடியே எப்போதும் இருப்பார். இங்கு தியாகேசப் பெருமான் முன்பாக இருக்கும் நந்தி எழுந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சுந்தரருக்காகத் தூது சென்ற சிவபெருமான் செல்லும் போது தன்னுடைய நந்தி வாகனம் எழுந்து வருவதற்கு நேரம் ஆகும் என்ற காரணத்தால் நடந்தே சென்றார். இதனால் இனி ஒருபோதும் அவரை நடக்க விடக்கூடாது என்பதற்காக நந்திப் பெருமான் தயார் நிலையில் எழுந்து நிற்கிறார்.
கேள்வி: கெளபன தீர்த்தத்தைப் பற்றியும் கெளபனத்தைப் பற்றியும் சொல்லி அருளுங்கள்:
நிர்வாண தீட்சை வேண்டும். இதுபோல பரிபூரண ஞான நிலை பல நூறு பல ஆயிரம் பல கோடி பிறவிகளுக்கு பிறகுதான் அந்த பாக்கியம் இருக்கும் என்கிற ஆத்மாக்கள் ஏதாவது ஒரு சிறு துளி புண்ணியத்தின் பலனாக ஏதாவது ஒரு குருவை நாடி தீட்டை பெற்றாலோ அல்லது ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலமாகவோ வேறு ஏதாவது வழியிலே இதுபோல் மகான்களை சந்தித்து ஆசி பெறுவதும் அது போன்ற வழியில் செல்வதற்குண்டான அந்த ஆசியை தருவதும்தான் நீ கூறிய அந்த கெளபீனத்தின் மகிமையாகும். யாருக்கு அது கிடைத்தாலும் அதன் மகிமையை புரிந்து உள்ளன்போடு எவன் போற்றுகிறானோ அவனுக்கு ஞான வழியின் கதவுகள் மிக எளிதாக திறக்கும்.
கேள்வி: அன்னசேவையையும் அபிஷேகத்தையும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டாரா ஐயனே?
இறைவன் அருளால் முருகப்பெருமான் அருளாசி தந்துதான் போகன் (போகர் சித்தர்) வந்தான் என்று நாங்கள் மீண்டும் கூறுகிறோம். தொடர்ந்து இது போன்ற பல்வேறு பூஜைகளை செய்வதோடு தமக்குள் இருக்கின்ற அபிப்ராய பேதங்களையெல்லாம் மறந்து கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து தகாத மனிதர்கள் தகாத வார்த்தைகளைக் கூறும் பொழுது அதைக் கேட்கின்ற மனிதன் சினம் கொண்டு எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் செய்து விடாமல் இன்னும் இன்னும் பல்வேறு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையோடு ஒருவர் கருத்தை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். இங்கே இறை ஆணையும் சித்தர்களின் வழி காட்டுதலும் முக்கியம். அந்த செயல் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு தொடர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு செய்ய நல்லாசி கூறி மீண்டும் தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் புண்ணியகாரியங்களும் அனைவருமே செய்ய மீண்டும் நல்லாசிகள் ஆசிகள் என்று கூறி சுபம் என்று பூர்த்தி செய்கிறோம்.
எவன் ஒருவன் அனைத்திலும் பாசம் வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதும் இல்லையோ வெறுப்பதும் இல்லையோ அவனுடைய புத்தி உறுதியானது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகத்தில் இருக்கும் உறவுகளின் மீதோ அல்லது பொருட்களின் மீதோ அது நன்மை கொண்டதாக இருந்தால் இந்த பொருள் கிடைத்ததும் மகிழ்ச்சி அடையாமலும் தீமை கொண்டதாக இருந்தால் வெறுப்படையாமலும் இருப்பவன் எவனோ அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இன்று மதியம் தான் அன்னவனுக்கு ஒரு காதையை (கதை) நினைவூட்டினோம். அன்னவனுக்கு கூறிய கதையை இன்னவன் பொருட்டு அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். அது அனைவரும் அறிந்த கதைதான் என்றாலும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
ஒருமுறை அசுர சக்திகள் (தீயவர்கள்) எல்லாம் சேர்ந்து மாநாடு போட்டன. அந்த காலத்திலே தீடீரென்று அதர்மங்கள் குறைந்து தர்மம் தலை தூக்கி விட்டது. இதை அசுர சக்திகளால் தாங்க முடியவில்லை. அசுர சக்திகளுக்கு எப்பொழுதும் கொண்டாட்டம் என்றால் இப்பொழுது பூமி இருப்பது போல் இருந்தால்தான் அசுர சக்திகளுக்கு (தீயவர்களுக்கு) கொண்டாட்டம். அங்ஙனம் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் திடுமென்று புவியெங்கும் தர்மம் தழைத் தோங்குகிறது. மனிதர்கள் அனைவரும் சாத்வீகமாக மாறிவிட்டார்கள். எல்லோரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று அவரவர் கடமையை செய்வதும் இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் வலிய சென்று உதவிகள் செய்வதும் ஒரு வேளை உதவி செய்தாலும் அதை பெறுகின்ற நிலையில் யாரும் இல்லாத நிலைமையும் உருவாக அசுர சக்திகளுக்கெல்லாம் (தீயவர்கள்) வருத்தம் வந்துவிட்டது. நம் போன்ற அசுர சக்திகளுக்கு புவியில் வேலை இல்லாமல் போய் விடுகிறது என்று எண்ணி கூட்டம் போட்டு என்ன செய்யலாம் என்று எண்ணும் பொழுது ஒரு அசுர சக்தி எழுந்து நான் சென்று மனிதர்களை குழப்புகிறேன் திசை மாற்றுகிறேன் அவர்களை தவறான வழிக்கு திருப்புகிறேன் என்று பேசியது. உன்னால் முடியுமா என்று கேட்டது தலைமை அசுர சக்தி என்னால் முடியும் என்றது சிறிய அசுர சக்தி.
அந்தப் பகுதியிலே அது எந்த நாட்டை சேர்ந்திருக்கிறதோ அதில் மிகுந்த நல்லவன் என்று கருதப்பட்ட ஒருவனை சென்று பார்த்தது. அந்த மனிதன் அன்றாடம் எழுவதும் இறைவனை வணங்குவதும் தன் கடமைகளை நேர்மையாக ஆற்றுவதும் பிறருக்கு உதவி செய்வதும் இன்னுரையாக பேசுவதுமாக வழக்கம் கொண்டவன். இந்த சிறிய அசுர சக்தி சாதுர்யமாக நுழைந்து அவனுக்குள் மனசாட்சியாக கலந்து அவனைக் கேட்க ஆரம்பித்தது. ஏ மூடனே இத்தனை ஆண்டு காலம் இறைவனை வணங்குகிறாயே? உனக்கு ஏதாவது கிடைத்ததா? எத்தனையோ தர்மங்கள் செய்தாயே? உனக்கு என்ன பலன் கிடைத்தது? இதையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நீ இன்றைக்கு மிகப் பெரிய செல்வந்தனாகி இருக்கலாமே? ஏன் இப்படி காலத்தை வீணாக்கிவிட்டாய் என்றெல்லாம் வினா எழுப்ப அவனும் குழப்பத்தில் நான் என்ன செய்வது என்று கேட்க இன்றிலிருந்து தர்மத்தை நிறுத்து. ஆலயம் செல்லாதே. இறைவனை வணங்காதே. அப்பொழுதுதான் நீ முன்னேறலாம் என்று அந்த அசுர சக்தி துர்போதனை செய்ய அவனும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டான்.
அன்றிலிருந்து இறைவனை வணங்கவும் தவம் செய்யவும் ஜபங்கள் செய்யவும் பிராத்தனை செய்யவும் வேண்டாம் என்று முடிவெடுத்து தர்மம் செய்வதையும் நிறுத்திவிட்டான். இரண்டு தினங்கள் அவனை கவனித்து விட்டு அந்த சிறிய அசுர சக்தி உற்சாகத்தோடு மேலே சென்றது. சென்று தன் மற்ற இனங்களை பார்த்து நான் எப்படி ஒருவனை குழப்பி விட்டேன் தெரியுமா? இதே போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதனை குழப்பினால் போதும். புவியில் மீண்டும் தீய சக்திகள் தலையெடுக்கும் என்று கூற அப்பொழுது தலைமை அசுர சக்தி பலமாக சிரித்து. நீ ஏதோ அவனை கெடுத்து விட்டதாக எண்ணியிருக்கிறாய். ஆனால் நீ செய்தது அவனுக்கு மிகுந்த நன்மையைத் தந்துவிட்டது. என்ன நடக்கிறது என்று கவனி என்று சொல்ல இந்த அசுர சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. அவன்தான் ஆலயம் செல்லவில்லையே? வேறென்ன வேண்டும் என்று கேட்க அவன் மனதை கவனி அதற்கு இறைவன் தந்த அருளாசியை கவனி என்று சொல்ல தன் அசுர பலத்தால் அவனை கவனிக்கும் பொழுதுதான் அனைவருக்கும் புரிய வருகிறது. அவன் ஆலயம் செல்லவில்லை. இறைவனை வணங்கவில்லை. பிராத்தனை செய்யவில்லை. தர்மம் செய்யவில்லை. ஆனால் அவன் எண்ண எண்ணுகிறான். ஐயகோ ஆலயம் செல்ல முடியவில்லையே? அடடா இன்று தர்மம் செய்யவில்லையே? அடடா இன்று மந்திரம் சொல்லவில்லையே? அடடா இன்று பூஜை செய்யவில்லையே? செய்திருக்கலாமே செய்திருக்கலாமே என்று. அவன் ஆலயம் சென்றிருந்தால் அவன் ஆலயத்தில் இருக்கும் அந்த பொழுதில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். பூஜை செய்திருந்தால் அந்த நாழிகையில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். ஆனால் அன்று முழுவதும் வேறு எந்த வேலை செய்தாலும் பூஜை செய்யவில்லையே பூஜை செய்யவில்லையே என்று சதா சர்வகாலம் 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ணத் தொடங்கிவிட்டான். நீ ஏதோ அந்த மனிதனை தவறான வழியில் திசை திருப்புவதாக எண்ணி ஏதோ ஒரு சில நாழிகை பூஜை செய்த மனிதனை 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ண வைத்து விட்டாயே என்று தலைமை அசுர சக்தி சிறிய அசுர சக்தியை பார்த்து கூறியது.
இந்த கதையை எதற்காக உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் சிறப்பாக செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணும் பொழுதே அந்த பூஜை பூர்த்தியடைந்து விடுகிறது.
துன்பங்கள் நேரும் போது மனம் கலங்காதவன் சுகங்கள் ஏற்படும் போது அவற்றில் சிறிது கூட ஆசைப்படாதவன் விருப்பம் பயம் கோபம் ஆகிய இவற்றை முற்றும் அறுத்தவன் மன உறுதியானவன் என்று சொல்லப்படுகிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது சிறிதும் கலங்காமல் வருத்தப்படாமல் இருப்பவனும் மகிழ்ச்சி ஏற்படும் போது இந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும் என்று அதன் மீது ஆசைப்படாதவனும் இவ்வுலகத்தில் அழியக்கூடிய பொருட்கள் மீது விருப்பம் இல்லாதவனாகவும் இவ்வுலகத்தில் உள்ள எதைக் கண்டும் பயம் இல்லாதவனாகவும் மரணம் என்ற ஒன்று அருகில் வந்தாலும் அதற்கும் பயம் இல்லாதவனாகவும் அகங்காரம் ஆணவத்தின் வெளிப்பாடான கோபம் என்பது இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
மூத்தோனை வணங்கு. (மூத்தோன் என்பவர் வினாயகர்) வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக் கொள். மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று நாங்கள் (சித்தர்கள்) எம் முன் அமர்பவன் இளையானோக இருந்தாலும் மூத்தோனை இருந்தாலும் கூறுகிறோமே ஏன்? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோனை இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக் கூடியது. தடைகளை களையக் கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்.
இந்த நிலையில் ஒருவன் வினவலாம் (கேட்கலாம்). நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு. வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ஏன் மூத்தோனை வணங்கு இளையோனை (முருகரை) வணங்கு அன்னை திரு வை (மகாலட்சிமி) வணங்கு என்று கூறவேண்டும்? பரம் பொருளை வணங்கு என்று கூறலாமே? கூறலாம்தான். ஆனால் இதுபோல் பலமுறை நாங்கள் (சித்தர்கள்) உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே (கடை) முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான். ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும்? எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிக் கொடு என்று கூறும். வடிவம் தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாதது போல் அனைத்து விதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம் பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன் அலுவலகத்தில் ஒரு கை சான்று (கையெழுத்து) இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன் வித்தை கூடத்திலிருந்து(பள்ளிக் கூடம்) ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால் அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா? இயலாதல்லவா.
இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும் அலுவலகத்தில் ஒருவிதமாகவும் பொது இடத்தில் ஒருவிதமாகவும் ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் பரம் பொருளும் தடைகளை நீக்கும் பொழுது விநாயகர் வடிவத்திலும் அதுபோல் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும் மனிதனுக்கு அன்பை போதிக்கும் பொழுது அன்னை (பராசக்தி) வடிவத்திலும் மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொழுது மகாலட்சுமி வடிவத்திலும் இறை மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதும் இல்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ள வேண்டாம். இல்லை எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொழுதுமே வணங்கிக் கொள்கிறேன் என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு பின் பயணம் துவங்கு ஆசிகள்.
தட்சிணாமூர்த்தி தனது சின்முத்திரை காட்டும் திருக்கரத்தை மார்பின் மீது வைத்து கால் மாற்றி அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் வலக் காலில் யோகப் பட்டயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோலத்திற்கு உத்குடியாசன திருக்கோலம் என்று பெயர். இலுமியன் கோட்டுர் என்ற ஊரில் உள்ள தெய்வநாதேஸ்வரர் சிவன் கோவிலில் இந்த தட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.
அர்ஜூனா ஒருவன் தன் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தனது ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ அவன் உறுதியான மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உலகப் பற்றுகள் மற்றும் தனது உறவு முறைகளால் வரும் பந்தம் பாசம் மற்றும் செல்வங்கள் மீது உள்ள பற்று என அனைத்து ஆசைகளையும் முற்றிலும் துறந்தவன். மற்றும் உலக ரீதியாக மகிழ்ச்சி வந்தால் உடனே மகிழ்ச்சி அடையாமலும் துக்கம் வந்தால் உடனே துக்கப் படாமலும் எது நடந்தாலும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவன். மற்றும் புகழ் ஏற்பட்டால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் யாரேனும் இகழ்ந்தால் மனம் வருத்தப்படாமலும் மனதை ஓரே நிலையில் வைத்திருப்பவன் எவனோ அவன் ஆத்மா எது ஆத்மா இல்லாதது எது என்ற ஞானத்தை பெறுகிறான். அவனே அனைத்தையும் துறந்தவன் ஆகிறான்.
இன்பம் மகிழ்ச்சி இவை அனைத்தும் வெளியில் இருந்து வருபவையாகும். அவை வந்தவுடன் உடனே சென்று விடும். ஆனால் பேரானந்தம் என்று சொல்லப்படுவது தனக்குள்ளேயே கிடைப்பதாகும். அது உடனே செல்லாது. அந்த பேரின்பத்திலேயே தனக்குள்ளேயே பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால் அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அக்பர் ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்கு உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டுமா? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று அக்பர் மகிழ்ந்தார். ஒரிரு நாட்கள் சென்றன.
அக்பரும் அவர் குடும்பத்தாரும் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் பட கோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டி விட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கிப் போட்டு விட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய் என்னால் நம்ப முடிலவில்லை. சொல் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீரில் தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக. அதற்கு பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அதற்கு அக்பர் நீ என் பேரனை தூக்கி தண்ணீரில் போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்? என்று கத்தினார்.
அரசே என்னை மன்னித்து விடுங்கள். அன்று ஒரு நாள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். அரசே சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? உங்களை சுற்றி இருக்கும் சேவர்களான எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அதற்கு என் பேரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நீ திடீரென்று தண்ணீரில் அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாரசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவ்வளவு அன்பு உயிர்கள் மீது இருக்கும்? அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது தங்களுக்கு புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று? என்று புன்னகைத்தார். நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அதற்கு அக்பர் பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாலைப் பற்றி தவறாக எண்ணி இருந்தேன். திருமால் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.