இறைவன் அருளால் கூறுவது என்னவென்றால் இதுபோல் புலஸ்தியர் பிருகு என்றெல்லாம் வரிசை கிரமமாக கூறுவார்களே இவர்களை மட்டும் சப்தரிஷிகள் என்று எண்ண வேண்டாம். இதுபோல் நல்விதமாய் சப்தம் என்ற ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு ஏழு என்று குறிப்பிடக் கூடாது. இதுபோல் இந்த ரிஷிகளுக்குண்டான தன்மைகளை யாரெல்லாம் பெறுகிறார்களோ இந்த ரிஷிகளின் போதனைகளை ஒலியாக உள்வாங்கி யாரெல்லாம் தவம் செய்து இந்த ரிஷிகளுக்கு சமமாக ஆக முயற்சி செய்கிறார்களோ ஆக முயன்று அந்த நிலையை நோக்கி செல்கிறார்களோ அனைவருமே எம்மைப் பொருத்தவரை சப்தரிஷிகள்தான்.
இந்த சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டலம் என்பது ஒரு குறிப்புக்காக கூறப்படுவது. இவர்களைப்போல் இன்னும் பலரும் வர வேண்டுமென்றுதான் இவர்கள் இன்னமும் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு செல்வந்தன் தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு எத்தனைதான் அள்ளித் தந்தாலும் எத்தனை நாள்தான் இவன் என்னிடம் அடிமையாக வேலை பார்ப்பது? என்னைப் போலவே இவனும் செல்வந்தன் ஆக வேண்டும் இறைவா என்று ஒருபொழுதும் அவன் பிரார்த்தனை செய்ய மாட்டான். ஆனால் மகான்களும் ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும் கணத்திற்கு கணம் இறைவனிடம் கேட்பது என்னவென்றால் அத்தனை மனிதர்களும் எங்களையும் எங்களைத் தாண்டி செல்ல வேண்டும் என்றுதான் தவம் செய்து கொண்டிருக்கிறோம்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் நூலின் பதினெட்டாவது படலமாகும்.
சொக்கநாதரின் கருணையினால் ஆட்சியில் அமர்ந்த அபிடேகப்பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று மதுரையில் சொக்கநாதருக்கு இன்பத்தையும் வீடு பேற்றினையும் வழங்கும் வழிபாட்டினை முறைப்படி நடத்தத் தொடங்கினான். இதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்த வரும் தேவர்களின் தலைவனான இந்திரன் அபிடேகப்பாண்டியனின் வழிபாடு முடியும்வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்திரன் பெரும் சோகத்தில் முகம் வாடி தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். இந்திரனின் இருப்பிடத்திற்கு வந்த வருணன் இந்திரனின் வாடிய முகத்தைக் கண்டான். பின் அவன் இந்திரனிடம் தேவர்களின் தலைவனே உன்னுடைய முகம் வாடியிருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இந்திரன் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதரை நான் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி அன்று வழிபாடு நடந்துவேன். இந்த வருடம் அபிடேகப்பாண்டியனின் வழிபாட்டால் நான் வழிபாடு நடத்த சற்று காலம் தாழ்ந்தது. சாதாரண மனிதனால் என்னுடைய வழிபாடு காலம் தாழ்ந்து நிகழ்ந்தது. அதனாலேயே என்னுடைய மனம் துன்பம் அடைந்துள்ளது என்று கூறினான்.
சொக்கநாதருக்கு யார் முதலில் வழிபாடு நடத்தினால் என்ன? முதன் முதலாக வழிபாடு செய்வதற்கு அந்த சொக்கநாதர் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேள்வி கேட்டான். அதற்கு இந்திரன் என்னுடைய பழியையும் வெள்ளை யானையின் சாபத்தையும் இறைவனான சொக்கநாதர் நீக்கினார். மேலும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்தினால் ஆண்டு தோறும் வழிபட்ட பலன் கிடைக்கும். தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். இச்செய்தி உனக்கு தெரியாதா? என்ற கேட்டான். அதற்கு கடல்களின் அரசனான வருணன் தேவலோகத்தில் இருக்கும் மருத்துவர்களாலும் தீர்க்க முடியாத எனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று வலியை சொக்கநாதர் தீர்த்து வைப்பாரா? என்று கேட்டான். மக்களின் பிறவியாகிய பெருங்கடலை தீர்த்து வைக்கும் சொக்கநாதர் உன்னுடைய வயிற்று வலியை கட்டாயம் தீர்த்து வைப்பார். நீ இறைவனின் திருவிளையாடலை இப்பொழுதே சோதிப்பாயாக என்று கூறினான். வருணன் சென்று வெள்ளியம்பலத்துள் ஆடும் பெருமானின் திருவிளையாடலைக் கண்டு வயிற்று வலியை நீக்கிக் கொள்ளக் கருதி ஒலிக்கின்ற கடலை விரைந்து அழைத்தான். பின் நீ மதுரையை அழிப்பாயாக என்று வருணன் கட்டளை இட்டான். வருணனின் ஆணையை ஏற்ற கடலானது பொங்கி மேலே எழுந்து மதுரை அழிக்க வந்தது. கடல் பொங்கி வருதை அறிந்த மதுரை மக்கள் மற்றும் அபிடேகப்பாண்டியன் சொக்கநாதரை சரண் அடைந்தனர். சொக்கநாதரிடம் அபிடேகப்பாண்டியன் பொங்கி மதுரையை அழிக்க வரும் கடலிடமிருந்து எங்களை விரைந்து காப்பாற்றுங்கள் இறைவா என்று பிரார்த்தனை செய்து அழுதான்.
சொக்கநாதர் அபிடேகப்பாண்டியன் மற்றும் மதுரை மக்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய சடையில் சூடியிருந்த மேகங்களிடம் பொங்கி வரும் கடலினைக் குடித்து அதனை வற்றும்படி செய்யுங்கள் என்று கூறினார். இறைவனின் ஆணையின்படி நான்கு மேகங்களும் உயர்ந்து எழுந்து பொங்கிய கடலின் நீரினைக் குடித்தன. மதுரை நகரானது கடலின் துன்பத்திலிருந்து தப்பியது. அபிடேகப்பாண்டியனும் மதுரை மக்களும் தங்களைக் காத்த சொக்கநாதரை பலவாறுப் போற்றி வழிபாடுகள் நடத்தினர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
சித்திரை மாதம் வரும் பௌர்ணமியில் இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பயனையும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தால் பிறவியாகிய பெருங்கடலை கடக்கலாம் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: சித்தர் அருட்குடில் மற்றும் ததீசியகம் (தம்மை வருத்தி சேவை செய்யும்) திருமண வயதுடைய பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஆசிகள்:
இறைவன் அருளால் கூறுகிறோம். இப்பொழுதுதான் கூறினோம். ஒருவன் திருமணம் வேண்டும் குழந்தை வேண்டும் எனும் பொழுது அவற்றால் அவன் நலத்தை அடைவானா? நலத்திற்கு மாறான நிகழ்வை அடைவானா? என்பதை உணர்ந்து இன்னவள் கூறியது போல இத்தனை சேவைகள் செய்கிறானே? இவனுக்கு எதற்கு திருமணம்? என்று இறைவன் அவன் மீது பரிதாபப்பட்டு நடக்க வேண்டிய திருமணத்தையே தடுத்து வைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் இன்னவள் இவ்வாறு கேட்க சரி அவனே விரும்புகிறான். நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்று திருமண பந்தத்தை இறைவன் ஏற்படுத்தி விடுவார். ஒரு மனிதனுக்கு கர்மாவை கழிப்பதில் அத்தனை ஆர்வம். எப்படியாவது திருமணம் செய்து சீக்கிரம் கர்மா குறைய வேண்டும் என்று ஆணும் பெண்ணும் ஆசைப்படுகிறார்கள். எனவே அனைத்து திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் இறைவன் அருளால் திருமணம் நடக்க இத்தருணம் யாங்கள் நல்லாசி கூறுகிறோம்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாணிக்கம் விற்ற படலம் நூலின் பதினேழாவது படலமாகும்.
உக்கிரபாண்டியனின் மகனான வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்டு வந்தான். அவனுக்கு பட்டத்து ராணியைத் தவிர மனைவியர் பலர் இருந்தனர். வீரபாண்டியனுக்கு பட்டத்து ராணியைத் தவிர ஏனைய மனைவியர் மூலம் குழந்தைகள் பலர் பிறந்தனர். பட்டத்து ராணிக்கு மட்டும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. எனவே வீரபாண்டியனும் அவனுடைய பட்டத்து ராணியும் குழந்தைப்பேறு வேண்டி அஷ்டமி விரதம் சதுர்த்தி விரதம் சோமவார விரதம் முதலிய விரத முறைகளைப் பின்பற்றி வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் பலனாக சற்புத்திரன் ஒருவரைப் பெற்றனர். தன் பட்டத்துராணியின் மகனான செல்வப்பாண்டியனுக்கு முறைப்படி கல்வி கலைகள் ஆகியவற்றை வீரபாண்டியன் கற்பித்தான். ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது புலியால் கொல்லப்பட்டான். மன்னன் மறைந்த சேதியை அறிந்த மன்னனின் மற்ற மனைவியர் பிள்ளைகள் கருவூலத்தை அடைந்து நவமணிகள் பதித்த திருமுடியையும் செல்வத்தையும் திருடிச் சென்று விட்டனர். மன்னன் மறைந்த சேதியை அறிந்த அமைச்சர்கள் வீரபாண்டியனுக்கு உரிய முறையில் செல்வபாண்டியனை வைத்து ஈமச்சடங்குகளை முடித்தனர். பின்னர் செல்வபாண்டியனுக்கு முடிசூட எண்ணினர். கருவூலத்தை திறந்து திருமுடியை தேடினர். நவமணிகள் பதித்த திருமுடியும் பிற செல்வங்களும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தனர். வேறு மணிமுடி ஒன்று செய்யலாம் என்றாலோ உயர்ந்த பெரிய மணிகள் இல்லை. முடி இல்லையாயின் அரசும் இல்லை. அரசு இல்லையாயின் மக்கள் துன்பம் அடைவர். இப்போது நாம் என்ன செய்வது? என்று திகைத்தனர். பின்னர் அரசகுமாரனை அழைத்துக் கொண்டு இறைவனை வணங்க எண்ணிச் சொக்கலிங்கப் பெருமான் திருமுன்னர் சென்று கொண்டிருந்தனர்.
இறைவன் அப்போது அவர்கள் முன்னர் ஒரு நவரத்தின வணிகராக வேடம் பூண்டு தோன்றினார். அவர் அமைச்சர்களிடம் நீங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள் ஏன் என்று கேட்டார் என்று கேட்டார். அமைச்சர்கள் நடந்த விவரங்களை அவரிடம் விளக்கிக் கூறினர். அதனைக் கேட்ட இறைவனார் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்னிடம் நவரத்தினங்கள் பல உள்ளன. அவற்றைக் காட்டுகிறேன். பாருங்கள் அவை பலகோடி பொன் விலையுள்ளன. என்று கூறி கீழ்த்திசையினை நோக்கி அமர்ந்து ஒரு பெரிய கம்பளத்தை விரித்தார். அக்கம்பளத்தின் எட்டுத்திசைகளிலும் முறையே முத்து முதலிய எட்டு மணிகளை எடுத்து வைத்து இம்மணிகள் வலன் என்னும் அசுர அரசனின் உடற்கூறுகள் என்று கூறினார். உடனே அமைச்சர்கள் வலன் என்பவன் யார்? அவனுடைய உடலிலிருந்து எவ்வாறு நவமணிகள் தோன்றின? என்று கேட்டனர். இறைவனான வணிகர் அமைச்சர்களிடம் வலன் என்பவன் ஓர் அசுர அரசன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் என்னை நோக்கி தவம் இயற்றியதன் காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு வலன் நான் போரில் யாராலும் வெட்டப்பட்டு இறக்காத வரத்தை அருள வேண்டும். ஊழ்வினையின் காரணமாக எனக்கு இறப்பு நேர்ந்தால் எனது அங்கங்கள் விலை மதிக்க முடியாத பொருளாகி அனைவரும் விரும்பும் வண்ணம் ஆக வேண்டும் வேண்டினான். இறைவனாரும் வலனுக்கு அவன் வேண்டிய வரத்தினை அருளினார்.
இறைவனிடம் வரத்தினை பெற்ற மகிழ்ச்சியால் தேவேந்திரனோடு வலன் போரிட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றினான். வலனின் வரத்தினை அறிந்த தேவேந்திரன் வலனை போரினால் வெல்ல இயலாது. ஆகையால் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் என்று எண்ணி மனதிற்குள் ஒரு திட்டத்தினை வகுத்தான். அதன்படி தேவேந்திரன் வலனை அணுகி வெற்றியுடையவனே உன்னுடைய தோளின் வலிமையும் வெற்றிப் பெருக்கும் எல்லா திசைகளிலும் பரவி விட்டது. அந்த புகழ்ச்சியின் காரணமாக நான் ஒரு வரத்தினை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு வலன் சிவபெருமான் அருளிய வரங்கள் எனக்கு இருக்கும் போது அதற்கு மேலாக நான் பெறக் கூடிய வரங்கள் என்று ஒன்றும் இல்லை. என்னிடம் உனக்கு எதாவது வேண்டுமா கேள் நான் தருகிறேன் என்று எதிர் கேள்வி கேட்டான். வலனின் வார்த்தைக் கேட்டதும் தேவேந்திரன் மகிழ்ந்து மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அசுரர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளி மலையை அடைந்து அங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். நீ அப்போது தேவர்களுக்கு அவியூட்ட வேள்விப் பசுவாகி வரவேண்டும் என்று கூறினான். அதனைக் கேட்ட வலன் ததீசி முனிவன் தன்னுடைய முதுகுத் தண்டினை வஜ்ஜிரப்படைக்குக் கொடுத்து உடலால் புகழ் பெற்றார். நானோ பிறரை வெல்லும் வெற்றியாலும் பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் ஆகிய இரண்டால் புகழ் பெறப் போகிறேன். ஆகையால் நீ வேண்டியபடி வேள்விப் பசுவாகி உங்களுக்கு அவியுணவு ஊட்ட வருவேன் என்று வாக்களித்தான்.
இந்திரனிடம் கொடுத்த வாக்கின்படி வலன் தன் மகனுக்கு பட்டத்தைச் சூடிவிட்டு தேவர்களுக்கு அவியுணவு ஊட்ட வேள்விப் பசுவாகி அமைதியாக தேவேந்திரன் வேள்வி செய்யும் இடத்திற்கு வந்து நின்றான். தேவர்கள் அமைதியின் உருவாகி வந்த பசுவாகிய வலன் மூச்சடக்கி வேள்வியில் அவியுணவானான். அவனது உடலில் இருந்து சென்ற ஒளி ஆகாயத்தில் சென்று மறைந்து சத்தியலோகம் சென்றது. அவனது உடலின் இரத்தம் மாணிக்கம் ஆனது. பற்கள் முத்து தலைமயிர் வைடுரியம் எலும்பு வைரம் பித்தம் மரகதம் நிணம் கோமேதகம் தசை பவளம் கண்கள் நீலம் கோழை புருடராகம் என நவமணிகள் தோன்றின என்று வணிகராக வந்த இறைவன் கூறினார். வியாபாரியாக வந்த இறைவனிடம் இந்த நவமணிகளைப் பற்றி மேலும் விரிவாக கூறுங்கள் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதற்கு இறைவன் சூரியனுக்கு மாணிக்கம் சந்திரனுக்கு முத்து செவ்வாய்க்குப் பவளம் புதனுக்கு மரகதம் வியாழனுக்கு புஷ்பராகம் சுக்கிரனுக்கு வைரம் சனிக்கு நீலம் ராகுவுக்கு கோமேதகம் கேதுவுக்கு வைடூரியம் கோவிலில் நவக்கிரகங்கள் குடி கொண்டிருப்பது போல் வைத்து பூஜை செய்து பார்க்க வேண்டும். மேலும் மணிகளைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள் என்று நவ மணிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
வைரம் எதையும் அறுக்கக் கூடியது. ஆனால் வைரத்தை யாரும் பிளக்க முடியாது. மாசில்லாத வைரத்தை அணிபவர்களுக்கு ஆரோக்கியம் வெற்றி மங்களம் இவை கிட்டும். ததீசி முனிவர் மற்றுப் வலாசுரன் இவர்களுடைய எலும்புகள் விழுந்த இடமெல்லாம் வைரம் விளைகின்றது. வாகைப்பூ வாழை மூங்கில் இலை போன்று இருப்பது விஷ்ணுவின் வைரம். தூய வெண்மையாய் ஆறுபட்டையோடு கூடியது இந்திரவைரம். நில நீரோட்டம் வண்டுநிற வைரங்கள் யமவைரம் கனமில்லாமல் இருப்பது வாயு வைரம். கர்ணிக்காரப்பூப் போன்றது வருணவைரம். தண்ணீர் இருப்பது போன்ற தோற்றமுள்ளது சந்திரவைரம். வண்ணத்துப்பூச்சி போல் பலநிறம் காட்டுவது சூரிய வைரம். அனல் நிறமுடையது அக்கினி வைரம். திருமாங்கல்யத்தில் வைரம் பதிக்கக்கூடாது. பலநிறம் காட்டும் வைரம் அரசரருக்குரியது.
முத்துக்களது நீரில் உண்டானவை தரையில் உண்டானவை என இருவகைப்படும். மாடப்புறாவின் முட்டை போல் வெளுத்த சங்கிலிருந்து உண்டான முத்து மேன்மை பெற்றது. மீன் தலையில் இருந்து உண்டான முத்து பாடலிப்பூ போல இருக்கும். மேகமுத்து இளம் சூரிய ஒளி போலிருக்கும். பன்றிப்பல் முத்து லேசான சிவப்பாயிருக்கும். நெல்முத்து நாமக் கரும்பு முத்து யானை முத்து மூன்றும் லேசான மஞ்சள் நிறமாயிருக்கும். சிப்பி முத்து நிலாவைப் போன்ற நிறம். பாம்பு முத்து நீல ஒளிவீசும். விஷ்ணு முத்து நீலநிறம். இந்திர முத்து மஞ்சள் நிறம். யமமுத்து மேகநிறம். வாயு முத்து இரத்த சிவப்பு நிறம். வருணமுத்து வெண்மை நிறம். அக்கினி முத்து செந்நிறம். உருண்டையான கனமும் வழுவழுப்பும் ஒளியும் கூடிய முத்தை அணிவதால் கெடுதல்கள் நீங்கும் செல்வமும் ஆயுளும் பெருகும்.
மாணிக்கத்தில் சாதரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கவாங்கம் அல்லது நீலகந்தி என நான்கு வகையுண்டு. சாதரங்கம் செந்தாமரை செங்கழனிப்பூ மின்மினிப் பூச்சி நெருப்பு தீபச்சுடர் குயில்கண்கள் மாதுளை முத்து கதிரவன் மாதுளம்பூ பட்டுப்பூச்சி என்ற பத்து சாயல்களைக் கொண்டிருக்கும். குருவிந்தம் செம்பருத்திப்பூ, கிம்சு மலர் உலோத்திர புஷ்பம் பந்தூகப்பூ குன்றிமணி சிந்தூரம் முயல் ரத்தம் என்ற எட்டு சாயைகள் உடையவை. செம்பஞ்சுக் குழம்பு குயில்கண் இலவுப்பூ ஐந்திலைப்பூ பழுக்கக்காய்ச்சிய உலோகம் இவை சௌகந்திகத்தின் சாயல்களைக் கொண்டிருக்கும். குசும்பப்பூ கோவைப்பழம் மருதோன்றிப்பூ மனோரஞ்சிதம் போன்றிருப்பது நீலகந்தி. புண்ணியம் செய்தவர்களுக்கே குற்றமற்ற மாணிக்கத்தை அணியும் பாக்கியம் கிடைக்கும்.
பச்சைக்கற்கள் அறுகம்புல் நிறமுடையது. இவற்றில் ஐந்து வகை உள்ளது. காடம் பேசலம் தினை இலையின் நுனி போலிருக்கும். பித்தகம் கிளி இறகு போலிருக்கும். முத்தம் துளசிப்பச்சை போலிருக்கும். பிருதுகம் தாமரை இலைப் பச்சை போலிருக்கும். உல்லசிதம் பச்சைப் பயிர் போலிருக்கும்.
மரகதம் எலுமிச்சை இலைப் பச்சையாய் இருப்பது தோஷலே சாந்து. அரளி இலைப் பச்சை துஷ்டம். செந்தாமரை இலைநிறம் தோஷமூர்ச்சிதம். பனிதோய்ந்த தாமரை இலைநிறம் தோஷலேசம். மந்ததோஷம் மயில்தோகை நிறத்தில் இருக்கும்.
மகாநீலம் இதைப் பாலில் போட்டால் முன்னிலும் அதிகமாகப் பிரகாசிக்கும். வானவில்லைப் போல் பல நிறம் காட்டுவது இந்திர நீலம்.
கோமேதகம் தேன் சொட்டு கோமயம் உறைந்த நெய் இவை போன்று தெளிவாகும்.
புஷ்பராகம் இதற்கு பதுமராகம் என்று ஒரு பெயரும் உண்டு. மேற்பாகம் உருண்டு மனதை ஈர்க்கக்கூடிய புஷ்பராகம் உயர்ந்தது. இந்திரனும் புஷ்பராக நகைகள் நிறைய அணிவான்.
வைடூரியம் மூங்கில் இலை பூனைக்கண் மயில் கழுத்து நிறத்தில் இருக்கும். வழுவழுப்பான பிரகாசிக்கும் மூளியில்லாத வைடூரியங்கள் சிறந்தது.
பவளமானது கோவைப்பழம் செம்பருத்தி கிளிமூக்கு நிறங்களில் இருக்கும்.
சூரிய காந்தக் கல்லானது சூரியனது கதிர்கள் பட்டதும் நெருப்பைப் போல் ஜ்வலிக்கும்.
சந்திர காந்தக் கல்லானது சந்திரனது ஒளிப்பட்டதும் பலமடங்கு ஒளிவீசும்.
கலியுகத்தில் சூரிய காந்தக் கல் மற்றும் சந்திர காந்தக் கல் இவ்விரண்டு கற்களும் கிடைப்பது மிகவும் அரிது என்று சொல்லி முடித்த இறைவன் வடக்கு திசையினை நோக்கி இருந்த மணிகளைக் கையில் எடுத்து இந்த அரசிளம் குமரனுக்கு நிறைந்த செல்வமும் நீண்ட வாழ்நாளும் அமையட்டும். இந்த மணிகளைக் கொண்டு மணிமகுடம் செய்து சூட்டி இக்குமாரனுக்கு அபிஷேகப்பாண்டியன் என்று பெயரிட்டு அழையுங்கள் என்று வாழ்த்தி நவமணிகளை வழங்கினார். அரசிளம்குமாரனும் சொக்கலிங்கப் பெருமானை வணங்கி அம்மணிகளைக் கையில் பெற்றுக் கொண்டான். இறைவனாரும் நவமணிகளை அளித்தவுடன் அவ்விடத்தைவிட்டு மறைந்தார். இங்கு வணிகராக வந்தது சொக்கநாதரே என்று அமைச்சர்கள் உணர்ந்தனர். அரசகுமாரன் சொக்கநாதரை வழிபட்டு அரண்மனையை அடைந்தான். இறைவனார் அளித்த நவமணிகளை கொண்டு மணிமகுடம் செய்து நல்ல நாளில் அரசிளம்குமரனுக்கு முடிசூட்டி அபிஷேகப்பாண்டியன் எனப் பெயரிட்டனர். முன்னர் பொருட்களைக் கவர்ந்து சென்ற வீரபாண்டியனின் மற்றைய பிள்ளைகள் பிடிபட்டனர். அபிஷேகப்பாண்டியன் அவர்களை மன்னித்து அவர்கள் வாழ்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். பின் அபிஷேகப்பாண்டியன் நல்வழியில் நீதிதவறாது மதுரையை ஆட்சி செய்து வந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
நவரத்தினங்களின் வகைகள் அவை உருவான விதம் அவற்றின் நிறங்கள் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளும்படியும் இறைவனிடம் வரம் பெற்றவர்களாக இருந்தாலும் வலனின் அகங்காரம் போல் இருந்தால் அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
இறைவன் அருளால் கூறுகிறோமப்பா. மகாமேரு குறித்து ஆண்டுக் கணக்கில் கூறலாம். அதில் அத்தனை விஷயங்கள் இருக்கிறது. இதுபோல் நல்விதமாய் ஸ்ரீ சக்ரமாக இருந்தால் அது ஸ்ரீ சக்ரம் யந்திரம். அதையே ஒரு ஸ்தூல வடிவமாக செய்தால் இன்னவன் கூறிய மகாமேருவாகும். இதனை தூய உள்ளத்தோடு முறையாக உபதேசம் பெற்று தொடர்ந்து ஒரு மனிதன் ஆண்டாண்டு காலம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபட்டு வந்தால் அவன் இறையருள் பரிபூரணமாக பெறுவான். ஆனால் இதை எழுதுகின்ற முறையிலே பல பிழைகள் இருக்கின்றன. பிழையோடு பூஜை செய்வது சிறப்பல்ல. இதைவிட அன்னையின் வடிவத்தை வைத்து தற்கால மனிதர்கள் பூஜை செய்வதே ஏற்புடையதாகும்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம் நூலின் பதினாறாவது படலமாகும்.
ஒரு சமயம் ஊழிக் காலம் உண்டானது. அதனால் பதினான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின. பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன் மீண்டும் அனைத்தும் தோன்றின. அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின. நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர் கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார். முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும் மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஐயனே மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக் கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆகையால் நாங்கள் தெளிவடைய ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அரபத்தர் வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆகையால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தவம் இயற்றுவதற்கு சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரை சிறந்த இடம் என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.
அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும் பொருட்டு மதுரை சென்று அடைந்தனர். பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டார்கள். பின்னர் கல்லா மரத்தின் (கல் ஆகி விட்ட ஆலமரம்) கீழ் குருவாகிய தென்முகக் கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர். இவ்வாறு அவர்கள் ஒரு வருடக் காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வ லட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.
முனிவர்களிடம் குற்றமற்ற தவத்தினை உடையவர்களே உங்கள் விருப்பம் என்ன? என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய வேதங்களின் பொருளினை அருள வேண்டும் என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர். அதற்கு இறைவனார் பதில் சொல்ல ஆரம்பித்தார். லிங்கத்தின் முன் சென்று வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும் பாச பந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும். இச்சிவலிங்கமும் வேதமும் ஒன்றே. இந்த சிவலிங்கபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை இந்த சொக்கலிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம். ஆதியாகி அந்தமாகி என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம். ஜோதிர்மயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. அதற்கு பிரம்மம் என்று பெயர். படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலுக்காக பிரம்மம் மூன்றாகப் பிரிந்து பிரம்மன் விஷ்ணு ருத்திரன் எனப் பெயர் பெற்றது.
இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய ஓம் என்னும் பிரணவத்திலிருந்து விரும்பிய பொருளை அடைவதற்குரிய காயத்ரி தோன்றியது. இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன. சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது. அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது. சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.
வேதங்களைக் கருமகாண்டம் ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டமானது உண்மை அறிவு பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன. கருமகாண்டமானது பூஜை வகைகள் ஆசிரம விதிகளை விவரிக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள் நித்திய நைமித்திக காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும். நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மை வடித்தை உணர்ந்து தெளியுங்கள். வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமையும் என்று கூறி முனிவர்களின் இதயத்தை தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
ஊழிக்காலத்திற்கு பிறகு உலகம் தோன்றிய விதத்தையும் காயத்திரி மந்திரம் தோன்றிய விதத்தையும் வேதங்கள் தோன்றிய விதத்தையும் வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் மேலும் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்த முனிவர்கள் பிரார்த்தனை செய்ததும் அவர்களின் கவலைப் போக்கியது போல் பிரார்த்தனை செய்தால் வேண்டியதை இறைவன் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: ஸ்ரீ ருத்ரத்தில் க்ரம பாட என்ற பகுதி எதற்காக ஓதப்படுகிறது?
ருத்ரம் ஓதுவது நல்லது என்ற அளவில் நாங்கள் கூறுகிறோம். அதற்குள் உள்ள பொருளை வெளிப்படையாக பார்த்தால் குழப்பமாகவும் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும் இருக்கும். சகல சக்திகளும் ஆற்றலும் பெற்ற பரம்பொருளே உன்னை ருத்ர வடிவில் வணங்குகிறேன். நீ படைத்த இந்த பொருளையெல்லாம் உனக்கு தருகிறேன். நீ எனக்கு இதனைக் கொடு என்பதெல்லாம் அதில் வந்துகொண்டிருக்கும். ஆனால் கவனிக்க வேண்டும். முக்கண்ணனாகிய பரம்பொருளை அல்லது ஏதோ தெய்வத்தின் வடிவை வணங்கும் பொழுது யாராவது அழியக் கூடிய பொருளை கேட்பார்களா? அப்படி கேட்கக் கூடிய ஒரு நிலையை பிரசித்தி பெற்ற துதியாக மாற்றுவார்களா? எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் வெறும் உலகியல் ஆதாயத்திற்காக கூறப்படும் பாடல் போல் தோன்றினாலும் கூட இதையெல்லாம் தாண்டி பரிபூரண ஞானத்தைக் கொடு என்பதுதான் அதன் ஒட்டுமொத்த பொருளாகும். மற்ற உலகியல் விஷயங்களையெல்லாம் அருளியல் விஷயங்களாக பார்க்க மனிதன் முயற்சி எடுத்து பழக வேண்டும்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மேருவை செண்டால் அடித்த படலம் நூலின் பதினைந்தாவது படலமாகும்.
உக்கிரபாண்டியன் அகத்தியர் கூறிய முறைப்படி சோமவார விரதமுறையைப் பின்பற்றி மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். சோமவார விரதத்தின் பயனாக உக்கிரபாண்டியனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். சோமவார விரதத்தின் பயனாக வீரபாண்டியன் இயற்கையிலேயே அழகும் அறிவும் நிரம்பியவனாக இருந்தான். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் விளங்கினான். அப்போது ஒரு சமயம் மதுரையில் மழை வளம் குன்றி பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அரசுக்கு வரி செலுத்த முடியாமல் திணறினர். தம்மக்களின் குறைகளைப் போக்க எண்ணிய உக்கிரபாண்டியன் நேரே திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையும் வணங்கி மக்களின் துயர் போக்க வழியினை வேண்டி வழிபாடு நடத்தினான். அன்றைய இரவில் உக்கிரபாண்டியனின் கனவில் சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி இமயத்தை தாண்டி இருக்கும் மேருமலையின் அரசன் ஏராளமான பொன் மற்றும் பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளான். தற்போது செல்வச் செழிப்பினால் மேரு மலையானது செருக்கு கொண்டுள்ளது. நீ அந்த மலையை சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டினால் அடித்து அதன் செருக்கை அழித்து அதனிடமிருந்து பொருளைப் பெற்று உன் நாட்டு மக்களின் துயரத்தைப் போக்கு. உனக்கு தேவையான பொருளினைப் பெற்றவுடன் அதன் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்துவிடு. அதே நேரத்தில் மேருமலையை அடைவதற்கு நீ நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிஅருளினார்.
இறைவனின் திருவாக்கினைக் கேட்ட உக்கிரபாண்டியன் அதிகாலையில் விரைந்து எழுந்து நித்திய கடன்களை முடித்து பெரும் படையைத் திரட்டி மேருமலையை நோக்கி பயணம் ஆவதற்கு தயார் ஆனான். காலையில் சொக்கநாதரையும் மீனாட்சி அன்னையையும் வழிபட்டு தன்னுடைய படைகளுடன் மேருமலையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினான். அவன் காசியை அடைந்து விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பின் இமயத்தைக் கடந்து பொன்போல் ஒளி வீசும் மேருமலையை அடைந்தான். உக்கிரபாண்டியன் மேருமலையை நோக்கி மலைகளுக்கு எல்லாம் அரசனே எம் தந்தையாகிய சிவபெருமானின் கையில் உள்ள வில்லே நிலவுலகின் ஆதாரமே வானத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் வசிக்கும் கோவிலே நீ விரைந்து வருவாயாக என்று கூவி அழைத்தான். உக்கிரபாண்டியன் அழைத்தும் வராததால் கோபம் கொண்டு சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டு எனப்படும் பொன் பந்தினால் மேருவின் சிகரத்தில் ஓங்கி அடித்தான். செண்டினால் அடிபட்ட மேருமலை வலியால் துடித்தது. அம்மலையை சுற்றியுள்ள அனைத்தும் நடு நடுங்கின. பின் மேருமலையானது நான்கு தலைகளும் எட்டு தோள்களும் வெண்ணிற குடையையும் தாங்கியவாறு உக்கிரபாண்டியனின் முன்னால் வந்து நின்றது.
உக்கிரபாண்டியனும் கோபம் தணிந்து நீ காலம் தாழ்த்தி வந்ததற்கு காரணம் யாது? என்று கேட்டான். அதற்கு அம்மலை எனக்கு அசையும் உருவம் அசையா உருவம் இரண்டும் உண்டு. அசையும் வடிவத்தில் நான் தினந் தோறும் சென்று சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சி அம்மனையும் ஆகாய மார்க்கமாக சென்று வழிபட்டு வந்தேன். ஆனால் ஒரு பெண்ணின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக நான் பறக்கும் சக்தியை இழந்ததோடு அறிவு மயக்கத்தில் சோமசுந்தரரையும் வழிபட மறந்திருந்தேன். செல்வம் என்னிடம் அத்திகமாக இருக்கிறது என்ற ஆணவத்தில் காலம் தாழ்த்தி வந்தேன். அதன் காரணமாக தங்களிடம் இறைவன் கொடுத்த பந்தினால் அடியும் பட்டேன். என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் இங்கே வந்த காரணம் யாது? என்று கேட்டது. உடனே பாண்டியனும் நான் என் மக்களின் துயரினைப் போக்க பொருளினை விரும்பி இவ்விடத்திற்கு வந்தேன் என்றான். அதற்கு மேருமலை உக்கிரபாண்டியரே என் உடலாகவே உள்ள இந்த மலையில் மாசுள்ள இடம் மாசற்ற இடம் என இரண்டு பகுதி உள்ளது. மாசற்ற இடத்தில் சூரிய ஒளிபோல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு. நீங்கள் விரும்பிய பொன்னானது அந்த தூய்மையான பாகத்தில் பாறையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறி பொருள்கள் இருக்கும் அறையை தன் கையினால் சுட்டிக் காட்டியது மேருமலை. உக்கிரபாண்டியன் அப்பொன்னறையின் அருகே சென்றான். மூடிய பாறையை நீக்கி வேண்டிய அளவு பொன்னை எடுத்துக் கொண்டு ஏற்கனவே இருந்தபடி மூடி வைத்தான். பின்னர் தான் எடுத்துக் கொண்ட பொருளின் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்து தன் படைகளோடு புறப்பட்டு மதுரையை அடைந்தான்.
மதுரையை அடைந்த உக்கிரபாண்டியன் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியையும் வணங்கினான். பின் அரண்மனையை அடைந்து தான்கொண்டு வந்த பொன் பொருட்களைக் கொண்டு தன்னுடைய குடிமக்களின் பசித் துன்பத்தை நீக்கினான். சிவபெருமானின் திருவருளால் மீண்டும் பாண்டிய நாட்டில் மழை பெய்து வளங்கள் பெருகின. நீதிதவறாமல் அரசாண்ட உக்கிரபாண்டியன் தன்மகனான வீரபாண்டியனுக்கு அரசுரிமையை அளித்தான். பின் சொக்கநாதரின் திருவடியில் இரண்டறக் கலந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
செல்வ செருக்கும் முறையற்ற பெண்ணாசையும் ஒருவனை தன்னுடைய நிலையில் இருந்து கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: இறைவன் மேல் அணிவித்த மாலையை பிரசாதமாக ஏற்ற பிறகு நாங்கள் எப்படி பராமரிப்பது?
இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் இதுபோல் சுவாமியின் திருமேனியில் உள்ள மாலையை அதுபோல் பிரசாதமாக ஏற்பதும் பய பக்தியாக வழிபாடு செய்வதும் தவறல்ல. என்றாலும் கூட நன்றாக கவனிக்க வேண்டும். தெரிந்தும் தெரியாமலும் அந்த பிரசாத பூக்கள் எங்கும் சிதறாமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை அங்கேயே ஸ்தல விருட்சத்தின் அடியில் வைத்து விடலாம். அல்லது அது இறைவனிடமே இருக்கட்டும் ஒரு மலரை மட்டும் கொடுங்கள் என்று பவ்யமாக கேட்டுக் கொள்ளலாம். அதைவிட்டு அதை வாகனத்தில் மாட்டுவது அனாச்சாரமாகும். அதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. மலர்கள் அனைத்துமே இறைவனுக்கும் இறைவனுக்கு சமமான மகான்களுக்கு மட்டுமே உரியது. அதை அனாச்சாரமான காரியங்களுக்கு பயன்படுத்துவதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. பாவப்பட்ட மனிதனின் மேல் மலர்கள் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி இறைவனிடம் கேட்கும். என்ன பாவம் செய்தேன் இறைவா இவன் மேனியில் நான் கிடக்கிறேனே? என்னை மன்னிக்கக் கூடாதா? உன் மேனிக்காக மலர்ந்த எனக்கு இவன் மேனியில் இடம் வந்திருக்கிறதே? இது நியாயமா? என் மீது இரக்கமில்லையா இறைவா? என்று ஒவ்வொரு மலரும் கண்ணீர் விடுகிறது. எனவே மலர்களை கழுத்திலே சூடிக்கொள்ளும் முன்னால் மனிதன் சிந்திக்க வேண்டும். அடுத்த வார்த்தை கேட்பார்கள். பெண்கள் தலையில் சூடுகிறார்களே? என்று. இதிலே பெண்களுக்கு சில விதி விலக்குகளை இறைவன் தந்திருக்கிறார். அதிக அளவு இல்லாமல் சிறிய அளவிலே நறுமணமிக்க மலர் மாலையை மலர் சரத்தை பெண்கள் சூடிக் கொள்ளலாம். அதற்கு காரண காரியங்கள் வேறு. அதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ளலாம்.