சோழ நாட்டில் பெருமங்கலம் என்னும் நகரத்தில் ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர். அக்குடியில் வாழ்ந்து வந்தவர்களில் கலிக்காமர் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் உருவமாகவும் அன்பின் வடிவமாகவும் சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இச்சிவனடியார் சிவனை சிந்தையில் வைத்து ஐந்தெழுத்து நமசிவாய மந்திரத்தை இடைவிடாமல் எந்நேரமும் ஓதி வந்தார். இவர் வாழ்ந்து வரும் நாளில் இறைவனை சுந்தரர் தனக்காக பரவையாரிடம் (சுந்தரரின் மனைவி) தூது போக விட்ட நிகழ்ச்சி நடந்தது. இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார். இத்தகைய செயல் புரிந்த இவர் தன்னை இறைவனின் தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையா? இது எவ்வளவு பாவமான செயல் பொறுக்கமுடியாத அளவிற்கு இந்த செய்தியை கேட்ட பின்னும் என்னுயிர் போகவில்லையே என்று வருந்தினார் கலிக்காமர். இதனால் சுந்தரர் மீது மிகவும் கோபம் கொண்டார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தன்னால் ஒரு தொண்டருக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தனது தவறினை பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரையும் கலிக்காமரையும் நண்பர்களாக்க எண்ணம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விஷம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த கலிக்காமர் மயக்க நிலைக்கு சென்றார். அப்பொழுது இறைவன் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் சுந்தரனே ஆவான் என்று அசீரிரியாக சொல்லி மறைந்தார்.
இறைவன் சுந்தரரிடம் உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக என்றார். சுந்தரர் இறைவனை வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை தனது பணி ஆட்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர். பணி ஆட்கள் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இறைவனை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். இறைவனே இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை. சுந்தரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் எனது உயிரைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். கலிக்காமர் உயிர் பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் இறைவனை சேர்வது என்று உறுதி பூண்டு அதற்குரிய செயலை ஆரம்பிக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் வந்து சுந்தரர் வந்து விட்டார் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதும் கலிக்காமரின் மனைவி தனது துயரத்தை மறைத்து கணவரது உடலை மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க தயாரானார்.
சுந்தரர் தன்னுடன் வந்த அன்பர்களுடன் உள்ளே நுழைந்தார். கலிக்காமரின் மனைவி சுந்தரரை வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மயாருக்கு அருள் செய்தார். சுந்தரர் அம்மையாரை நோக்கி அம்மையே என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெறும் காலம் வந்து விட்டது அவரை பார்க்க வேண்டும் அவர் இருக்குமிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். கலிக்காமருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர்களை சொல்லச் சொன்ன கலிக்காமரின் மனைவி தானும் அவ்வாறே சொன்னார். அதற்கு சுந்தரர் அவருக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரை காண வேண்டும் என்று துடிக்கிறது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். கலிக்காமரின் மனைவி வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தார். குடல் வெளிப்பட்டு உயிர் நீங்கி கிடந்த கலிக்காமரைக் கண்டு உள்ளம் பதறிப்போன சுந்தரர் வேதனை தாங்க முடியாமல் கண்களில் நீர்பெருக இறைவனே தியானித்தார். எம்பெருமானே இதென்ன அபச்சாரமான செயல் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறி கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார்.
இறைவன் திருவருளால் அப்போது ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர் பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாள் சுந்தரரை தாக்காமல் பிடித்துக் கொண்டார் கலிக்காமர். ஐயனே இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே இறைவனின் அன்பிற்குப் பாத்திரமான உங்கள் மீது பகைகொண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியுடன் கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் மனைவியும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். மானக்கஞ்சாரர் மகளான கலிக்காமர் மனைவியின் பக்தியை சுந்தரர் பெரிதும் போற்றினார். இறைவனின் திருவருள் கருணையினால் கலிக்காமரும் சுந்தரரும் தோழர்களாயினர். இருவரும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர். அங்கியிருந்து புறப்பட்டு இருவரும் திருவாரூரை வந்தடைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன் பரவையார் இல்லத்தில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்து செல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். அங்கு பற்பல திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.
குருபூஜை: எயர்கோன் கலிக்காம நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.