ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய யமாடோ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில் இயற்கை வழிபாடுகள் சடங்குகள் அதிகம் நிறைந்த ஷிண்டோ மதமும் புத்த மதமும் பரவின. இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவி இருக்கிறது.
ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில் சரஸ்வதியும் ஒருவர். பென்தென் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பென்சைட்டென் என்ற பெயரில் சரஸ்வதி அழைக்கப்படுகிறாள். பென்சைட்டென் சக்தி மிக்க தெய்வமாகவும் ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. நாட்டைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்கிறாள். மேலும் இனிமையான குரல் அதிர்ஷ்டம் அழகு மகிழ்ச்சி ஞானம் சக்தியை அருளும் தெய்வமாகவும் அங்கு போற்றப்படுகிறாள். கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல ஜப்பானிலும் நீர்நிலைகள் குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பென்சைட்டனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன் எனவும் கருடன் கருரா எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் வாயு வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.
சரஸ்வதிதேவி விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக ரிக் வேதத்தில் தகவல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே ஜப்பானிய பென்சைட்டெனும் தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள் கல்வி கலைகளில் சிறக்கவும் முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.