மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -37

குந்திதேவி பிராமணரையும் அழைத்துக்கொண்டு பீமனிடம் சென்று அனைத்தையும் கூறினாள். பீமன் அசுரனை அழித்துவிடுவதாக உறுதி கூறினான். அடுத்த நாள் காலையில் ஒரு வண்டி நிறைய உணவு அவர்களின் வீட்டருகே கொண்டு வரப்பட்டது. பகன் என்னும் அசுரன் வசித்து இருந்த இடத்திற்கு பீமன் அந்த வண்டியை ஓட்டிச் சென்றான். வேண்டுமென்றே செல்லும் வழியில் காலதாமதம் செய்தான். பகனுடைய குகைக்கு அருகில் வந்ததும் கொண்டு வந்திருந்த உணவு வகைகளை தானே திருப்தியாக புசித்தான். தனது உணவுகளை ஒரு மனிதன் சாப்பிடுவதைப் பார்த்த அசுரன் அந்த மனிதனை அழிப்பதற்கு விரைந்து ஓடி வந்தான். பசிப் பிணிக்கு உட்பட்டிருந்த பீமன் கொண்டு வந்த உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அவனை ஒரு கையால் பிடித்து சமாளித்தான். பிறகு சண்டை தொடங்கியது. யானை கரும்பு ஒன்றை இரண்டாக கிழிப்பது போன்று அந்த அரக்கனை இரண்டாக கிழித்து அசுரனின் பிரேதத்தை வண்டியில் பொட்டு நகரத்தின் வாயில் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். ஊரார் அனைவரும் அதை பார்க்க வேண்டும் என்பது அவனது எண்ணம். தேவதை ஒன்று அந்த அரக்கனைக் கொன்று தன்னை காப்பாற்றியது என்று பிராமண விருந்தினர் ஊராருக்கு எடுத்துரைத்தார். பாண்டவர்கள் இன்னும் சிறிது காலம் மறைத்து இருக்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். ஏகசக்ர நகரம் அன்று முதல் நரபலியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் அந்த வீட்டு பிராமணரின் பாராட்டுக்குரிய விருந்தினர்களாக மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்கள். வேதங்களை கற்பதிலும் ஏனைய சாஸ்திரங்களை ஆராய்ச்சி பண்ணுவதிலும் மறைந்திருந்த காலத்தில் நேரத்தை செலவிட்டார்கள். காலம் சிறிது நாள் சென்றது காலம் எப்படி கடந்து போயிற்று என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. நூல் ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கி இருந்ததே அதற்கு காரணம்.

சாஸ்திரங்களை ஆழ்ந்து ஆராய்ந்து படித்த பிராமண பண்டிதன் ஒருவன் ஒவ்வொரு நாடாக தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்களை அவர்களுடைய வீட்டில் வந்து சந்தித்து சில காலம் தங்கினான். அங்கு அவன் வசித்து வந்த குறுகிய காலத்தில் அரிய பெரிய விஷயங்களைப் பற்றிய அற்புதமான சொற்பொழிவுகள் நிகழ்தினான். வேறு நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள் சிலவற்றை பற்றியும் பேசினான். அப்பொழுது பாஞ்சால நாட்டு மன்னனாகிய துருபதனை பற்றியும் அவளது மகளாகிய திரௌபதியை பற்றியும் பேசினான். அந்த அழகிய பெண்ணுக்கு சுயவரம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலில் தலைசிறந்த வில்லாலியான அர்ஜுனனுக்கு அப்பெண்ணை மணந்து கொடுக்க அவளது தந்தை துருபதன் தீர்மானித்திருந்தான். ஆனால் வாரணவதத்தில் நடந்த பரிதாபகரமான முடிவை கேள்வியுற்று அவனுடைய மனம் உடைந்து போயிற்று. எனினும் ஒருவேளை அர்ஜுனன் மாண்டு போகாது உயிரோடு இருந்தால் அவன் இந்த சுயம்வரத்திற்கு வந்து சேர வேண்டும். என்பது அதனுடைய ஆவலாக இருக்கிறது. இவ்வாறு புதிதாக வந்திருந்த பண்டிதன் துருபதனைப்பற்றியும் திரொபதியைப்பற்றியும் கூறினான். மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் உற்சாகத்துடன் இதனை கேட்டு திரௌபதி அர்ஜுனனுக்கு உரியவள் என்று உணர்ந்தார்கள். வியாச மகரிஷி மறுபடியும் அவர்களிடம் பிரசன்னமாகி அவர்களை ஏகசக்ர நகரத்தில் இருந்து புறப்பட்டு துருபதன் ஆண்டுவந்த பாஞ்சால நாட்டு தலைமை பட்டனமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டுப் போகும்படி அவர்களுக்கு புத்திமதி கூறினார். பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு தலைமை பட்டணமாகிய கம்பிலியாவுக்கு புறப்பட்டு போக தீர்மானித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.