மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -38

பாஞ்சால நாட்டின் தலைமை பட்டணத்தில் சுயவரத்திற்க்காக மகத்தான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. பிரபலம் வாய்ந்த ராஜகுமாரர்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. துரியோதனனை தலைவனாகக் கொண்டு கௌரவர்வர்கள் அங்கு வந்திருந்தார்கள். கர்ணனும் வந்திருந்தான். சகோதரர்களாகிய பலராமனும் கிருஷ்ணனும் அங்கு வந்திருந்தார்கள். வந்திருந்த மன்னர்களில் பெரும்பாலோனோர் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்க்காக வந்திருந்தனர். போட்டி போடுவதற்கும் பலர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் அமர்வதற்கு பொருத்தமான இட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அழைப்பு இல்லாதவர்களாகவும் யாருக்கும் அறிமுகமாகாத பாண்டவர்கள் இந்நகரத்திற்கு வந்தார்கள். ஒரு குயவனுடைய வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதற்கு இடம் தேடிக் கொண்டார்கள். பிட்சையாக அகப்பட்டதை அவர்கள் பூசித்து வந்தார்கள். வீதிகளில் அலைந்து திரிந்து அங்கு நிகழும் சுயவரத்தைப் பற்றிய விவரங்களை எல்லாம் அவர்கள் சேகரித்து கொண்டார்கள்.

அர்ஜுனன் மட்டும் உயிரோடு இருப்பானாகில் அவன் திடீரென்று கவர்ச்சிகரமாக மேடையில் தோன்றி மற்ற போட்டியாளர்களை எல்லாம் பின்வாங்கும் படி அவன் தோற்கடித்தான் என்னும் பேச்சு மக்களிடையே இருந்தது. குறிப்பிட்ட சுயவர நாள் வந்தது. மேடை மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நறுமணம் எங்கும் தவழ்ந்து கொண்டிருந்தது. இனிய இசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மன்னாதி மன்னர்கள் கவர்ச்சிகரமான பாங்கில் அவரவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அதற்கு நேர்மாறாக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்கள் தனித்தனியாக வந்து பிராமணர்களுக்கு உரிய இடங்களில் அமைதியாக அமர்ந்து கொண்டனர். அவர்கள் தனித்தனியாக வந்ததற்கு காரணம் ஒன்று இருந்தது. அனைவரும் சேர்ந்து வந்தால் நிச்சயமாக உலகத்தவர்கள் அவர்களை அடையாளம் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆகையால் அவர்கள் தனித்தனியாக வந்து அமர்ந்து கொண்டனர்.

அகன்ற கொட்டகையின் மத்தியிலே அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு திருஷ்டத்யும்னன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அழைத்து வந்தான் பிறகு போட்டியிடுவதற்காக வந்திருந்தவர்களின் பெயர்களை வாசித்தான். திரௌபதி அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள். தெய்வீக சௌந்தர்யம் அவளிடம் இயல்பாக அமைந்திருந்தது. அவள் அணிந்திருந்த ஆடை அந்த அழகை மேலும் அதிகரிக்கும்படி செய்தது. பூமாலை ஒன்றை அவள் கையில் ஏந்தியிருந்தாள். வெற்றி பெற்ற ராஜகுமாரனுக்கு அந்த மாலையை அவள் சூட்டுவாள். திரௌபதி தன் கண்பார்வையை கீழே தரையின் மீது வைத்தவளாக அமைதியுடன் நின்று கொண்டிருந்தாள்.

போற்றுதற்குரிய மன்னர்கள் இருக்கும் பேரவையில் திருஷ்டத்யும்னன் பேச ஆரம்பித்தான். எல்லோருடைய கவனத்தையும் பணிவுடன் வேண்டுகிறேன் இதோ இங்கு வில் இருக்கிறது. 5 அம்புகள் இருக்கின்றன. ஒரு துவாரத்தைச் கூடிய சக்கரம் ஒன்று மேலே சுழன்று கொண்டு இருக்கிறது. அதற்கு மேல் இலக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது. சுழன்று கொண்டிருக்கின்ற சக்கரத்தின் வாயிலாக மேலே இருக்கின்ற இலக்கின் மேல் எய்பவர்கள் என் சகோதரியை திருமணம் முடிந்து கொடுக்கின்றோம் இது என் உறுதிமொழி என்று திருஷ்டத்யும்னன் பேசி முடித்தான். வேந்தர்கள் அனைவரும் வில்லையும் அம்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிருஷ்ணனுடைய கருத்து சபையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது சென்றது. தன் பார்வையை எல்லா பக்கமும் அவன் செலுத்தினான். பிராமணர்களிடையே பாண்டவ சகோதரர்கள் மாறுவேஷத்தில் அமர்ந்திருப்பதை கிருஷ்ணன் கண்டு கொண்டான். அவர்கள் உயிரோடு இருப்பதை பார்த்து அகமகிழ்ந்து கொண்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.