திரௌபதியின் திருமணத்திற்குப் பிறகு துருபத மன்னன் முற்றிலும் திருப்தி அடைந்தவனாய் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஏனெனில் தான் எண்ணியிருந்த எண்ணம் முழுவதும் திரௌபதியின் திருமணத்தின் மூலம் நிறைவேறும் என்ற எண்ணமே அதற்கு காரணமாய் இருந்தது.. தன்னுடைய மருமகன்களான பாண்டவர்களிடம் துருபதன் முக்கியமான விஷயம் ஒன்றை கூறினார். தன் குடும்பத்திற்கும் பாண்டவர்கள் குடும்பத்திற்கும் இடையில் எந்தவிதமான வேற்றுமையும் இருக்கக்கூடாது. இரண்டு குடும்பத்தையும் ஒரே குடும்பமாக கருத வேண்டும் என்று கூறினான். தனக்கு சொந்தமாய் இருந்த பாஞ்சால நாடு தங்களுக்கும் சொந்தம் என்றே கருத வேண்டும் என்று கூறினான். திருமணத்தின் வழியாக இந்த புதிய உறவு பாண்டவர்களுக்கு புதிய வல்லமையும் தகுதியையும் தருவதாய் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஏதும் இல்லாத நாடோடிகள் இல்லை. அவர்களுக்கு பலம் வாய்ந்த பின்பலம் அமைந்தது. கிருஷ்ணனும் பலராமனும் அவர்களுடைய உறவினர்களும் பாண்டவர்களுக்கு நெருங்கிய சொந்தங்கள் ஆயினர்.
சினத்தையும் பொறாமையையும் தட்டி எழுப்புகின்ற செய்தி ஒன்று அஸ்தினாபுரத்தில் கௌரவர்களுக்கு எட்டியது. பாண்டவர்கள் மடிந்து போகவில்லை. பாஞ்சால நாட்டில் பிராமணர்களாக வந்து திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்கள் பாண்டவர்கள் தான். இப்பொழுது அவர்கள் பாஞ்சால நாட்டில் உறுதியான இடம் பிடித்திருக்கின்றனர் என்ற செய்தியை கேட்டு அவர்களுடைய உள்ளம் குழம்பியது. விதுரர் தனது போக்கில் இந்த செய்தியை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அரசனாகிய திருதராஷ்டிரனிடம் விரைந்து ஓடிச் சென்று திரௌபதி அஸ்தினாபுரத்திற்கு மருமகளாய் வந்திருக்கிறாள். குரு வம்சம் ஓங்குக என்று கூறினார். இதைக்கேட்ட திருதராஷ்டிரன் துரியோதனன் சுயம்வரத்தில் வென்று திரௌபதியை அழைத்து வருகின்றான் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் துரியோதனனையும் திரௌபதியையும் ஏன் உன்னோடு இங்கு அழைத்து வரவில்லை. நான் அவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறேன் என்று கூறினார். உடனே விதுரர் அண்ணா பாண்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். சுயம்வரத்தில் திரௌபதியை அவர்களே பெற்றிருக்கிறார்கள். பாஞ்சால ராஜ்ஜியத்தில் அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்றார். திருதராஷ்டிரனுக்கு இச்செய்தி காதில் இடி விழுந்தது போல் இருந்தது. உள்ளத்தில் சீறி எழுந்த சினத்தை மறைத்து வைத்துக் கொண்டு தன் தம்பியின் பிள்ளைகளிடத்தில் அன்பு வைத்திருந்ததாக அவன் பாசாங்கு செய்தான். நான் மகிழ்ச்சி அடைகிறேன் கடைசியாக மாண்டுபோன என் தம்பியின் மைந்தர்கள் உயிரோடு இருக்கிறார்கள். பாஞ்சால நாட்டில் அவர்கள் சௌபாக்கியத்துடன் இருக்கட்டும் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விதுரரிடம் கூறினார்.
மண்டபத்துக்கு வெளியில் துரியோதனனும் கர்ணனும் ஒதுங்கி நின்று கொண்டு உள்ளே நிகழ்ந்த உரையாடல்களை கேட்டு கொண்டிருந்தனர். விதுரர் சென்ற பின் அவர்கள் இருவரும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். துரியோதனன் பதைபதைப்புடன் தந்தையே நான் விரும்பாத பாண்டவர்களிடம் தாங்கள் அன்பு இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு திருதராஷ்டிரன் நீ கவலைப்படுவதை விட அதிகமாக நான் கவலைப்படுகிறேன். ஆனால் என் மனதில் இருப்பதை நான் விதுரரிடம் வெளிப்படுத்த முடியாது. பாண்டவர்கள் நலனில் விதுரர் அக்கறை மிக வைத்திருக்கின்றான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே எனக்கு எடுத்து விளக்கு என்றார்.