மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -45

திருதரஷ்டிரரிடம் துரியோதனன் பாண்டவர்களை அழிக்க பல வகையான சூழ்ச்சிகளை எடுத்துரைத்தான். ஆனால் கர்ணன் அதற்கு ஆமோதிக்கவில்லை. துரியோதனின் திட்டங்கள் பயந்தாங்கோல்லி தனமானது என்றும் வேறு சில சூழ்ச்சிகள் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்றும் அவன் அனைத்து திட்டங்களையும் ஒதுக்கித் தள்ளினான். க்ஷத்திரியனுக்கு உகந்தது படையெடுப்பு. அதிவிரைவில் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்து போக வேண்டும் என்று கர்ணன் கூறினான். வீரம் நிறைந்த போர் நடவடிக்கை திட்டம் திருதரஷ்டிர மன்னனால் அங்கீகரிக்கப்பட்டது. பாஞ்சால நாட்டை கௌரவ சேனைகள் படையெடுத்துப் போய் தாக்கினார்கள் ஆனால் அந்நாடு எதற்கும் அசையவில்லை. பாஞ்சால நாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள் தோல்வியடைந்து ஓடினார்கள்.

பாஞ்சால நாட்டின் மீது கௌரவர்கள் படைகள் போருக்கு வந்த செய்தியைக் கேட்ட கிருஷ்ணன் அந்த நாட்டை பாதுகாக்க தன் சேனையுடன் விரைந்து சென்றான். கிருஷ்ணன் அங்கு போகும் முன்பே போர் முடிந்து அமைதி நிலவியது. ஆயினும் சிறிது காலம் கிருஷ்ணன் அங்கு தங்கியிருந்தார்.

அஸ்தினாபுரத்தில் பீஷ்மரும் துரோணரும் விதுரரும் திருதராஷ்டிர மன்னனுக்கு நல்ல அறிவுரைகளை புகட்டினார்கள். திருதராஷ்டிரரின் மகன்கள் செய்த கொடுமைகள் அனைத்துக்கும் பரிகாரம் தேடும் படி தெரிவித்தார்கள். பாண்டவர்களும் அவர்களின் தாய் குந்திதேவியும் அரக்கு மாளிகை தீயில் அழிந்து போகவில்லை. அவர்கள் அந்த அக்னியில் கொளுத்தப்பட்டு மாண்டு போய் இருந்தால் அந்த கொடிய பாவம் காலமெல்லாம் உங்களுக்கே உரியதாகும். துஷ்டனாகிய அமைச்சர் புரோச்சனன் அச்செயலுக்கு அனைத்து காரியங்களையும் செய்திருந்தாலும் உங்கள் அனுமதியின் பேரில் செய்ததால் அவனுக்கு பாவம் சேராது. உங்களுக்கே சேரும். கெட்ட காரியங்கள் செய்ய அனுமதிப்பதை விட செத்து மடிவதே மேல். பாண்டவர்களை தாங்கள் வரவழைத்து தம் பிள்ளைகள் போல் அவர்களை பாராட்டுங்கள். அவர்களுக்கு இவ்வளவு நாள் செய்துள்ள தீமைகளுக்கு விமோசனம் இது ஒன்று தான். நிலவுலகில் நெடுங்காலம் நிலை பெற்று இருக்கும் குரு வம்ச அரசாங்கத்திற்கு முற்றிலும் உரிமையாளர்களாக இருப்பவர்கள் பாண்டவர்களே. கௌரவர்கள் அல்லர். ஆயினும் அரசாங்கத்தை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விடுங்கள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே அமைதியும் ஒற்றுமையும் இன்பமும் நிலவும். இந்த அறிவுரையை கேட்ட திருதராஷ்டிரன் திருந்தியவன் போல் தென்பட்டான்.

பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு திருப்பி அழைத்து வர பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்க அனைவரும் தீர்மானித்தார்கள். பொறுப்பு விதுரரிடம் ஒப்படைக்கப்பட்டது. துருபத மன்னனுக்கு குருவம்சத்தின் அன்பையும் பாராட்டுகளையும் விதுரர் தெரிவித்துக் கொண்டார். துருபத மன்னனும் தன்னுடைய அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டான். இத்தருணத்தில் கிருஷ்ணன் பாஞ்சால நாட்டில் தங்கியிருந்த காரணத்தில் இத்தகைய ஒற்றுமையை மிக எளிதில் நிறைவேற்றப்பட்டது. நெடுநாளைக்கு பிறகு பாண்டவர்கள் நலமுடன் இருப்பதை பார்த்து விதுரர் அகமகிழ்ந்தார். பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்கு திரும்பி போக வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர் கிருஷ்ணனும் அவர்களுடன் அஸ்தினாபுரம் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.