மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

பாண்டவர் சகோதரர்கள் ஐந்து பேரும் வாலிபப் பருவத்தை இன்னும் தாண்டவில்லை. அரண்மனையின் ராஜ போகங்களை அவர்கள் இப்போது தான் முதல் முதலாக அனுபவிக்க ஆரம்பித்தனர். சிற்றன்னைக்கு பிறந்த சகோதரர்களாகிய கௌரவர்கள் நூறு பேருடன் அவர்கள் இனிதே ஒட்டி உறவாடினார்கள். அரண்மனை கலகலப்புடன் இருந்தது. ராஜகுமாரர்கள் ஊக்கம் ததும்பிய பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். அவர்களிடம் தான் எப்பொழுதும் தலைமை தாங்கி இருக்க வேண்டும் என்பது துரியோதனின் விருப்பமாக இருந்தது. ஆனால் தற்செயலாக பீமன் ஒவ்வொரு விளையாட்டிலும் மிகவும் சக்தி மிக்கவனாக இருந்தான். விளையாடும் போது கூட்டாளிகள் பத்து பேரே ஒரே நேரத்தில் வீழ்த்துவது அவனுக்கு சர்வசாதாரண செயலாக இருந்தது. கௌரவ சகோதரர்கள் பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி இருந்தபோது பீமன் அம்மரத்தை ஓங்கி ஒரு உதை உதைத்தான். அதன் விளைவாக அத்தனை பேரும் பழங்கள் விழுவது போன்று பொலு பொலுவென்று கீழே விழுவார்கள். மரத்தில் இருந்த பழங்கள் அத்தனையும் அவர்களோடு சேர்ந்து தரையில் விழும். நதியில் நீந்தி விளையாடிய போது இளைஞர்கள் 10 பேர் குடுமியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நீரின் அடியில் சென்ற பிறகு அதிக நேரம் அசைவற்று இருப்பான். அதன் விளைவாக அவன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் திணறுவார்கள். கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்துவிடுவார்கள். இது பீமனுக்கு விளையாட்டாக இருந்தது. அவனது கையில் அகப்பட்டு கொண்டவர்களுக்கு திண்டாட்டமாக இருந்தது.

தான் இளவரசனாக வேண்டுமென்பது துரியோதனின் ஆசையாக இருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் அவனுக்கு மூத்தவன் அவனே இளவரசு பதவிக்கு தகுதியானவன். அது துரியோதனனுக்கு இடைஞ்சலாக இருந்தது. இது ஒருபுறமிருக்க விளையாட்டில் பீமன் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். ஆகையால் முரடனாக இருந்த அந்த சகோதரன் பீமன் மீது வெறுப்பையும் பொறாமையையும் அவன் வளர்த்து வந்தான். சின்னஞ்சிறு வயதில் உருவெடுக்கின்ற நட்பும் பகையும் ஆயுட்காலம் முழுவதும் அசையாது உள்ளத்தில் உறுதி பெற்றிருப்பது மானிட வாழ்க்கையை பற்றிய கோட்பாடு ஆகும். காட்டில் பிறந்து வீட்டிற்கு வந்திருக்கும் சகோதரர்களை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று துரியோதனன் திட்டமிட்டான்.

ஒருநாள் நதிக்கரையில் உணவு அருந்த துரியோதனன் ஏற்பாடு செய்தான். அது நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது விஷம் கலந்த உணவை துரியோதனன் பீமனுக்கு தானே எடுத்து வழங்கினான். உணவை ருசித்த பிறகு இளைஞர்கள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தனர் விஷம் அருந்திய உணவால் மயங்கியிருந்த பீமனை யாரும் கவனிக்கவில்லை. பீமனின் கைகள் கால்கள் இரண்டையும் துரியோதனன் பசுமையான காட்டுக்கொடி போட்டு கட்டி நீருக்குள் போட்டுவிட்டான். அன்றைய விளையாட்டு முடிவுக்கு வந்தது. எல்லோரும் அரண்மனைக்கு திரும்பினார்கள். பீமன் முன்பே அரண்மனைக்கு சென்று இருக்கக்கூடும் என்று எண்ணி பாண்டவ சகோதரர்கள் அரண்மனைக்கு வந்து தனது சகோதரன் பீமன் பற்றி விசாரித்தார்கள். ஒரு மகன் திரும்பி வராது இருப்பதை கண்டு குந்திதேவி கவலை மிகக்கொண்டாள்.

விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு மற்ற சகோதரர்கள் வந்து இவனை தேடிப் பார்த்தார்கள் பீமனை எங்கு தேடியும் காணவில்லை. மனம் கலங்கி இருந்த குந்திதேவி விதுரரை வரவழைத்தாள். பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த துரியோதனனால் தன்னுடைய மகனுக்கு விபத்து ஏதும் இருக்குமோ என்று அவரிடம் தெரிவித்தார். இதற்கு ஆலோசனை ஒன்று விதுரர் கூறினார். அதாவது துரியோதனனை பற்றி அவளின் எண்ணத்தை வெளியிடாது மறைத்து வைத்திருக்க வேண்டுமென்றும் அப்படி செய்யாவிட்டால் மற்ற குழந்தைகளுக்கும் ஏதாவது விபரீதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால் அவள் கவலையுற்று இருந்ததால் மற்றொரு கருத்தையும் அவர் கூறினார். ஐந்து சகோதரர்களும் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்றும் அறிய பெரிய செயல்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்றும் ரிஷிகள் உறுதி கூறி இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு பொய்யாகாது என்றார். அதை கேட்ட குந்திதேவி ஒருவாறு ஆறுதல் அடைந்தாள். தன் மகனுக்கு கேடும் ஒன்றும் வராது என்று நம்பி இருந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.