துரோணர் விளக்கமாக கூறியது அனைத்து மாணவர்களுக்கும் புரிந்தது முதலில் துரோணர் யுதிஷ்டிரனை கூப்பிட்டு வில்லில் அம்பை பூட்டி குறி வைக்கும்படி கூறினார். யுதிஷ்டிரன் அம்பால் குறி வைத்த பின்பு துரோணர் அவரிடம் உனக்கு என்ன தெரிகிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் எனக்குப் பக்கத்தில் தாங்கள் இருக்கின்றீர்கள். சுற்றிலும் மரங்கள் இருக்கின்றன. மேலே முக்கோணமாக மூன்று கிளைகள் தெரிகின்றது. அதனுள் பறவை போன்ற அமைப்பு தெரிகின்றது என்று சொல்லிக்கொண்டே சென்றான். உடனே துரோணர் யுதிஷ்டிரனைப் பார்த்து நீ அம்பை எய்ய வேண்டாம் தனியாக சென்று அமர்வாயாக என்று சொல்லி உத்தரவிட்டார். அடுத்தபடியாக துரியோதனன் அழைக்கப்பட்டான். அவனும் அதே இடத்தில் இருந்து வில்லில் அம்பை பூட்டி குறி வைத்தான். என்ன பார்க்கிறாய் என்று துரியோதனனைப் பார்த்து கேட்டார். யுதிஷ்டிரன் கூறியதைப் போலவே துரியோதனும் கூறினான். அவனையும் அம்பு எய்ய வேண்டாம் எழுந்து செல் என்று உத்தரவிட்டார். மூன்றாவது முறையாக பீமனுடைய முறை வந்தது. பீமனைத் தொடர்ந்து அதே கேள்விகளும் விடைகளும் அடுத்தடுத்த மாணவர்களிடையே தொடர்ந்து வந்தது. அனைவரும் அம்பு எய்யாமல் அருகில் சென்று அமர்ந்தார்கள்
அர்ஜுனனுடைய முறை வந்தது. என்ன பார்க்கிறாய் என்று விளக்கமாக சொல் என்று அர்ஜுனனை பார்த்து துரோணர் கேட்டார். அதற்கு அர்ஜுனன் பறவை என்று மட்டும் பதிலளித்தான். என்ன பார்க்கின்றாய் என்று நன்றாக விளக்கு என்று துரோணர் அர்ஜுனனை பார்த்து கூறினார். அர்ஜுனன் ப என்று மட்டும் சொன்னான். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. என்ன என்ன பார்க்கின்றாய் என்று துரோணர் அர்ஜுனனை அதட்டினார். அர்ஜுனனிடம் இருந்து விடை ஒன்றும் வரவில்லை. அவனுடைய மனது குறியின் மீது மட்டுமே இருந்தது. துரோணர் அம்பை விடு என்றார். அம்பு குறியை துளைத்துக்கொண்டு போனது. இந்த நிகழ்வு மாணவர்களிடையே இருந்த பாகுபாட்டை நன்கு விளக்கி காட்டியது. மனதை ஒருமுகப்படுத்துவதில் அர்ஜுனன் தலை சிறந்தவனாக திகழ்ந்தான். யார் ஒருவன் தன் மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி தனது பயிற்சியில் ஈடுபடுகின்றானோ அப்பயிற்சியில் அவன் மேன்மை அடைந்தவன் ஆகின்றான்
துரோணர் மாணாக்கர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கு நீராடச் சென்றார். நீரில் மூழ்கி அவர் நீராடிய போது முதலை ஒன்று அவர் காலை பிடித்துக் கொண்டது. தம்மை விடுவித்துக் கொள்ளும் திறமை துரோணருக்கு இருந்தது ஆயினும் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர் போல அவர் பாசாங்கு பண்ணி சிஷ்யர்களை உதவிக்கு வரும்படி அழைத்தார். ஆச்சாரியாரின் நிலையைப் பார்த்த ராஜகுமாரர்கள் அனைவரும் பரபரப்பும் பதைபதைப்பும் மனக்குழப்பம் உடையவர்களாக அங்குமிங்கும் ஓடினர். அர்ஜுனன் ஒருவன் மட்டுமே மனம் கலங்காது இருந்தான். ஐந்து அம்புகளை விடுத்து முதலையை துண்டு துண்டாக வெட்டி தள்ளினான். விடுபட்ட ஆச்சாரியார் மகிழ்வுடன் அர்ஜுனனை பாராட்டினார். பிரம்மாஸ்திரம் உட்பட பல அஸ்திர சாஸ்திர நுட்பங்களை அர்ஜுனனுக்கு புகட்டி வந்தார். நெருக்கடியான சூழ்நிலை வந்தால் மட்டுமே மேலான இந்த அஸ்திர சாஸ்திரங்களை பயன்படுத்த வேண்டும். சாமானியமான சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார். மேலும் சில அஸ்திரங்களை மனிதர்கள் மீது பிரயோகிக்க கூடாது என்றும் ராட்சஷர்கள் போன்ற எதிரிகள் மீது மட்டுமே அத்தகைய அஸ்திர சாஸ்திரங்களை கையாள வேண்டுமென்றும் அவனுக்கு பாடம் புகட்டி வந்தார். அவ்வாறு இல்லாமல் முறையில்லாமல் அந்த அஸ்திர சாஸ்திரங்களை உபயோகப்படுத்தினால் உலகுக்குக் கேடு விளைவிக்கும். அவ்வாறு உலகுக்குக் கேடு செய்பவன் பெரும் குற்றவாளி ஆவான் என்றும் அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார்.