அர்ஜுனன் தலை சிறந்த வீரன் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருந்த பொழுது மைதானத்தின் வாசலில் திடீரென்று ஒரு ஓசை கேட்டது. அதன் விளைவாக அங்கு சிறு சலசலப்பு உண்டாயிற்று. வந்தவன் கர்ணன். ஆச்சாரியர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தினான். பிறகு தான் கற்றிருந்த வில்வித்தை திறனை மேடையில் செய்து காட்டுவதற்கு அவர்களுடைய அனுமதியை வேண்டினான். அரை மனதோடு அவனுக்கு அனுமதி தரப்பட்டது. அவன் அர்ஜுனன் செய்து காட்டிய அனைத்து வித்தைகளையும் திறமைகளையும் செய்துக் காட்டினான். அர்ஜுனனுக்கு ஒருவாறு தயக்கம் உண்டாயிற்று.
இதற்கிடையில் அரசர் குடும்பத்தினர்கள் அமர்ந்திருந்த மேடையில் பெண்களிடையே குழப்பம் ஒன்று உருவாயிற்று. அதற்கு காரணம் குந்திதேவி மயக்கமடைந்திருந்தாள். குந்தி தேவி சிறுமியாக இருந்த போது துருவாச மகரிஷிக்கு பணிவிடை செய்த பொழுது பரம திருப்தி அடைந்த மகரிஷி குந்திக்கு மந்த்ரோபதேசம் ஒன்று செய்து வைத்தார். அந்த மந்திரத்தை உச்சரிந்து எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த நெய்வம் தன்மீது பிரசன்னம் ஆகும் படி செய்யலாம். சிறுமியாய் இருந்ததினால் ஒரு தெய்வத்தை மந்திரம் சொல்லி வரவேற்பதினால் வரும் விளைவுகளை பற்றி அவள் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் விளையாட்டுத்தனமாக சூரிய பகவானை எண்ணி அந்த மந்திரத்தை கூறினாள். சூரிய பகவானை வேண்டி செய்த மந்திரத்தின் பலனால் குண்டலத்துடனும் கவசத்துடனும் ஒரு குழந்தை பிறந்தது. மந்திரத்தின் பலனால் குழந்தை பிறந்ததும் அவள் முன்பு இருந்தபடியே கன்னியானாள். தனக்குப் பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை ஒரு பெட்டகத்தில் வைத்து ஆற்றில் மிதந்து போகும் படி செய்தாள்.
எதிர்காலத்தில் எங்கேயாவது அக்குழந்தையை காண வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது புதிதாக வந்தவன் குண்டல கவசத்துடன் அதே ஆபரணங்களை அணிந்திருந்தான். இந்த காட்சியைப் பார்த்ததும் அவள் மூர்ச்சையாகி விட்டாள். இதுவே பெண்களுக்கான மேடையில் நடந்த குழப்பத்திற்கு காரணமாயிருந்தது. குந்தியின் அருகே சென்ற பேரறிஞரான விதுரருக்கு விஷயம் முழுவதும் விளங்கியது. நீர் தெளித்து குந்திதேவியை மயக்கத்திலிருந்து தெளிவு பெறும்படி அவர் செய்தார். அப்போது அவர் கைசாடைகளின் வாயிலாக மற்றவர்கள் யாருக்கும் விளங்காத மொழியில் கர்ணனுடைய வரலாற்றை வெளிப்படுத்தலாகாது என்றும் அனைத்தையும் மறைத்து வைக்கும்படி கூறினார். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு மகனுடைய ஆற்றல்களை பார்த்து மகிழ்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு மறைத்து வைக்கப்பட்டிருந்த மகனுக்கும் உலகறிய வெளிப்படையாக வளர்த்து வந்த மகனுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தை குறித்து அவள் பரிதவிக்கும் படி நேர்ந்தது. ஆயினும் இந்த நெருக்கடியை அவள் சமாளித்துக் கொண்டாள்.